எமது வாசகரிடமிருந்து
எமது வாசகரிடமிருந்து
போர் “பைபிளின் கருத்து: போரை கடவுள் அங்கீகரிக்கிறாரா?” (ஜூன் 8, 2002) கட்டுரையைப் படித்த பிறகு பூரித்துப் போனேன். நான் யெகோவாவின் சாட்சிகளில் ஒருத்தி; பூர்வ இஸ்ரவேல் தேசத்தார் ஏன் பல போர்களில் ஈடுபட்டனர் என்று ஊழியத்தில் அநேகர் கேட்டார்கள். எனவே இந்த குறிப்பிட்ட தலைப்பு என்னை மிகவும் கவர்ந்தது. நான் அவர்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்தாலும் என்னிடம் போதிய விஷயம் இல்லாதிருந்தது. இந்த கட்டுரை எளிமையாகவும் நம்பவைக்கும் ஆதாரங்களுடனும் இருந்தது. இந்த எல்லா குறிப்புகளையும் எந்த சந்தர்ப்பத்திலும் பயன்படுத்தும் வகையில் குறித்து வைத்துக் கொண்டேன். இது போன்ற கட்டுரைகள் எங்களுக்கு கட்டாயம் தேவை.
வி. எஸ்., ரஷ்யா (g03 1/22)
இரண்டாம் உலக யுத்தத்தின் சமயத்தில் பளுவான பீரங்கி வண்டியின் டிரைவராக இருந்தேன். ஒரு நாள் காலை, இராணுவப் படைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குன்றை கைப்பற்றிய பிறகு அங்கு வணக்கத்திற்காக பீடம் ஒன்று நிறுவப்பட்டது. மூன்று பீரங்கி வண்டிகள் நிறைய இருந்த ராணுவ வீரர்கள் பீடத்தை நோக்கி மண்டியிட்டு வணங்கி, பாதிரியாரால் ஆசீர்வாதத்தையும் பெற்றது எனக்கு ஞாபகம் இருக்கிறது. சிறிது நேரத்திற்கு பிறகு நாங்கள் தாக்கப்பட்டோம். அந்த மூன்று பீரங்கி வண்டிகளில் இருந்த அனைவரும் இறந்து போனார்கள். 1957-ல் நானும் என் மனைவியும் யெகோவாவின் சாட்சிகள் ஆனோம். அந்த போரின் எந்த பக்கத்தையும் கடவுள் ஆதரிக்கவில்லை என்பதை தெரிந்துகொண்டோம். அன்று முதல் ஆவிக்குரிய போரில்தான் ஈடுபட்டு வருகிறோம். இப்போது கடவுள் எந்த பக்கத்தில் இருக்கிறார் என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும்.
எஃப். எஸ்., நியுஜிலாந்து (g03 1/22)
அம்மாவாக இருப்பது “அம்மாவாக இருக்க அபார திறமை தேவையா?” (மே 8, 2002) என்ற தொடர் கட்டுரைகளுக்கு நன்றி. எனக்கு 13 வயதுதான், ஆனாலும் என் அம்மாவின் நிலைமையையும், ஐந்தரை மாத கர்ப்பிணியாக இருப்பதால் இன்னும் சில மாதங்களில் அவர் எதிர்ப்பட போகும் நிலைமையையும் இக்கட்டுரை தெளிவாக விளக்கியது. நான் இந்த பத்திரிகையை படித்த பிறகு, என் அம்மாவிற்கு அதிக மதிப்பும் மரியாதையும் கொடுக்க உண்மையிலேயே கடினமாக முயற்சி செய்கிறேன்.
என். பி., ஐக்கிய மாகாணங்கள் (g03 1/22)
உயர் இரத்த அழுத்தம் “உயர் இரத்த அழுத்தம்—தவிர்ப்பதும், கட்டுப்படுத்துவதும்” (மே 8, 2002) என்ற அருமையான கட்டுரைக்கு நன்றி. திடீரென்று என் இருதயம் செயலிழக்கவே நான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். அதற்குப் பின், எவ்வாறு உயர் இரத்த அழுத்தத்தை சமாளிக்கலாம் என்ற நல்ல தகவல் அடங்கிய இந்தக் கட்டுரையைப் படித்தேன். பிறகு என் மருத்துவரிடமிருந்தும் ஊட்டச்சத்து நிபுணரிடமிருந்தும் நிறைய ஆலோசனைகளைப் பெற்றேன். இருந்தாலும் இந்த கட்டுரை புரிந்துகொள்ளக்கூடிய வகையில் எளிமையாக இருந்தது. யெகோவா எனக்கு கொடுத்திருக்கும் இந்த உயிரை இன்று முதல் நல்ல முறையில் பார்த்துக் கொள்வேன்.
என். ஐ., ஜப்பான் (g03 1/22)
எனக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதால் ஒரு நாளைக்கு இரண்டு கிராம் உப்பை மட்டுமே சேர்த்துக் கொள்ளும்படி என்னுடைய உடல்நல பராமரிப்பு நிபுணர்கள் சிபாரிசு செய்தார்கள். பக்கம் 24-ல் உயர் இரத்த அழுத்தம் பற்றிய மூன்றாவது பிரேஸிலின் ஒப்பந்தத்தின் படி, ஒரு நாளைக்கு 6 கிராம் உப்பை எடுத்துக் கொள்ளலாம் என கொடுக்கப்பட்டுள்ளது. இது கொஞ்சம் அதிகமாக தெரிகிறதே, ஒருவேளை அச்சுப் பிழையா?
எஃப். எஸ்., ஐக்கிய மாகாணங்கள்
“விழித்தெழு!” பதில்: ஒரு நாளைக்கு 100 மில்லி ஈகுவலன்டுக்கும் குறைவான, அதாவது 5.85 கிராமுக்கும் குறைவான அளவு உப்பை எடுத்துக்கொள்ளும்படி மூன்றாவது பிரேஸிலின் ஒப்பந்தம் கூறுகிறது. ஒரு டீஸ்பூனின் அளவு என்று சொல்வது புரிந்துகொள்ள எளிமையாக இருக்கும். அது 5.18 கிராம் ஆகும். இருந்தாலும், அடிக்குறிப்பில் சொல்லியபடி உயர் இரத்த அழுத்தம் அல்லது வேறு எதாவது நோய் இருப்பவர்கள் இதைக் குறித்து மருத்துவரிடம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும். அந்த நபர் உப்பின் அளவை இன்னும் குறைத்துக்கொள்வது ஒருவேளை பலன் அளிக்கலாம்.
(g03 1/22)
இளைஞர் கேட்கின்றனர் “பொருத்தமான ரூம் மேட்டை கண்டுபிடிப்பது எப்படி?” (ஜூன் 8, 2002) என்ற கட்டுரையை இளைஞர் கேட்கின்றனர் பகுதியில் பார்த்தேன். அதில் நிறைய தகவல்கள் இருந்தன. நான் ஒரு வாலிபப் பெண் இல்லை, இருந்தாலும் சமீபத்தில்தான் விவாகரத்து ஆனவள். விலைவாசி அதிகமாக இருந்ததால் என்னால் தனியாக இருந்து சமாளிக்க முடியாது என்பதை உணர்ந்தபோது அதிர்ச்சியடைந்தேன். இதற்கு ஒரே வழி ஒரு ரூம் மேட்டை கண்டுபிடிப்பதுதான், ஆனால் என்னுடைய வயதின் காரணமாக இது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன். எங்கள் சபையில் இருந்த ஒரு இளம் சகோதரிக்கும் ரூம் மேட் தேவையாக இருந்தது. நாங்கள் இருவரும் ஒரே ரூமுக்கு மாறினோம். இந்த ஏற்பாடு எங்களுக்கு திருப்தியைக் கொடுத்தது. சில நாட்களிலேயே நாங்கள் பணக் கஷ்டத்தை எதிர்ப்பட்டோம்; அப்போது வேறு ஒரு சகோதரியும் எங்களுடன் வந்து சேர்ந்து கொண்டார். 60 வயது பாட்டியம்மாவுடன் வித்தியாசப்பட்ட பின்னணியிலிருந்து வந்த இரண்டு இளம் பெண்களும் ஒன்றாக சேர்ந்து இவ்வளவு சமாதானமாகவும் அன்பாகவும் வாழ முடியுமென்றால், அது யெகோவாவின் அமைப்பில் மட்டும்தான் சாத்தியம் என்று நான் சொல்வேன். நாங்கள் ஒரு சிறிய குடும்பமாக ஆனோம், இது எங்களிடமிருந்த தனிமை உணர்வை அகற்றியது.
எல். ஜி., ஐக்கிய மாகாணங்கள் (g03 1/8)