பொருத்தமான ரூம் மேட்டை கண்டுபிடிப்பது எப்படி?
இளைஞர் கேட்கின்றனர் . . .
பொருத்தமான ரூம் மேட்டை கண்டுபிடிப்பது எப்படி?
“ரூம் மேட்டுகள் இல்லாதிருந்தால் முழுநேர ஊழியராக சேவித்துக்கொண்டே வாடகையையும் மற்ற செலவுகளையும் என்னால் சமாளித்திருக்க முடியாது.”—லின். a
வீட்டைவிட்டு செல்லும் இளைஞர்கள், ‘நிஜ உலகில்’ வாழ்க்கைச் செலவுகள் எவ்வளவு அதிகம் என்பதை உணருகையில் அடிக்கடி ஆச்சரியத்தில் ஆழ்ந்துவிடுகின்றனர். அநேகர், உயரும் விலைவாசியை சமாளிக்க ஒன்று அல்லது அதற்கும் அதிகமான ரூம் மேட்டுகளோடு செலவுகளை பகிர்ந்துகொள்கின்றனர்.
ஆனால், இதற்கு முந்தைய இதழில் வெளிவந்த கட்டுரை சுட்டிக்காட்டியபடி இன்னொருவரோடு, அதிலும் முன்பின் அறியாதவரோடு ஒரே ரூமில் சேர்ந்து வாழ்வது பெரும் சவாலாக இருக்கலாம். b முழுநேர ஊழியர்களாய் சேவிப்பதற்காக ஒரே ரூமில் வாழும் இளம் கிறிஸ்தவர்கள் மத்தியிலும் இது உண்மை. உங்கள் சூழ்நிலை எதுவாயிருந்தாலும் ஒரு ரூம் மேட்டோடு வாழ்வதைப் பற்றி யோசிக்கிறீர்கள் என்றால் அவரை தெரிவு செய்கையில் ‘நடைமுறை ஞானத்தை’ உபயோகிப்பதே புத்திசாலித்தனமானது. c—நீதிமொழிகள் 3:21, NW.
கெட்ட கூட்டுறவால் வரும் ஆபத்து
அநேக இளைஞர்கள், அறிவிப்பு பலகைகள், செய்தித்தாள்களில் வரும் சிறுசிறு விளம்பரங்கள், இன்டர்நெட் போன்றவற்றில் ரூம் மேட்டுகளை தேடுகின்றனர். ஆனால், இப்படிப்பட்ட இடங்களில் தேடுவது இளம் கிறிஸ்தவர்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கலாம். அதன் காரணமாக உங்களுடைய விசுவாசம், ஒழுக்கம், அல்லது தராதரங்களை பின்பற்றாதவர்களை சந்திக்க நேரிடலாம். உங்கள் விசுவாசத்தைக் கொண்டவர்களுடன் மட்டுமே வாழ வேண்டும் என விரும்புவது குறுகிய மனப்பான்மையா அல்லது சமூக விரோத செயலா? இல்லை, மாறாக அதுவே ஞானமானது. “கெட்ட கூட்டுறவுகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்” என பைபிளே எச்சரிக்கிறது.—1 கொரிந்தியர் 15:33, NW.
லீ என்ற இளம் பெண்ணை கவனியுங்கள். அவள் யுனிவர்சிட்டி டார்மட்டரியில் வாழச் சென்றபோது கிறிஸ்தவளாக இன்னும் முழுக்காட்டுதல் எடுக்கவில்லை. “அது ஆபத்தான சூழ்நிலை. சில பெண்கள் ரூமுக்கு திரும்பி வந்தபோது தங்கள் ரூம் மேட் செக்ஸ் கொள்வதை பார்த்திருக்கின்றனர்” என்று ஞாபகப்படுத்திக் கூறுகிறாள். அங்கு வாழ்ந்தது லீயின் ஆவிக்குரிய தன்மையை சீக்கிரத்தில் பாதித்தது. “பெரும்பாலான கிறிஸ்தவ கூட்டங்களுக்கு செல்லவேயில்லை” என்று அவள் ஒப்புக்கொள்கிறாள். அவளுடைய நடத்தை கொஞ்சம் கொஞ்சமாக மோசமடைந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. “ஒரு நாள் கெட்ட வார்த்தை பேசினேன், உடனே அங்கிருந்த ஒருத்தி, ‘அதை யெகோவா ஏற்றுக்கொள்வாரா?’ என்று கேட்டுவிட்டாள்” என்கிறாள். எவ்வளவு அவமானம்! சந்தோஷகரமாக, லீ அந்த மோசமான சூழ்நிலையிலிருந்து வெளியேறி ஆவிக்குரிய முன்னேற்றம் செய்ய ஆரம்பித்தாள். உங்களுடைய தராதரங்களை மதிக்காதவர்களோடு வாழ்வது எவ்வளவு ஆபத்தானது என்பதை அவளுடைய அனுபவம் விளக்குகிறது.
பொருத்தமான ரூம் மேட்டுகளை கண்டுபிடித்தல்
அப்படியென்றால், எங்கு போய் தேடுவது? நீங்கள் செல்லும் யெகோவாவின் சாட்சிகளுடைய சபையிலேயே தேட ஆரம்பியுங்கள். அக்கறைக்குரிய விதமாக, முழுநேர ஊழியர்களான அநேகர் ஆவிக்குரிய மனம் படைத்த மற்ற இளைஞர்களை, முழுநேர பிரசங்கிகளுக்காக ஏற்பாடு செய்யப்படும் பல்வேறு பள்ளிகளிலும் கூட்டங்களிலுமே d பெற்றோர், சபை மூப்பர்கள், பயணக் கண்காணிகள் போன்றவர்கள்கூட உதவியளிக்கலாம். பொருத்தமான ரூம் மேட்டுகளாக இருக்கக்கூடிய சில இளைஞர்களை அவர்கள் அறிந்திருக்கலாம்.
சந்திக்கின்றனர்.உங்களுக்கு ரூம் மேட் தேவை என்பதை மற்றவர்களிடம் சொல்லி வைப்பதுகூட நல்ல பலனளிக்கலாம். உங்களுடைய தேவையைப் பற்றி எவ்வளவு பேரிடம் சொல்லி வைக்கிறீர்களோ பலன் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் அவ்வளவு அதிகம். (பிரசங்கி 11:6) எல்லாவற்றிற்கும் மேலாக, ரூம் மேட்டை கண்டுபிடிப்பதில் உதவும்படி யெகோவாவிடம் ஜெபியுங்கள், உங்கள் முயற்சிகளை ஆசீர்வதிக்கும்படி அவர்மீது சார்ந்திருங்கள்.—1 யோவான் 5:14, 15.
விவரமறிந்து கொள்ளுங்கள்
ரூம் மேட்டாக முடிந்த ஒருவரை கண்டுபிடித்தவுடன் சீக்கிரத்தில் அவரோடு வாழ வேண்டும் என்றே நீங்கள் ஆசைப்படலாம். ஆனால் அதற்கு முன்பாக சில விவரங்களை அறிந்துகொள்வது ஞானமானது. அவருடைய சபையிலுள்ள ‘சகோதரராலே அவர் நற்சாட்சி பெற்றவராயிருக்கிறாரா?’ (அப்போஸ்தலர் 16:1, 2) அவரை அறிந்த ஆவிக்குரிய தகுதியுள்ளவர்களிடம், நீங்களும் உங்கள் பெற்றோரும் நேரடியாக பேசி இதை தெரிந்துகொள்ளலாம். இதைப் போன்ற கேள்விகளை நீங்கள் கேட்கலாம்: ‘அவர் எப்படிப்பட்ட பெயரை சம்பாதித்திருக்கிறார்? அவர் ஆவிக்குரிய ரீதியாகவும் உணர்ச்சி பூர்வமாகவும் நிலையானவரா? நற்செய்தியை பிரசங்கிப்பதிலும் கூட்டங்களில் பதில் சொல்வதிலும் பங்குகொள்கிறாரா? நேர்மையான நடத்தைக்கு பெயர் பெற்றவரா?’
“ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்” என்பதை நினைவில் வையுங்கள். (நீதிமொழிகள் 13:20) “என்னுடைய ரூம் மேட் நல்ல ஆவிக்குரிய நபர். எனது ஆவிக்குரிய தன்மையை காத்துக்கொள்ள அது எனக்கு உதவுகிறது” என்று டேவிட் கூறுகிறான். “ஒவ்வொரு இரவும் பைபிளிலிருந்து ஒரு அதிகாரத்தை சேர்ந்து வாசிக்கலாம் என்று ரூம் மேட்டுகளில் சிலர் கூறுவர். எனது குடும்பத்தார் சாட்சிகளாக இல்லாததால் குடும்ப பைபிள் படிப்பை நான் அனுபவித்ததே கிடையாது. அதனால், ரூம் மேட்டுகளோடு ‘குடும்ப படிப்பை’ செய்வதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்!” என பல ரூம் மேட்டுகளுடன் வசித்திருக்கும் ரனே கூறுகிறாள். ஆம், உங்களைப் போலவே ஆவிக்குரிய காரியங்களை நேசிக்கும் ஒருவர் ரூம் மேட்டாக வாய்ப்பது உண்மையில் பெரும் ஆசீர்வாதமே.
வெளிப்படையாக பேசுங்கள்
அடுத்ததாக, நேருக்கு நேர் சந்தித்து விஷயங்களை கலந்து பேசுங்கள். இவ்வாறு பேசுவது, உங்கள் இருவருடைய ஆள்தன்மைகளும் ஒத்துப்போகின்றனவா என்பதை
அறிய உதவும். அக்கறைக்குரிய விஷயம் என்னவென்றால், ஒரே விதமான பேச்சுத்தொடர்பு பழக்கங்கள் உள்ள ரூம்மேட்டுகள், “தங்கள் ரூம் மேட்டுடன் அதிக திருப்தியும் விருப்பமும் கொள்வதாக அறிக்கை செய்தனர்” என பேச்சுத்தொடர்பு ஆராய்ச்சி அறிக்கைகள் என்ற ஆங்கில இதழில் வெளியான ஓர் ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது. ஆகவே, நீங்கள் வெளிப்படையாகவும் கலகலப்பாகவும் பேசுகிற, ஒளிவுமறைவற்ற நபர் என்றால் அடக்கமாக, அமைதியாக, அல்லது தனியாக இருக்க விரும்பும் நபரோடு சேர்ந்து வாழ்வது கடினமாக இருக்கலாம்.உங்கள் கலந்தாலோசிப்பை போலீஸ் விசாரணை போலாக்க விரும்பமாட்டீர்கள் என்றாலும், ரூம் மேட்டாக வரப்போகிறவரின் உடனடி திட்டங்களையும் குறிக்கோள்களையும் பற்றி பேசுவது உதவியாக இருக்கலாம். அவர் ஆவிக்குரிய முன்னேற்றம் செய்ய விரும்புகிறாரா அல்லது வெறுமனே வீட்டில் நிலவும் பிரச்சினை நிறைந்த சூழ்நிலையிலிருந்து தப்பிக்க முயலுகிறாரா? எழக்கூடிய மற்றொரு பிரச்சினையை லின் குறிப்பிடுகிறாள். “என் ரூம் மேட் ஒருத்தி காதலித்து வந்தாள். அவளுடைய பாய்ஃபிரெண்ட் எப்போதும், நடுராத்திரி வரைகூட அங்கேதான் இருப்பான்” என்று கூறுகிறாள். அன்பை வெளிக்காட்ட அவர்கள் செய்தவை பொருத்தமற்றவையாகவும் அமைதி குலைப்பவையாகவும் இருந்ததை லின் கண்டாள். என்றாலும், சில அடிப்படை விதிமுறைகளை முன்கூட்டியே ஏற்படுத்திவிட்டால் இப்படிப்பட்ட பிரச்சினைகளை சில சமயங்களில் தவிர்க்கலாம். உதாரணமாக, “குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு பையன்கள் இருக்கக்கூடாது என்ற விதிமுறையை கடைப்பிடித்தோம்” என்று ரனே கூறுகிறாள். எதிர்பாலாரோடு ரூமிலோ அப்பார்ட்மென்டிலோ தனியாக ஒருபோதும் இருக்கக்கூடாது என்பதையும் ரூம் மேட்டுகள் இருவருமே ஒப்புக்கொள்வது நன்மை பயக்கும்.
ஹாபிகள், ஆசைகள், விருப்பமான இசை போன்றவற்றைப் பற்றி பேசுவதும் பிரயோஜனமாக இருக்கலாம். “நான் செய்வதை போன்ற காரியங்களையே விரும்புகிற, என்னைப் போன்ற குணமுடைய, அதே காரியங்களை செய்ய விரும்புகிறவரோடு ரூம் மேட்டாக இருக்கவே ஆசை” என மார்க் கூறுகிறான். என்றாலும், வித்தியாசப்பட்ட விருப்பங்கள் இருந்தால் ரூம் மேட்டாக இருக்கவே முடியாது என்று அர்த்தமல்ல. உண்மையான விஷயம் இதுவே: நீங்கள் இருவருமே எவ்வளவு தூரம் வளைந்து கொடுப்பவர்கள்? வித்தியாசங்களை பொறுத்து ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்க தயாராய் இருக்கிறீர்களா?
“சேர்ந்து வாழ்வதிலிருந்து அவர் எதை பெற விரும்புகிறார் என்பதையும் நீங்கள் கேட்க வேண்டும். நீங்கள் அவருடைய மிகச் சிறந்த நண்பராக, நெருக்கமான தோழராக இருக்க வேண்டும் என்று சிலர் விரும்பலாம். ஆனால் எனக்கு அதில் விருப்பமில்லை” என்று லீ கூறுகிறாள். “என் ரூம் மேட்டோடு சேர்ந்து காரியங்களைச் செய்ய விரும்புகிறேன், என்றாலும் மற்றவர்களோடு சேர்ந்து எதையாவது செய்ய விரும்புகையிலும் எனக்கு பின்னாலேயே வர வேண்டும் என்று அவன் நினைக்கக்கூடாது” என டேவிட்டும் கூறுகிறான். அதைப் போலவே, அவர் பிரசங்க வேலையில் உங்களுக்கு துணையாக இருக்க விரும்புகிறாரா அல்லது வேற்று மொழி சபையில் சேவிக்க வேண்டும் போன்ற வேறு ஏதாவது விருப்பங்கள் அவருக்கு உள்ளனவா என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.
கடைசியாக, சமைத்தல் (உங்களில் ஒருவருக்காவது சமைக்க தெரியுமா?), வீட்டு வேலைகளை பகிர்ந்துகொள்ளுதல், சொந்த சாதனங்களை உபயோகித்தல், அலமாரியை பகிர்ந்துகொள்ளுதல், ஃபர்னிச்சர்கள், சேமித்துவைக்கும் இடங்கள், வளர்ப்பு பிராணிகள் போன்ற விஷயங்களையும் அசட்டை செய்துவிடாதபடி கவனமாயிருங்கள். இந்த விஷயங்களை முன்கூட்டியே பேசி தீர்த்துக்கொள்வது பின்னர் மனஸ்தாபங்களையும் மனவருத்தங்களையும் தவிர்க்க உதவும். “ஆலோசனையினால் எண்ணங்கள் ஸ்திரப்படும்” என்று நீதிமொழிகள் 20:18 கூறுகிறதே.
“நல்லொழுக்கமாயும் கிரமமாயும்”
“செல்லுஞ்செலவைக் கணக்குப் பா”ருங்கள் என்ற உதவியளிக்கும் மற்றொரு நியமம் லூக்கா 14:30-ல் காணப்படுகிறது. ஆம், வாழ்க்கை செலவுகள் எவ்வளவு ஆகும் என்பதை கணக்கு பார்க்க முயலுங்கள். வாடகை, உணவு, பராமரிப்பு போன்றவற்றிற்கு எவ்வளவு செலவாகும்? இருவரும் ஒரே ஃபோனை உபயோகிப்பீர்களா? அப்படியென்றால், பில்லை எவ்வாறு பகிர்ந்துகொள்வீர்கள்? “ஒரு பெண்ணை ரூம் மேட்டாக ஏற்பதற்கு முன்பு அவள் தன் பங்கு செலவை கொடுப்பாளா என்பதை முதலில் உறுதி செய்துகொள்வேன்” என லின் கூறுகிறாள். “வாடகை அல்லது உணவு செலவுகளை பகிர்ந்துகொள்ளாத, . . . அல்லது மிகவும் அதிக பராமரிப்பு செலவுகளை ஏற்படுத்துகிற ரூம் மேட்டுகள் உங்களுக்கு தேவையற்ற தலைவலி கொடுப்பார்கள்” என அடுத்த படி என்ற ஆங்கில ஆன்-லைன் பத்திரிகை கூறுவது எவ்வளவு உண்மை!
“எவ்வளவு என்பதல்ல எப்போது கொடுக்கிறார்கள் என்பதே சில சமயங்களில் பிரச்சினையாகி விடுகிறது” என்று ரனே கூறுகிறாள். “நாங்கள் மாதத்தின் மூன்றாம் நாள் வாடகை கொடுக்க வேண்டும். ஆனால், சிலசமயம் ஒரு ரூம் மேட் தன் பங்கை கொடுக்காமலேயே வாரயிறுதி நாட்களில் விடுமுறை சென்றுவிடுவாள், அப்போது வீட்டுக்காரரிடம் நான்தான் மன்னிப்பு கேட்க வேண்டும்” என அவள் விளக்குகிறாள். தெளிவாகவே, எல்லாவற்றையும் “நல்லொழுக்கமாயும் கிரமமாயும்” செய்வதும் முக்கிய காரியங்களை நன்கு திட்டமிட்டு செய்வதும் ஞானமானது. (1 கொரிந்தியர் 14:40) ஒப்பந்தங்களை எழுத்து வடிவில் வைத்துக்கொள்வது எப்போதுமே சிறந்தது.
கவனமாகவும் ஞானமாகவும் இருந்தால் உங்களுக்கு பிரச்சினை கொடுப்பவராக அல்ல, ஆசீர்வாதமாக அமையும் ரூம் மேட்டை கண்டுபிடிக்க அதிக வாய்ப்புள்ளது. ஆனால், ரூம் மேட்டாக வந்த பிறகு பிரச்சினைகளும் ஆளுமை மோதல்களும் ஏற்பட்டால் என்ன செய்வது? இந்தச் சூழ்நிலைகளைப் பற்றி அடுத்த இதழில் வரும் கட்டுரை ஆராயும். (g02 5/22)
[அடிக்குறிப்புகள்]
a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
b மே 8, 2002 தேதியிட்ட இதழில் வெளியான “ரூம் மேட்டை அனுசரித்துப் போவது ஏன் படுகஷ்டமாக இருக்கிறது?” என்ற கட்டுரையைக் காண்க.
c இந்தக் கட்டுரையில், சிக்கனத்திற்காகவும் வசதிக்காகவும் சேர்ந்து வாழும் ஒரே பாலினத்தைச் சேர்ந்த ரூம் மேட்டுகளைப் பற்றியே சிந்திக்கப்படுகிறது; இன்று அநேகர் ஒழுக்கங்கெட்ட காரணங்களுக்காக ஒன்றுகூடி வாழ்வதை முன்னிட்டு இதை வலியுறுத்த விரும்புகிறோம்.
d பயனியர் ஊழியப் பள்ளிக்கு செல்லும் விசேஷ சிலாக்கியம் முழுநேர பிரசங்கிகளுக்கு உள்ளது. வருடாந்தர வட்டார மாநாடுகள் சமயத்திலும் முழுநேர பிரசங்கிகளோடு கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
[பக்கம் 14-ன் படம்]
பைபிளின் ஒழுக்க தராதரங்களை கடைப்பிடிக்காத நபர்களோடு வாழ்வது ஆபத்தானது
[பக்கம் 14-ன் படம்]
ஒருவரை ரூம் மேட்டாக ஏற்பதற்கு முன்பு நேருக்கு நேர் சந்தித்து முக்கிய விஷயங்களை கலந்துபேசுங்கள்