Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுக்குக் கீழ்ப்படிய தீர்மானித்த ஒருவர்

கடவுளுக்குக் கீழ்ப்படிய தீர்மானித்த ஒருவர்

கடவுளுக்குக் கீழ்ப்படிய தீர்மானித்த ஒருவர்

இருண்ட காலங்களாகிய 1937-⁠ல், அநேக ஐரோப்பிய நாடுகளில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவியதால் அதிக கொந்தளிப்பு ஏற்பட்டது. அதனால் மெய் கிறிஸ்தவர்கள் கஷ்டமான தீர்மானங்களை எடுக்க வேண்டிய சூழ்நிலைகளை எதிர்ப்பட்டார்கள். அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிய வேண்டுமா அல்லது மனிதருக்குக் கீழ்ப்படிய வேண்டுமா? (அப்போஸ்தலர் 5:29) கடவுளுக்குக் கீழ்ப்படிந்தால் தங்களுடைய உயிர் போய்விடும் என்பதை ராணுவ சேவைக்குரிய வயதை எட்டிய இளம் ஆண்கள் அறிந்திருந்தார்கள்.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஆன்டோனியோ கார்காயோ என்பவர் 19 வயதில் இத்தகைய தீர்மானம் எடுக்க வேண்டிய சூழ்நிலையை எதிர்ப்பட்டார். ஜெனரல் ஃபிரான்கோவின் நேஷனலிஸ்ட் படைகள் இராணுவ சேவைக்கு இவரை அழைத்த சமயத்தில் ஸ்பெயினில் உள்நாட்டுப் போர் ஒரு வருட காலமாக நடந்து கொண்டிருந்தது. இதற்கு முந்தைய ஆண்டில்தான் ஆன்டோனியோ ஒரு யெகோவாவின் சாட்சியாக முழுக்காட்டுதல் பெற்றிருந்தார்; கடவுளுடைய ஊழியர்கள் நடுநிலைமை வகிக்க வேண்டும் என்பதையும் போரைக் கற்றுக் கொள்ளவும் கூடாது என்பதையும் பைபிளில் படித்திருந்தார். (ஏசாயா 2:4; யோவான் 17:16) ஒரு ராணுவ வீரனாக மாறி தன் நாட்டைச் சேர்ந்த சக மனிதரை கொலை செய்ய மனமில்லாமல், பிரான்சு நாட்டுக்குத் தப்பிச்செல்ல முயன்றார். ஆனால் அவர் கைது செய்யப்பட்டு, பிரெஞ்சு எல்லைக்கு அருகில் ஹுவெஸ்கா மாகாணத்திலுள்ள ஹாக்கா என்ற இடத்திலிருந்த ராணுவ குடியிருப்புக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ராணுவ நீதிமன்றம் அவருக்கு முன்வைத்த தெரிவு இதுவே: துப்பாக்கி ஏந்த வேண்டும், இல்லையேல் மரண தண்டனை. அன்டோனியோ கடவுளுக்குக் கீழ்ப்படிய தீர்மானித்தார். மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சற்று முன்பு, யெகோவாவின் சாட்சிகளாய் இராத தனது தாய்க்கும் சகோதரிக்கும் பின்வரும் கடிதத்தை எழுதினார்:

“நான் கைது செய்யப்பட்டிருக்கிறேன், விசாரிக்கப்படாமலேயே மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறேன். இன்று இரவு இவ்வுலகிலிருந்து மறைந்துவிடுவேன். எனக்காக வருத்தப்படவோ அழவோ வேண்டாம் . . . , ஏனென்றால் நான் கடவுளுக்குக் கீழ்ப்படிந்திருக்கிறேன். இந்த மரண தண்டனை ஒன்றும் பெரிய இழப்பில்லை, கடவுளுக்கு சித்தமிருந்தால், புதியதோர் மேம்பட்ட வாழ்க்கையைப் பெறுவேன். . . . என்னுடைய கடைசி மணிநேரம் நெருங்கும் இந்த தருணத்தில் நான் ரொம்ப அமைதியாகவே உணருகிறேன். உங்களை உண்மையிலேயே நேசிக்கும் உங்களுடைய மகனிடமிருந்தும் சகோதரனிடமிருந்தும் வரும் இந்தக் கடைசி அரவணைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.” a

மரண தண்டனை நிறைவேற்றப்படும் இடத்திற்குச் சென்ற வழியில் ஆன்டோனியோ யெகோவாவுக்குத் துதிப் பாடல்களைப் பாடியதாக மூன்று ராணுவ வீரர்கள் அறிவித்தார்கள். இத்தகைய தியாக மரணங்களை கடவுளோ அவருடைய குமாரனோ மறந்துவிட மாட்டார்கள். ஆன்டோனியோவைப் போன்ற உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் நிச்சயம் உயிர்த்தெழுதல் என்ற பரிசை பெறுவார்கள் என்பதில் நாம் உறுதியுடன் இருக்கலாம்.​—யோவான் 5:28, 29. (g03 3/8)

[அடிக்குறிப்பு]

a ஆன்டோனியோவின் கடிதம் அவரது தாய்க்குப் போய் சேரவே இல்லை, ஆனால் ஸ்பெயின் நாட்டு ராணுவ ஆவணக் காப்பகத்தில் பல பத்தாண்டுகளாக பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.