உலகை கவனித்தல்
உலகை கவனித்தல்
மோசமாகிவரும் பழக்கங்கள்
“த யோமியூரி ஷிம்புன் என்ற செய்தித்தாள் நடத்திய ஆய்வின்போது, ஜப்பானிய மக்களின் பழக்கங்களும் வாழ்க்கை முறைகளும் ரொம்ப மோசமாகிவிட்டன” என்பதாக கிட்டத்தட்ட 2,000 பேரில் சுமார் 90 சதவீதத்தினர் கூறினார்கள். இந்த அளவுக்கு அவர்களை எரிச்சலூட்டியது எது? 68 சதவீதத்தினர் “அப்புறப்படுத்தாத சிகரெட் துண்டுகள், மென்று துப்பிய சுவிங்கம், காலி டப்பாக்கள் போன்றவற்றால் எரிச்சலடைகின்றனர்.” கூச்சலிடும் பிள்ளைகளை பெற்றோர்கள் அடக்காததால் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் எரிச்சலடைகிறார்கள். பொது இடங்களில், செல்லுலார் ஃபோனை உபயோகிப்பது, செல்லப்பிராணிகளின் கழிவை அப்படியே விட்டுச் செல்வது மற்றும் காரையும் சைக்கிளையும் ஒழுங்காக பார்க்கிங் செய்யாமல் போய்விடுவதும்கூட மற்ற சிலரின் குற்றச்சாட்டுகள் ஆகும். இளைஞர்களே அதிகமாக குற்றம் சாட்டப்பட்டார்கள். “20 முதல் 40 வயதிற்குட்பட்டவர்களில் சராசரியாக 66 சதவிகிதத்தினர் நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளி மாணவர்களின் கெட்ட பழக்கங்களை குறை கூறுகின்றனர்.” (g03 2/08)
‘பொய் சொல்வது மூளைக்கு கடினம்’
உண்மையைவிட பொய் சொல்லும்போதுதான் மூளை கடினமாக உழைக்கிறது என்பதாக பென்ஸில்வேனியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். ஒரு நபர் பொய் சொல்லும்போது மூளையின் எந்த பகுதி செயல்படுகிறது என்பதை கண்டறிய டாக்டர் டானியல் லாங்லேபன், ஃபங்ஷனல் மேக்னடிக் ரெசனன்ஸ் இமேஜிங் (fMRI) இயந்திரத்தை பயன்படுத்தி ஆராய்ந்தார். கேள்வி கேட்கப்படும்போது நம்முடைய மூளை முதலாவதாக அதைப் பற்றி யோசிக்கிறது. பிறகு, “இயற்கையாகவே ஒருவர் பொய் சொல்வதற்கு அல்லது பொய்யான பதிலை ஜோடிப்பதற்கு முன்பாக முதலில் உண்மையான பதிலையே யோசிப்பார்” என்பதாக மெக்சிகோ நகர செய்தித்தாளான த நியூஸ் அறிவிக்கிறது. “முயற்சி இல்லாமல் மூளையிலிருந்து உங்களால் ஒரு பதிலையும் பெற முடியாது” என்பதாக லாங்லேபன் கூறுகிறார். “உண்மையை சொல்வதைவிட பொய் சொல்வதே அதிக கடினம், அதனால் நியூரான்களின் செயல்பாடும் அதிகரிக்கிறது.” இப்படி நியூரான்களின் செயல்பாடு அதிகமாவது fMRI இயந்திரத்தில் ஒரு பல்பை போல பளிச்சிடுகிறது. “பொய் சொல்வதில் ஒருவர் கில்லாடியாக இருந்தாலும் அவருடைய மூளைக்கும் பொய் சொல்வது கடினம்தான்” என்று அந்த செய்தித்தாள் கூறுகிறது. (g03 2/22)
வேலை செய்யுமிடத்தில் “தாக்கப்படுதல்”
ஸ்பெயினில் மக்கள் வேலையிலிருந்து லீவு எடுப்பதற்கான முக்கிய காரணம் அவர்கள் “மனரீதியாக அலைக்கழிக்கப்படுவதே” என்று எல் பாயீஸ் சேமானால் பத்திரிகை கூறுகிறது. 20 லட்சத்துக்கும் அதிகமான ஸ்பானிய மக்கள் வேலை செய்யுமிடங்களில் தொடர்ந்து பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். மனோதத்துவ நிபுணர் இன்யாகி பின்னிவெல் இதைப் பற்றி சொல்லும் போது, கடினமாக உழைக்கும் ஒருவர்தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்; ஏனென்றால் அவருடைய திறமைகள் மற்றவர்களை பொறாமை கொள்ளும்படி தூண்டுகிறது என்கிறார். அதனால், வேலை அவர் கைக்கு வராமல் தடுத்து நிறுத்துவது, கலந்துரையாடலில் சேர்த்துக்கொள்ளாமல் ஒதுக்கிவிடுவது, பார்க்காதது போல பாவனை செய்வது, தொடர்ந்து குற்றம் கண்டுபிடித்துக் கொண்டே இருப்பது, அல்லது அவருடைய மரியாதைக்கு வேட்டு வைக்கும் வதந்திகளை பரப்புவது இப்படி செய்வதன் மூலம் அவரை அவமானப்படுத்தலாம். “இந்தக் காரணங்களுக்காகவே ஐரோப்பாவில் ஐந்து பேரில் ஒருவர் தற்கொலை செய்துகொள்வதாக கணக்கிடப்பட்டுள்ளது” என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இதற்கு பரிகாரம் என்ன? “நடப்பதைப் பார்த்துக் கொண்டு மௌனமாக இருக்காதீர்கள். சம்பவத்தை பார்த்தவர்களின் உதவியை நாடுங்கள். கம்பெனியின் உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுங்கள். பிரச்சினைகளுக்கு நீங்களே காரணம் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். ஒருவேளை பிரச்சினை வரம்பு மீறினால் நீங்கள் பணிபுரியும் இலாகாவை [அல்லது] வேலையையே மாற்றிவிடுங்கள்” என்பதாக இந்தப் பத்திரிகை அறிவுரை கூறுகிறது. (g03 2/08)
பிள்ளைகளின் மனநலப் பிரச்சினை
“உலகில் உள்ள பிள்ளைகளில், ஐந்தில் ஒரு பிள்ளை மனதளவிலோ அல்லது நடத்தை சம்பந்தமாகவோ பிரச்சினையை அனுபவிப்பதால் அவர்களுடைய வாழ்க்கையின் எஞ்சிய பகுதியை அது பாதிக்கலாம்” என்பதாக லண்டனில் வெளியாகும் தி இன்டிபென்டென்ட் என்ற பத்திரிகை சொல்லுகிறது. உலக சுகாதார நிறுவனமும் ஐநா குழந்தைகள் நல நிதி அமைப்பும் சேர்ந்து கொடுத்த அறிக்கையில் இன்றைய இளைஞர்களின் மத்தியில் மனச்சோர்வு, தற்கொலை மற்றும் தங்களுக்குத் தாங்களே தீங்கு வருவித்துக் கொள்வது போன்றவை “பயமுறுத்தும் அளவில்” அதிகரித்து வருகின்றன என்று கூறுகின்றன. போர் நடக்குமிடங்களிலும் சமுதாய மற்றும் பொருளாதார மாற்றங்களை அதிகமாக எதிர்ப்படும் இடங்களிலும் வசிப்பவர்களே அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். தி இன்டிபென்டென்ட் பத்திரிகை அறிக்கை செய்தபடி, மனச்சோர்வடைந்த பிள்ளைகளுக்கு “மற்ற நோய்களும் ஆபத்தான பழக்கவழக்கங்களும் தொற்றிக்கொள்ளும் வாய்ப்புள்ளது, இது அவர்களுடைய வாழ்நாட்காலத்தை குறைக்கலாம். அகால மரணமடைந்த பெரியவர்களில் சுமார் 70 சதவீதத்தினரின் மரணத்துக்கு வளரிளம் பருவத்திலேயே புகைப்பிடித்தல், குடித்தல், போதைப்பொருள் உட்கொள்ளுதல் போன்ற பழக்கங்கள் உருவானதே காரணமாக இருந்தது.” (g03 2/08)
ஆரோக்கியத்துடன் இருத்தல்
“உடல் ரீதியாக சுறுசுறுப்புடன் இருப்பது எடையை கட்டுப்படுத்தவும் உடல்நல பிரச்சினைகளான சர்க்கரை வியாதி மற்றும் ஆஸ்டியோபோரோஸிஸ் நோய் வராமல் காக்கவும் உதவுகிறது. அதோடு நல்ல மனநிலையையும் இரவில் நல்ல தூக்கத்தையும் கொடுக்கிறது” என்பதாக டுப்ட்ஸ் யுனிவர்சிட்டி ஹெல்த் அண்ட் நியுட்ரீஷன் லெட்டர் கூறுகிறது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக “நீங்கள் எவ்வளவு நாள் உயிருடன் இருப்பீர்கள் என்பது, உங்களுடைய உடல் ஆரோக்கியத்தைப் பொருத்ததே.” ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழகமும், ஐ.மா.-வைச் சேர்ந்த அனுபவமுள்ள படைவீரர்களுக்கான உடல் நல காப்பு நிறுவனமும் சேர்ந்து, கடந்த 13 வருடத்தில் 6,000-க்கும் அதிகமான நடுத்தர வயதினர்களிடம் நடத்திய ஆய்வின்படி, ஒரு நபர் சோர்வு அடையாமல் எவ்வளவு உடற்பயிற்சி செய்ய முடிகிறதோ அதை வைத்து அவர் நீண்ட நாள் வாழ்வாரா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம் என்கிறது. உடற்பயிற்சி செய்யும் நம் திறன் நம்முடைய மரபுவழியை சார்ந்தே இருப்பதாக மற்றொரு ஆராய்ச்சி கூறினாலும், வேகமாக நடப்பது போன்ற “எளிதான” உடற்பயிற்சியை தினமும் செய்வதே ஆரோக்கியமாய் இருக்க உதவும். (g03 2/08)
இளைஞர்களை வசப்படுத்தும் மதுபானம்
ஆஸ்திரேலியாவில் வெளிவரும் சன்டே டெலிகிராஃப் பத்திரிகையின் அறிக்கையின்படி, “ஆஸ்திரேலிய இளைஞர்களில் பத்து பேரில் ஒருவர் மதுவுக்கு அடிமையாக இருக்கிறார்.” “குடியிலேயே மிதந்தால்தான்” வாரயிறுதி நாட்களை நன்றாக கழித்ததுபோல் இருக்கும் என்று இன்றைய இளைஞர்கள் நினைப்பதாக ஆஸ்திரேலியாவின் மதுபான மற்றும் போதைப்பொருள் சீரமைப்புக் குழுவின் தலைவரான பேராசிரியர் இயன் வெப்ஸ்டர் கூறினார். இளைஞர்களை மதுபானம் அருந்தும்படி ஊக்கமளிக்கும் “உலகளவில் வளர்ந்து வரும் வர்த்தகம்” கண்டு சில வல்லுநர்கள் கவலைப்படுவதாக த சிட்னி மார்னிங் ஹெரல்ட் அறிவிக்கிறது. மதுபான விற்பனையாளர்கள் அநேகர் இளைஞர்களை கவருவதற்காகவே வெப்சைட்டுகளை வைத்திருப்பதாக ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. “இவற்றில் இசை நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் கிடைக்கின்றன, மேலும் சினிமா விமர்சனமும் அவர்கள் தயாரிக்கும் மதுபான வகைகள் பற்றிய தகவல்களும் கிடைக்கின்றன.” “இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையில் மதுபானம் மிகவும் முக்கியமான ஒரு இடத்தை வகிக்க வேண்டும்” என்பதே இந்த நிறுவனங்களின் நோக்கம் என்பதைக் குறித்து உலக சுகாதார நிறுவனம் கவலைப்படுவதாக அந்த அறிக்கை சொல்கிறது. (g03 2/08)
சமுதாயத்திலிருந்து விலகியிருத்தல்
ஜப்பானில் இளைஞர்களையும் நடுத்தர வயதினரையும் பாதிக்கும் ஒரு புதிய காரியம் நடக்கிறது. இது ஹிகிகோமோரி (சமுதாயத்திலிருந்து அதிகமாக விலகியிருத்தல்) என அழைக்கப்படுகிறது; ஒதுங்கியே வாழும் இளைஞர்கள் செய்த பல கொடிய குற்றச்செயல்கள் பற்றிய புலன்விசாரணைகளால் இது பொது ஜனங்களின் கவனத்திற்கு வந்தது. “குற்றவாளிகளின் வாழ்க்கை முறையை ஆராய்ச்சி செய்ததன் மூலம், அவர்கள் ஒதுங்கியிருந்து, கம்ப்யூட்டர் அல்லது ஒரு வீடியோ விளையாட்டை தங்களுடைய கூட்டாளிகளாக கொண்டு மாதக்கணக்கில் ஒரு அறைக்குள்ளாக அடைபட்டு இருப்பது அவர்களுடைய வழக்கம் என தெரிய வந்தது” என த லான்செட் என்ற மருத்துவ பத்திரிகை கூறுகிறது. ஹிகிகோமோரி வன்முறையைவிட சோம்பேறித்தனமாகத்தான் அதிகமாக வெளிக்காட்டப்படுவதாக மற்ற அத்தாட்சிகள் காட்டுகின்றன. இருந்தபோதிலும், “இந்த நோய் செல்வச் செழிப்பாலும் தொழில்நுட்பத்தாலும் மற்றும் ஜப்பானியர்களின் வசதியான வாழ்க்கை முறையாலுமே ஏற்படுவதாக பொதுவாய் ஒப்புக்கொள்ளப்படுகிறது” என த லான்செட் கூறுகிறது. “அநேக ஹிகிகோமோரிகள் சிற்றுண்டிகளையும் மதுபானங்களையும் வீட்டிற்கே வரவழைத்து சாப்பிட்டு, தாங்கள் விழித்திருக்கும் சமயங்களில் அதிக நேரத்தை இன்டர்நெட் அல்லது வீடியோ விளையாட்டுகளை விளையாடுவதில் என்று செலவிடுகிறார்கள்.” இப்படி ஜப்பானில் மட்டும் பத்து லட்சம் இளைஞர்கள் தங்களைத் தாங்களே தனியாக பிரித்து வைத்திருப்பதாக கணக்குகள் காட்டுகின்றன. (g03 2/08)