Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கேன்டிலாபிரா மரத்தை நாம் காப்பாற்ற முடியுமா?

கேன்டிலாபிரா மரத்தை நாம் காப்பாற்ற முடியுமா?

கேன்டிலாபிரா மரத்தை நாம் காப்பாற்ற முடியுமா?

பிரேஸிலிலுள்ள விழித்தெழு! எழுத்தாளர்

பிரேஸிலின் தென் பகுதியை ஒரு காலத்தில் பைன் மரங்கள் ஆக்கிரமித்திருந்தன. அவற்றுள் ஒரு வகை கிளைகள் உள்ள மெழுகுவர்த்தி தண்டுபோல இருப்பதால் “கேன்டிலாபிரா மரம்” என்ற பெயரைப் பெற்றது. இது பரானா பைன், பிரேஸிலியன் பைன் என்றும் அழைக்கப்படுகின்றன.

கேன்டிலாபிரா மரத்தில் தொங்கும் கூம்புகள் பம்பளிமாசு பழங்களைவிட பெரியவை, அவற்றில் சில 5 கிலோகிராம் எடையுள்ளவை. ஒரு கூம்பில் சுமார் 150 விதைகள் இருக்கலாம், போர்த்துக்கல் மொழியில் இவை பினியாயின்ஸ் என அழைக்கப்படுகின்றன. இந்தக் கூம்பு பழுக்கும்போது, பெரும் சப்தத்தோடு வெடித்து, விதைகளை நாலாபுறமும் சிதறடிக்கிறது.

மனிதர்கள், பறவைகள், விலங்குகள் இந்த விதைகளை சாப்பிடுகின்றன(ர்). அவற்றின் வாசனையும் சுவையும் ‘செஸ்ட்நட்’ பருப்புகளைப் போல இருக்கின்றன. ஒருகாலத்தில், பினியாயின்ஸ் தெற்கு பிரேஸிலில் வாழும் சில பழங்குடியினரின் முக்கிய உணவாக இருந்தது. இவற்றில் புரோட்டீனும் கால்சியமும் நிறைந்துள்ளன. இந்த விதைகள் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, பிரேஸிலிலுள்ள சான்டா கேட்டரினா மாநிலத்தில், பாசோகா டி பினியாயின் (நொறுக்கப்பட்ட பினியாயின்ஸ்) போன்ற வட்டார உணவு வகைகளில் அவை சேர்க்கப்படுகின்றன.

18-⁠ம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலிருந்து குடியேறியவர்கள் கேன்டிலாபிரா மரத்தின் பயனை அறிந்த சமயத்தில் இந்த மரம் அழிய ஆரம்பித்தது. வீடுகள் கட்டுவதற்கு அல்லது மக்காச்சோளத்தையோ திராட்சையையோ பயிரிட தோட்டங்களாக மாற்றுவதற்கு இந்த கேன்டிலாபிரா மரங்கள் விரைவில் வெட்டப்பட்டன. காலப்போக்கில், நடப்பட்டதைவிட அதிகமான மரங்கள் வெட்டப்பட்டன. இப்பொழுது, சொட்டை சொட்டையாக சில காடுகள் காணப்படுகின்றன. அதன் விளைவாக, கேன்டிலாபிரா மரத்தின் மதிப்பு திடீரென உயர ஆரம்பித்திருக்கிறது. “பைன் இனிமேலும் மரக்கட்டையாக கருதப்படாமல் தங்கக்கட்டியாக மதிக்கப்படுகிறது” என 50 ஆண்டுகளாக கேன்டிலாபிரா மரக்கட்டைகளை பதனிட்டு வந்த ஒருவர் குறிப்பிட்டார்.

நீல நிறமுடைய ஐரோப்பிய பறவையாகிய ஜே இல்லையென்றால், கேன்டிலாபிரா நிரந்தரமாக மறைந்திருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சூட்டிப்பாக பறந்து திரியும் இந்தப் பறவைக்கு கேன்டிலாபிரா மர விதைகளே உணவு. மேலும், சில விதைகளை பாசி மரங்களிலும் காய்ந்த பெரணி மரங்களிலும் இது சேமித்து வைக்கிறது. இந்த விதைகளில் பல பிற்பாடு முளைக்கின்றன. அப்படியானால், ஒரு கருத்தில், கேன்டிலாபிரா மரங்களை பயிரிடுவதில் சிறந்து விளங்குவது இந்தப் பறவையே! ஆனால், பைன் காடுகள் அழிக்கப்படுவதால் இந்தப் பறவைகளின் எண்ணிக்கையும் குறைந்து வருவது வருந்தத்தக்க விஷயம்.

சில மரக் கம்பெனிகள் காட்டின் சில பகுதிகளை பாதுகாப்பதற்கும் பிரேஸிலின் தென் பகுதிகளில் கேன்டிலாபிரா மரங்களை மீண்டும் நடுவதற்கும் ஆரம்பித்திருக்கின்றன. அதனால் மீண்டும் கேன்டிலாபிரா மரம் செழிக்க ஆரம்பிக்கலாம் என தோன்றுகிறது.(g01 5/8)

[பக்கம் 18-ன் படங்கள்]

ஒவ்வொரு கூம்பிலும் சுமார் 150 “பினியாயின்ஸ்” இருக்கின்றன

[படத்திற்கான நன்றி]

மரமும் கூம்புகளும்: Marcos Castelani