எறும்பின் வேடத்தில் சிலந்தி
எறும்பின் வேடத்தில் சிலந்தி
இதோ, சின்னஞ்சிறிய ஒரு வகை சிலந்திப்பூச்சி எறும்புப்புற்றுக்குள் நைசாக நுழைகிறது. நுழைவது மட்டுமா, அந்த எதிரிகளின் வீட்டிலேயே குடியேறிவிடுகிறது. அடையாளம் கண்டுபிடிக்க முடியாதபடி தன்னுடைய தோற்றத்தையும் நடத்தையையும் மாற்றிக்கொண்டு மாறுவேடத்தில் வாழ்கிறது இந்த சிலந்தி. இப்படி பாவனை செய்வது மிக அவசியம், ஏனென்றால் தொல்லை என்று ஏதாவது வந்துவிட்டால் போதும் அந்த எறும்புகளுக்கு வெறி தலைக்கேறிவிடும். அதோடு, சிலந்திக்கு எறும்பைப்போல உடம்பு இல்லாததால், அதற்கு அதுவும் ஒரு பெரிய சவாலாக இருக்கிறது.
எறும்புக்கு ஆறு கால்களும் இரண்டு உணர்கொம்புகளும் இருக்கின்றன. சிலந்திக்கோ எட்டு கால்கள் இருக்கின்றன, ஆனால் உணர்கொம்புகள் இல்லை. அப்படியென்றால் இந்த சிலந்தி எப்படி தன்னை ஒரு எறும்பாகக் காட்டிக்கொள்ள முடிகிறது? அது எறும்புப் புற்றுக்குள் தன் ஆறு கால்களுடன் மட்டும் ஓடியாடுகிறது. மற்ற இரண்டு கால்களையோ முன்னே நீட்டிக் கொண்டு, உணர்கொம்புகளைப் போல் காட்டி பாசாங்கு செய்கிறது.
அதோடு, சந்தேகமே வராத விதத்தில் தன் போலி உணர்கொம்புகளை அசைக்கவும் செய்கிறது இந்த வேடதாரி. அதை ஆட்டிக்கொள்கிற விதத்தைப் பார்த்தால், எறும்புகளின் உணர்கொம்புகளே தோற்றுப்போகும்! அது மட்டுமா, எறும்புகளைப் போலவே கோணல் மாணலாக தள்ளாடி நடக்கிறது இந்த நடிப்புத் திலகம்!
சாட்சாத் எறும்பைப் போலவே இருக்க இந்த சிலந்தி முயலுகிறது. ஏனென்றால் எறும்போடு எறும்பாக புற்றில் குடியிருப்பதாக காட்டிக்கொண்டால்தான் இந்த சிலந்தியால் பிழைக்க முடியும். எறும்புப் புற்றிலே இருக்கும்போது, சிலந்திக்குளவிகள் (spider wasps) போன்ற இயற்கை எதிரிகளிடத்திலிருந்து இந்த சிலந்திக்குப் பாதுகாப்பு கிடைக்கிறது. மேலும், சிலந்திப் பூச்சிகளை பொதுவாக ரசித்து ருசிக்கும் பாடும்பறவைகளும்கூட அவற்றை சாப்பிடாமல் விட்டுவிடுகின்றன. சிலந்திகளை வேட்டையாடும் மற்ற சிலந்திகளும் இந்த நடிகனின் “உணர்கொம்புகளைப்” பார்த்து ஏமாந்து விடுகின்றன.
ஒருவேளை ஒரு பறவையோ பல்லியோ அல்லது வேறு ஏதாவது ஜீவியோ அந்த எறும்புக் கூட்டத்தைத் தாக்கினால், உடனே அந்த சிலந்தி தன் வேஷத்தைக் கலைத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிவிடுகிறது. எறும்புகளைவிட சிலந்திகளுக்கு நல்ல கண்பார்வை உள்ளது, அவற்றால் குதித்துச் செல்லவும் முடியும்; இதனால் தப்பிப்பது சுலபமாகிவிடுகிறது.
பகல் நேரத்தில் அந்த சிலந்தி எறும்புப் புற்றுக்குள் மாட்டிக்கொள்ளாதபடி மிக உஷாராக நடந்துகொள்கிறது. இரவிலோ அது சுறுசுறுப்பாகி, அந்த எறும்புப்புற்றில் இருக்கும் எறும்புகளையே பிடித்து தின்றுவிடுகிறது! ஒருவேளை அதன் வண்டவாளம் தெரியவந்துவிட்டால், தன் எட்டு கால்களையும் பயன்படுத்திக் கொண்டு ஓடோடிவிடுகிறது.
சிலசமயம் இந்த எறும்புப்புற்றுக்குள் ஆண் சிலந்தியோடு பெண் சிலந்தியும் சேர்ந்துகொள்ளும். அந்தப் பெண் சிலந்தி, தன் துணைக்கு விசுவாசமாக இருப்பதோடு, புத்திசாலித்தனமாகவும் நடந்துகொள்கிறது. தன் துணையை மட்டுமல்லாமல் தன் முட்டைகளையும் பாதுகாப்பதற்கு, அந்த எறும்புப் புற்றுக்குள் பாதுகாப்பு வலையைப் பின்னுகிறது.
இந்தச் சிலந்தியைப் பற்றி கற்றுக்கொள்வதற்கு இன்னுமதிகம் இருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் பூமியில் இருக்கும் மற்ற அநேக விலங்கினங்களின் விஷயத்திலும் இதுவே உண்மை. ஆவலைக் கிளறும் கடவுளுடைய படைப்புகளைப் பற்றி எதிர்காலத்தில் இன்னுமதிகமாகக் கற்றுக்கொள்ளும்போது எவ்வளவு அருமையாக இருக்கும்! (g02 4/22)
[பக்கம் 27-ன் படம்]
இரு எறும்புகளுக்கிடையே ஒரு சிலந்தி
[படத்திற்கான நன்றி]
Bill Beatty