காதுகொடுத்துக் கேளுங்கள், கற்றுக்கொள்ளுங்கள்
காதுகொடுத்துக் கேளுங்கள், கற்றுக்கொள்ளுங்கள்
“நாம் அறிந்திருக்கும் 85 சதவீத விஷயங்களை செவிகொடுத்துக் கேட்டதால்தான் கற்றிருக்கிறோம்” என்று டோரன்டோ ஸ்டார் செய்தித்தாளில் வெளிவந்த ஒரு அறிக்கை சொல்கிறது. நாம் பெரும்பாலான நேரம் கேட்பதில் செலவிட்டாலும், நம் கவனம் வேறெங்கோ இருக்கிறது அல்லது வேறு விஷயங்களில் நாம் மூழ்கிவிடுகிறோம் அல்லது கேட்ட விஷயங்களில் 75 சதவீதத்தை மறந்துவிடுகிறோம். கவனத்தைக் கவரும் இந்தப் புள்ளிவிவரம், காது கொடுத்துக் கேட்கும் திறமையை நாம் வளர்த்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் காட்டுகிறது.
“சமுதாயத்தில் இருக்கும் பல பிரச்சினைகள், சரியாக கவனிக்காததால் தான் உருவாகின்றன” என்பதாக அந்த அறிக்கை சொல்கிறது. தற்கொலைகளுக்கும் பள்ளிகளில் நடக்கும் வன்முறைக்கும் குடும்பப் பிளவுகளுக்கும் போதை மருந்துக்கு அடிமையாவதற்கும் இதுவே காரணம் என்று பேச்சு நிபுணரும் பேச்சுத்தொடர்பு வல்லுனருமான ரெபெக்கா ஷேஃபர் நம்புகிறார்.
ஜனங்களின் கேட்கும் பாணிகள் பலதரப்பட்டவை என்பதாக சமூக விஞ்ஞானிகள் கவனித்திருக்கிறார்கள். சிலர் மக்களைப் பற்றிய விஷயங்களையே கேட்க விரும்புகிறார்கள்; இவர்கள், ஒரு கதையோடு சம்பந்தப்பட்ட ஆர்வமூட்டும் நுணுக்கவிவரங்கள் அனைத்தையும் கேட்டு தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். மற்றவர்களோ அந்தக் கதையில் உள்ள சம்பவங்களைப் பற்றி கேட்கவே விரும்புகிறார்கள்; பேச்சாளர் நேரடியாக விஷயத்திற்கு வர வேண்டுமென விரும்புகிறார்கள். “ஆக, இப்படிப்பட்ட இரு ரகத்தாரும் உரையாடும்போது பேச்சுத்தொடர்பு தோல்வியில் முடிவடையலாம்” என்று ஸ்டார் சொல்கிறது.
நல்ல காரணத்துக்காகவே இயேசு, ‘நீங்கள் கேட்கிற விதத்தைக் குறித்துக் கவனியுங்கள்’ என்று வலியுறுத்தினார். (லூக்கா 8:18) நன்றாக காதுகொடுத்துக் கேட்பதுதான் நாகரிகம். அது சிறந்த உரையாடலின் முக்கிய அம்சமும்கூட. ஒரு உரையாடலின்போது எப்படி கவனிப்பது என்பதற்கு இதோ சில நடைமுறையான ஆலோசனைகள்: கவனத்தைத் திருப்பும் காரியங்களை அசட்டை செய்ய வேண்டும், சற்று முன்னே சாய்ந்தவாறு கேட்க வேண்டும், பேசுபவரின் கண்களை நேருக்குநேர் பார்ப்பதன் மூலமும் தலையசைப்பதன் மூலமும் ஊக்கமாக பிரதிபலிக்க வேண்டும். கவனமாகக் கேட்கும் திறமையை வளர்த்துக்கொள்ள நாம் எல்லோரும் தொடர்ந்து முயல வேண்டும். ஏனெனில், எந்தளவு நன்கு கவனித்துக் கேட்கிறோமோ அந்தளவுதான் கற்றுக்கொள்ள முடியும். (g02 4/8)