Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வேர்க்கடலை சாதாரணமானது, ஆனால் உலகறிந்தது!

வேர்க்கடலை சாதாரணமானது, ஆனால் உலகறிந்தது!

வேர்க்கடலை சாதாரணமானது, ஆனால் உலகறிந்தது!

உங்களுக்கு வேர்க்கடலை பிடிக்குமா? பிடிக்கும் என்றால் உங்களைப் போலவே வேர்க்கடலை பிரியர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இது நிலக்கடலை எனவும் அழைக்கப்படுகிறது. மனித குடும்பத்தின் ஒரு பெரும் பகுதி இதை விரும்பி உண்கிறது. மக்கள் தொகையில் முன்னணி வகிக்கும் இரு நாடுகளான சீனாவும் இந்தியாவுமே உலகின் வேர்க்கடலை விளைச்சலில் 50 சதவீதத்திற்கு மேல் உற்பத்தி செய்கின்றன.

ஐக்கிய மாகாணங்கள் வருடத்திற்கு நூறு கோடிக்கணக்கான கிலோகிராம் வேர்க்கடலையை அறுவடை செய்கிறது; அதாவது உலக அளவில் ஏறக்குறைய 10 சதவீதம் உற்பத்தி செய்கிறது. அர்ஜென்டினா, சூடான், செனிகல், தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா, பிரேசில், மாலவி ஆகியனவும் வேர்க்கடலையை அதிகமாக பயிரிடும் நாடுகளாகும். வேர்க்கடலை இந்தளவுக்கு பிரசித்தி பெற்றது எப்படி? வேர்க்கடலை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டிய சூழ்நிலைகள் இருக்கின்றனவா?

நீண்டகால அறிமுகம்

வேர்க்கடலையின் பிறப்பிடம் தென் அமெரிக்கா என கருதப்படுகிறது. வேர்க்கடலையை மனிதன் எவ்வளவு உயர்வாக மதிப்பிட்டிருக்கிறான் என்பதை பெரு என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பண்டைய பிரபல கைவினைப் பொருட்களில் ஒன்று காட்டுகிறது. இது அமெரிக்காவில் கொலம்பஸ் அடியெடுத்து வைத்ததற்கும் முன்னான காலத்தைச் சேர்ந்த ஒரு பூஞ்சாடி. அந்த ஜாடி வேர்க்கடலையைப் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது, வேர்க்கடலை வடிவிலான டிசைன்களும் அதில் உள்ளன. ஸ்பானிய ஆய்வு பயணிகளுக்கு வேர்க்கடலை முதன்முதலில் தென் அமெரிக்காவில் வைத்துதான் அறிமுகமானது. தங்களுடைய கடல் பயணத்திற்கு ஏற்ற சிறந்த ஊட்டச்சத்துமிக்க உணவாக அவர்கள் இதைக் கருதினார்கள். அதில் கொஞ்சத்தை ஐரோப்பாவுக்கு திரும்புகையில் எடுத்துச் சென்றார்கள். ஐரோப்பியர்கள் வேர்க்கடலையை வெவ்வேறு விதங்களில் பயன்படுத்தினார்கள், காபி கொட்டைகளுக்கு பதிலாகவும் அதை பயன்படுத்தினார்கள்.

பிற்பாடு ஆப்பிரிக்காவுக்கு போர்ச்சுகீஸியர் வேர்க்கடலையை அறிமுகப்படுத்தினார்கள். அங்குள்ளவர்கள் இது ஓர் அருமையான உணவுப்பொருள் என்பதையும் மற்ற பயிர்கள் விளையாத மண்ணிலும் இது விளையும் என்பதையும் விரைவில் கண்டுபிடித்தனர். சொல்லப்போனால், வேர்க்கடலை செடிகள் வளமற்ற மண்ணுக்கு போதுமான நைட்ரஜனை அளித்து அதை வளமூட்டின. பிற்பாடு அடிமை வாணிபத்தின்போது இந்த வேர்க்கடலை ஆப்பிரிக்காவிலிருந்து வட அமெரிக்காவுக்கு அறிமுகமானது.

1530-களில் இது போர்ச்சுகீஸியருடன் பயணித்து இந்தியாவுக்கும் மகாவோவுக்கும் வந்து சேர்ந்தது. ஸ்பானியர்களுடன் பிலிப்பைன்ஸ் நாட்டுக்கும் போனது. பிற்பாடு வியாபாரிகள் இந்த நாடுகளிலிருந்து சீனாவுக்கு அதை அறிமுகப்படுத்தினார்கள். அங்கு நிலவிய வறுமையை ஒழிப்பதற்கு இப்பயிர் உதவலாம் என்பதை அந்நாட்டவர் அறிந்துகொண்டார்கள்.

1700-களில் வாழ்ந்த தாவரவியல் வல்லுநர்கள் இதனை நிலக்கடலை என அழைத்தனர். அவர்கள் இதை ஆய்வு செய்து, பன்றிகளுக்கு தேவையான அருமையான உணவை இதிலிருந்து உற்பத்தி செய்யலாம் என்ற முடிவுக்கு வந்தனர். 1800-களின் ஆரம்பத்தில் ஐக்கிய மாகாணங்களிலுள்ள தென் கரோலினாவில் இது வணிக பயிராக பயிரிடப்பட்டது. 1861-⁠ல் ஆரம்பமான அமெரிக்க உள்நாட்டு போரின்போது, சண்டையில் ஈடுபட்ட இரு தரப்பு போர்வீரர்களுக்கும் வேர்க்கடலையே உணவாக அளிக்கப்பட்டது.

என்றாலும், அக்காலப்பகுதியில் இருந்த அநேகர் இதை எளியோரின் உணவு என்றே கருதினார்கள். அந்தக் காலப்பகுதியின் போது அமெரிக்க விவசாயிகள் வேர்க்கடலையை ஏன் பரந்த அளவில் பயிரிடவில்லை என்பதை இது ஓரளவுக்கு புலப்படுத்துகிறது. அதுமட்டுமல்ல, 1900-⁠ம் ஆண்டில்தான் இயந்திர கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அது வரையில் வேர்க்கடலை பயிரிட அதிக கூலிக்கு ஆட்களை அமர்த்த வேண்டியிருந்தது.

ஆனால், 1903-⁠க்குள் முன்னோடியாக திகழ்ந்த அமெரிக்க வேளாண்மை வேதியல் நிபுணர் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர், வேர்க்கடலை செடியின் புதிய உபயோகங்களை பற்றிய ஆராய்ச்சியை ஆரம்பித்திருந்தார். நாளடைவில், அதிலிருந்து 300-⁠க்கும் மேலான பொருட்களை உருவாக்கினார். அவற்றில் பானங்கள், அழகு சாதனங்கள், சாயங்கள், மருந்துகள், சலவை சோப், பூச்சிக்கொல்லி, அச்சு மை ஆகியவையும் அடங்கும். பருத்தியை மட்டுமே பயிரிடும் பழக்கத்தை விட்டுவிடும்படி விவசாயிகளை கார்வர் உற்சாகப்படுத்தினார். ஒரே பயிரை பயிர் செய்வதால் மண்ணின் ஆற்றல் குன்றிவிடுகிறது. ஆகவே, பருத்தியையும் வேர்க்கடலையையும் மாறி மாறி பயிரிடும்படி ஊக்குவித்தார். அந்தச் சமயத்தில், போல் வீவில் என்ற பூச்சி பருத்தியை நாசப்படுத்திக் கொண்டிருந்ததால் கார்வரின் ஆலோசனையை அநேக விவசாயிகள் பின்பற்ற ஆரம்பித்தார்கள். விளைவு?

வேர்க்கடலை பயிரிடுதல் செழிக்க ஆரம்பித்தது; ஆக, அமெரிக்காவின் தென்பகுதியில் இது ஒரு வணிகப் பயிர் ஆனது. இன்று கார்வரின் நினைவுச் சின்னம் ஒன்று அலபாமாவிலுள்ள டோதனில் காணப்படுகிறது. அதுமட்டுமல்ல அலபாமாவிலுள்ள என்டர்பிரைஸ் டவுனில், போல் வீவில் என்ற பூச்சிக்கும் ஒரு நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டுள்ளது. அப்பூச்சிகளின் நாசவேலையல்லவோ வேர்க்கடலையை பயிரிட விவசாயிகளை தூண்டியது!

வேர்க்கடலையின் வளர்ச்சி

வேர்க்கடலை உண்மையில் கடலை அல்ல அந்தச் செடியின் விதையே. இந்தச் செடி வளர்ந்ததும் இதில் மஞ்சள் நிற பூக்கள் பூக்கின்றன. அவை தங்களுக்குள்ளேயே மகரந்த சேர்க்கை செய்கின்றன.

பெக்’ என அழைக்கப்படும் தண்டு போன்ற அமைப்பின் நுனிப்பகுதியில் உள்ள முளைக்கருவைக் கொண்ட கருவுற்ற சூலகம் மண்ணுக்குள் செல்ல ஆரம்பிக்கிறது. இந்த முளைக்கரு மண்ணின் மேற்பரப்புக்கு சற்று கீழ் கிடைமட்டமாக வளர்ந்து நமக்குத் தெரிந்த வேர்க்கடலையாக உருவெடுக்கிறது. ஒரு செடியில் 40 வேர்க்கடலைகள் வரை காய்க்கும்.

வேர்க்கடலைக்கு சூரிய ஒளியும் மிதமான வெப்பமும் மிதமான மழையும் தேவை. வேர்க்கடலையை விதைத்து அறுவடை செய்வதற்கு 120 முதல் 160 நாட்கள் வரை எடுக்கலாம்; அதன் வகையையும் தட்பவெப்ப நிலையையும் பொறுத்தே இதைச் சொல்ல முடியும். வேர்க்கடலையை அறுவடை செய்வதற்கு அந்தச் செடியையும் படர்ந்து கிடக்கும் அதன் கொடி எல்லாவற்றையும் பிடிங்கி எடுத்து புரட்டிப் போட வேண்டும்; பின்பு கெட்டுப்போகாமல் இருப்பதற்கு அவற்றை உலரவிட வேண்டும். ஆனால், இன்று விவசாயிகள் பலர் நவீன பண்ணைக் கருவியை இதற்காக பயன்படுத்துகிறார்கள். படர்ந்து கிடக்கும் இதன் கொடிகளை தோண்டி எடுத்து மண்ணை உதறி புரட்டி போடுவதை ஒரே வேலையாக அந்தக் கருவியே செய்துவிடுகிறது.

வேர்க்கடலையின் பயன்கள் பல

வேர்க்கடலை சத்துமிக்க உணவு. இது நார்ச்சத்து மிக்கது, இதில் 13 வைட்டமின்களும் 26 தாதுப் பொருட்களும் உள்ளன. இவற்றில் பல இன்றைய உணவுப்பொருட்களில் இல்லை. “மாட்டிறைச்சியின் ஈரலைவிட வேர்க்கடலையில் எடைக்கு எடை புரதமும், தாதுப் பொருட்களும் வைட்டமின்களும் உள்ளன” என தி என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா கூறுகிறது. ஆனால் எடையைக் குறித்து கவனமுள்ளவர்களுக்கு எச்சரிக்கை! “கெட்டியான கிரீமைவிட அதிகமான கொழுப்பும்” “சர்க்கரையைவிட அதிக உணவு சக்தியும் (கலோரிகளும்)” வேர்க்கடலையில் உள்ளன.

பல நாட்டு மக்களின் சமையலறைகளிலும் வேர்க்கடலைக்கு அதிக வரவேற்பு கொடுக்கப்படுகிறது. இதன் ருசியே தனி. “வேர்க்கடலைக்கென்று அதற்கே உரிய மணமும் ருசியும் உண்டு என்பதால் அது அரைத்து சேர்க்கப்பட்ட எந்த உணவுக்கும் கிட்டத்தட்ட ஒரேவித ருசி இருக்கும்” என குறிப்பிடுகிறார் சமையல் எழுத்தாளரான அன்யா ஃபான் பிரெம்ஸன். “அதனால்தான் இந்தோனேஷியரின் பீநட் ஸாஸ், மேற்கு ஆப்பிரிக்கரின் சூப், சைனீஸ் நூடுல்ஸ், பெரு நாட்டவரின் ஸ்ட்யூ, பீநட் பட்டர் போடப்பட்ட சான்விச் எல்லாமே ஒரேவிதமாக ருசிக்கிறது.”

வேர்க்கடலையை நொறுக்குத்தீனியாக சாப்பிடாதவர்களே உலகில் இல்லை எனலாம். உதாரணமாக, உலர்ந்த வெவ்வேறு பயிறுகளோடு வேர்க்கடலையையும் கலந்து இந்தியாவின் தெருக்களில் விற்கிறார்கள். பீநட் பட்டர், அதாவது வேர்க்கடலை பட்டரை சான்விச்சில் தடவி சாப்பிடுவது சில நாடுகளில் சர்வசாதாரணம்; அக்கறைக்குரிய விஷயம் என்னவெனில், த கிரேட் அமெரிக்கன் பீநட் என்ற வெளியீடு குறிப்பிடுகிறபடி, “முதியோருக்கு ஏற்ற ஆரோக்கியமான உணவாக 1890 வாக்கில் செ. லூயிஸிலுள்ள [அ.ஐ.மா.] ஒரு மருத்துவரால் கண்டுபிடிக்கப்பட்டதே” இந்த பீநட் பட்டர் என சொல்லப்படுகிறது.

வேர்க்கடலையை உணவாக அப்படியே சாப்பிடுவது மட்டுமே அதன் பயன் அல்ல, அதற்கு வேறுபல பயன்களும் உண்டு. சமையல் எண்ணெய் தயாரிப்பதற்கு ஆசியா கண்டம் முழுவதிலும் இது ஒரு முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது. எந்தளவு சூட்டிலும் கடலை எண்ணெயை சமையலில் உபயோகிக்கலாம். அதோடு, சமைக்கப்படும் உணவுப்பொருளின் வாசனையும் ருசியும் அதில் ஏறிவிடுவதில்லை.

பிரேசிலில், வேர்க்கடலையிலிருந்து எண்ணெய் எடுத்த பின் கிடைக்கும் பிண்ணாக்கு விலங்குகளுக்கு உணவாக பயன்படுகிறது. நாம் அன்றாடம் உபயோகிக்கும் பல பொருட்களிலும் இதன் உப பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.​—⁠மேலே காண்க.

வேர்க்கடலை அலர்ஜி​—⁠ஜாக்கிரதை!

வேர்க்கடலையை குளிர்சாதனப் பெட்டியில் வைக்காமலேயே அதிக காலத்துக்கு சேமித்து வைக்கலாம். ஆனால் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். பூஞ்சணம் பிடித்த வேர்க்கடலையில் புற்று நோய் வருவதற்கு காரணமான பூஞ்சண நச்சு உள்ளது. அதுமட்டுமல்ல சிலருக்கு வேர்க்கடலை சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படுகிறது. இந்த அலர்ஜியால் “மூக்கு ஒழுகுதல், உடலில் தடிப்புகள் ஆகியவை முதல் உயிருக்கே உலைவைக்கும் ஒவ்வாமை நோய் வரை உண்டாகலாம்” என பிரிவென்ஷன் என்ற பத்திரிகை குறிப்பிடுகிறது. வேர்க்கடலை அலர்ஜி பிள்ளைகளுக்கு ஏற்படுவது சர்வசாதாரணமாகி வருவதை பல ஆய்வுகள் காண்பிக்கின்றன.

அம்மா அப்பா இருவருக்கும் ஆஸ்துமா, மூக்கழற்சி அல்லது தோல் அழற்சி போன்றவை இருக்குமானால், பிள்ளைக்கும் வேர்க்கடலை அலர்ஜி ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமென பிரிவென்ஷன் பத்திரிகை குறிப்பிடுகிறது.

அவ்வாறே, அலர்ஜியுள்ள தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும், பிறந்த முதல் வருடத்திலேயே பால் அலர்ஜி ஏற்பட்டுள்ள குழந்தைகளுக்கும் இந்த அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது. “இத்தகைய குடும்பங்களில் மூன்று வயது வரை குழந்தைகளுக்கு பீநட் பட்டரை கண்ணில் காட்டாமலிருப்பதுதான் நல்லது” என கூறுகிறார் அ.ஐ.மா., ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் குழந்தை மருத்துவ பேராசிரியர் ஹ்யூ சாம்சன்.

நீங்கள் வேர்க்கடலை பிரியராக இருந்தாலும்சரி இல்லாவிட்டாலும்சரி, இதன் பயன்களை இப்பொழுது சிந்தித்தது உலகெங்கும் வலம்வரும் இந்த சாதாரண விதையைப் பற்றிய உங்கள் மதிப்பை இன்னும் அதிகப்படுத்தியிருக்கலாம். (g03 4/22)

[பக்கம் 24-ன் பெட்டி/படம்]

அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களில் வேர்க்கடலையின் உப பொருட்கள் இருக்கலாம்

• சுவர் பலகை

• கணப்படுப்பு எரிபொருட்கள்

• பூனையின் கழிவுகளை ஈர்த்துக்கொள்ள உதவும் பொருள் (Cat litter)

• காகிதம்

• சலவைப் பொருள்

• களிம்பு

• உலோகங்களுக்கு போடும் பாலிஷ்

• பிளீச்

• மை

• சக்கரங்களுக்கு போடும் கிரீஸ்

• ஷேவ் செய்வதற்கான கிரீம்

• முகத்தில் பூசும் கிரீம்

• சோப்

• லினோலியம்

• ரப்பர்

• அழகு சாதனங்கள்

• பெயின்ட்

• வெடிமருந்துகள்

• ஷாம்பூ

• மருந்து

[படத்திற்கான நன்றி]

ஆதாரம்: த கிரேட் அமெரிக்கன் பீநட்

[பக்கம் 22-ன் படம்]

இலைகள்

பெக்

தரை மட்டம்

வேர்கள் வேர்க்கடலை

[படத்திற்கான நன்றி]

The Peanut Farmer magazine

[பக்கம் 22-ன் படம்]

ஜார்ஜ் வாஷிங்டன் கார்வரின் நினைவுச் சின்னம்

[பக்கம் 23-ன் படம்]

ஐக்கிய மாகாணங்கள்

[பக்கம் 23-ன் படம்]

ஆப்பிரிக்கா

[பக்கம் 23-ன் படம்]

ஆசியா

[படத்திற்கான நன்றி]

FAO photo/R. Faidutti

[பக்கம் 23-ன் படம்]

வேர்க்கடலை சேர்க்கப்பட்ட சில நொறுக்குத்தீனி வகைகள்

[பக்கம் 24-ன் படம்]

சில நாடுகளில் பீநட் பட்டர் ஒரு பிரபலமான உணவு