Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

போஸ்பொரஸில் ஏகாந்தமாய் நிற்கும் “சீமாட்டி”

போஸ்பொரஸில் ஏகாந்தமாய் நிற்கும் “சீமாட்டி”

போஸ்பொரஸில் ஏகாந்தமாய் நிற்கும் “சீமாட்டி”

துருக்கியிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

அன்பானவர்களின் வருகைக்காக வழி மேல் விழி வைத்துக் கதவண்டையில் காத்து நிற்கும் தாய்போல் அவள் நூற்றுக்கணக்கான வருடங்களாக காத்திருக்கிறாள். போஸ்பொரஸ் ஜலசந்தி மர்மரா கடலில் கலக்கும் இடத்திலேயே அவள் ஏகாந்தமாய் சோகம் கவிந்து நின்றிருக்கிறாள். (வரைபடத்தைக் காண்க.) ஜலசந்தியின் வேகமான நீரோட்டத்தினால் கரைகளிலுள்ள பாறைகளில் மோதும் அலைகளின் நுரைகளை பார்த்தால், அவள் லேஸ் வைத்து தைத்த பாவாடை அணிந்திருப்பது போல் தெரிகிறது. ஆண்டாண்டு காலமாக அங்கு நடந்திருக்கும் நிகழ்ச்சிகளுக்கு இந்த ‘சீமாட்டியே’​—⁠கன்னிக் கோபுரமே​—⁠மௌனமான சாட்சி.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக அவள் தினுசு தினுசான காட்சிகளைக் கண்டிருக்கிறாள்; கப்பல்கள் கவிழும் காட்சி, இரத்தம் ஆறாக ஓடும் சண்டைகளில் வீரர்கள் வெறித்தனமாக சூறையாடும் காட்சி, அரண்மனைக் கொண்டாட்டங்களின் காட்சி என பலதரப்பட்ட காட்சிகளை அவள் பார்த்திருக்கிறாள். இஸ்தான்புல் என்று சொன்னாலே அநேகர் மனதிற்கு முதலில் வருவது இவள்தான். ஆம், இந்தக் கோபுரம் அன்றைய நகரின் அடையாளச் சின்னம்.

மக்கள் என்ன காரணத்திற்காக இந்தக் கோபுரத்திடம் மனதை பறிகொடுப்பார்கள் என்றே சொல்ல முடியாது. அனுதினமும் அந்தி மயங்கும் நேரத்தில் அந்த ஆசிய கடற்கரையில் மனம் மயங்கி நிற்பவர்களை பார்க்காமல் இருக்க முடியாது. இஸ்தான்புல் நகரின் நிழல் பின்னணியில், தண்ணீர் சூழ, உயர்ந்தோங்கி நிற்கும் இந்தக் கோபுரத்தை பார்த்து அவர்கள் மெய்மறந்து போகிறார்கள். ஒரு முதியவர் தன் கடந்தகால நினைவில் மூழ்கிப்போகலாம். அல்லது மிகுந்த உயிர்த்துடிப்புள்ள ஒரு இளைஞர் தன் எதிர்காலத்தை நினைத்து கனா காணலாம். அன்பானவர்களை இழந்து நிற்கும் ஒரு பெண், தன்னைப் போலவே இந்தக் கோபுரமும் தனிமையில் வாடுவதாக நினைத்து பரிதாபப்படலாம். இந்தக் கோபுரத்தை அடிக்கடி தன் கவிதைகளில் குறிப்பிட்டிருக்கும் சுனை ஆக்கன் என்ற துருக்கியர் ஒருமுறை இப்படி சொன்னார்: “இஸ்தான்புல்லை பார்த்து ரசிப்பதற்கு கன்னிக் கோபுரம் சரியான இடமே அல்ல, ஏனென்றால் அவளது அழகை ரசிக்க முடியாமல் போய்விடுமே.”

இந்தக் கோபுரத்தின் கடந்தகாலத்தை கண்டறிவது சாமானியமான விஷயம் அல்ல. சொல்லப்போனால் போஸ்பொரஸின் இந்த “சீமாட்டி”யுடைய சரித்திரத்தை புரட்டப் புரட்ட மர்மம்தான் மிஞ்சுகிறது. பாரம்பரியங்களும் கட்டுக்கதைகளும் உண்மைகளை மூடிமறைத்துவிட்டதாக தெரிகிறது.

தீவு பிறந்த கதை

இப்போது கைவசம் உள்ள மிகப் பழமையான விவரங்கள் இந்தக் கோபுரத்தைப் பற்றியவை அல்ல, ஆனால் கோபுரத்தைத் தாங்கும் பாறைகளைப் பற்றியவையே. பொ.ச.மு. 411-⁠ல் ஏதன்ஸ் நகருக்கும் ஸ்பார்ட்டா நகருக்கும் இடையே போர்கள் நடந்தன. அப்போது பைஸான்டியம் (இப்போது இஸ்தான்புல்) ஸ்பார்ட்டா நகரை ஆதரித்தது. ஆகவே ஐரோப்பாவின் பக்கமாக அமைந்த போஸ்பொரஸின் பகுதி ஸ்பார்ட்டாவுக்கு சொந்தமாகிவிட்டது. ஆசியாவின் பக்கமாக அமைந்த பகுதியையோ ஏதன்ஸ் கைப்பற்றியது. இறுதியில் ஏதன்ஸிடம் ஸ்பார்ட்டா தோல்விகண்டது. ஆனால் கொஞ்ச காலத்திற்கு பைஸான்டியத்திற்கு எதிராக ஏதன்ஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்குப் பதிலாக போஸ்பொரஸ் ஜலசந்தியை மட்டும் கைப்பற்றி, அதில் செல்லும் கப்பல்களுக்கு வரி சுமத்துவதன் மூலம் லாபம் ஈட்ட விரும்பியது. ஏதன்ஸ் படைத்தலைவரும் அரசியல்வாதியுமான ஆல்ஸபையடிஸ் அந்தப் பாறைகள் மேல் ஒரு சுங்க சாவடியைக் கட்டியதாக கருதப்படுகிறது. ஆனால் அந்தச் சமயத்தில் ஒரு கோபுரம் இருந்ததாக எங்கும் குறிப்பிடப்படவில்லை.

சில வருடங்களுக்குப் பிற்பாடு பைஸான்டியமும் ஏதன்ஸ் பேரரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. ஏதன்ஸ், மாஸிடோனிய ராஜாவான இரண்டாம் பிலிப்பின் அச்சுறுத்தலுக்கு பயந்து, 40 போர்க் கப்பல்களை பைஸான்டியத்திற்கு அனுப்பியது; இவ்வாறு, பைஸான்டியத்தில் தன் பிடியை பலப்படுத்தியது. கப்பற்படைத் தலைவரான ஹாரிஸின் மனைவி அவரோடு சென்றார். ஆனால் பிற்பாடு நோய்வாய்ப்பட்டு க்ரிஸாபலஸில் (ஊஸ்கூடாரில்) இறந்துவிட்டார். படைத்தலைவர் ஹாரிஸ் தன் மனைவிக்காக ஒரு பீடத்தைக் கட்டினார். அதுவே, தற்போது கன்னிக் கோபுரம் அமைந்துள்ள பாறைமீது கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.

கோபுரம் பிழைத்த கதை

முதலாம் மானுயல் காம்னினஸ் என்பவரின் ஆட்சியின்போதுதான் (1143-80) முதன்முதலாக கோபுரத்தைப் போன்ற ஒன்று பாறைகள் மீது கட்டப்பட்டதாக கன்னிக் கோபுரத்தின் புத்தகம் என்ற ஆங்கில பிரசுரம் குறிப்பிடுகிறது. அச்சமயத்தில் பீரங்கிகள் பொருத்தப்பட்ட ஒரு சிறிய அரண் போன்ற கட்டிடம் கட்டப்பட்டது.

1453-⁠ல் இஸ்தான்புல் கைப்பற்றப்பட்ட பிறகு அந்தச் சிறிய அரண் பாதுகாக்கப்பட்டு தொடர்ந்து படை சம்பந்தப்பட்ட காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டது. பிற்பாடு மர்மரா கடலைப் பார்த்தபடி ஒரு கலங்கரை விளக்கம் மரத்தினால் கட்டப்பட்டது. இஸ்தான்புல் கைப்பற்றப்பட்டது முதல், மனித சரித்திரத்தின் பக்கங்கள் ரத்தத்தால் எழுதப்பட்டதை பார்த்தவாறே அது அசையாமல் நின்றிருக்கிறது. ஆம், போஸ்பொரஸ் ஜலசந்தியில் போர்க் கப்பல்கள் சண்டையிட்டன, போர் வீரர்கள் ஒருவரையொருவர் பட்டயத்தால் வீழ்த்தினர். வெடிமருந்துகளும், கப்பென்று தீப்பற்றிக்கொள்ளும் வேறு பல பொருட்களும் ஏற்றப்பட்ட சரக்குக் கப்பல்கள் ஒன்றோடொன்று மோதின.

பல ஆண்டுகளாக நில நடுக்கங்களாலும் தீ விபத்துக்களாலும் கோபுரம் சேதமடைந்தது. இறுதியாக 1720-⁠ல் ஏறக்குறைய முழுமையாக அது நெருப்புக்கு இரையானது. டாமாட் இப்ராஹிம் பாஷா என்பவர் கோபுரத்தை மறுபடியும் கல்லினால் கட்டினார். இம்முறை, அநேக ஜன்னல்களைக் கொண்ட, ஈயம் பூசப்பட்ட ஒரு சிறிய குவி மாடத்தை மேலே கட்டினார். 1829-⁠ல் காலரா நோய் திடீரென பரவியபோது, நோயாளிகளை தனியே தங்க வைக்கும் மருத்துவமனையாக இந்தக் கோபுரம் பயன்படுத்தப்பட்டது. அதன்பின் கொஞ்ச காலத்திற்குள், அதாவது இரண்டாம் மாஹ்மூட் என்பவரின் ஆட்சிக்காலத்தில் 1832-⁠ல் கடைசியாக பெரிய பழுதுபார்ப்பு வேலைகள் அனைத்தும் ஒருவழியாக முடிக்கப்பட்டன. 1857-⁠ல் அந்தக் கோபுரம், கலங்கரை விளக்க மன்றக்குழுவின் அதிகாரத்தின்கீழ் வந்தது. அதை கலங்கரை விளக்கமாக இயங்கச் செய்யும் பணி, பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஒரு கம்பெனிக்கு ஒப்படைக்கப்பட்டது. 1920 முதற்கொண்டு அது முழுக்க முழுக்க இயந்திரத்தால் இயக்கப்பட்டது. கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு அது கலங்கரை விளக்கமாக செயலாற்றியது.

ஆட்டோமன் துருக்கியர்களின் காலத்தில் இந்தக் கோபுரம் வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக பெரும்பாலும் இரவில் பயன்படுத்தப்பட்டது; ஆனால், பனிமூட்டமாக இருந்த சமயங்களில் பகலிலும் அது பயன்படுத்தப்பட்டது. புயல்காற்று வீசியபோது சிறிய படகுகளுக்கு இக்கோபுரம் தஞ்சம் அளித்தது; அலைகளில் அடித்துச் செல்லப்படாமல் இருப்பதற்காக அவை இந்தக் கோபுரத்தோடு சேர்த்து கட்டப்பட்டன. அரசு விழாக்களின்போது கோபுரத்திலிருந்து பீரங்கிகள் முழங்கின.

அவ்வப்போது ஆட்டோமன் துருக்கிய மாளிகை இந்தக் கோபுரத்தை வித்தியாசமான காரணங்களுக்கு பயன்படுத்தியது. நாடு கடத்தப்பட்ட அல்லது மரண தண்டனை பெற்ற அரசாங்க அதிகாரிகள் நீண்ட தூர பயணத்திற்காக அல்லது சாகடிக்கப்படுவதற்காக கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு இந்தக் கோபுரத்தில்தான் தங்க வைக்கப்பட்டனர்.

மாறிவரும் அதன் பங்கு

1923-⁠க்கு பிறகு அரசாங்கம் இந்தக் கோபுரத்தைப் பயன்படுத்துவதை நிறுத்தியது. அது வெறும் கலங்கரை விளக்கமாகவே இயங்கியது. இரண்டாம் உலகப் போரின் கொடிய காலங்களின்போது கோபுரம் பழுது பார்க்கப்பட்டது. அதன் உட்புற அமைப்பு கான்க்ரீட்டால் ஸ்திரப்படுத்தப்பட்டது. 1965-⁠ல் இந்தக் கோபுரம் கப்பற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு சிறிது காலத்திற்கு அது படை தகவல்தொடர்பு மையமாக விளங்கியது. 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் போஸ்பொரஸ் வழியாக சர்வதேச கடல் போக்குவரத்து அதிகரித்தது. அந்த ஜலசந்தி வழியாக பிரயாணம் செய்த கப்பல்களின் எண்ணிக்கை மட்டுமல்ல அவற்றின் அளவும் அதிகரித்தது. பெரிய கப்பல்களின் வரவு, கன்னிக் கோபுரத்தின் அமைதியான தனிமைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. 1983-⁠க்குப் பிறகு துருக்கிய கடல்துறை, ஜலசந்தியில் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் இடைப்பட்ட மையமாக அந்தக் கோபுரத்தை பயன்படுத்தியது.

1989-⁠ம் ஆண்டு பிறந்தவுடனேயே வெளிவந்த அசாதாரணமான செய்தியால் மறுபடியும் போஸ்பொரஸின் “சீமாட்டி” மீது அனைவர் கவனமும் திரும்பியது. “கன்னிக் கோபுரம் நச்சூட்டப்பட்டது” என்ற தலைப்பில் அறிக்கை வெளியானது. கப்பல்கூடங்களில் நிற்கும் கப்பல்களில் திரியும் எலிகள் போன்ற தொல்லை தரும் ஜந்துக்களுக்கு மருந்து அடிக்க பயன்படுத்தப்படும் சயனைடு கன்னிக் கோபுரத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாக அது சொன்னது. அந்தக் கொடிய நச்சு வைக்கப்பட்டிருந்த கட்டிடம் சமீபத்தில் இடிக்கப்பட்டது; ஆகவே, “அதை வைக்க வேறு இடமே இல்லாததால்” கோபுரத்திற்குள் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு, போஸ்பொரஸின் ஒண்டியான “சீமாட்டி” விஷப்படுத்தப்பட்டாள். இதைவிட வருத்தமான விஷயம் என்னவென்றால், ஒருவேளை அந்த சயனைடு வாயு வெடித்து பரவியிருந்தால் இஸ்தான்புல்லில் பேரழிவு உண்டாயிருக்கும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது. எட்டு மாதங்களுக்கு பத்திரிகைகளிலும் டிவியிலும் சதா இதே செய்திதான். ஆகவே பிரச்சினையைத் தீர்க்க சயனைடு கொள்கலங்களை ஒருவழியாக வேறு இடத்திற்கு எடுத்துச் சென்றார்கள்.

மே 1992-⁠ல் இளம் கவிஞர்கள் சிலர் கன்னிக் கோபுரத்திற்கு சென்றார்கள்; மேயரின் ஆதரவைப் பெற்ற அவர்கள், ஏறக்குறைய கைவிடப்பட்ட கோபுரத்தை கலாச்சார மையமாக மாற்ற விரும்புவதாக அறிவித்தார்கள். இதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஏனென்றால் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக எண்ணற்ற கவிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இது ஒரு தூண்டுகோலாக இருந்திருக்கிறது. அதன் பிறகு கொஞ்ச காலத்திற்கு போட்டோ மற்றும் கலைக் கண்காட்சிகளால் அது உயிர்த்துடிப்புடன் விளங்கியது; அங்கு இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இந்தக் குறுகிய காலத்தின்போது அது “கவி உலகம்” என அறிவிக்கப்பட்டது.

இன்று கன்னிக் கோபுரம்

கோபுரத்தை பார்வையாளர்களுக்காக திறந்து வைக்க, 1999-⁠ல் பழுதுபார்க்கும் வேலைகள் பெரியளவில் நடந்தன. அதன் பிறகு ஒரு வருடம் கழித்து ரெஸ்டாரன்ட்டாகவும் கலாச்சார மையமாகவும் அக்கோபுரம் திறந்து வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அது சுற்றுலா திட்டத்தின் ஒரு பாகமாக இருந்தது. இன்று ரெஸ்டாரன்ட், கஃபே மற்றும் பார், பார்வைத் தளம், நினைவுப் பொருட்கள் விற்கும் கடைகள் ஆகியவற்றை பார்வையாளர்களும் சுற்றுலாப் பயணிகளும் அங்கே காணலாம். கோபுரத்தை வந்து பார்ப்பதற்கு வசதியாக இஸ்தான்புல்லின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து சிறிய படகுகள் விடப்பட்டுள்ளன.

இவ்வாறு வர்த்தக ரீதியில் கோபுரத்தை உயிர்பெற செய்ததை நிறைய பேர் வரவேற்காதது உண்மைதான். இருந்தாலும் கன்னிக் கோபுரம் அதன் கவர்ச்சியை இன்னும் இழக்கவில்லை. எப்போதாவது இஸ்தான்புல் செல்லும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்தால் இந்தக் கன்னிக் கோபுரத்தை பார்க்க தவறாதீர்கள். ஆசியாவின் பக்கமாக உள்ள இஸ்தான்புல்லின் தேயிலைத் தோட்டங்கள் ஒன்றில் அமர்ந்து, சுவையான தேநீர் குடித்தபடி, போஸ்பொரஸின் ஈடிணையற்ற காட்சிகளையும் கன்னிக் கோபுரத்தையும் நீங்கள் பார்த்து ரசிக்கலாம். ஓரிரு நிமிடங்களுக்கு போஸ்பொரஸின் இந்த அழகிய “சீமாட்டி”யுடைய நீண்ட சரித்திரத்தை சிந்தித்தும் பார்க்கலாம். (g03 3/8)

[பக்கம் 25-ன் தேசப்படங்கள்]

துருக்கி

இஸ்தான்புல்

மர்மரா கடல்

போஸ்பொரஸ் ஜலசந்தி

கருங்கடல்

[பக்கம் 25-ன் படம்]

கல்லச்சு, 19-ஆம் நூற்றாண்டு

[பக்கம் 26-ன் படம்]

ரெஸ்டாரன்ட்

[பக்கம் 26-ன் படம்]

பார்வைத் தளம்