எமது வாசகரிடமிருந்து
எமது வாசகரிடமிருந்து
குருவித் தலையில் பனங்காயா? “குருவித் தலையில் பனங்காயா?” (மே, 8 2003) என்ற அட்டைப்பட தொடர் கட்டுரைகள் மிக அழகாக எழுதப்பட்டிருந்தன. எனக்கு ஏற்பட்ட சில கஷ்டங்களுக்குரிய காரணத்தைப் புரிந்துகொள்ள அவை உதவின. என்னுடைய பிள்ளைப் பருவத்தை சந்தோஷமாக அனுபவிக்க முடியாமல் போய்விட்டது. பிள்ளைகளிடம் அதிகம் எதிர்பார்க்காமல் அவர்களுடைய திறமைக்கேற்ப விட்டுவிடுவதே ஞானமான செயல் என்பதை மனதார ஒப்புக்கொள்கிறேன்.
எஸ். எம்., ஜப்பான் (g03 12/22)
இந்தத் தொடர் கட்டுரைகள் என் நெஞ்சை தொட்டன. எனக்கு அப்பா கிடையாது, அம்மாதான் என்னை வளர்த்தார்கள். இரவு நேரங்களில் அடிக்கடி அம்மா தன் கவலைகளையெல்லாம் நினைத்து அழுவார்கள்; அவர்களுடைய அழுகையை கேட்டு நான் தூக்கமில்லாமல் தவித்தேன். கிறிஸ்தவ சபை மட்டும் இருந்திருக்காவிட்டால் என் வாழ்க்கை எங்கு போய் முடிந்திருக்குமென்று எனக்கே தெரியாது. ஆவிக்குரிய உணவை தருவதற்கு நீங்கள் எடுக்கும் அன்பான முயற்சிகளுக்கு மிக்க நன்றி.
டி. பி., ஐக்கிய மாகாணங்கள் (g03 12/22)
எனக்கு 11 வயது, சீக்கிரத்தில் வளர்ந்து பெரிய ஆளாகிவிட வேண்டும் என்றுதான் நான் எப்போதும் நினைப்பேன். சிறுமியாக இருக்கும்போதே பிள்ளைப் பருவத்தை நல்ல முறையில் அனுபவிக்க வேண்டும் என்பதை இந்தத் தொடர் கட்டுரைகள் எனக்கு காட்டின.
ஜி. எம்., ஐக்கிய மாகாணங்கள் (g03 12/22)
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள கார்மெனும் அவளுடைய அக்காவும் பட்ட கஷ்டங்களை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது; ஏனென்றால் நானும் அவர்களைப் போன்ற சூழ்நிலையில்தான் இருந்தேன். அவர்களைப் போல நான் வீட்டை விட்டு ஓடிப் போகாவிட்டாலும் மாற்றான் தகப்பன்மாரால் நானும் கஷ்டப்பட்டேன். அவர்கள் என்னை கொடுமைப்படுத்தினார்கள், அம்மாவும் என்னை கண்டுகொள்ளவே இல்லை. என்னுடைய பெற்றோர் போதைப் பொருட்களுக்கு அடிமையாக இருந்ததால், என்னுடைய தம்பிமாரை வளர்க்க வேண்டிய பொறுப்பு என் தலையில் விழுந்தது. அப்போது எனக்கு 10 வயதுதான்! இதனால் எனக்கும் பல பிரச்சினைகள் வந்தன. இந்தப் பல வருஷங்களாக யெகோவாவிடமிருந்து பெற்றுவரும் உதவிக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
டி. எஸ்., ஐக்கிய மாகாணங்கள் (g03 12/22)
தேங்காய் ஏப்ரல் 8, 2003 இதழில் வெளிவந்த “உலகிலேயே மிகவும் பயனுள்ள காய்களில் ஒன்று” என்ற கட்டுரையை நான் உண்மையிலேயே ரசித்துப் படித்தேன். எனக்கும் என் ஃப்ரெண்டுக்கும் சோப்பு தயாரிப்பதுதான் ஹாபி. சோப்பு தயாரிக்க நாங்கள் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்துகிறோம். ஏனென்றால் அது தோலுக்கு ரொம்ப நல்லது, அதோடு நல்ல நுரையும் வரும். இந்தக் கட்டுரையை வாசித்த பிறகு தேங்காய் மீது எனக்கிருந்த மதிப்பு இன்னும் கூடிவிட்டது.
கே. எம்., ஐக்கிய மாகாணங்கள் (g03 12/08)
தத்தெடுத்தல் “இளைஞர் கேட்கின்றனர் . . . நான் ஏன் தத்தெடுக்கப்பட்டேன்?” (மே 8, 2003) என்ற கட்டுரைக்கு நன்றி. அது காலத்திற்கேற்ற கட்டுரை. சூழ்நிலை காரணமாக என் மகள் தனது குழந்தையை தத்துக் கொடுத்துவிட்டாள். அது என் மனசாட்சியை மிகவும் உறுத்தியது. இந்தப் பத்திரிகை சரியான சமயத்தில் கிடைத்தது. இதை என் மகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறேன்.
இ. டி., கயானா (g03 12/22)
மே 8 மற்றும் ஜூன் 8 இதழ்களில், தத்தெடுப்பதைப் பற்றிய காலத்திற்கேற்ற கட்டுரைகளை வழங்கியதற்காக மனமார்ந்த நன்றி. நானும் என் கணவரும் சமீபத்தில் ஓர் ஆண் குழந்தையை தத்தெடுத்தோம். எங்களுடைய மகன் பெரியவனாகும்போது, யெகோவா தேவனும் என் கணவரும் நானும் எந்தளவுக்கு அவனை நேசிக்கிறோம் என்பதை இந்தக் கட்டுரைகளை பயன்படுத்தி அவனுக்கு புரிய வைப்போம்.
எஸ். ஆர்., ஐக்கிய மாகாணங்கள் (g03 12/22)
தத்தெடுப்பதைப் பற்றிய இந்தக் கட்டுரைக்கு மிக்க நன்றி. எனக்கு 47 வயது. இப்போதுகூட, நான் தத்தெடுக்கப்பட்டவள் என்பதை நினைக்கும்போது என் மனதிற்குள் போராட்டம்தான். என்னை தத்தெடுத்த பெற்றோரை நான் நேசிக்கிறேன், மதிக்கிறேன். ஆனால் எனக்கு தேவைப்பட்ட அன்பையும் பாசத்தையும் அவர்கள் எனக்கு தரவில்லை. சொல்லப்போனால் நான் வாய்திறந்து கேட்டும்கூட என்னை அவர்கள் கட்டித் தழுவவில்லை, முத்தமிடவில்லை. அப்படி என்னை ஒதுக்கியதால் வேதனைப்பட்டேன். இந்தக் கட்டுரையோ எனக்கு ரொம்பவே ஆறுதல் அளித்தது, மனதுக்கு இதமாகவும் இருந்தது.
டி. எச்., ஐக்கிய மாகாணங்கள் (g03 12/22)