நவீன மருத்துவம்—எந்தளவு சாதிக்க முடியும்?
நவீன மருத்துவம்—எந்தளவு சாதிக்க முடியும்?
எட்டாக் கனியையும் நண்பர்களுடைய தோளில் ஏறி பறிக்க கற்றுக்கொள்கிறார்கள் சிறுவர்கள் பலர். மருத்துவ துறையிலும் இதே போன்ற ஒன்றுதான் நிகழ்ந்திருக்கிறது. கடந்த காலத்தில் வாழ்ந்த பிரபல மருத்துவர்களுடைய தோள்களில் நின்றுகொண்டு சாதனை எனும் உயரமான ஏணியில் ஏறியிருக்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள்.
ஹிப்போகிரேடஸும் பாஸ்டரும் கடந்த காலத்தில் சுகமளித்தவர்களில் பிரபலமானவர்கள். வெசாலியஸ், வில்லியம் மோர்டன் போன்ற பரிச்சயமில்லாத சில பெயர்களும் இருக்கின்றன. நவீன மருத்துவம் எந்த விதத்தில் இவர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது?
கடந்த காலங்களில் குணப்படுத்தும் முறைகள் பெரும்பாலும் ஓர் அறிவியல் ஆராய்ச்சியின் அடிப்படையில் இருக்கவில்லை, மாறாக மூடநம்பிக்கையும் மத சடங்குகளும் நிறைந்த ஒன்றாகவே இருந்தன. டாக்டர் ஃபிலிக்ஸ் மார்டீ-ஈபான்யெஸ் என்பவரால் பதிப்பிக்கப்பட்ட தி எபிக் ஆஃப் மெடிசின் என்ற நூல் இவ்வாறு கூறுகிறது: “நோயை முறியடிப்பதற்கு . . . , மருந்தும் மதமும் கலந்த ஒரு மருத்துவத்தை மெசொப்பொத்தோமியர் நாடினர், ஏனென்றால் நோய் என்பது தெய்வத்திடமிருந்து வரும் தண்டனை என அவர்கள் நம்பினார்கள்.” அதற்குப் பிறகு வந்த எகிப்திய மருத்துவமும் அதேபோல் மதத்தில் வேரூன்றியிருந்தது. இவ்வாறு, ஆரம்ப காலம் முதற்கொண்டே சுகமளிப்பவர் மதரீதியில் ஓர் உயர்ந்த மனிதராக பாராட்டப்பட்டார்.
த க்ளே பெடஸ்டல் என்ற நூலில், டாக்டர் தாமஸ் ஏ. ப்ரெஸ்டன் இவ்வாறு கூறுகிறார்: “பூர்வீக மனிதருடைய நம்பிக்கைகள் பல, இன்றுவரை மருத்துவ துறையில் அதன் தடயத்தைப் பதித்திருக்கின்றன. வியாதியை நோயாளியால் கட்டுப்படுத்த முடியாது, மருத்துவருடைய மீமானிட சக்தியால்தான் குணப்படுத்த முடியும் என்பதும் அந்நம்பிக்கைகளில் ஒன்று.”
அடித்தளம் போடுதல்
ஆனால் காலப்போக்கில், மருத்துவத்தை அதிகமதிகமாக அறிவியல் கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பித்தார்கள். பூர்வகாலத்தில் அறிவியல் முறையில் சுகமளித்தவர்களில்
தலைசிறந்தவர் ஹிப்போகிரேடஸ். இவர் சுமார் பொ.ச.மு. 460-ல், கோஸ் என்ற கிரேக்க தீவில் பிறந்தார். இவர் மேலைநாட்டு மருத்துவத்தின் தந்தை என பலரால் போற்றப்படுகிறார். ஹிப்போகிரேடஸ் மருத்துவத்தை பகுத்தறிவுடன் அணுகுவதற்கு அடித்தளம் போட்டார். வியாதி என்பது தெய்வத்திடமிருந்து வரும் தண்டனை என்ற எண்ணத்தை ஒதுக்கிவிட்டு, அது இயல்பாகவே வரும் ஒன்று என்பதை நிரூபித்தார். உதாரணமாக, காக்காய்வலிப்பு நோயை கடவுளால் மாத்திரமே குணப்படுத்த முடியும் என்பதால் அது புனித நோய் என நெடுங்காலமாக அழைக்கப்பட்டது. ஆனால் ஹிப்போகிரேடஸ் இவ்வாறு எழுதினார்: “பிற வியாதிகளைப் போலவே புனித வியாதி என அழைக்கப்படும் வியாதியும் கடவுளிடமிருந்து வருவதாகவோ அல்லது புனிதமானதாகவோ எனக்குத் தோன்றவில்லை, ஆனால் இயல்பாக வரும் ஒன்றே.” பல்வேறு வியாதிகளுக்கு அறிகுறிகளை கண்டறிந்து, பிற்காலத்தில் எடுத்துப் பார்ப்பதற்காக அவற்றை பதிவு செய்து வைத்ததில் ஹிப்போகிரேடஸே முதன்மையானவர்.நூற்றாண்டுகளுக்குப் பிறகு, பொ.ச. 129-ல் பிறந்த கிரேக்க மருத்துவராகிய கேலன் இதே போன்று புதுமையான அறிவியல் ஆராய்ச்சி செய்தார். மனிதர்களையும் விலங்குகளையும் அறுத்துப்பார்த்ததன் அடிப்படையில், உடற்கூறு சம்பந்தமாக கேலன் ஒரு பாடநூலை தயாரித்தார், அதை பல நூற்றாண்டுகளாக மருத்துவர்கள் பயன்படுத்தினர்! 1514-ல் ப்ருஸ்ஸெல்ஸில் பிறந்த ஆன்டிரியாஸ் வெசாலியஸ் மனித உடலின் வடிவமைப்பு (ஆங்கிலம்) என்ற புத்தகத்தை எழுதினார். அப்புத்தகம் எதிர்ப்பை சந்தித்தது, ஏனென்றால் கேலன் சொன்ன பல விஷயங்களுக்கு முரணாக அது இருந்தது. ஆனால் அதுவே நவீன உடற்கூறியலுக்கு அடித்தளமாக விளங்கியது. டீ குரோஸன் (பிரபலமானவர்கள்) என்ற நூல் சொல்கிறபடி, வெசாலியஸ் “இதுவரை வாழ்ந்த மிக முக்கியமான மருத்துவ ஆராய்ச்சியாளர்களில் ஒருவரானார்.”
இருதயத்தையும் இரத்த ஓட்டத்தையும் பற்றிய கேலனுடைய கொள்கைகளும் காலப்போக்கில் காலாவதியாகிவிட்டன. a ஆங்கிலேய மருத்துவர் வில்லியம் ஹார்வி மிருகங்களையும் பறவைகளையும் அறுத்து ஆய்வு செய்வதில் பல வருடங்களை செலவழித்தார். இருதய வால்வுகள் எப்படி இயங்குகிறது என்பதை கவனித்தார், இருதய வென்ட்ரிக்கிள்கள் ஒவ்வொன்றிலும் உள்ள இரத்தத்தின் அளவை கணக்கிட்டு, உடலிலுள்ள இரத்தத்தின் அளவை மதிப்பிட்டார். விலங்குகளின் இருதயம் மற்றும் இரத்தத்தின் இயக்கம் என்ற ஆங்கில புத்தகத்தில் ஹார்வி தம்முடைய கண்டுபிடிப்புகளை 1628-ல் வெளியிட்டார். அவர் கண்டனம் செய்யப்பட்டார், எதிர்க்கப்பட்டார், தாக்கப்பட்டார், அவமதிக்கப்பட்டார். ஆனால் அவருடைய கண்டுபிடிப்புகள் மருத்துவத்தில் ஒரு திருப்புக் கட்டமாக இருந்தன—உடலின் இரத்த ஓட்ட மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது!
முடி வெட்டும் தொழிலிலிருந்து அறுவை சிகிச்சை வரை
அறுவை சிகிச்சை முறைகளிலும்கூட அதிக முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இடைக்காலங்களில் அறுவை சிகிச்சை என்பது எப்போதுமே முடி வெட்டுபவர்களின் பணியாக இருந்தது. 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முடி வெட்டுபவரான அம்ராஸ் பாரெ என்பவரே நவீன நாளைய அறுவை சிகிச்சையின் தந்தை என சிலர் சொல்வதில் வியப்பில்லை. ஏனெனில் அறுவை சிகிச்சை செய்வதில் முன்னோடியாக விளங்கிய அவர் பிரான்ஸிலுள்ள நான்கு அரசர்களிடம் பணியாற்றியவர். அதோடு, அறுவை சிகிச்சைக்குத் தேவையான எண்ணற்ற கருவிகளையும் பாரெ கண்டுபிடித்தார்.
19-ம் நூற்றாண்டின் அறுவை மருத்துவர் இன்னும் எதிர்ப்பட்டுக் கொண்டிருந்த பெரும் பிரச்சினைகளில் ஒன்று என்னவெனில் அறுவை சிகிச்சையின்போது வலியை குறைக்க முடியாமல் போனதுதான். ஆனால் 1846-ல் பல் அறுவை மருத்துவரான வில்லியம் மோர்டன் என்பவர் அறுவை சிகிச்சையின்போது மயக்க மருந்தை பரவலாக பயன்படுத்துவதற்கு வழியைத் திறந்து வைத்தார். b
ஜெர்மானிய இயற்பியலாளர் வில்ஹெம் ரன்ட்ஜன் 1895-ல் மின்சாரத்தைக் கொண்டு ஆய்வு செய்கையில் அதன் கதிர்கள் எலும்பில் பாயாமல் சதை வழியே பாய்வதை கண்டார். அக்கதிர்களின் தோற்றுமூலத்தை அவர் அறியவில்லை, ஆகவே அவர் அதை X கதிர்கள் என அழைத்தார். ஆங்கிலத்தில் இன்னும் அப்பெயர்தான் வழங்கப்படுகிறது. (ஜெர்மனில் ரன்ட்ஜன்ஸ்ட்ராலன்.) “‘ரன்ட்ஜனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதென’ ஜனங்கள் சொல்வார்கள்” என்று ரன்ட்ஜன் தன் மனைவியிடம் சொன்னதை டீ குரோஸன் டாய்ச்சன் (மாபெரும் ஜெர்மானியர்) என்ற புத்தகம் குறிப்பிடுகிறது. சிலர் அவ்வாறு சொல்லவும் செய்தார்கள். ஆனால் அவருடைய கண்டுபிடிப்போ அறுவை சிகிச்சையில் புரட்சியை உண்டுபண்ணியது. அறுவை மருத்துவர்களால் இப்போது உடலில் கத்தியை வைக்காமலேயே உள்ளுறுப்புகளைக் காண முடியும்.
நோய்களை முறியடித்தல்
காலங்களாகவே பெரியம்மை போன்ற தொற்று வியாதிகள் மீண்டும் மீண்டும் பரவலாகத் தொற்றி பயத்தையும் மரணத்தையும் விளைவித்தன. ஆர்-ராஸீ என்ற ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த பெர்சியர், அந்த சமயத்திலிருந்த இஸ்லாமிய சமுதாயத்தின் பிரசித்திபெற்ற மருத்துவர் என சிலரால் கருதப்பட்டார்; பெரியம்மையைப்
பற்றி மருத்துவ ரீதியில் தெளிவான விளக்கத்தை முதன் முதலில் எழுதியவர் அவரே. ஆனால் நூற்றாண்டுகளுக்குப் பின்பே, அதை குணப்படுத்தும் வழியை பிரிட்டிஷ் மருத்துவர் எட்வர்ட் ஜென்னர் கண்டுபிடித்தார். பசுக்களுக்கு உண்டாகும் தீங்கிழைக்காத நோயாகிய மாட்டம்மை ஒருவரை தொற்றியபோது பெரியம்மை நோய்க்கான எதிர்ப்பு சக்தி அவருக்கு கிடைத்தது என ஜென்னர் குறிப்பிட்டார். இந்த ஆய்வின் அடிப்படையில், ஜென்னர் பெரியம்மை நோயைக் குணப்படுத்தும் தடுப்பு மருந்தை (vaccination) தயாரித்தார்; அதாவது, மாட்டிற்கு அம்மை தொற்றியிருந்த தோல் பகுதியிலிருந்த ஒருவித நீரை எடுத்து அம்மருந்தை தயாரித்தார். 1796-ல் அவர் இதைச் செய்தார். தனக்கு முன்னிருந்த புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு ஏற்பட்ட அதே கதிதான் இவருக்கும் ஏற்பட்டது. ஜென்னரை மக்கள் கண்டனம் செய்து எதிர்ப்பு தெரிவித்தனர். தடுப்பு மருந்து சம்பந்தமான அவரது கண்டுபிடிப்பு, அந்நோயை முற்றிலுமாக நீக்குவதற்கும் மருத்துவத் துறையில் அதைவிட சக்திபடைத்த புதிய மருந்தை கண்டுபிடிப்பதற்கும் வழிவகுத்தது.பிரெஞ்சுக்காரரான லூயி பாஸ்டர், ரேபீஸ் மற்றும் ஆன்த்ராக்ஸ் நோயை குணப்படுத்த தடுப்பு மருந்தை பயன்படுத்தினார். நோய்க்கு முக்கிய காரணம் கிருமிகளே என்பதையும் அவர் நிரூபித்தார். 1882-ல் ராபர்ட் கோச் என்பவர் காசநோயை உண்டுபண்ணும் கிருமியைக் கண்டுபிடித்தார். “பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய கொலையாளி” என சரித்திராசிரியர் ஒருவர் அந்நோயை விவரித்தார். ஓர் ஆண்டுக்குப்பின் காலரா தொற்றுவதற்குக் காரணமான கிருமியையும் கோச் கண்டுபிடித்தார். லைஃப் என்ற பத்திரிகை இவ்வாறு கூறுகிறது: “நுண்ணுயிரியலில் (microbiology) பாஸ்டர் மற்றும் கோச் அறிமுகப்படுத்திய கண்டுபிடிப்புகள் தடுப்பாற்றலியல் (immunology), சுகாதாரம், உடல் நலம் பேணல் போன்றவற்றிலும் முன்னேற்றங்களுக்கு வழிவகுத்துள்ளன. கடந்த 1,000 வருடங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைக் காட்டிலும் இந்தக் கண்டுபிடிப்புகளே மனிதரின் ஆயுட்காலத்தைக் கூட்டுவதற்கு பெரிதும் உதவியிருக்கின்றன.”
இருபதாம் நூற்றாண்டு மருத்துவம்
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், மருத்துவத் துறை இந்தக் கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் புகழ்பெற்ற மருத்துவர்களின் தோள்களிலேயே ஏறி நின்றதை காண முடிந்தது. அது முதற்கொண்டு மருத்துவத்துறையில் மிக வேகமான வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. நீரிழிவு நோய்க்கு இன்சுலின், புற்று நோய்க்கு கீமோ தெரப்பி, சுரப்பிகள் சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்கு இயக்குநீர் சிகிச்சை (hormone treatment), காசநோய்க்கு ஆன்டிபையாட்டிக்ஸ், சில வகை மலேரியாவுக்கு க்ளோரோக்வின், சிறுநீரகக் கோளாறுகளுக்கு டயலிசிஸ், அதோடு திறந்த இருதய அறுவை சிகிச்சை மற்றும் மாற்று உடலுறுப்புகளை பொருத்துதல் போன்றவை சில எடுத்துக்காட்டுகளே.
ஆனால் இப்போது நாம் 21-ம் நூற்றாண்டின் வாயிலில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். “உலகிலுள்ள அனைவருக்கும் போதுமான அளவு ஆரோக்கியத்திற்கு” உத்தரவாதம் அளிக்கும் இலக்கை மருத்துவத் துறை எந்தளவுக்கு எட்டியுள்ளது?
இலக்கு கைமீறிவிட்டதா?
எட்டாக் கனிகள் அனைத்தையும் நண்பர்களுடைய தோளில் ஏறி பறிக்க முடியாது என்பதை சிறுவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். மரத்தின் உச்சியில் இருக்கும் நன்கு பழுத்த கனிகளில் சில இன்னும் எட்டாத உயரத்திலேயே இருக்கின்றன. அவ்வாறே மருத்துவத் துறையும் சாதனைக்கு மேல் சாதனை படைத்து முன்னேறியிருக்கிறது. ஆனால் எல்லாருக்கும் நல் ஆரோக்கியம் என்ற மிக முக்கியமான இலக்கு மரத்தின் உச்சியில் எட்டிப் பிடிக்க இயலாத நிலையிலேயே இருக்கிறது.
ஆகவே, 1998-ல் ஐரோப்பிய செயற்குழு, “ஐரோப்பியர்கள் ஒருபோதும் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழவில்லை” என அறிக்கை செய்தது. அது மேலும் இவ்வாறு கூறியது: “ஐந்து பேரில் ஒருவர் 65 வயதுக்கு முன்பாகவே இறந்து விடுவார். இந்த இறப்புகளில் சுமார் 40% புற்றுநோயாலும் 30% இதய இரத்த நாளம் சம்பந்தப்பட்ட நோய்களாலும் ஏற்படும். . . . புதிய நோய் அச்சுறுத்தல்களுக்கு எதிராக தகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.”
காலரா, காசநோய் போன்ற தொற்று நோய்கள் அதிக அச்சுறுத்தலையே ஏற்படுத்துகின்றன என ஜெர்மன் உடல்நல பத்திரிகையான கெஸுன்ஹைட் நவம்பர் 1998-ல் அறிக்கை செய்தது. ஏன்? ஆன்டிபையாடிக்ஸ் “அவற்றின் வலிமையை இழந்து விடுகின்றன. அதிகமதிகமான பாக்டீரியாக்கள் ஒரு மருந்தையாவது எதிர்க்க வல்லன; சொல்லப்போனால் அநேக பாக்டீரியாக்கள் பல மருந்துகளை எதிர்க்கும் சக்தி படைத்தவை.” ஒரு காலத்தில் இருந்த வியாதிகள் மீண்டும் தலைதூக்குவது மட்டுமின்றி எய்ட்ஸ் போன்ற புதுவித வியாதிகளும் உருவெடுத்துள்ளன. புள்ளியியல் ’97 (ஆங்கிலம்) என்ற
ஜெர்மன் மருந்தியல் வெளியீடு நமக்கு இவ்வாறு நினைப்பூட்டுகிறது: “அறியப்பட்ட வியாதிகளில்—சுமார் 20,000 வியாதிகளில்—மூன்றில் இரண்டு பாகத்தை தடுப்பதற்கு சிகிச்சையே இல்லை.”மரபணு சிகிச்சை பரிகாரம் அளிக்கிறதா?
புதுப் புது சிகிச்சை முறைகள் அதிகரித்து வருவது உண்மைதான். உதாரணமாக, மரபணு பொறியியல் சிறந்த ஆரோக்கியத்திற்கு திறவுகோலாக அமையலாம் என பலர் நினைக்கிறார்கள். 1990-களில் டாக்டர் டபிள்யூ. ஃபிரென்ச் ஆன்டர்ஸன் போன்ற மருத்துவர்களால் ஐக்கிய மாகாணங்களில் நடத்தப்பட்ட ஆய்வுக்குப்பின், மரபணு சிகிச்சையே (gene therapy) “மருத்துவ ஆராய்ச்சியில் கொடிகட்டிப் பறக்கும் புதிய அம்சம்” என வருணிக்கப்பட்டது. மரபணு சிகிச்சையைக் கொண்டு “மருத்துவ விஞ்ஞான முன்னேற்றத்தின் உச்சிவரை செல்ல இயலும்; குறிப்பாக, இதுவரை குணப்படுத்த முடியாமல் இருக்கும் வியாதிகளைக் குணப்படுத்த முடியும்” என ஹைலன் மிட் கேனன் (ஜீன்களைக் கொண்டு சுகப்படுத்துதல்) என்ற புத்தகம் குறிப்பிடுகிறது.
காலப்போக்கில், பிறவியிலேயே இருக்கும் பரம்பரை நோய்களை உடையவர்களுக்கு அவற்றை குணப்படுத்துவதற்கு ஏற்ற ஜீன்களை ஊசிமூலம் உட்செலுத்தி குணப்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். அதன் மூலம் புற்று நோய் செல்கள் போன்ற தீங்கிழைக்கும் செல்களைக்கூட சுயமாய் அழித்துவிடலாம். ஒருவரின் இயல்பை வைத்தே குறிப்பிட்ட நோய்கள் அவருக்கு வரும் சாத்தியத்தை கண்டுபிடிக்கும் மரபணு ஆய்வு முறை ஏற்கெனவே வழக்கில் உள்ளது. அடுத்து சாதனை படைக்கப் போவது ஃபார்மகோஜெனோமிக்ஸ்—நோயாளியின் மரபுவழிப் பண்பியலுக்குத் தக்கவாறு மருத்துவ சிகிச்சை அளிப்பது. மருத்துவர்கள் ஒரு நாள் கண்டிப்பாக “தங்கள் நோயாளிகளின் நோய்களைக் கண்டறிந்து குணப்படுத்துவதற்காக டிஎன்ஏ மூலக்கூறின் பொருத்தமான பகுதியை அவர்களுக்கு அளிப்பார்கள்” என பிரபல ஆய்வாளர் ஒருவர் குறிப்பிடுகிறார்.
இருந்தாலும், இந்த மரபணு சிகிச்சையை வருங்காலத்தின் “அற்புத குணமளிக்கும்” நிவாரணி என எல்லாரும் நம்புவதில்லை. ஆய்வுகள் காட்டுகிறபடி, மக்கள் தங்கள் மரபுவழி பண்பியலை ஆராய்வதை விரும்புகிறதில்லை. மரபணு சிகிச்சை இயற்கையோடு விளையாடும் ஆபத்தான செயலாக இருக்கலாம் எனவும் நினைத்து பலர் பயப்படுகிறார்கள்.
மரபணு பொறியியலோ மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள மற்ற விஞ்ஞான முன்னேற்றங்களோ அவர்கள் அள்ளி வீசிய வாக்குறுதிகளை காப்பாற்றுமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். என்றாலும், அளவுக்கு மிஞ்சி எதிர்பார்ப்பதை தவிர்ப்பதற்கு தகுந்த காரணம் உள்ளது. த க்ளே பெடஸ்டல் என்ற புத்தகம் பழக்கமாக நடந்துவரும் ஒரு சுழற்சியை பற்றி இவ்வாறு வருணிக்கிறது: “ஒரு புதிய சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டவுடன் மருத்துவ கூட்டங்களிலும் பத்திரிகைகளிலும் அதைப் பற்றி ஆகா ஓகோ என்று புகழ்கிறார்கள். அதைக் கண்டுபிடித்தவர்கள் அத்துறையில் பிரபலமாகிறார்கள், செய்தி துறையினர் அந்த முன்னேற்றங்களை புகழ்ந்து பாராட்டுகிறார்கள். சிறிது காலத்திற்கு அதன் புகழ் அலைகள் எங்கும் அடித்து, அப்புதிய சிகிச்சைமுறைக்கு ஆதாரப்பூர்வ சான்றுகளை அளித்தபின், அந்த அலைகள் படிப்படியாக ஓய்ந்து விடுகின்றன. அவை சில மாதங்களுக்கு அல்லது சில பத்தாண்டுகளுக்கு மட்டுமே நிலைத்திருக்கின்றன. அடுத்து புதிய நிவாரணி கண்டுபிடிக்கப்பட்டு விரைவில் பிரபலமாகிறது; இது பழைய சிகிச்சை முறையை மாற்றி அதை ஒன்றிற்கும் உதவாததாக்கி விடுகிறது.” சொல்லப்போனால், பயனற்றவையாக பெரும்பாலான மருத்துவர்களால் புறக்கணிக்கப்பட்டிருக்கும் அநேக சிகிச்சை முறைகள் சமீப காலம் வரை தரமான சிகிச்சை முறையாக வழக்கில் இருந்து வந்தவையே.
பூர்வ கால சுகமளிப்பவர்களைப் போன்று இன்றைய மருத்துவர்கள் கடவுளாகப் போற்றப்படுவதில்லை. இருந்தாலும், மருத்துவர்களை கடவுளாக பாவிக்கும் மனப்போக்கும் விஞ்ஞானத்தால் கண்டிப்பாக மனிதரின்
நோய்களை குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையும் சிலர் மத்தியில் காணப்படுகிறது. ஆனால் இலக்கை அடைய முடியவில்லை என்பதே நிஜம். நாம் ஏன், எப்படி முதுமையடைகிறோம் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில் டாக்டர் லெனர்ட் ஹேஃப்லிக் இவ்வாறு கூறுகிறார்: “ஐக்கிய மாகாணங்களில் 1900-ல் 75 சதவீதத்தினர் அறுபத்து ஐந்து வயதை எட்டுவதற்கு முன்பே இறந்துவிட்டனர். இன்று இந்தப் புள்ளி விவரம் தலைகீழாக மாறிவிட்டது: சுமார் 70 சதவீதத்தினர் அறுபத்து ஐந்து வயதிற்குப் பின்பே மரிக்கிறார்கள்.” ஆயுட்காலம் இந்தளவுக்கு அதிகரிப்பதற்கு காரணம் என்ன? “புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் இறப்பு குறைத்திருப்பதே இதற்கு பெரிதும் காரணம்” என ஹேஃப்லிக் விளக்குகிறார். இப்போது ஒருவேளை மருத்துவ விஞ்ஞானத்தால் முதியோரின் மரணத்துக்கு முக்கிய காரணமான இருதய நோய், புற்றுநோய், பக்கவாதம் போன்றவற்றை முற்றிலும் நீக்க முடிவதாக வைத்துக்கொள்ளுங்கள். சாவாமை எனும் வரத்தை அளிக்க முடியும் என இது அர்த்தப்படுத்துமா? நிச்சயமாகவே இல்லை. “அநேகர் நூறு ஆண்டுகளுக்கும்கூட வாழ முடியும்” என குறிப்பிடும் டாக்டர் ஹேஃப்லிக் மேலும் இவ்வாறு சொல்கிறார்: “ஆனாலும் நூறு வயதை எட்டியவர்கள் சாகாமல் இருக்க மாட்டார்கள். ஆனால் என்ன காரணத்தினிமித்தம் அவர்கள் மரிப்பார்கள்? அவர்கள் மரணம் வரையாக நாளுக்கு நாள் பலவீனமடைவதாலேயே.”மருத்துவ விஞ்ஞானத்தின் அபார சாதனைகள் ஒருபுறமிருக்க, மரணத்தை ஒழிப்பது என்பது இன்னும் எட்டாக் கனியாகவே இருக்கிறது. ஏன் அப்படி? எல்லாருக்கும் நல் ஆரோக்கியம் என்ற இலக்கு வெறும் பகற்கனவுதானா? (g01 6/8)
[அடிக்குறிப்புகள்]
a த உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா கூறுகிறபடி, ஜீரணித்த உணவை கல்லீரல் இரத்தமாக மாற்றியது என்றும் பின்பு இந்த இரத்தம் உடலின் மற்ற பாகங்களுக்குச் சென்று உறிஞ்சப்பட்டது என்றும் கேலன் நினைத்தார்.
b டிசம்பர் 8, 2000 விழித்தெழு! இதழில், “வலிக்கு சமாதி கட்டிய அனஸ்தீஸியா” என்ற கட்டுரையைக் காண்க.
[பக்கம் 4-ன் சிறு குறிப்பு]
“பூர்வீக மனிதருடைய நம்பிக்கைகள் பல, இன்றுவரை மருத்துவ துறையில் அதன் தடயத்தைப் பதித்திருக்கின்றன.”—த க்ளே பெடஸ்டல்
[பக்கம் 4, 5-ன் படங்கள்]
ஹிப்போகிரேடஸ், கேலன், வெசாலியஸ் போன்றோரே நவீன மருத்துவத்திற்கு வித்திட்டவர்கள்
[படங்களுக்கான நன்றி]
Kos Island, Greece
Courtesy National Library of Medicine
Woodcut by Jan Steven von Kalkar of A. Vesalius, taken from Meyer’s Encyclopedic Lexicon
[பக்கம் 6-ன் படங்கள்]
அறுவை சிகிச்சைக்கு முன்னோடியாக விளங்கிய முடிவெட்டும் அம்ராஸ் பாரெ பிரான்ஸை சேர்ந்த நான்கு அரசர்களிடம் பணியாற்றியவர்
பெர்சிய மருத்துவர் ஆர்-ராஸீ (இடது), பிரிட்டிஷ் மருத்துவர் எட்வர்ட் ஜென்னர் (வலது)
[படங்களுக்கான நன்றி]
Paré and Ar-Rāzī: Courtesy National Library of Medicine
From the book Great Men and Famous Women
[பக்கம் 7-ன் படம்]
பிரெஞ்சுக்காரரான லூயி பாஸ்டர் கிருமிகளே நோய்க்கு காரணம் என நிரூபித்தார்
[படங்களுக்கான நன்றி]
© Institut Pasteur
[பக்கம் 8-ன் படம்]
மரணத்துக்கு முக்கிய காரணமானவற்றை ஒழித்தாலும் முதிர்வயதால் சாவு வரத்தான் செய்யும்