மனவசியத்தில் கிறிஸ்தவர்கள் ஈடுபடலாமா?
பைபிளின் கருத்து
மனவசியத்தில் கிறிஸ்தவர்கள் ஈடுபடலாமா?
“வசியத்தால் மற்றவர்களைக் கட்டுப்படுத்துகிறவன் . . . உங்களுக்குள் இருக்கக் கூடாது.” —உபாகமம் 18:10, 11, NW.
மனவசியம் (ஹிப்னாட்டிசம்) பெரும் வாதத்துக்கும் சர்ச்சைக்குமுரிய விஷயமாக இருந்து வந்திருக்கிறது. a மனவசிய நிபுணர்களேகூட இதற்கு விளக்கமளிக்க கஷ்டப்படுகிறார்கள். மனவசியம் என்பது மனம் விழிப்பாக இல்லாதிருப்பது அல்லது தன் வயமிழந்திருப்பது என பொதுவாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. எனினும் பெரும்பாலோர் மனவசியம் என்ன என்பதில் அல்லாமல் அதனால் எதை செய்ய முடியலாம் என்பதிலேயே அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
சமீப வருடங்களில் சில நாடுகளிலுள்ள உடல்நல நிபுணர்கள் மனவசியத்தை சிகிச்சை முறையாக பரிந்துரைப்பது சகஜமாகி இருக்கிறது. உதாரணமாக, சைகாலஜி டுடே என்ற பத்திரிகை இவ்வாறு குறிப்பிடுகிறது: “மனவசிய சிகிச்சை முறையில் தலைவலிகளை குணப்படுத்தலாம், பிரசவ வேதனையை குறைக்க வழிசெய்யலாம், புகைபிடித்தலை நிறுத்துவதற்கு உதவலாம், மயக்க மருந்தாக பயன்படுத்தப்படலாம், படிப்பு பழக்கத்தை முன்னேற்றுவிக்கலாம்; இவை அனைத்தையும் பக்க பாதிப்புகள் எதுவுமின்றி செய்யலாம்.” மறுபட்சத்தில், மனவசியத்தை ஆவியுலகத் தொடர்புடனும் மாய மந்திர பழக்கத்துடனும் (occult) பெரும்பாலோர் சம்பந்தப்படுத்துகிறார்கள்.
இதைக் குறித்து பைபிள் என்ன சொல்கிறது? பைபிள் ஆரோக்கியத்துக்கு வழிகாட்டும் பாட புத்தகமல்ல என்பது உண்மைதான், மனவசியம் சம்பந்தப்பட்டதில் இது நேரடியாக எதையும் குறிப்பிடுவதில்லை. ஆனால் கடவுளுடைய
வார்த்தையில் காணப்படும் நியமங்கள் கடவுளுடைய கண்ணோட்டத்தை அறிந்துகொள்ள நமக்கு உதவலாம்.மனவசியமும் மாய மந்திர பழக்கமும்—தொடர்பு உண்டா?
மனவசியத்துக்கும் மாய மந்திர பழக்கத்துக்கும் தொடர்பு உண்டு என சொல்வது யாரோ ஒருவர் கட்டிவிட்ட கற்பனை கதையா? மாயாஜால சினிமாக்களும் கதை புத்தகங்களும் இந்தக் கருத்தை மெல்ல மெல்ல வளர்த்திருக்கலாம்; ஆனால் மனவசியத்துக்கும் மாய மந்திர பழக்கத்துக்கும் உண்மையிலேயே தொடர்பு உண்டு. மனவசியத்தைக் குறித்து என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் அக்கல்டிஸம் அண்டு பாராசைகாலஜி என்ற புத்தகம் இவ்வாறு விவரிக்கிறது: “மனவசியம் பிறந்த கதை மாய மந்திர பழக்கத்துடன் வெகுவாக பின்னிப்பிணைந்திருக்கிறது.” தொன்று தொட்டே மாந்திரீகத்துடனும் மாய வித்தையுடனும் சம்பந்தப்பட்டிருக்கும் மதம் சார்ந்த மெய் மறந்த நிலைகள் (trances) ஒருவித மனவசியமாக பொதுவாக கருதப்படுகின்றன. மேலும், பூர்வ எகிப்திலும் கிரீஸிலுமிருந்த பூஜாரிகள் தங்கள் பொய் தேவர்களின் பெயரில் வியாதிகளை சுகப்படுத்த முயலுகையில் ஒருவரை மனவசியம் செய்யப்பட்டது போன்ற நிலைக்கு உட்படுத்தினார்கள்.
“இன்றும்கூட பெரும்பாலான மனவசியம் ‘ஆவியுலகத் தொடர்புடையதாக’ கருதப்படுகிறது” என மேற்குறிப்பிடப்பட்ட என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது. பல்வேறு வகையான மனவசியம் மாய மந்திர பழக்கத்துடன் எந்தளவுக்கு சம்பந்தப்பட்டுள்ளது என்பதை தீர்மானிப்பது கடினமானது; இருந்தபோதிலும் கடவுள் எல்லா விதமான ஆவியுலகத் தொடர்பையும் வெளிப்படையாகவே கண்டனம் செய்கிறார் என்பது உண்மை. (உபாகமம் 18:9-12; வெளிப்படுத்துதல் 21:8) எனவே, மனவசியத்தில் உட்பட்டுள்ள வேதப்பூர்வமற்ற அம்சங்களை உண்மையிலேயே கிறிஸ்தவர்கள் புறக்கணிக்க முடியாது.
நடத்தையில் ஏற்படும் பாதிப்பு
ஒருவருடைய மனதையும் நடத்தையையும் மனவசியம் எந்தளவுக்கு பாதிக்கலாம்? அதில் ஏதேனும் அபாயங்கள் உள்ளனவா? மனவசியம் செய்யப்பட்ட நிலையில் இருக்கும்போது ஒருவர் தன் நடத்தையைக் கட்டுப்படுத்த முடியாது என்பது பெரிதும் கவலை அளிக்கும் ஒரு விஷயம். இப்படித்தான் நடத்தையின் மீது கட்டுப்பாட்டை இழக்க வைக்கிறார்கள், மனவசிய மேடை வித்தகர்கள்; வலிய முன்வருபவர்களை வைத்து, சாதாரணமாக அவர்களால் செய்ய முடியாத காரியங்களையும் செய்து காட்ட வைக்கிறார்கள்; அவர்களை குடிகாரர்கள் போல் தோன்றும்படிகூட செய்துவிடுகிறார்கள்.
பொது மக்கள் முன் செய்து காட்டப்படும் இப்படிப்பட்ட மனவசிய செயல்களைக் குறித்து தி என்ஸைக்ளோப்பீடியா அமெரிக்கானா இவ்வாறு சொல்கிறது: “மனவசியம் செய்யப்பட்ட நபர் மறைமுகமான ஆலோசனையைக்கூட எளிதாக கேட்டு நடக்கலாம், பொதுவாக அவர் கஷ்டப்பட்டு அடக்கி வைத்திருக்கும் ஆசைகளுக்கு உடனடியாக இணங்கிவிடலாம், மனவசியம் செய்யப்பட்ட நிலையில் சமூக ரீதியிலும் தனிப்பட்ட விதத்திலும் தன் நடத்தைக்கு எந்த வித கட்டுப்பாடும் இல்லாததுபோல் உணரலாம்.” “மனவசியம் செய்யப்பட்டவர் தன் மனதின் திறன்கள் ஒருமுகப்படுத்தப்பட்டதை உணருகிறார், இது மனவசிய வித்தகரின் ஆலோசனைக்குக் கூர்ந்து கவனம் செலுத்தி, அவற்றை செய்வதில் அவருடன் ஒத்துழைக்க வைக்கும்” என காலியர்ஸ் என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது.
இதனால் எந்த ஆபத்துமில்லை என்றா தோன்றுகிறது? மனவசிய ஆலோசனைகளைப் பயன்படுத்தி தன் மனதை மற்றவர்கள் ஆதிக்கம் செலுத்த உண்மை கிறிஸ்தவர் அனுமதிப்பது ஞானமான செயலாகுமா? அப்போஸ்தலன் பவுலின் பின்வரும் புத்திமதிக்கு இது முற்றிலும் முரணானதாக இருக்கும்: ‘[“பகுத்தறியும் திறனைப் பயன்படுத்தி,” NW] நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும் . . . இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.’—ரோமர் 12:1, 2.
தன் எண்ணங்களை அல்லது ஆசாபாசங்களை அல்லது தன் செயல்களையும்கூட முழுவதுமாக கட்டுப்படுத்த முடியாத நிலைக்குத் தன்னை ஆளாக்கிக் கொள்கையில் ஒரு கிறிஸ்தவர் ‘நல்மனச்சாட்சி உடையவராய்’ இருக்க முடியுமா? (1 பேதுரு 3:16) ‘உங்களில் அவனவன் தன்தன் சரீரபாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ள அறிந்திருக்க வேண்டுமென’ பைபிள் புத்திமதி கூறுகிறது. (1 தெசலோனிக்கேயர் 4:5) இத்தகைய புத்திமதியைப் பின்பற்றும் திறனை மனவசியம் தடை செய்யலாம் என்பது தெளிவானதே.
பூரண ஆரோக்கியத்துக்கான நம்பிக்கை
மேலே குறிப்பிடப்பட்ட பைபிள் நியமங்களைக் கருத்தில் கொண்டு யெகோவாவின் சாட்சிகள், மனவசியத்தை அல்லது சுயமனவசியத்தை உட்படுத்தும் செயல்களைத் தவிர்க்கிறார்கள். “வசியத்தால் மற்றவர்களைக் கட்டுப்படுத்துகிறவன் . . . உங்களுக்குள் இருக்கக் கூடாது” என உபாகமம் 18:10, 11-ல் (NW) கொடுக்கப்பட்டுள்ள கட்டளைக்குக் கீழ்ப்படிகிறார்கள். வியாதிகளில் அவதிப்படுகிறவர்களுக்கு, மாய மந்திர பழக்கத்தின் ஆபத்துக்களுக்கு உட்படாத அல்லது ஒருவருடைய மனதை மற்றவர்கள் வசியப்படுத்த அனுமதிக்காத வேறு பல சிகிச்சை முறைகள் உள்ளன.
பைபிள் நியமங்களுடன் முரண்படுகிற பழக்கவழக்கங்களைத் தவிர்ப்பதன் மூலம் கிறிஸ்தவர்கள், கடவுளுடைய நீதியுள்ள புதிய உலகில் என்றென்றும் வாழும் நம்பிக்கையோடு இருக்கலாம். அப்போது மனவசியத்தைப் பயன்படுத்தாமல் மனிதகுலம் உடலளவிலும் மனதளவிலும் பூரண ஆரோக்கியத்தை அனுபவிக்கும்.—வெளிப்படுத்துதல் 21:3, 4. (g03 7/08)
[அடிக்குறிப்பு]
a மனவசியம் என்பது, “பொதுவாக மற்றொருவரால் உறக்கத்தில் இருப்பதைப் போன்ற ஒரு நிலைக்கு ஆழ்த்தப்படுவதைக் குறிக்கிறது; அப்படி ஆழ்த்தப்பட்டவருக்கு மறந்துபோன அல்லது மனதில் எங்கோவொரு மூலையில் கிடக்கும் நினைவுகள் தலைதூக்கலாம், மாயக்காட்சிகளை காணலாம், மனவசியப்படுத்துபவரின் ஆலோசனைகளை உடனடியாக கேட்டு நடக்கலாம்” என்பதாக விவரிக்கப்படுகிறது.—தி அமெரிக்கன் ஹெரிட்டேஜ் டிக்ஷ்னரி.