Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பூச்சிகளால் பரவும் நோய்கள் பூதாகரமாகி வரும் பிரச்சினை

பூச்சிகளால் பரவும் நோய்கள் பூதாகரமாகி வரும் பிரச்சினை

பூச்சிகளால் பரவும் நோய்கள்—பூதாகரமாகி வரும் பிரச்சினை

லத்தீன் அமெரிக்க வீடு. இரவுநேரம். ஒரு தாய் தன் செல்ல மகனை படுக்க வைக்கிறாள். ‘குட் நைட்’ சொல்லி, போர்வையை போர்த்திவிடுகிறாள். மகன் கண்ணயர்ந்துவிடுகிறான். ஆனால் அந்த இருட்டில் அவன் தலைக்கு நேராக வளுவளுப்பான ஒரு கருநிற பூச்சி சுவரின் வெடிப்புக்குள்ளிலிருந்து நைசாக வெளியே வருகிறது. மூன்று சென்டிமீட்டர் நீளம்கூட இல்லாத அந்தப் பூச்சி யார் கண்ணிலும் படாமல் நேராக அந்த பிள்ளையின் முகத்தில் தொப்பென்று குதிக்கிறது. அவனுடைய பட்டுக் கன்னத்தில் ரகசியமாக ‘முத்தம்’ பதிக்கிறது. ஆசைதீர இரத்தத்தை உறிஞ்சி உறிஞ்சி குடிக்கிறது. அதேசமயம் மலம் கழிக்கிறது. அந்த மலத்தில் “ஒரு வண்டி” ஒட்டுண்ணிகள். தூக்கத்தில் பிள்ளை முகத்தை சொறியும் வாக்கில் அந்த மலத்தை காயத்தின்மேல் தேய்த்துவிடுகிறான்.

அந்த “முத்தமிடும் பூச்சி”யின் (kissing bug) ஒரே முத்தத்தால் பிள்ளைக்கு ஷாகஸ் நோய் (Chagas’ disease) தொற்றிவிடுகிறது. ஓரிரு வாரத்திற்குள் அவனுக்கு ஜுரம் அனலாக கொதிக்கிறது, உடம்பெல்லாம் ஊதிப்போகிறது. அவன் ஒருவேளை பிழைத்தாலும், ஒட்டுண்ணிகள் அவன் உடலிலேயே குடியிருந்துவிடும். அவன் இருதயம், நரம்புகள், உட்புற தசைகள் என எந்த இடத்தையும் பாக்கி வைக்காது. 10-லிருந்து 20 வருடங்களுக்கு மூச்சுக்காட்டாமல் தலைமறைவாக இருக்கும். பிறகு புத்தியைக் காட்டிவிடும். பிள்ளையின் ஜீரண உறுப்புகளில் புண்களும், மூளையில் இன்ஃபெக்‍ஷனும் ஏற்படும், கடைசியில் இதயத் துடிப்பே நின்றுவிடும்.

இந்தக் கற்பனைக் கதை, ஷாகஸ் நோய் பரவும் விதத்தை எதார்த்தமாக எடுத்துக் காட்டுகிறது. லத்தீன் அமெரிக்காவில், இவ்வாறு முத்தத்தால் மரணத்தை பெறும் ஆபத்தில் இருப்பவர்கள் பல கோடி.

இரண்டுகால் மனிதருக்கு பலகால் தோழர்கள்

“மனிதனுக்கு வரும் பெரிய பெரிய நோய்களுக்கு காரணம் பெரும்பாலும் பூச்சிகள் பரப்பும் கிருமிகளே” என என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா குறிப்பிடுகிறது. “பூச்சிகள்” என்ற வார்த்தை, ஆறு கால்களை உடைய ஈ, தெள்ளுப்பூச்சி, கொசு, பேன், வண்டு போன்றவற்றிற்கு மட்டுமல்ல எட்டுக் கால்களை உடைய சிற்றுண்ணிகளுக்கும் உண்ணிகளுக்கும்கூட பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் நிபுணர்கள் இந்த எல்லா உயிரினங்களையும் கணுக்காலிகள் (arthropod) என்ற பெரும் பிரிவின்கீழ் வகைப்படுத்தியுள்ளனர். இப்பிரிவுதான் விலங்கினப் பிரிவுகளிலேயே மிகப் பெரியது. குறைந்தபட்சம் 10,00,000 அறியப்பட்ட இனங்கள் இதில் அடங்கும்.

பெருவாரியான பூச்சிகள் மனிதனுக்கு எந்தத் தீங்கும் செய்வதில்லை. சொல்லப்போனால் சில பூச்சிகள் மிகுந்த நன்மை அளிக்கின்றன. அவை இல்லையேல், மனிதனுக்கும் மிருகங்களுக்கும் உணவளிக்கும் அநேக மரஞ்செடி கொடிகளில் மகரந்தச் சேர்க்கையே நடக்காது, இதனால் கனிகளும் கிடைக்காது. சில பூச்சிகள் கழிவுகளை மறுசுழற்சி செய்வதில் கைகொடுக்கின்றன. அநேக பூச்சிகள் தாவரங்களை மட்டுமே சாப்பிடுகின்றன, வேறு சில பூச்சிகள் மற்ற பூச்சிகளை உண்டு வாழ்கின்றன.

அதேசமயத்தில் மனிதரையும் மிருகங்களையும் நறுக்கென்று கடித்து அவர்களின் கோபத்தைக் கிளறும் பூச்சிகளுக்கும் பஞ்சமில்லை. சிலசமயம் அவை வதவதவென்று மொய்ப்பதே மகா எரிச்சலூட்டும். சில பூச்சிகள் பயிர்களை நாசப்படுத்துகின்றன. ஆனால், நோய்களைப் பரப்பி உயிரையே குடித்துவிடும் பூச்சிகள்தான் எல்லாவற்றையும்விட கொடியவை. “17-ஆம் நூற்றாண்டு முதல் 20-⁠ம் நூற்றாண்டின் ஆரம்பம் வரையில் மனிதருக்கு ஏற்பட்ட நோய்களுக்கும் மரணத்திற்கும் பெருமளவு காரணம் [பூச்சிகளால் பரப்பப்பட்ட நோய்கள்தான்], இந்த எண்ணிக்கை, மற்ற காரணங்களால் ஏற்பட்ட நோய்கள் மற்றும் மரணங்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையைவிட அதிகம்” என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பிற்கான ஐ.மா. மையங்களைச் சேர்ந்த டிவேன் கப்ல குறிப்பிடுகிறார்.

தற்போது, ஆறில் ஒருவர் என்ற தோராய கணக்கில் மனிதர்கள் பூச்சிகளால் வியாதிப்பட்டிருக்கிறார்கள். இந்த வியாதிகள் உடலுக்கு அவஸ்தை தருவது போதாதென்று நாட்டிற்கும் பயங்கர செலவு வைக்கின்றன; அதுவும் பணப் பஞ்சத்தில் திண்டாடுகிற வளரும் நாடுகளை ‘கண்பிதுங்க’ வைக்கின்றன. ஒரேவொரு முறை வியாதி பரவினாலே நிறைய பணம் அம்பேல் ஆகிவிடுகிறது. இப்படித்தான் 1994-⁠ல் மேற்கு இந்தியாவில் ஒருமுறை நோய் பரவியபோது உள்நாட்டு மற்றும் உலக பொருளாதார நிர்வாகங்களின் பணம் கோடிக்கணக்கில் கரைந்துவிட்டதாம். இப்படிப்பட்ட உடல்நலப் பிரச்சினைகளை கட்டுப்படுத்தாவிட்டால் மிக ஏழ்மையான நாடுகளுக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் ரொம்ப தூரம் ஆகிவிடும் என்பது உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) கருத்து.

பூச்சிகள் நோயை பரப்பும் விதம்

பூச்சிகள் முக்கியமான இரண்டு விதங்களில் நோய்களை பரப்புகின்றன. உடலின் வெளிப்புறமாக நோய்களை பரப்புவது ஒரு விதம். நாம் அழுக்கான ஷூவுடன் வீட்டுக்குள் போய் எல்லா இடத்தையும் அழுக்காக்குவது போல் “ஈக்கள் கணக்குவழக்கில்லாத கிருமிகள் தொற்றிய அழுக்கான கால்களோடு பறந்து திரிந்து எல்லாவற்றையும் அசுத்தமாக்குகின்றன, அந்தக் கிருமிகள் போதியளவு பெருகும்போது நோய் உண்டாகும்” என என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா சொல்கிறது. உதாரணத்திற்கு, மலம் மீது ஒரு ஈ வந்து உட்காருகையில் கிருமிகள் ஈயின் கால்களில் ஒட்டிக்கொள்கின்றன; பிறகு அதே ஈ நம் சாப்பாட்டில் அல்லது பானத்தில் வந்து உட்கார்ந்து கிருமிகளை கடத்திவிடுகிறது. இந்த விதத்தில்தான் டைபாய்டு, சீதபேதி, காலரா போன்ற மிகக் கொடிய நோய்கள் மனிதர்களை தொற்றி அவர்களின் உயிருக்கே உலை வைத்துவிடுகின்றன. கண்பார்வையை பறிப்பதில் உலகிலேயே முதலிடத்தைப் பிடித்திருக்கும் ட்ரகோமா (Trachoma) என்ற கண் நோயை பரப்புவதும் ஈக்களே. விழித்திரையின் (iris) முன்பக்கமாக உள்ள கண்ணின் தெளிவான பகுதியாகிய கருவிழிப் படலத்தை (cornea) சேதப்படுத்துவதன் மூலம் ட்ரகோமா நோய் பார்வையை பறிக்கலாம். உலகெங்கும் சுமார் 50,00,00,000 பேர் இதனால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அழுக்கிலும் அசுத்தத்திலும் ஜோராக பெருகும் கரப்பான்பூச்சிகள்கூட உடலின் வெளிப்புறமாக நோய்களை பரப்புவதாக சந்தேகிக்கப்படுகிறது. அதோடு, ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களின், அதுவும் குழந்தைகளின் எண்ணிக்கை சமீபத்தில் கிடுகிடுவென ஏறியிருப்பது கரப்பான்பூச்சி அலர்ஜிகளால்தான் என நிபுணர்கள் சொல்கின்றனர். உதாரணத்திற்கு ஆஷ்லி என்ற 15 வயது பெண்ணை உங்கள் மனக்கண் முன் நிறுத்துங்கள். ஆஸ்துமாவால் மூச்சு விட முடியாமல் அவள் பல ராத்திரிகள் கஷ்டப்பட்டிருக்கிறாள். டாக்டர் அவள்மீது ஸ்டெதஸ்கோப்பை வைத்ததுதான் தாமதம் ஆஷ்லியின் சட்டைக்குள்ளிருந்து ஒரு கரப்பான்பூச்சி வெளியே குதித்து மேசைமீது குடுகுடுவென்று ஓடுகிறது.

உடலின் உட்புறமாக

பூச்சிகள் அவற்றின் உடலுக்குள் வைரஸ், பாக்டீரியா, அல்லது ஒட்டுண்ணி போன்றவற்றிற்கு தஞ்சம் அளிக்கும்போது இரண்டாவது விதத்தில் வியாதியை பரப்புகின்றன. கடிப்பதன் மூலமோ மற்ற வழிகளிலோ அவற்றை கடத்துகின்றன. இவ்விதத்தில் மனிதர்களுக்கு வியாதியை கடத்தும் பூச்சிகளின் எண்ணிக்கை சொற்பம்தான். உதாரணத்திற்கு ஆயிரக்கணக்கான இனங்களை சேர்ந்த கொசுக்கள் இருந்தாலும் ஆனோஃபெலஸ் என்ற ஒரேவொரு இன கொசுதான் மலேரியாவை கடத்துகிறது. உலகின் மிகக் கொடிய தொற்றுநோய்களின் பட்டியலில் (காசநோய்க்கு அடுத்ததாக) இரண்டாவது இடத்தைப் பிடிப்பதே இந்த மலேரியா.

இருந்தாலும் மற்ற கொசுக்கள் வேறு அநேக வியாதிகளை பரப்புகின்றன. “நோய்களை பரப்பும் பூச்சிகளிலேயே மிகப் பெரிய வில்லன் கொசுதான்; அது மலேரியா, டெங்கு, மஞ்சள் காய்ச்சல் (yellow fever) போன்றவற்றை பரப்புகிறது; இதனால் ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கானவர்கள் இறக்கிறார்கள், கோடிக்கணக்கானவர்கள் நோய்வாய்ப்படுகிறார்கள்” என்று WHO அறிக்கை செய்கிறது. உலக ஜனத்தொகையில் குறைந்தது 40 சதவீதத்தினர் மலேரியா தொற்றும் ஆபத்தில் இருக்கிறார்கள், அதேபோல் சுமார் 40 சதவீதத்தினர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் ஆபத்தில் இருக்கிறார்கள். அநேக இடங்களில், ஒருவருக்கு இந்த இரண்டுமே தொற்றும் வாய்ப்பும் உண்டு.

ஆனால் உடலுக்குள் கிருமிகளை சுமந்து சென்று வியாதியை பரப்பும் பூச்சிகள் கொசுக்கள் மட்டுமே அல்ல. ஸெட்ஸி ஈக்கள் (Tsetse flies) தூக்க நோயை உண்டாக்கும் ஓரணு-உயிரியை (protozoa) கடத்துகின்றன. லட்சக்கணக்கானோர் இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், முழு சமுதாயங்களே வளமிக்க வயல்வெளிகளை விட்டுச் சென்றிருக்கின்றன. நதிக்குருடு (river blindness) என்ற நோயுண்டாக்கும் ஒட்டுண்ணியை பரப்பும் கறுப்பு ஈக்கள் (blackflies) சுமார் 4,00,000 ஆப்பிரிக்கர்களை குருடாக்கியிருக்கின்றன. மணல் ஈக்கள் (Sand flies) லீஷ்மானியாஸிஸ் (leishmaniasis) நோய்களை உண்டாக்கும் ஓரணு-உயிரியை கடத்துகின்றன; இந்நோய்கள் உடலை முடமாக்கி, உருக்குலைத்து, பெரும்பாலும் மரணத்தை ஏற்படுத்துகின்றன. தற்போது உலகெங்கும் லட்சக்கணக்கில் எல்லா வயதினரையும் இந்நோய்கள் தொற்றியிருக்கின்றன. எங்கும் எதிலும் காணப்படுபவை தெள்ளுப்பூச்சிகள்; அவை நாடாப்புழுக்களையும், மூளை வீக்கம், டுலேரிமியா, ப்ளேக் நோய்​—⁠பொதுவாக ப்ளாக் டெத் என்றழைக்கப்படும் கொள்ளைநோய்​—⁠போன்றவற்றை உண்டாக்கும் உயிரிகளையும் கடத்தலாம். இடைக்காலத்தில் இந்த ப்ளாக் டெத் ஐரோப்பிய ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினரை அல்லது அதற்கும் அதிகமானோரை ஆறே ஆண்டுகளில் கொன்றுவிட்டது.

பேன்கள், சிற்றுண்ணிகள், உண்ணிகள் ஆகியவை பல்வேறு விதமான டைஃபஸ் (typhus) நச்சுக் காய்ச்சல்களையும் மற்ற நோய்களையும் பரப்பலாம். உலகெங்கும் மித வெப்ப மண்டல நாடுகளிலுள்ள உண்ணிகள், உடலிலுள்ள சக்தியையெல்லாம் உறிஞ்சிவிடும் லைம் வியாதியை (Lyme disease) கடத்துகின்றன; ஐக்கிய மாகாணங்களிலும் ஐரோப்பாவிலும் பூச்சிகளால் கடத்தப்படும் நோய்களிலேயே மிக சகஜமாக காணப்படுவது இந்த லைம் வியாதிதான். இடம்பெயர்கிற பறவைகள் உண்ணிகளை ஆயிரக்கணக்கான கிலோமீட்டருக்கு அப்பால் சுமந்து சென்று, அந்தப் புதிய இடங்களிலும் நோய்களை பரப்பலாம் என சுவீடன் நாட்டு ஆராய்ச்சி ஒன்று காட்டியது. “மற்ற எல்லா கணுக்காலிகளையும்விட (கொசுக்களைத் தவிர) உண்ணிகளே மனிதர் மத்தியில் மிக அதிக நோய்களை பரப்புகின்றன” என பிரிட்டானிக்கா சொல்கிறது. சொல்லப்போனால் ஒரேவொரு உண்ணி, மூன்று வித்தியாசமான நோய்களை உண்டாக்கும் கிருமிகளை சுமக்கலாம், அதுவும் ஒரே கடியில் அந்த எல்லாவற்றையும் கடத்திவிடலாம்!

வியாதிக்கு கொஞ்சம் “விடுமுறை”

சமீப காலத்தில்தான், அதாவது 1877 வாக்கில்தான் பூச்சிகள் நோயைப் பரப்புவது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. அதுமுதல், நோய்களைக் கடத்தும் பூச்சிகளை கட்டுப்படுத்த அல்லது ஒழித்துக்கட்ட பிரமாண்டமான திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன. இதற்காக 1939-⁠ல் DDT பூச்சிக்கொல்லியும் பயன்படுத்தப்பட ஆரம்பித்தது. 1960-களுக்குள், பூச்சிகளால் பரவும் நோய்கள் ஆப்பிரிக்காவைத் தவிர மற்ற இடங்களில் அந்தளவு ஆபத்தானவையாக கருதப்படவில்லை. நோய்களைக் கடத்தும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக ஆபத்தான நிலையிலிருப்பவர்களுக்கு மருந்து கொடுத்து சிகிச்சை அளிப்பதற்கே அதிக கவனம் செலுத்தப்பட்டது; பூச்சிகளையும் அவற்றின் வாழிடங்களையும் பற்றிய ஆராய்ச்சியில் ஆர்வம் குன்றியது. புதுப் புது மருந்துகள் கண்டுபிடிக்கப்படவே, எப்படிப்பட்ட வியாதியையும் சமாளிக்கிற ஒரு “அற்புத சர்வரோக நிவாரணி”யை அறிவியல் கண்டுபிடித்துவிடும் போல் தோன்றியது. உலகம் தொற்று வியாதிகளிலிருந்து ‘விடுமுறையை’ அனுபவித்து வந்தது. ஆனால் அந்த விடுமுறைக் காலம் விரைவில் முடியவிருந்தது. ஏன் என்று அடுத்த கட்டுரை சொல்லும். (g03 5/22)

[பக்கம் 3-ன் சிறு குறிப்பு]

இன்று ஆறு பேரில் ஒருவருக்கு பூச்சியால் நோய் வந்திருக்கிறது

[பக்கம் 3-ன் படம்]

முத்தமிடும் பூச்சி

[பக்கம் 4-ன் படம்]

வீட்டு ஈக்கள் கிருமிகளை கால்களில் சுமந்து செல்கின்றன

[பக்கம் 5-ன் படங்கள்]

அநேக பூச்சிகள் கிருமிகளை தங்கள் உடலுக்குள் சுமந்து செல்கின்றன

கறுப்பு ஈக்கள் நதிக்குருடு நோயை பரப்புகின்றன

மலேரியா, டெங்கு, மஞ்சள் காய்ச்சல் ஆகிய வியாதிகள் பரவுவதற்குக் காரணம் கொசுக்கள்

பேன்கள் டைஃபஸ் காய்ச்சலை உண்டாக்குகின்றன

தெள்ளுப்பூச்சிகள் மூளை வீக்கத்தையும் மற்ற நோய்களையும் உண்டு​பண்ணும் கிருமிகளை கடத்துகின்றன

ஸெட்ஸி ஈக்கள் தூக்க நோய்க்கு வித்திடுகின்றன

[படங்களுக்கான நன்றி]

WHO/TDR/LSTM

CDC/James D. Gathany

CDC/Dr. Dennis D. Juranek

CDC/Janice Carr

WHO/TDR/Fisher

[பக்கம் 4-ன் படத்திற்கான நன்றி]

Clemson University - USDA Cooperative Extension Slide Series, www.insectimages.org