Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தாயாக இருப்பதன் சவாலை சந்தித்தல்

தாயாக இருப்பதன் சவாலை சந்தித்தல்

தாயாக இருப்பதன் சவாலை சந்தித்தல்

இன்றைய பிள்ளைகளே நாளைய தலைமுறையினர் என்றால், அவர்களை அந்நிலைக்கு ஆளாக்கிய தாய்மார்கள் மதிப்புக்கும் மரியாதைக்கும் ஆதரவுக்கும் தகுதியானவர்கள். நவீன உலகமோ தாயின் ஸ்தானத்தைப் பற்றி முன்னுக்குப்பின் முரணான பல தகவல்களை வெளியிடுகிறது. என்றாலும், பிள்ளைகள் கடவுள் அருளும் ஆசீர்வாதம் என்றும் அவர்கள் பெற்றோரின் மகிழ்ச்சிக்கு காரணமாகலாம் என்றும் பைபிள் உறுதியளிக்கிறது. (சங்கீதம் 127:4-6) இருந்தாலும் தாயாக இருப்பதில் உட்பட்டுள்ள எதார்த்தங்களைப் பற்றியும் பைபிள் குறிப்பிடாமல் இல்லை. அவர்கள் எதிர்ப்பட வேண்டிய பல சவால்களையும் பைபிள் பதிவு செய்திருக்கிறது.

பிள்ளைகளை வளர்ப்பதிலும் அதில் தாய் என்ற ஸ்தானத்தில் செய்யும் காரியங்களிலும் பெற்றோர் எடுக்கும் தீர்மானங்கள், பிள்ளைகளின் வாழ்க்கையிலும் பண்புகளிலும் ஆழமான, நீடித்த பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்தத் தீர்மானங்கள் பெற்றோரின் வாழ்க்கை முறையில் பெரும் மாற்றங்களை உண்டுபண்ணலாம்; ஆகவே அவர்கள் அவற்றை மிக கவனமாக செய்ய வேண்டியது அவசியம். அவற்றில் பின்வரும் கேள்விகளும் அடங்கும்: ஒரு தாய் வேலைக்குச் செல்ல வேண்டுமா? அப்படியென்றால் எவ்வளவு நேரத்திற்கு? அந்த சமயத்தில் பிள்ளைகளை கவனித்துக் கொள்ளப் போவது யார்? மொத்தத்தில், பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு மிகச் சிறந்ததும் கடவுளுடைய பார்வையில் சரியானதுமான காரியங்களையே செய்ய வேண்டும்.

என்றாலும், ஞானமாக தீர்மானங்களை எடுப்பதற்கு தன்னந்தனியாக போராடுவதாக தாய்மார் நினைக்க வேண்டியதில்லை. ஏசாயா 40:11-⁠ல் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகளிலிருந்து அவர்கள் மிகுந்த ஆறுதலை அடையலாம். சின்னஞ்சிறு குழந்தைகளையுடைய தாய்மாரின் தேவைகளுக்கு கடவுள் மிகுந்த அக்கறை காட்டி, அவர்களை “மெதுவாய் நடத்துவார்” என அந்த வசனம் குறிப்பிடுகிறது. மகிழ்ச்சியும் வெற்றியும் காணும் தாயாக இருப்பதற்கு எண்ணற்ற வழிமுறைகளை கடவுள் பைபிள் வாயிலாகத் தந்து, அத்தகைய ஆழ்ந்த அக்கறையை வெளிப்படுத்துகிறார்.

நியாயத்தன்மையோடிருங்கள்: கிறிஸ்தவர்கள் நியாயத்தன்மை உடையவர்கள் என்ற பெயரெடுக்க வேண்டும். (பிலிப்பியர் 4:5, NW) ஓர் எழுத்தாளரும் தாயாருமாகிய ஜேனட் பென்லி என்பவர் இந்த நியமத்தின் மதிப்பை அறிந்துகொண்டார். “மிக உயர்ந்த எதிர்பார்ப்புகளோடுதான் தாயின் ஸ்தானத்திற்கு அடியெடுத்து வைத்தேன்” என அவர் கூறுகிறார். “நான் மிகச் சிறந்த தாயாக திகழ தீர்மானித்தேன். அதற்கென எல்லா புஸ்தகங்களையும் வாசித்தேன். மேதைகள் எல்லாருடைய ஆலோசனைகளுக்கும் செவிசாய்த்தேன். ஆனால் திறமையும் வெற்றியும் கிட்டிய பெருமிதத்திற்குப் பதிலாக மிஞ்சியதெல்லாம் அழுத்தமும் லாயக்கற்ற உணர்வும்தான்.” “மற்றவர்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பவும் ‘இலட்சிய’ தாயாகவும் வாழ முற்படுவது உற்சாகத்தை குறைத்து, கவலையையும் குற்றவுணர்வையுமே குவிக்கும்” என அவர் விளக்குகிறார்.

எளிமையாக வாழுங்கள்: “ஓய்வொழிச்சலில்லாத இந்த வாழ்க்கை பாணியினால் குடும்பங்கள் இழப்பது குழந்தையை சீராட்டி பாராட்டி வளர்க்கும் அனுபவத்தையும் குடும்ப வாழ்க்கையின் மகிழ்ச்சியையுமே” என நியூஸ்வீக் பத்திரிகை குறிப்பிட்டது. இதனால் தாய்மார் பலரும் எளிய வாழ்க்கையையே விரும்புகிறார்கள். அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ நீங்கள் என்ன செய்யலாம்? முதலாவதாக, “அதிமுக்கியமான காரியங்களுக்கு” முன்னுரிமை கொடுங்கள்; பிள்ளைகளுக்குத் தேவையான கவனிப்பை அளித்து அவர்களோடு நேரம் செலவிடுவது இதில் உட்படும். (பிலிப்பியர் 1:10, 11, NW) இரண்டாவதாக, உங்களுடைய வாழ்க்கை பாணியை ஆராய்ந்து பாருங்கள். உண்மையில் அந்தளவுக்கு முக்கியமல்லாத காரியங்களையும் உடைமைகளையும் நீங்கள் ஒருபுறமாக ஒதுக்கி வைக்க வேண்டியிருக்கலாம்.

உங்களுடைய வாழ்க்கையில் எது மிகவும் முக்கியம்? எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பெற்றிருப்பதா அல்லது ஒன்றை நாடுகையில் மற்ற சில இலட்சியங்களை ஒத்திப்போட முடியுமா? குறைந்த வருவாயுடன் வாழும் கேர்லன் என்ற தாய் தான் சமாளிக்கும் விதத்தை விவரிக்கிறார்: “நான் எளிமையாகவும் சிக்கனமாகவும் குடும்பத்தை நடத்துகிறேன்.” மூன்று குழந்தைகளுக்குத் தாயான குளோரியா கூறுவதாவது: “விலையுயர்ந்த துணிமணிகளை வாங்குவதற்கு எங்களிடம் பணம் இருக்கவில்லை, ஆனால் பிள்ளைகளுக்கு நானே உடை தைத்தேன், அதுபோல் வேறு யாரிடமும் இல்லை என்பதால் ரொம்ப விசேஷமானது என்று சொன்னேன்.”

“புத்தியைக் [“பகுத்துணர்வைக்,” NW] காக்கிறவன் நன்மையடைவான்” என கடவுளுடைய வார்த்தை சொல்கிறது. (நீதிமொழிகள் 19:8) தாய்மார்களையும் பிள்ளைகளையும் திக்குமுக்காட வைக்கும் விதவிதமான பொழுதுபோக்குகள், வீட்டு உபயோகத்திற்கான நவீன சாதனங்கள், உலக போக்குகள் போன்றவற்றை சீர்தூக்கி பார்ப்பதற்கு பகுத்துணர்வு தேவை. தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஜூடித் என்ற தாய் இவ்வாறு கூறுகிறார்: “புதுசு புதுசாக விற்பனைக்கு வரும் பொருட்கள், தரமான புதிய தொழில்நுட்பம், அதிகமதிகமான சேவைகள் என எக்கச்சக்கமானவை எங்கள் முன் வலம்வருகின்றன.” ஜெர்மனியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளுக்குத் தாயான ஆங்கேலா அந்தச் சவாலை சமாளிக்கிறார்: “நாம்தான் எது முக்கியமானது எது பயனுள்ளது என தீர்மானிக்க வேண்டும், அவ்வாறு செய்வதற்கு பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.”

செய்ய முடிந்த மாற்றங்களை செய்யுங்கள்: “அறிவையும் முன்மதியையும் பயன்படுத்துங்கள்” என பைபிள் அறிவுரை வழங்குகிறது. (நீதிமொழிகள் 3:21, கன்டெம்பரரி இங்லீஷ் வர்ஷன்) தற்போது நீங்கள் வெளியே வேலை பார்த்து வந்தால், உங்களுடைய கணவரின் வருமானத்திலேயே குடும்பத்தை நடத்த முடியுமா? இக்கேள்விக்கு பதிலளிக்க உங்கள் சம்பளத்திலிருந்து வரிகள், குழந்தை பராமரிப்பு செலவு, போக்குவரத்து செலவு, துணிமணி செலவு, ஓட்டல் செலவு, இதர செலவுகள் போக மிச்சம் கையில் எவ்வளவு பணம் தேறும் என பாருங்கள். அதுமட்டுமல்ல கணவரின் சம்பளத்தோடு உங்களுடைய சம்பளத்தையும் சேர்த்தால் வருமான வரி அதிகமாக கட்ட வேண்டியிருக்கலாம். மீதமிருப்பது எவ்வளவு கொஞ்சம் என்பதை அறியும்போது நீங்களே ஆச்சரியப்படலாம்.

சிலர் குறைந்த நேர வேலை பார்க்கிறார்கள் அல்லது வீட்டிற்கு அருகிலேயே வேலை பார்க்கிறார்கள்; அது குறைந்த சம்பள வேலையானாலும் பிள்ளைகளுடன் செலவிட அதிக நேரம் கிடைக்கிறது. கௌரவத்தையும் திருப்தியையும் தரும் காரணத்திற்காக ஒரு வேலை உங்களுக்கு முக்கியமானதாக இருக்கலாம்; ஆனால் அப்படிப்பட்ட வேலையை நீங்கள் விட்டுவிட தீர்மானிக்கும்போது, அதே கௌரவத்தையும் திருப்தியையும் வீட்டில் இருந்தவாறே எப்படி அடையலாம் என சிந்தியுங்கள்.

உதவியை நாடுங்கள்: உதவிக்காக ‘முறையிடுவது’ பலன் தரலாம் என கடவுளுடைய வார்த்தை அடிக்கடி காண்பிக்கிறது. (யாத்திராகமம் 2:23, 24; சங்கீதம் 34:15) ஒரு தாயின் முறையிடுதல் கணவரின் உதவிக்கரத்தை பெறுவதாக இருக்க வேண்டும். அவருடைய ஒத்துழைப்புடன் வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்வதற்கு திட்டம் போட முடியும்; இவ்வாறு செய்வதால் பிள்ளைகளோடு நேரத்தை செலவிடுவது போன்ற இலட்சியங்களை இருவரும் அடைய போதுமான நேரம் இருக்கும். முடிந்தால், தன்னுடைய அக்கறைகளிலும் இலட்சியங்களிலும் பங்குகொள்கிற குடும்பத்தார், உற்ற நண்பர்கள் போன்ற பலரிடமிருந்து ஒரு தாய் உதவியையும் உற்சாகத்தையும் பெறலாம்.

தாய்மார்கள் பலரும் கிறிஸ்தவ சபையிலுள்ள சக விசுவாசிகளின் நல்லாதரவையும் பெறலாம். “கடவுள் நம்மிடம் அன்பையும் பரிவையும் காட்டுகிறார், நம்மீது அக்கறையிருப்பதையும் காட்டுகிறார்” என்பதை அறிந்து கொள்வதற்கான வழிகளில் ஒன்று “சபையுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொள்வதே” என்பதை மூன்று குழந்தைகளுக்கு தாயான மாரியா கண்டுணர்ந்தார்.

ஓய்வுக்கு நேரம் ஒதுக்குங்கள்: நல்ல உடல் வலிமை பெற்றிருந்த பரிபூரண இயேசுவும்கூட தம் சீஷர்களை “தனிமையான ஓரிடத்திற்கு சற்றே இளைப்பாறும்படி” செல்வதற்கு அழைத்தார். (மாற்கு 6:30-32, NW) தலைக்குமேல் வேலைகள் குவிந்திருக்கும் அழுத்தம் நிறைந்த காலங்கள் முழுவதிலும் சமநிலையுடன் இருப்பதற்கு ஒரு தாய் பெற்றிருக்கும் திறமையின் பேரிலேயே அவள் வெற்றி சார்ந்திருக்கிறது. பிள்ளைகளுக்கு நீங்கள் வேண்டும் என்பது உண்மைதான், அதேசமயத்தில் நீங்கள் சந்தோஷமாகவும், திருப்தியாகவும் இருக்க வேண்டும் என்றே அவர்கள் விரும்புகிறார்கள். அப்படியானால், உங்களுக்கு போதுமான ஓய்வு தேவை.

முன்னர் குறிப்பிடப்பட்ட ஆங்கேலா ஓய்வெடுக்க நேரத்தை திட்டமிட்டிருக்கிறார்: “அமைதலான காலை நேரத்தில் அரைமணி நேரமாவது ஓய்வெடுக்க ஒதுக்குகிறேன். எனக்கும் என் கணவருக்கும் வாரத்தில் ஒரு நாளோ இரண்டு நாளோ மாலையில் நேரம் கிடைக்கிறது. அப்போது பிள்ளைகள் வீட்டில் வேறெங்காவது அமைதியாக எதையாவது செய்யும்படி சொல்கிறோம். இவ்வாறு இரண்டு பேரும் ரிலாக்ஸாக இருப்பதற்கு ஒரு மணிநேரம் கிடைக்கிறது.”

ஆன்மீக காரியங்களுக்கு முதலிடம் கொடுங்கள்: நோக்கத்தை மறந்துவிடுவதாலும், முக்கியமான காரியங்களுக்கு முதலிடம் கொடுக்க தவறிவிடுவதாலும் தாயின் சவால்கள் அதிகரிப்பதை அனுபவம் காட்டியிருக்கிறது. கிறிஸ்தவ குடும்பங்கள் கடவுளுடைய சித்தத்தை செய்வதை வாழ்க்கையில் முதலிடத்தில் வைப்பதற்கு ஒன்றுசேர்ந்து உழைக்கும்போது மகிழ்ச்சியை அனுபவிக்கின்றன. “தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது” என அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (1 தீமோத்தேயு 4:8) தேவபக்தியோடு, பைபிளிலுள்ள கடவுளின் வழிநடத்துதலுக்கு இசைய வாழும் குடும்பம் மகிழ்ச்சியை கண்டடையும். பைபிள் நியமங்களை குடும்பத்தில் யாருமே பின்பற்றாததைவிட ஒருவராவது பின்பற்ற முயலுகையில் நிலைமை எவ்வளவோ முன்னேறுகிறது.

அடெல் என்ற கிறிஸ்தவ தாய் முழுநேர வேலைக்குச் செல்பவர்; ஆன்மீக சிந்தையுடன் இருப்பதால் வரும் நன்மைகளை அவர் கண்டிருக்கிறார். “பைபிள் பிரசுரங்களிலிருந்து எங்களுக்கு நிறைய தகவல்களும் வழிநடத்துதலும் கிடைக்கின்றன; எங்களுடைய பிள்ளைகள் என்னென்ன பிரச்சினைகளை எதிர்ப்படுகிறார்கள், அவர்களுக்கு எப்படி உதவலாம் என்றெல்லாம் அவை எங்களுக்கு கற்பிக்கின்றன. நாம் போதிக்கும் ஆன்மீக விஷயங்களை பிள்ளைகள் கேட்டு நடப்பதை பார்க்கும் போது நம் முயற்சி வீண்போகவில்லை என்பதை அறிந்துகொள்கிறோம். அவர்களுடைய பேச்சிலும் நடத்தையிலும் சிறு சிறு முன்னேற்றங்களை காணும்போது, அவர்கள் நம் பேச்சைக் கேட்டு நடக்கிறார்கள் என்றும், நம் முயற்சிக்கு பலன் கிடைக்கிறது என்றும் நாம் அறிந்துகொள்கிறோம்” என அவர் கூறுகிறார். a

தடை தாண்டும் ஓட்டத்தில் தாய்மார் நிச்சயம் வெற்றி பெற முடியும். கடவுள் மீது நம்பிக்கை வைத்து, ஊக்கம் தளராமல் உழைக்கும் சுயதியாக தாய்களின் முயற்சிகள் வீண் போவதில்லை என்பதற்கு அவரே ஆறுதலான நம்பிக்கையை அளிக்கிறார். கடவுளுடன் நெருங்கிய உறவை வளர்த்துக்கொள்ளும் தாய்மார்கள், ‘சோர்ந்து போகிறவர்களுக்கு பெலன் கொடுப்பதாக’ அவர் கொடுத்த வாக்குறுதியிலிருந்து ஆறுதல் அடையலாம்.​—ஏசாயா 40:29. (g02 4/8)

[அடிக்குறிப்பு]

a யெகோவாவின் சாட்சிகள் பிள்ளைகளை பயிற்றுவிப்பதற்கென்றே எண்ணற்ற பைபிள் பிரசுரங்களை பிரசுரித்திருக்கிறார்கள். அவற்றில் சில: என்னுடைய பைபிள் கதை புத்தகம், இளைஞர் கேட்கும் கேள்விகள்​—பலன்தரும் விடைகள், குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம்.

[பக்கம் 10-ன் பெட்டி]

தாயின் செல்வாக்கு

ஒரு தாயாக உங்களுடைய பிள்ளையின் வாழ்க்கையில் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறீர்கள் என நீங்கள் சிலசமயம் எண்ணிப் பார்க்கலாம். சகாக்கள், ஆசிரியர்கள், பொழுதுபோக்கு, வீடியோ கேம்ஸ், இசை போன்ற காரியங்கள் சிலசமயங்களில் உங்களுடைய செல்வாக்கை விஞ்சிவிடுவதாக தோன்றலாம்.

மோசேயின் தாயான யோகெபேத்தை சிந்தித்துப் பாருங்கள். அவர் மிக நெருக்கடியான காலக்கட்டத்தில் வாழ்ந்து வந்தார்; தன் மகனுக்கு என்ன நடந்தாலும் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருந்தார். ஆனாலும், தன் மகனை வளர்த்து ஆளாக்குவதற்கு கிடைத்த எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டார். முதலாவதாக, தன் மகன் மோசேயை சாகக் கொடுக்க மறுப்பதன் மூலம் தைரியமான விசுவாசத்தைக் காட்டினார். குழந்தையின் உயிரை பாதுகாத்ததன் மூலம் கடவுள் அவரது விசுவாசத்திற்கு வெகுமதி அளித்தார்; அதோடு, குழந்தைக்கு பாலூட்டி அதன் தாயாக இருப்பதற்கு சந்தர்ப்ப சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுத்ததன் மூலமும் வெகுமதி அளித்தார்.​—யாத்திராகமம் 1:15, 16; 2:1-10.

யோகெபேத் தன் மகனுடைய ஆளுமையை வடிவமைப்பதற்கு உதவினார் என்பது தெளிவாகிறது. பெரியவரான பின்பு மோசே எகிப்தில் அரச குடும்பத்தில் வாழ்ந்தாலும் எபிரெயர்களிடமும் அவர்களுடைய கடவுளிடமும் அதிக ஈடுபாடு வைத்திருந்தது, வளரும்பிராயத்தில் அவர் மீது பெற்றோர் செல்வாக்கு செலுத்தியதற்கு அத்தாட்சி அளிக்கிறது.​—எபிரெயர் 11:24-26.

ஒரு தாயாக, உங்கள் பிள்ளைமீது செல்வாக்கு செலுத்துவதற்கு யோகெபேத்துக்கு இருந்ததைக் காட்டிலும் எத்தனையோ அதிக சந்தர்ப்பங்கள் உங்களுக்கு இருக்கலாம். கடவுளுடைய போதனையை நித்தியமாய் நெஞ்சில் பதிக்க, உங்களுடைய பிள்ளையின் குழந்தைப் பருவத்தை​—குறுகிய சில வருடங்களை—​பயன்படுத்திக் கொள்கிறீர்களா? அல்லது உங்களுடைய பிள்ளையின் வளர்ச்சியில் இன்றைய கலாச்சாரம் பலமான செல்வாக்கு செலுத்த நீங்கள் அனுமதிக்கிறீர்களா?

[பக்கம் 10-ன் படங்கள்]

வீட்டு வேலைகளில் மற்றவர்களையும் பங்குகொள்ள செய்யுங்கள், உங்களுக்கென நேரத்தை ஒதுக்குங்கள், ஆன்மீக காரியங்களுக்கு முதலிடம் கொடுங்கள்