சிரபுஞ்சி உலகிலேயே மிக ஈரமான இடங்களில் ஒன்று
சிரபுஞ்சி—உலகிலேயே மிக ஈரமான இடங்களில் ஒன்று
இந்தியாவிலுள்ள விழித்தெழு! எழுத்தாளர்
உலகிலேயே மிக ஈரமான இடங்களில் ஒன்றா? அது எப்படி? இங்கே இந்தியாவில் தண்ணீர் பிரச்சினை தலைக்கு மேல் இருக்கிறது, வருஷத்தில் பெரும்பாலான நாட்கள் குடையே தேவையில்லை என்று யோசிக்கிறீர்களா? நாங்கள் விவரிக்கும் வினோதமான அந்த இடம் சிரபுஞ்சி—இந்தியாவின் வடகிழக்கு மாநிலமாகிய மேகாலயாவில் உள்ள ஒரு நகரம், இது வங்காள எல்லையில் இருக்கிறது. மேகாலயா மிகவும் அழகிய இடமாதலால் “கிழக்கத்திய ஸ்காட்லாந்து” என அழைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பெயரின் அர்த்தமே “மேகங்களின் வாசஸ்தலம்” என்பதாகும். ஆனால் உலகிலேயே மிக ஈரமான இடங்களில் ஒன்று என சிரபுஞ்சி வெகுகாலமாக கருதப்பட்டு வருவது ஏன்? இப்பொழுது, ஆர்வத்திற்குரிய இந்த இயற்கையின் அதிசய வாசஸ்தலத்திற்கு நாம் சிற்றுலா சென்று வரலாமா? a
மேகாலயா மாநிலத்தின் தலைநகராகிய ஷில்லாங் என்ற இடத்திலிருந்து நம்முடைய பயணத்தை ஆரம்பிக்கிறோம். டூரிஸ்ட் பஸ்ஸில் நாம் தெற்கு நோக்கி பயணிக்கிறோம். தொடர்ச்சியான மலைகளையும் திறந்த புல்வெளிகளையும் கடந்து செல்கையில், நம்மை வரவேற்க நமக்கு முன்பு மேகங்கள் காத்திருப்பதைக் காண்கிறோம், மேகாலயா என்ற பெயர் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என்பதை இது நமக்கு இமைப்பொழுதில் நினைப்பூட்டுகிறது.
அடர்ந்த மரங்களை போர்வைபோல் போர்த்திய ஆழமான பள்ளத்தாக்கின் விளிம்பில் நம்முடைய சாலை வளைந்து நெளிந்து மேலே செல்கிறது. மிக உயரத்திலிருந்து நீர்வீழ்ச்சிகள் நம்மை பார்க்க பாய்ந்தோடி வருகின்றன, பின்பு அவை அந்தப் பள்ளத்தாக்கின் வழியே வேகமாக ஓடிவரும் ஆற்றில் சங்கமம் ஆகிவிடுகின்றன. மாவ்டாக் என்ற இடத்தில் நம்முடைய பஸ் சற்று நின்று ஓய்வெடுக்கிறது, மேகக் கூட்டங்கள் மலைகள் வழியாக பயணித்து தரை இறங்குவதை பார்க்கிறோம். திடீரென்று அவை ஒரு முழுப் பகுதியை மறைத்துவிடுகின்றன, மீண்டும் உடனே மிக வேகமாக மேலெழும்பி சென்றுவிட்டதால் அந்தப் பகுதி தென்படுகிறது. சில கணப்பொழுதிற்கு நம்மையும் அந்த மேகக் கூட்டம் சூழ்ந்துகொள்ள இப்பொழுது நாம் அந்த மென்மையான வெண் போர்வைக்குள்! ஆனால், சீக்கிரத்தில் அந்த மேகக் கூட்டங்கள் சென்றுவிடுகின்றன, இப்பொழுது சூரியனின் முகம் பளிச்சிடுகிறது.
சிரபுஞ்சி கடல் மட்டத்திலிருந்து 1,300 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. நாம் அந்த நகரத்திற்குள் நுழையும்போது எந்த மழை மேகமும் கண்ணில் படவில்லை. அட, யாருடைய கையிலும் ஒரு குடையும் இல்லை! சிற்றுலா பயணிகளாகிய நாம்தான் அடைமழைக்கு ஆயத்தமாக குடையும் கையுமாக இருக்கிறோம்! அப்படியானால், எப்பொழுதுதான் மழை பெய்யும்?
கடலில் மிக வெப்பமான பகுதிகளிலுள்ள பெருமளவான தண்ணீரை சூரியன் ஆவியாக்கும்போதுதான் வெப்பமண்டல பிரதேசங்களில் பெருமழை பெய்கிறது. இந்தியப் பெருங்கடலிலிருந்து ஈரப்பதத்தை சுமந்து செல்லும் காற்றுகள் இமயத்தின் தென் சரிவுகளில் மோதுகையில் அவை மேலெழும்ப வேண்டிய கட்டாயத்திற்கு வருகின்றன; அப்போது அவை பாரம் தாங்க முடியாமல் தங்களுடைய சுமையை அடைமழை வடிவில் கீழே இறக்குகின்றன. இதில் பெரும்பாலானவற்றை மேகாலயா பீடபூமியே பெற்றுக்கொள்கிறது. மேலும், பகல்பொழுதில் வெப்பமண்டல சூரியனின் முழு சக்தியை இந்த மேடான பகுதி வாங்கிக்கொள்வதால், மாலையில் காற்று குளிர்ச்சியடையும் வரை மழை மேகங்கள் மேலே உயர்ந்து இந்தப் பீடபூமியின் மேல் வட்டமிடுகின்றன. இரவில் கன மழை பெய்வதற்கு இதுவே காரணம்.
ஜூலை 1861-ல், 930 சென்டிமீட்டர் என்ற வியக்கத்தக்க அளவில் சிரபுஞ்சியில் மழை பெய்தது! ஆகஸ்ட் 1, 1860 முதல் ஜூலை 31, 1861 வரை 12 மாதங்களில் 2,646 சென்டிமீட்டர் மழை பெய்தது.
இன்று சராசரியாக வருடத்திற்கு 180 நாட்கள் சிரபுஞ்சியில் மழை பெய்கிறது. ஜூன் முதல் செப்டம்பர் வரை இங்கே பலத்த மழை பெய்கிறது. இரவில்தான் அதிக மழை பெய்வதால், பகலில் அடைமழையில் நனையாமலேயே சுற்றுலா பயணிகள் இயற்கை காட்சிகளை கண்டு களிக்கலாம்.
இவ்வளவு அதிக மழை பெய்வதால் இந்தப் பகுதியில் எப்பொழுதாவது தண்ணீர் பிரச்சினை வருமா என்ற பேச்சிற்கே இடமில்லை என்று தோன்றலாம். ஆனால் குளிர்காலத்தில் இதுவே சம்பவிக்கிறது. பருவமழை தண்ணீர் எங்கே போய்விடுகிறது? சிரபுஞ்சியை சுற்றிலுமுள்ள காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டதால் பெருமளவான மழை நீர் இந்த உயர்ந்த பீடபூமியிலிருந்து கீழே வடிந்து சமவெளிகளிலுள்ள ஆறுகளை நிரப்புகிறது, இந்த ஆறுகள் முக்கியமாக வங்காள தேசத்திற்குள் ஓடிவிடுகின்றன. வெள்ளத்திற்கு அணைபோடவும் நீர்த்தேக்கங்களை கட்டவும் திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், “தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு எந்தவித தீவிர நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என மாவ்சின்ராம் பழங்குடி ராஜா ஜி. எஸ். மால்ஜியாங் சொல்கிறார்.
நாம் சிரபுஞ்சிக்கு விஜயம் செய்தது மெய்சிலிர்க்க வைப்பதாகவும் கல்விபுகட்டுவதாகவும் இருந்திருக்கிறது. இங்கே மலைக்கவைக்கும் எப்பேர்ப்பட்ட இயற்கை காட்சி! அற்புதமான மலர்களும், சுமார் 300 வகை ஆர்க்கிட்டுகளும் இங்கே இருக்கின்றன. மாமிசம் உண்ணும் பிட்சர் செடியின் ஒரு விசேஷித்த வகையும் இங்கே இருக்கிறது. மேலும், அதிசயிக்கத்தக்க பல்வகை வனவிலங்குகளும் குடியிருக்கின்றன, ஆய்வுப்பயணம் செய்வதற்கு சுண்ணாம்பு குகைகளும் ஆராய்ச்சி செய்வதற்கு ‘மெகா’ கற்களும் இருக்கின்றன. இந்த இடத்தில் பரந்தளவில் பயிரிடப்பட்டுள்ள ஆரஞ்சு தோட்டங்களிலிருந்து சாறுமிக்க பழங்கள் கிடைக்கின்றன, இதனால் சுவைமிக்க ஆரஞ்சு தேனும் உற்பத்தி செய்ய முடிகிறது. இவையனைத்தும் மேகாலயாவுக்கு அதாவது, ‘மேகங்களின் வாசஸ்தலமாகிய’ உலகிலேயே மிக ஈரமான இடங்களில் ஒன்றான சிரபுஞ்சிக்கு விஜயம் செய்வோருக்கு காத்திருக்கிறது. (g01 5/8)
[அடிக்குறிப்பு]
a காய் என்ற ஹவாய் தீவிலுள்ள வையலேல் மலை, மாவ்சின்ராம்—இது சிரபுஞ்சியிலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கிராமம்—போன்ற இடங்களில் சில சமயங்களில் சிரபுஞ்சியைவிட உயர்ந்தளவு மழை பதிவாகியிருக்கிறது.
[பக்கம் 22-ன் தேசப்படம்]
(For fully formatted text, see publication)
இந்தியா
சிரபுஞ்சி
[படத்திற்கான நன்றி]
Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.
[பக்கம் 23-ன் படம்]
பூமியின் இந்தக் கடைக்கோடிக்கு ஒப்பற்றதாக விளங்கும் மாமிசம் உண்ணும் பிட்சர் செடி வகை
[பக்கம் 23-ன் படம்]
பள்ளத்தாக்கில் பாய்ந்துவரும் ஆறுகளை உண்டுபண்ணும் நீர்வீழ்ச்சிகள்
[படத்திற்கான நன்றி]
Photograph by Matthew Miller