வளர்ந்துவரும் பிரச்சினை—ஏன்?
வளர்ந்துவரும் பிரச்சினை—ஏன்?
போதைப்பொருள் மற்றும் போராயுதங்களுக்கு அடுத்ததாக மனிதரையே வியாபாரம் செய்வது மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? எல்லா வகையான விபச்சாரமும் மேலும் மேலும் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான, மற்றும் கலாச்சார நிறுவனம் [யுனெஸ்கோ] கூறுகிறது.
லத்தீன்-அமெரிக்க நாடு ஒன்றில் விபச்சாரம் சட்ட விரோதமானதாக இருக்கிறபோதிலும், 5,00,000-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டிருப்பதாக சட்ட மாமன்ற விசாரணைக் குழு அறிக்கை செய்தது.
மற்றொரு நாட்டில், தெருக்களில், முக்கியமாக போதைப்பொருள் கடத்தல் நடைபெறும் இடங்களில், சுமார் 3,00,000 சிறார் விபச்சாரிகள் இருக்கின்றனர்.
ஆசிய நாடுகளில், சுமார் பத்து லட்சம் இளம் விலைமாதர்கள் அடிமைகளைப் போல நடத்தப்படுகிறார்கள் என அறிக்கை செய்யப்படுகிறது. சில நாடுகள், சிறார் விபச்சாரத்திற்கும் செக்ஸ் டூரிஸம்களுக்கும் புகழ்பெற்ற இடங்களாக திகழ்கின்றன.
எய்ட்ஸ் போன்ற பாலியல் வியாதிகள் பல பெருகி வருவதால், கன்னியாக இருக்கும் பிள்ளைகளிடமிருந்து நோய் தொற்றும் வாய்ப்பு பெரும்பாலும் குறைவாக இருக்குமென்ற எண்ணத்தில் அவர்களை அதிக விலைக்கு வாங்க தயாராக இருக்கிறார்கள் வாடிக்கையாளர்கள். “எய்ட்ஸ் பயமே சின்ன பெண்களையும் பையன்களையும் தேடிச்செல்ல ஆட்களைத் தூண்டியிருக்கிறது, இது பிரச்சினையை இன்னும் அதிக மோசமாக்குகிறது” என கூறுகிறார் பிரேசில் நீதித்துறை அமைச்சகத்திலுள்ள லூயிஸா நாஷிப் எலூஃப். “சிறுமிகளையும் பருவ வயது பிள்ளைகளையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்வது பிரேசிலின் ஏழைப் பெண்கள் மத்தியில் காணப்படும் மிகக் கொடிய சமூக பிரச்சினையாக இருக்கிறது” என்றும் அவர் கூறினார்.
வறுமையும் சிறார் விபச்சாரமும்
வறுமையும் கஷ்டமும் கைகோர்த்துக் கொள்ளும் இடங்களில் சிறார் விபச்சாரம் செழித்தோங்குகிறது. தங்கள் நாட்டில் “குடும்பங்கள் சிதைவுறுவதும், பசி பட்டினியும், கஷ்டமும்தான்” சிறார் துஷ்பிரயோகத்திற்கும் விபச்சாரத்திற்கும் காரணம் என கூறினார் அரசாங்க அதிகாரி ஒருவர். வறுமை காரணமாக தங்களுடைய பிள்ளைகளை விபச்சார தொழிலுக்கு விற்றுவிட்டதாக பெற்றோர் சிலர் சொல்கிறார்கள். தெருவில் திரியும் பிள்ளைகள் வயிற்றுப் பிழைப்புக்கு ஒரே வழி விபச்சாரத்தில் ஈடுபடுவதே என நினைப்பதால் அதை நாடுகிறார்கள்.
ஒரு சிறுமி தெரு கும்பலோடு சேர்ந்து கடைசியில் விபச்சாரியாக ஆகிவிடுகிறாள் என கூறுகிறது ஆ எஸ்டாடா டா ஸாங் பாவ்லூ என்ற செய்தித்தாள். பசி வயிற்றைக் கிள்ளும்போது சாப்பாட்டிற்காக அவள் திருடுகிறாள், சிலசமயங்களில் தன் உடம்பையே விற்கிறாள். அடுத்து ஒரேயடியாக விபச்சார தொழிலில் இறங்கிவிடுகிறாள்.
பருவ வயது மங்கையர் பலர் விபச்சாரத்திற்காக சிலசமயங்களில் பிற நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறார்கள். “ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் வறுமை தாண்டவமாடுவதால், பிற நாடுகளுக்குச் சென்ற விபச்சாரிகள் தங்களுடைய குடும்பங்களுக்கு அனுப்பும் பணம் பெரும்பாலும் பெரிய தொகையாகவே தெரிகிறது” என அறிவிக்கிறது யுனெஸ்கோ சோர்ஸஸ். “வறுமையில் உள்ள இந்த நாடுகளிலும் விபச்சாரம் ஊக்குவிக்கப்படுகிறது, ஏனென்றால் இளைஞர்களும் பிள்ளைகளும் தரும் ‘சேவையை’ பயன்படுத்திக் கொள்வதற்காகவே செல்வச் செழிப்பான நாடுகளிலிருந்து படையெடுத்து வருகிறார்கள் டூரிஸ்ட்டுகள்.”
லத்தீன்-அமெரிக்க நகரம் ஒன்றில், தெருவில் திரியும் சிறார் விபச்சாரிகள் எதிர்ப்படும் அவலநிலையை விவரித்து டைம் பத்திரிகை இவ்வாறு அறிவிக்கிறது: “விபச்சாரிகளில் சிலர் பன்னிரண்டே வயதானவர்கள். பெரும்பாலும் இவர்கள் பிளவுபட்ட குடும்பங்களிலிருந்து வருபவர்கள், பகலில் எங்கே இடம் கிடைக்கிறதோ அங்கே உறங்குகிறார்கள்,
இரவில் வாடிக்கையாளர்களைத் தேடி, மாலுமிகள் திரிந்துகொண்டிருக்கும் டிஸ்கோ மையங்களுக்குச் சென்று அங்கே உறவாடுகிறார்கள்.”விபச்சாரத்தில் ஈடுபடும் சிறுமி ஒருத்தி போதை மருந்தை ஏற்றியிருக்கையில், மற்றபடி அவள் ஒத்துக்கொள்ளாத சில இழிவான செயல்களில் ஈடுபடலாம். உதாரணமாக, வயதுவராதவர்கள் சிலர் உட்பட, சுமார் 50 பெண்களை ஒரு டாக்டர் மிகவும் காட்டுமிராண்டித்தனமான செயல்கள் செய்ய வைத்து 92 வீடியோ டேப்புகளில் பதிவு செய்திருப்பதை போலீஸ் கண்டுபிடித்திருப்பதாக வேஷா என்ற பத்திரிகை கூறுகிறது.
நெஞ்சை உறைய வைக்கும் இத்தகைய கொடிய நிஜங்கள் மத்தியிலும், ஓர் இளம் விபச்சாரி இவ்வாறு கூறினாள்: “நான் வேலை தேடி அலைந்தால், வயித்துக்குப் போதுமான வருமானம் கிடைக்காது, ஏனென்றால் எனக்கு எந்தத் தொழிலும் தெரியாது. என்னுடைய குடும்பத்திற்கு இதெல்லாம்
தெரியும், இந்த வாழ்க்கையை விடுவதற்கு எனக்கு இஷ்டமில்லை. இது என்னுடைய உடம்பு, இதை என் இஷ்டப்படி எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்துவேன்.”இருந்தாலும், இந்தச் சிறுமிகளில் எவரும் ஒருபோதும் விபச்சார தொழிலை வாழ்க்கையின் இலட்சியமாக வைத்ததில்லை. இளம் விபச்சாரிகள் அநேகர் “கலியாணம் பண்ணிக்கொண்டு” “நெஞ்சில் நிறைந்த மணவாளனின் ஆசை மணவாட்டியாக இருக்கும்” கனவுடன்தான் இருக்கிறார்கள் என சமூக சேவகர் ஒருவர் கூறுகிறார். சிக்கலான சூழ்நிலைகள் அவர்களை விபச்சார தொழிலில் இறங்க வைத்திருந்தாலும், “பெரும்பான்மையர் தங்களுடைய வீடுகளிலேயே கற்பழிக்கப்பட்டிருப்பதுதான் மிகவும் அதிர்ச்சியூட்டும் ஒன்று” என ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகிறார்.
சிறார் விபச்சாரத்திற்கு முடிவு வருமா?
என்றாலும், இத்தகைய அவல நிலைக்குள் வீழ்ந்துவிட்ட பிள்ளைகளுக்கு நம்பிக்கை இருக்கிறது. விபச்சாரிகளில் பலதரப்பு வயதினரும் தங்களுடைய வாழ்க்கையை மாற்றியிருக்கிறார்கள். (“மக்கள் மாற முடியும்” என்ற பெட்டியை பக்கம் 7-ல் காண்க.) உலகெங்கிலும் வாழும் லட்சோப லட்சம் மக்கள் நல்ல அயலாராகவும் உண்மையுள்ள குடும்ப அங்கத்தினர்களாகவும் மாறுவதற்கு கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் கைகொடுத்திருக்கிறது. முன்பு வேசித்தனக்காரராகவும் விபச்சாரக்காரராகவும் திருடராகவும் பேராசைக்காரராகவும் குடிவெறியராகவும் இருந்தவர்களைப் பற்றி நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.”—1 கொரிந்தியர் 6:9-11.
பைபிள் காலங்களில் நடந்ததைப் போலவே இன்றைக்கும் அநேகர் தங்களுடைய வாழ்க்கையை நல்ல விதமாக மாற்றிவருகிறார்கள். இருந்தாலும், பாலியல் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கு இது மட்டுமே போதாது. சில அரசாங்கங்களும் அமைப்புகளும் செக்ஸ் டூரிஸத்திற்கும் சிறார் விபச்சாரத்திற்கும் எதிராக போர்க்கொடி தூக்கி வருகின்றன. ஆனால் யதார்த்தமாகப் பார்த்தால், வறுமையையும் துன்பத்தையும் மனிதர்களால் அடியோடு ஒழிக்க முடியாது. ஒழுக்கயீனத்திற்கு ஆணிவேராக இருக்கும் சிந்தைகளையும் மனப்பான்மைகளையும் சட்டம் இயற்றுபவர்களால் பிடுங்கியெறிய முடியாது.
ஆனால் இத்தகைய பிரச்சினைகளை மனித முயற்சிகள் அல்ல கடவுளுடைய ராஜ்யம் தீர்க்கும். பின்வரும் கட்டுரை இதை விளக்கும். (g03 2/08)
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
சிறார் விபச்சாரத்திற்கு பெரும்பாலும் வறுமையே காரணம்
[பக்கம் 6-ன் பெட்டி]
பெரும் விலை
டெய்ஸிக்கு ஆறு வயதுகூட இருக்காது, அவள் சகோதரர்களில் ஒருவனே அவளை பாலியல் துஷ்பிரயோகம் செய்தான். அதனால் தன்னுடைய மூத்த அண்ணனுடன் தங்கியிருந்தாள். பின்பு 14 வயதில் ஒரு நைட்கிளப்பில் வேலை பார்க்க ஆரம்பித்தாள். சில நாட்களுக்குப் பிறகு, டெய்ஸிக்கு காய்ச்சல் வந்தது. குணமான பிறகு அவளுடைய நைட்கிளப் முதலாளிகள், அவள் தங்களுக்கு நிறைய கடன்பட்டிருப்பதாக சொல்லி, அவளை ஒரு விபச்சாரியாக வேலை செய்ய பலவந்தப்படுத்தினார்கள். சுமார் ஓராண்டுக்குப் பின்னும் அவள் கடனில்தான் இருந்தாள், ஒருபோதும் அதிலிருந்து மீள முடியாது என்றே அவளுக்குத் தோன்றியது. இருந்தாலும், ஒரு மாலுமி அவளுடைய கடனை அடைத்துவிட்டு அவளை வேறொரு நகரத்திற்குக் கூட்டிச் சென்றார். அங்கே அவள் ஓர் அடிமையைப் போல நடத்தப்பட்டாள். அதனால் அவரை விட்டு ஓடிப் போனாள். பிறகு மற்றொரு மனிதனோடு மூன்று வருஷமாக வாழ்ந்து வந்தாள், அதன் பிறகு அவர்கள் திருமணம் செய்துகொண்டார்கள். தாம்பத்தியத்தில் பல பிரச்சினைகள் இருந்ததால், அவள் மூன்று முறை தற்கொலை முயற்சி செய்தாள்.
கடைசியில், அவளும் அவளுடைய கணவனும் பைபிள் படிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் ஒரு யெகோவாவின் சாட்சியாக மாறுவதற்கு தான் அருகதையற்றவள் என டெய்ஸி உணர்ந்தாள். தேவையான மாற்றங்களை செய்கிறவர்களை யெகோவா தேவன் ஏற்றுக்கொள்கிறார் என பைபிளிலிருந்து எடுத்துக் காட்டப்பட்டபோது, அவள் தன்னுடைய வாழ்க்கையை அவருக்கு ஒப்புக்கொடுத்தாள். சரியானது எதுவோ அதை செய்வதற்கு டெய்ஸி பெருமுயற்சி எடுத்தாள், ஆனாலும் அது போதாது என்றே எப்போதும் நினைத்தாள், அதனால் அவளுக்கு பயங்கர மன உளைச்சல் ஏற்பட்டது. இருந்தாலும், பாலியல் துஷ்பிரயோகத்தாலும் சிறார் விபச்சாரியாக வாழ்ந்த வாழ்க்கையாலும் ஏற்பட்ட கொடுங்கனவுகளை சமாளிப்பதற்கும் உணர்ச்சி ரீதியில் சமநிலை பெற்று அதை காத்துக்கொள்வதற்கும் கிடைத்த உதவிகளை ஏற்றுக்கொண்டாள் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
[பக்கம் 7-ன் பெட்டி]
மக்கள் மாற முடியும்
இயேசு கிறிஸ்து பூமியில் வாழ்ந்தபோது, நலிவடைந்தோருக்காகவும் பாவிகளுக்காகவும் பரிதாபப்பட்டார். வயது என்னவாக இருந்தாலும் விபச்சாரிகள் தங்களுடைய வாழ்க்கைப் பாணியை மாற்றிக்கொள்ள முடியும் என்பதை புரிந்திருந்தார். “ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்றும்கூட மதத் தலைவர்களிடம் இயேசு கூறினார். (மத்தேயு 21:31) அவர்களுடைய வாழ்க்கை முறையைக் கண்டு மற்றவர்கள் இகழ்ந்தபோதிலும், கடவுளுடைய குமாரனில் விசுவாசம் வைத்தார்கள்; ஆகவே நல்மனமுள்ள இப்படிப்பட்ட ஆட்கள் மன்னிப்பை பெற்றார்கள். கடவுளுடைய ராஜ்யத்தின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக, மனந்திரும்புகிற பாவிகள் தங்களுடைய விபச்சார வாழ்க்கையை விட்டுவிட மனமுள்ளவர்களாய் இருந்தார்கள். அதற்குப்பின் கடவுளுடைய நீதியுள்ள தராதரங்களுக்கு இசைவாக வாழ்ந்தார்கள். இன்றும்கூட, எல்லா தரப்பினரும் கடவுளுடைய வார்த்தையிலுள்ள சத்தியத்தை ஏற்றுக்கொண்டு தங்களுடைய வாழ்க்கை முறையை மாற்றுகிறார்கள்.
முதல் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட மரியா, காரீனா, எஸ்டெலா ஆகியோருக்கு நேரிட்டதை சிந்தித்துப் பாருங்கள். வேசியாக தொடர்ந்து வேலை செய்ய வேண்டுமென தாயிடமிருந்து வந்த தொல்லையை மரியா சமாளிக்க வேண்டியிருந்தது; அது மட்டுமல்ல, போதைப்பொருட்களை துஷ்பிரயோகம் செய்வதை நிறுத்துவதற்கும் கடினமாக போராட வேண்டியிருந்தது. அவள் கூறுகிறாள்: “விபச்சார வாழ்க்கை வாழ்ந்ததால் நான் லாயக்கற்றவள் என்ற உணர்ச்சிகள் மேலிட்டன, அவற்றை அடக்குவதற்கு போதைப் பொருட்களை எடுத்தேன்.” யெகோவாவின் சாட்சிகளுடைய கிறிஸ்தவ சபையில் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்டாள் என்பதை அவள் சொல்கிறாள்: “சபை அங்கத்தினர்கள் காட்டிய அன்பு என்னைக் கவர்ந்தது. பிள்ளைகள், பெரியவர்கள் என எல்லாரும் என்னை மரியாதையுடன் நடத்தினார்கள். கலியாணமான ஆண்கள் தங்களுடைய மனைவிகளுக்கு விசுவாசமாக இருந்ததையும் கவனித்தேன். அவர்களுடைய நண்பராக என்னை ஏற்றுக்கொண்டதில் எனக்கு அதிக மகிழ்ச்சி.”
காரீனாவுக்கு 17 வயதாக இருந்தபோது, யெகோவாவின் சாட்சிகள் அவளை சந்தித்தார்கள். அவள் பைபிள் படிக்க ஆரம்பித்தாள், என்றாலும் சில காலத்திற்கு தொடர்ந்து வேசியாகவே வாழ்ந்து வந்தாள். பைபிள் சத்தியங்களை கொஞ்சம் கொஞ்சமாக புரிந்துகொண்டு மதிக்க ஆரம்பித்தாள். ஆகவே தூரமாக வேறொரு நகரத்திற்குச் செல்ல தீர்மானித்தாள், பிறகு அங்கே ஒரு யெகோவாவின் சாட்சியானாள்.
விபச்சாரத்திலும் கேளிக்கைகளிலும் மிதமீறி குடிப்பதிலும் ஈடுபட்டிருந்த எஸ்டெலா பைபிளில் அக்கறை காட்ட ஆரம்பித்தாள். ஆனால் கடவுள் தன்னை ஒருகாலும் மன்னிக்க மாட்டார் என முடிவு செய்தாள். என்றாலும் மனந்திரும்புகிறவர்களை யெகோவா தேவன் மன்னிக்கிறார் என்பதை காலப்போக்கில் புரிந்துகொண்டாள். இப்பொழுது கிறிஸ்தவ சபையில் ஓர் அங்கத்தினராகவும், திருமணம் செய்துகொண்டு மூன்று பிள்ளைகளுக்கு தாயாகவும் இருக்கிறாள். “நான் இப்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன், யெகோவா என்னை சேற்றிலிருந்து எடுத்து தம்முடைய சுத்தமான அமைப்பில் இடம்கொடுத்து அரவணைத்துக் கொண்டதற்காக அவருக்கு நன்றி” என அவள் கூறுகிறாள்.
‘எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் [கடவுள்] சித்தமுள்ளவராயிருக்கிறார்’ என்ற பைபிள் கூற்றை இந்த அனுபவங்கள் ஆதரிக்கின்றன.—1 தீமோத்தேயு 2:4.
[பக்கம் 7-ன் படம்]
சிறார் விபச்சாரிகள் பெரும்பாலும் போதைப் பொருட்களை பயன்படுத்துகிறார்கள்
[பக்கம் 5-ன் படத்திற்கான நன்றி]
© Jan Banning/Panos Pictures, 1997