Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வரிகள் நீங்கள் செலுத்த வேண்டுமா?

வரிகள் நீங்கள் செலுத்த வேண்டுமா?

வரிகள் நீங்கள் செலுத்த வேண்டுமா?

“எவனுக்கு வரியைச் செலுத்த வேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்த வேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்பட வேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ண வேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள்.”​—⁠ரோமர் 13:7.

வரி விதிப்புகள் இன்றைக்கு உயர்ந்துகொண்டே போவதால் மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிவுரையை ஜீரணிப்பது கஷ்டமாக தோன்றலாம். என்றாலும், அப்போஸ்தலன் பவுலின் இந்த வார்த்தைகள், பைபிளில் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளன. நீங்கள் பைபிளை உயர்வாக மதிக்கிறீர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒருவேளை நீங்கள் இவ்வாறு யோசிக்கலாம்: ‘சிலருக்கு நியாயமற்றதாக அல்லது அநியாயமாக தோன்றுகிற வரிகள் உட்பட எல்லா வரிகளையும் கிறிஸ்தவர்கள் கண்டிப்பாக கட்ட வேண்டுமா?’

இயேசு தமது சீஷர்களுக்கு கொடுத்த புத்திமதியை சிந்தித்துப் பாருங்கள். ரோமர்கள் வரி விதிப்பதைக் குறித்து யூதர்கள் கடுமையாக சீறியதை அவர் அறிந்திருந்தார். அப்படி இருந்தபோதிலும், “இராயனுடையதை இராயனுக்கும் தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்” என இயேசு உந்துவித்தார். (மாற்கு 12:17) அதுவும் எந்த அரசாங்கம் தமக்கு சீக்கிரத்தில் மரண தண்டனை விதிக்கப்போகிறதோ அந்த அரசாங்கத்திற்கே வரி செலுத்த வேண்டுமென இயேசு சொன்னது அக்கறைக்குரிய விஷயம்.

சில வருடங்களுக்குப்பின், ஆரம்பத்தில் மேற்கோள் காண்பிக்கப்பட்டுள்ள புத்திமதியை பவுல் கொடுத்தார். வரிப்பணத்தை ரோம அரசாங்கம் இராணுவத்திற்கும், ரோம பேரரசர்களுடைய ஒழுக்கங்கெட்ட, சுகபோக வாழ்க்கைக்கும் வாரியிறைத்தபோதிலும், வரி செலுத்தும்படி அவர் உந்துவித்தார். யாருக்குமே பிடிக்காத ஒரு கருத்தை ஏன் பவுல் பரிந்துரைத்தார்?

மேலான அதிகாரங்கள்

பவுல் கூறிய வார்த்தைகளின் சூழமைவை கவனியுங்கள். ரோமர் 13:1-⁠ல் அவர் இவ்வாறு எழுதினார்: “எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால் தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.” கடவுள் பயமுடைய ஆட்சியாளர்கள் இஸ்ரவேல் தேசத்தை ஆண்டபோது, அத்தேசத்தை நிதி ரீதியில் ஆதரிப்பதை சமுதாய மற்றும் மத கடமையாக கருதுவது அத்தேசத்தாருக்கு கடினமாக இருக்கவில்லை. ஆனால் ஆட்சியாளர்கள் விக்கிரகத்தை வழிபடுகிற அவிசுவாசிகளாக இருந்தபோது கிறிஸ்தவர்களுக்கு இதுபோன்ற பொறுப்பு இருந்ததா? ஆம், இருந்தது! ஆட்சியாளர்களுக்கு ஆளும் ‘அதிகாரத்தை’ கடவுள் வழங்கினார் என்பதை பவுலின் வார்த்தைகள் காட்டின.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு அரசாங்கங்கள் இன்றைக்கு நிறைய காரியங்களைச் செய்கின்றன. இதனால் கிறிஸ்தவர்கள் பல்வேறு ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது. (மத்தேயு 24:14; எபிரெயர் 10:24, 25) ஆகவே, “உனக்கு நன்மை உண்டாகும் பொருட்டு, அவன் தேவ ஊழியக்காரனாயிருக்கிறான்” என அரசாங்க அதிகாரிகளைக் குறித்து பவுல் கூறினார். (ரோமர் 13:4) ரோம அரசாங்கம் தந்த பாதுகாப்பை பவுல்தாமே அனுகூலப்படுத்திக் கொண்டார். உதாரணமாக, ஒரு கலகக் கூட்டத்தாரிடம் சிக்கி பலியாகவிருந்த சமயத்தில், ரோம சேவகர்களால் அவர் பாதுகாக்கப்பட்டார். பிற்பாடு, தனது மிஷனரி சேவைக்கு எந்த பாதிப்பும் வராதபடிக்கு ரோம நியாய விசாரணை மன்றத்திடம் அவர் மேல் முறையீடு செய்தார்.​—அப்போஸ்தலர் 22:22-29; 25:11, 12.

ஆகவே வரி செலுத்துவதற்குரிய மூன்று காரணங்களை பவுல் கொடுத்தார். முதலாவதாக, சட்டத்தை மீறுபவர்களுக்கு அரசாங்கங்களிடமிருந்து வரும் ‘கோபாக்கினையைப்’ பற்றி பேசினார். இரண்டாவதாக, வரி கட்டாமல் ஏமாற்றினால் தேவபக்தியுள்ள நபரின் மனசாட்சி மோசமாக பாதிக்கப்படும் என விளக்கினார். கடைசியாக, ‘பொது ஊழியர்களாக’ அரசாங்கங்கள் செய்யும் சேவைகளுக்கு பதிலீடாகவே வரி செலுத்தப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டினார்.​—ரோமர் 13:1-6; NW.

பவுலின் இந்த வார்த்தைகளுக்கு அவருடைய சக கிறிஸ்தவர்கள் செவிசாய்த்தார்களா? நிச்சயமாகவே செவிசாய்த்தார்கள், ஏனென்றால் கிறிஸ்தவர்கள் “மற்ற எல்லாரையும்விட உடனடியாகவே” வரிகளை செலுத்தியதாக கிறிஸ்தவர் என சொல்லிக்கொண்ட ஜஸ்டின் மார்டர் (சுமார் பொ.ச. 110 முதல் 165 வரை) என்ற இரண்டாம் நூற்றாண்டு எழுத்தாளர் கூறினார். இன்று, அரசாங்கங்கள் நம்மிடம் கேட்பது நேரமாக இருந்தாலும்சரி பணமாக இருந்தாலும்சரி, கிறிஸ்தவர்கள் மனப்பூர்வமாக கீழ்ப்படிந்து அதை செலுத்துகிறார்கள்.​—மத்தேயு 5:41. *

அதேசமயத்தில், சட்டப்பூர்வ வரி சலுகைகளைப் பயன்படுத்திக்கொள்ள கிறிஸ்தவர்களுக்கு உரிமை உள்ளது. சில சமயங்களில், மத அமைப்புகளுக்கு நன்கொடை வழங்கும்போது கிடைக்கும் வரிச் சலுகைகளையும் அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். என்றாலும், உண்மை கிறிஸ்தவர்கள் கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதால், எந்தவித வரி ஏய்ப்பும் செய்வதில்லை. அவர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரியை செலுத்துகிறார்கள், அந்தப் பணத்தை அதிகாரிகள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பது அவர்களுடைய முழு பொறுப்பு என்பதை அறிந்து அதை அவர்களுடைய கையிலேயே விட்டுவிடுகிறார்கள்.

அதிக வரி விதிப்பு என்பது ‘மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுவதால்’ வந்த ஒரு விளைவே. (பிரசங்கி 8:9) கடவுளுடைய அரசாங்கத்தில்​—⁠அநியாயமாக வரி விதித்து மக்களை ஒருபோதும் பாரப்படுத்தாத ஓர் அரசாங்கத்தில்​—⁠வாழும் அனைவருக்கும் விரைவில் நீதி கிடைக்கும் என்ற பைபிளின் வாக்குறுதியில் யெகோவாவின் சாட்சிகள் ஆறுதலை கண்டடைகிறார்கள்.​—சங்கீதம் 72:12, 13; ஏசாயா 9:⁠7. (g03 12/08)

[அடிக்குறிப்பு]

^ பாரா. 10 ‘இராயனுடையதை இராயனுக்கு செலுத்துங்கள்’ என இயேசு அறிவுரை கொடுத்தது வரி செலுத்துவதற்கு மட்டுமே என அர்த்தப்படுத்த வேண்டிய அவசியமில்லை. (மத்தேயு 22:21) கிரிட்டிக்கல் அண்ட் எக்ஸிஜெட்டிக்கல் ஹேன்ட்-புக் டு த காஸ்பல் ஆஃப் மேத்யூ என்ற நூலில் ஹைன்ரிக் மையர் இவ்வாறு விளக்குகிறார்: “[இராயனுடையதை] என்ற வார்த்தை வெறுமனே உள்நாட்டு வரியை (civil tax) மட்டுமல்ல, இராயனுடைய சட்டப்பூர்வ ஆட்சியின் நிமித்தம் அவனுக்கு உரிமையுடைய எல்லாவற்றையும் அர்த்தப்படுத்தியது.”

[பக்கம் 11-ன் சிறு குறிப்பு]

ஆரம்பகால கிறிஸ்தவர்கள் “மற்ற எல்லாரையும்விட உடனடியாகவே” வரிகளை செலுத்தினார்கள்.​—⁠ஜஸ்டின் மார்டர்

[பக்கம் 10-ன் படம்]

வரி சட்டங்களுக்கு உண்மை கிறிஸ்தவர்கள் கீழ்ப்படிகிறார்கள்

[பக்கம் 11-ன் படம்]

‘இராயனுடையதை இராயனுக்கு செலுத்துங்கள்’ என இயேசு கூறினார்

[பக்கம் 10-ன் படத்திற்கான நன்றி]

© European Monetary Institute