அந்திக்கிறிஸ்து யார்?
பைபிளின் கருத்து
அந்திக்கிறிஸ்து யார்?
‘அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.’—1 யோவான் 2:18.
பயங்கர கேடி ஒருவன் உங்களுடைய சுற்றுவட்டாரத்தை நோக்கி வந்து கொண்டிருந்ததை பார்த்ததாக உங்களுக்கு எச்சரிப்பு கொடுக்கப்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அவன் பார்ப்பதற்கு எப்படி இருப்பான், தாக்குதலுக்கு என்ன முறைகளை கையாளுகிறான் என்பதையெல்லாம் ஒருவேளை நீங்கள் தோண்டித் துருவி கேட்பீர்கள். எப்போதும் அதிக ஜாக்கிரதையாகவே இருப்பீர்கள்.
இதே விதமான சூழ்நிலைதான் இன்றும் நிலவுகிறது. அப்போஸ்தலனாகிய யோவான் நம்மை இவ்வாறு எச்சரித்திருக்கிறார்: “மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் [“ஏவப்பட்ட கூற்றும்,” NW] தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி [“ஏவப்பட்ட கூற்று,” NW] அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.” (1 யோவான் 4:3) கடவுளுடைய விரோதியும் மனிதரை வஞ்சிப்பவனுமாகிய அப்படிப்பட்ட அந்திக்கிறிஸ்து இன்று மனிதரின் நல்வாழ்வை அச்சுறுத்தி வருகிறானா?
யோவான் தன்னுடைய இரண்டு நிருபங்களில் ஐந்து முறை “அந்திக்கிறிஸ்து” என்ற வார்த்தையை பயன்படுத்தினார். இயேசு கிறிஸ்துவைப் பற்றி பைபிள் போதிப்பவற்றை எதிர்க்கும் தனிப்பட்ட கருத்தை இது அர்த்தப்படுத்துகிறது. தங்களைத் தாங்களே கிறிஸ்து என்றோ அல்லது அவரால் அனுப்பப்பட்டவர்கள் என்றோ கூறி வஞ்சிப்பவர்களையும் இது குறிக்கிறது. அந்திக்கிறிஸ்துவைப் பற்றி பைபிள் நம்பத்தக்க தகவலைத் தருகிறது. ஆனால், பயங்கர கேடிகளின் விஷயத்தில் சிலசமயங்களில் ஏற்படுவது போலவே இந்தத் தெளிவற்ற புதிரைப் பற்றிய விஷயத்திலும், உண்மையைவிட ஆதாரப்பூர்வமற்ற அறிக்கைகளுக்கே அதிக கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது.
தவறாக புரிந்துகொள்ளப்பட்ட கருத்து
அப்போஸ்தலனாகிய யோவானின் காலம் முதற்கொண்டே அவர் குறிப்பிட்ட அந்திக்கிறிஸ்து ஒரு குறிப்பிட்ட நபரை அடையாளம் காட்டுவதாக மனிதர் சொல்லி வந்திருக்கிறார்கள். பலரை ஜனங்கள் இவ்வாறு கருதியுமிருக்கிறார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, ரோம சக்கரவர்த்தியாகிய நீரோதான் அந்த அந்திக்கிறிஸ்து என பலர் நினைத்தார்கள். பிற்பாடு, அடால்ஃப் ஹிட்லர் பகைமையையும் பீதியையும் மக்கள் மத்தியில் கட்டவிழ்த்துவிட்டதால் அவரே அந்திக்கிறிஸ்து என அநேகர் கருதினார்கள். ஜெர்மானிய தத்துவஞானி ஃப்ரீட்ரிக் நீச்சியையும்கூட அவ்வாறு கருதினார்கள். ஆனாலும், இனிமேல்தான் அந்திக்கிறிஸ்து வருவான் என்றும் அவன் கொடுங்கோலனாக ஈவிரக்கமின்றி இந்த உலகை ஆளும் நோக்கத்துடன் வருவான் என்றும் இன்னும் பலர் நம்புகிறார்கள். வெளிப்படுத்துதல் 13-ம் அதிகாரத்திலுள்ள மிருகமே யோவான் சொன்ன அந்த அந்திக்கிறிஸ்துவை குறிப்பிட்டுக் காட்டுவதாக அவர்கள் நம்புகிறார்கள். அதன் முத்திரையான 666, ஏதோவொரு விதத்தில் துன்மார்க்கத்துக்கு ஆதரவாக இருக்கப்போகும் அந்த பொல்லாதவனை அடையாளம் காட்டும் என அவர்கள் கூறுகிறார்கள்.
இக்கருத்துக்களை ஆதரிப்பவர்கள் யோவான் ஒரேவொரு அந்திக்கிறிஸ்துவைத்தான் குறிப்பிட்டார் என ஊகிக்கிறார்கள். ஆனால் அவருடைய வார்த்தைகள் 1 யோவான் 2:18-ல் உள்ள வார்த்தைகளை கவனியுங்கள்: “அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்.” ஆம், முதல் நூற்றாண்டின் ஆவிக்குரிய குழப்பமான நிலைக்கு ஒருவரல்ல, “அநேக அந்திக்கிறிஸ்துகள்” காரணமாக இருந்தனர். இன்றும் ஒருவரல்ல, அந்திக்கிறிஸ்து தொகுதியையே உண்டுபண்ணும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள். மொத்தத்தில், இவர்கள் மனிதரிடையே ஆவிக்குரிய சீர்குலைவை மிகுதியாக ஏற்படுத்தியிருக்கிறார்கள். (1 தீமோத்தேயு 3:1-5, 13) அந்திக்கிறிஸ்து தொகுதியில் உட்படுவது யார்?
எதைக் காண்பிக்கின்றன?இதன் சாத்தியத்தைக் காண வெளிப்படுத்துதல் 13-ம் அதிகாரத்திலுள்ள மிருகத்தை பற்றி இப்போது பார்க்கலாம். அப்போஸ்தலனாகிய யோவான் இவ்வாறு எழுதினார்: ‘நான் கண்ட மிருகம் சிறுத்தையைப் போலிருந்தது; அதின் கால்கள் கரடியின் கால்களைப் போலவும், அதின் வாய் சிங்கத்தின் வாயைப் போலவும் இருந்தன.’ (வெளிப்படுத்துதல் 13:2) இந்த அம்சங்கள் எதைக் குறிப்பிடுகின்றன?
வெளிப்படுத்துதல் 13-ம் அதிகாரத்திற்கும் தானியேல் 7-ம் அதிகாரத்திற்கும் தொடர்பு இருப்பதை பைபிள் அறிஞர்கள் கவனித்திருக்கின்றனர். சிறுத்தை, கரடி, சிங்கம் உட்பட அடையாள அர்த்தமுடைய மிருகங்களைப் பற்றிய தரிசனத்தை தானியேலுக்கு கடவுள் காண்பித்தார். (தானியேல் 7:2-6) கடவுளுடைய தீர்க்கதரிசி இவற்றிற்கு என்ன விளக்கம் அளித்தார்? அந்த மிருகங்கள் பூமியின் ராஜாக்களை அல்லது அரசாங்கங்களை அடையாளப்படுத்துவதாக அவர் எழுதினார். (தானியேல் 7:17) ஆகவே, வெளிப்படுத்துதலில் சொல்லப்பட்டுள்ள மிருகங்களும் மனித அரசாங்கங்களையே பிரதிநிதித்துவம் செய்கின்றன என்ற நியாயமான முடிவுக்கு நாம் வரலாம். இந்த அரசாங்கங்கள் கடவுளுடைய ராஜ்யத்தை எதிர்ப்பதால் அவை அந்திக்கிறிஸ்துவின் பாகமாகின்றன.
வேறு யாரும் அந்திக்கிறிஸ்துவின் பாகம்?
கடவுளுடைய குமாரன் கிறிஸ்து இந்தப் பூமியில் இருந்தபோது அவருக்கு விரோதிகள் பலர் இருந்தனர். இப்போது அவர் மனிதரால் எட்டமுடியாத இடத்தில் இருந்தாலும் இன்றும் அவருக்கு விரோதிகள் உள்ளனர். அவர்களில் யாரெல்லாம் உட்பட்டிருக்கிறார்கள் என்பதை கவனியுங்கள்.
அப்போஸ்தலனாகிய யோவான் இவ்வாறு குறிப்பிட்டார்: “இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.” (1 யோவான் 2:22) விசுவாச துரோகிகளும் பொய் மத தலைவர்களும் இயேசுவின் எளிய போதனைகளைத் திரித்து ஏமாற்றத்தக்க சிக்கலான மதபோதனைகளாக ஆக்குகின்றனர். அப்படிப்பட்டவர்கள் பைபிள் சத்தியத்தை ஒதுக்கித் தள்ளி கடவுள் மற்றும் கிறிஸ்துவின் பெயரில் பொய்யானவற்றை பரப்புகிறார்கள். தங்களுடைய திரித்துவ கோட்பாட்டால் பிதாவுக்கும் குமாரனுக்கும் இடையிலான உண்மையான உறவை அவர்கள் மறுதலிக்கிறார்கள். ஆகவே, அவர்களும் அந்திக்கிறிஸ்துவின் அங்கமாகிறார்கள்.
லூக்கா 21:12-ல் தம்முடைய சீஷர்களை இயேசு இவ்வாறு முன்னெச்சரித்தார்: “என் நாமத்தினிமித்தம், அவர்கள் உங்களைப் பிடித்து, ஜெபஆலயங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் ஒப்புக்கொடுத்து, . . . துன்பப்படுத்துவார்கள்.” முதல் நூற்றாண்டு முதற்கொண்டே உண்மை கிறிஸ்தவர்கள் கொடூரமான துன்புறுத்துதலை சகித்து வந்திருக்கிறார்கள். (2 தீமோத்தேயு 3:12) இப்படிப்பட்ட துன்புறுத்துதலை தூண்டிவிடுவோர் கிறிஸ்துவுக்கு எதிராக செயல்படுகிறார்கள். இவர்களும் அந்திக்கிறிஸ்துவின் பாகமாகிறார்கள்.
“என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான், என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.” (லூக்கா 11:23) இங்கு, தமக்கும் தாம் ஆதரிக்கும் கடவுளுடைய நோக்கங்களுக்கும் எதிராக இருப்பவர்கள் அனைவரையும் இயேசு அந்திக்கிறிஸ்துவின் அதே அணியில் சேர்க்கிறார். இவர்களுக்கு என்ன முடிவு காத்திருக்கிறது?
அந்திக்கிறிஸ்துகளுக்கு என்ன காத்திருக்கிறது?
‘பொய் பேசுகிறவர்களை [கடவுள்] அழிப்பார், இரத்தப்பிரியனையும் சூதுள்ள மனுஷனையும் கர்த்தர் அருவருக்கிறார்’ என சங்கீதம் 5:6 கூறுகிறது. இந்த வசனம் அந்திக்கிறிஸ்துகளுக்கு பொருந்துகிறதா? ஆம். அப்போஸ்தலனாகிய யோவான் இவ்வாறு எழுதினார்: “மாம்சத்தில் வந்த இயேசு கிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்.” (2 யோவான் 7) அந்திக்கிறிஸ்துகளின் பொய் மற்றும் வஞ்சகத்தின் காரணமாக சர்வவல்லமையுள்ள கடவுள் அவர்களுக்கு அழிவைக் கொண்டுவருவார்.
அவர்களுக்கு தண்டனையை நிறைவேற்றும் நேரம் நெருங்கி வருகையில் உண்மை கிறிஸ்தவர்கள், குறிப்பாக விசுவாச துரோகிகளிடமிருந்து வரும் கிறிஸ்தவத்திற்கு எதிரான வஞ்சகத்தாலோ அழுத்தத்தாலோ தங்களுடைய விசுவாசம் பலவீனமடைய அனுமதிக்கக் கூடாது. யோவானின் பின்வரும் எச்சரிப்பு மிகவும் அவசரமானது: “உங்கள் செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.”—2 யோவான் 8.(g01 8/8)
[பக்கம் 20-ன் படத்திற்கான நன்றி]
பக்கங்கள் 2 மற்றும் 20-ல் நீரோ: Courtesy of the Visitors of the Ashmolean Museum, Oxford