தோகை விரித்தாடும் ஒயிலான பறவை
தோகை விரித்தாடும் ஒயிலான பறவை
இந்தியாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்
மயிலைப் பற்றித்தான் நாங்கள் சொல்கிறோம் என்பதை தலைப்பை வைத்தே உங்களுடைய மனதில் படம் போட்டிருப்பீர்கள். ஆண் மயிலுக்குத் தோகை உண்டு, அது உலகப் புகழ் பெற்றது. a ஆனால், எடுப்பான தோற்றமுடைய இந்த இறகுகள் இப்பறவைக்கு அழகு சேர்ப்பதைத் தவிர அதனால் வேறென்ன பயன் என எப்போதாவது நீங்கள் எண்ணியதுண்டா?
நெடுவால் பகட்டு வண்ணக் கோழி இனத்தை (pheasant family) சேர்ந்த மயில் மூன்று வகைகளில் இருக்கிறது. இங்கே நாங்கள் இந்திய மயிலை, சாதாரண மயிலை ‘கிளிக்’ செய்து கட்டுரை வரைந்திருக்கிறோம். முக்கியமாக இது நீல-பச்சை நிற ஆடையில் அமர்க்களமாக காட்சி அளிக்கிறது; 200 முதல் 235 சென்டிமீட்டர் நீளமுடையது, 150 சென்டிமீட்டர் நீண்ட தோகையும் இதில் அடக்கம். தோகை பச்சை நிறத்திலும் பொன்னிறத்திலும் தகதகவென மின்னுகிறது, அதில் நீல நிறத்திலும் வெண்கல நிறத்திலும் கண்களைப் போன்ற ‘டிசைன்கள்’ காணப்படுகின்றன. உடலிலுள்ள இறகுகள் பெரும்பாலும் வானவில்லை போல நீல-பச்சை நிறத்தில் வர்ண ஜாலம் புரிகின்றன.
இந்தியாவின் தேசிய பறவை என இதற்கு மணிமகுடம் சூட்டப்பட்டுள்ளது, நிச்சயமாகவே மயிலுக்கு ராஜ தோரணை இருக்கிறது. அதனால்தானோ என்னவோ அகந்தை கொண்ட மனிதரை விவரிப்பதற்கு “மயிலை போல கர்வம் பிடித்த” என்ற சொற்றொடர் சில மொழிகளில் நடமாடுகிறது. ஆனால் அதன் தோற்றம் பறைசாற்றுவது போல அது ஒட்டாமல் உறவாடாமல் வாழும் பறவை அல்ல. சொல்லப்போனால், அதை எளிதில் பழக்குவிக்க முடியும். சிலர் மயிலை புனிதப் பறவையாக பூஜிக்கிறார்கள். அதனால்தான் வயல்களில் இப்பறவைகள் வந்திறங்கி நாசம் செய்தால்கூட இந்தியாவிலுள்ள விவசாயிகள் சிலசமயங்களில் பொறுத்துக்கொள்கிறார்கள்.
அவற்றின் அற்புத காட்சி
பளபளக்கும் விசிறி போன்ற அழகிய தோகையை விரித்தாடும் அற்புத காட்சிக்கு மயில்கள் புகழ்பெற்றவை. இந்தப் பகட்டான காட்சி எதற்காக? பெண் மயிலை சுண்டி இழுக்கத்தான் என்பதை சொல்லியா தெரிய வேண்டும்!
பெண் மயில் சற்று ‘பிகு’ பண்ணும், ஆனால் கண்கவர் காட்சிகளைக் கண்டு மயங்கிவிடும். மயிலின் பரந்து விரிந்த தோகையில் பதிக்கப்பட்டுள்ள கண்ணைப் பறிக்கும் வண்ணநிற கண்களில் பெண் மயில் அப்படியே
சொக்கிவிடும். உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அழகுடன் காட்சியளிக்கும் ஆண் மயிலையே ஆசைத் துணையாக தேர்ந்தெடுக்கும் பெண் மயில்.ஆனால் தோகை விரித்தாடுவது அந்தக் காட்சியில் ஓர் அங்கம் மட்டுமே. முதலில் ஆண் மயில் நீண்ட தோகையை விரித்து, அதை முன்நோக்கி சாய்க்கிறது. அதன் பிறகு தன் நளினமான நடனத்தை அரங்கேற்றுகிறது. தேகத்தை அசைத்து ஆடும்போது அதன் செந்தவிட்டு நிற இறக்கைகள் கீழ்நோக்கி வளைகின்றன, மேல் நோக்கி நீட்டிக்கொண்டிருக்கிற இறகுகளோ சலசலவென்ற ஓசை எழுப்புகின்றன. அப்போது மயில் கூக்குரலும் எழுப்புகிறது. அது இனிமையாக இருக்காது என்றாலும், பெண் மயில் மீது ஆசை என்பதையாவது அறிவிக்கிறது.
ஆண் மயிலைப் போல பெண் மயிலும் எப்பொழுதாவது ஆட எத்தனிக்கும், ஆனால் பார்ப்பதற்கு அது பரவசமூட்டாது. பெண் மயில் பெரும்பாலான சமயங்களில் அக்கறையே இல்லாதது போலத்தான் காட்சியளிக்கும். இருந்தாலும், ஆணின் மிகச் சிறப்பான நடனக் காட்சி பெண் மயிலின் மனதை மயக்கிவிடும். ஆண் மயில் ஐந்து பெண் மயில்கள் வரை தேர்ந்தெடுத்து, ஒரு வருடத்தில் 25 மயில் குஞ்சுகளுக்கு தகப்பனாகிவிடும்.
மயிலின் குடும்ப வாழ்க்கை
இனப்பெருக்க காலத்திற்குப்பின், இறகுகளை உதிர்க்கும் காலம் உதயமாகும். சராசரியாக, ஒரு பெரிய ஆண் மயிலின் தோகையில் 200-க்கும் அதிக இறகுகள் அடுக்கப்பட்டு இருக்கும். இந்திய கிராமவாசிகள் அவற்றை சேகரித்து மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது வழக்கம், ஆனால் இந்த இனங்களைப் பாதுகாப்பதற்காக இப்படி ஏற்றுமதி செய்வது பிற்பாடு தடை செய்யப்பட்டது. இருந்தாலும் இன்னும் அவை விசிறிகளாகவும் வேறுசில அலங்கார பொருட்களாகவும் வலம் வரத்தான் செய்கின்றன.
கதிரவன் விடைபெறும் வேளையில், துயில்வதற்கு தகுந்த இடம் தேடி மயில்கள் உயரமான மரங்களில் மெதுவாக ஏறுகின்றன. கதிரவன் வரவின்போதோ மெதுவாக கீழே இறங்குகின்றன. இந்த ஜீவராசிகள் உங்களுடைய கண்களுக்கு விருந்தளிக்கலாம், ஆனால் அவற்றின் கீதமும் இதே போல உங்களுடைய செவிகளுக்கு விருந்தளிக்கும் என எதிர்பார்க்காதீர்கள். இரை தேடி கண்டுபிடிக்கும் வரை அவற்றின் ஓலம் மாலைப்பொழுதின் அமைதியை குலைத்துவிடும்.
மயில்கள் மரக்கறிகளும் உண்ணும் புலாலும் உண்ணும்—சொல்லப்போனால் கண்டதையெல்லாம் தின்னும். விதைகள், தானியங்கள், பருப்புகள், பயிர்களின் இளந்தளிர் வேர்கள் ஆகியவற்றோடு பூச்சிகள், பல்லிகள், சிலசமயங்களில் சிறுசிறு பாம்புகளையும் விட்டுவைப்பதில்லை.
மயில் கர்வம் பிடித்த பறவையாக தோன்றினாலும், அது மிகவும் பத்திரமாக இருந்துகொள்ளும். உதாரணமாக, பதுங்கிவரும் பூனையை சட்டென்று கண்டுகொண்டு, வரவிருக்கும் ஆபத்தை எச்சரிக்க உரத்த சப்தம் போட்டுக்கொண்டே காட்டுக்குள் ஓடுகிறது. மற்ற ஆண் மயில்களும் இந்த ஓட்டத்தில் சேர்ந்து கொள்கின்றன. ஆ, அவை ஒன்றன்பின் ஒன்றாக எவ்வளவு வேகமாய் ஓடுகின்றன! ஆனால் என்னதான் அதீத ஆபத்து வந்தாலும் பெண் மயில்கள் அவற்றின் குஞ்சுகளை அம்போவென விட்டுவிட்டு ஓடுவதில்லை.
நீண்ட தோகை அவற்றின் வேகத்திற்கு அணைபோடுவதாக தோன்றவில்லை. இருந்தாலும், இந்தப் பறவை பறக்கத் தொடங்குகையில் அதன் நீண்ட தோகை சற்று
இடைஞ்சலாக இருப்பது போல தோன்றுகிறது. ஆனால் மேலே கிளம்ப ஆரம்பித்துவிட்டால் இறக்கைகளை படபடவென்று அடித்துக்கொண்டு மிக வேகமாய் பறக்கிறது.குஞ்சுகளுக்கு எட்டு மாதம் ஆகும்போது தாய் தந்தைக்கு “டாடா” சொல்லிவிட்டு தங்களையே கவனித்துக்கொள்ள ஆரம்பிக்கின்றன. இவை வீட்டைவிட்டு கிளம்பிய பிறகு தாய் பறவை அடுத்த சந்ததியை உருவாக்கத் தயாராகிவிடுகிறது. சுமார் எட்டு மாதங்களில், ஆண் குஞ்சுகளுக்கு அவற்றிற்கே உரிய தனிச்சிறப்புமிக்க தோகை முளைக்க ஆரம்பிக்கிறது, ஆனால் இந்தப் பீலி முழுமையாக வளர நான்கு ஆண்டுகள் பிடிக்கும். பின்பு அவை சொந்த குடும்பத்தை உருவாக்கத் தயாராகிவிடுகின்றன.
சரித்திரத்தில் மயில்
மயில்கள் பூர்வ கிரேக்கு, ரோம் மற்றும் இந்தியாவின் பூங்காக்களை அலங்கரித்தன. இந்தியாவில் ஆயிரக்கணக்கான வருடங்களாக அரண்மனை ஓவியங்களிலும் கலைப் பொருட்களிலும் மயில்கள் சிறப்பித்துக் காட்டப்பட்டன. சொல்லப்போனால், மயில் சிம்மாசனம் இந்தியாவின் செல்வச் செழிப்பை பறைசாற்றும் மிக முக்கியமான உதாரணங்களில் ஒன்றாக கருதப்பட்டது. அதில் வைரக் கற்கள் பல பதிக்கப்பட்டிருந்ததாகவும், 108 மாணிக்கக் கற்களும் 116 மரகதக் கற்களும் இழைக்கப்பட்டிருந்ததாகவும் சொல்லப்படுகிறது. அந்தச் சிம்மாசனத்து கவிகை மாடத்தில் பொன் மயில் தகதகவென மின்னியது, அதிலிருந்துதான் இந்தப் பெயர் பிறந்தது. முக்கிய நிகழ்ச்சிகளில் மட்டுமே இந்த சிம்மாசனத்தின் பாகங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு அதன்மீது அரசர் அமர்ந்தார்.
சாலொமோன் ராஜாவின் காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட விலையேறப் பெற்ற பொருட்களில் மயில்களும் இருந்தன என பைபிள் சரித்திரம் சொல்கிறது. அரண்மனை தோட்டங்களில் மயில்கள் நளினமாக நடைபயில்வதை கற்பனை செய்து பார்க்கையில் இதய தடாகத்தில் இன்ப வெள்ளம் பொங்கும். (1 இராஜாக்கள் 10:22, 23) புத்திக்கூர்மை வாய்ந்த வடிவமைப்பாளர் ஒருவர் இருக்கிறார் என்பதை இப்பறவைகள் நிச்சயமாகவே நமக்கு பறைசாற்றுகின்றன. கண்ணைப் பறிக்கும் வண்ணத் தோகையை விரித்து மயில் ஆடும்போது, ‘சகலத்தையும் சிருஷ்டித்த’ கடவுளாகிய யெகோவாவின் கலைத் திறமையைக் கண்டு யார்தான் வியக்காதிருப்பர்!—வெளிப்படுத்துதல் 4:11. (g03 6/22)
[அடிக்குறிப்பு]
a இப்பறவையின் தோகை அதன் முதுகுப் புறமிருந்து வளருகிறது, வாலிலிருந்து அல்ல. மயில் தனது தோகையை மேல்நோக்கி குவித்து விரிப்பதற்கு அதன் வால் இறகுகளைப் பயன்படுத்துகிறது.
[பக்கம் 18-ன் படம்]
பெண் மயில் எல்லா சமயத்திலும் ஆண் மயிலின் ஆட்டத்தைக் கண்டு மயங்குவதில்லை
[படத்திற்கான நன்றி]
© D. Cavagnaro/Visuals Unlimited
[பக்கம் 19-ன் படங்கள்]
பெண் மயில்கள் சிறந்த தாய்கள்
[படத்திற்கான நன்றி]
© 2001 Steven Holt/stockpix.com
[பக்கம் 17-ன் படத்திற்கான நன்றி]
மயில்: Lela Jane Tinstman/Index Stock Photography
[பக்கம் 18-ன் படத்திற்கான நன்றி]
John Warden/Index Stock Photography