நமது கோளத்திற்கு என்ன எதிர்காலம்?
நமது கோளத்திற்கு—என்ன எதிர்காலம்?
“மனித சக்திக்கு அப்பாற்பட்ட இயற்கை சீற்றங்களான வெள்ளம், வறட்சி போன்றவற்றைக் கண்டு மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அஞ்சி நடுங்கியிருக்கிறார்கள். ஆனால் மனித தலையீட்டால் ஏற்படும் இயற்கை பேரழிவுகளோ இப்பொழுது இதைவிட பயங்கர பீதியை ஏற்படுத்துகின்றன” என கனடாவின் செய்தித்தாள் குளோப் அண்டு மெயில் கூறுகிறது. காலம் வேகமாக கடந்து செல்லும் முன் இத்தகைய பயங்கர சுற்றுச்சூழல் பாதிப்புகளை சரிப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி மக்களைத் தூண்டுவித்து, ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) விரிவான ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதன் செயற்குழு இயக்குநர் கிளாஸ் டோப்ஃபர் இவ்வாறு கூறுகிறார்: “நாம் செயல்படுவது அல்லது செயல்படாமலிருப்பது, அற்புதமான இந்த நீலநிற கோளத்தின் சுற்றுச்சூழலையும் அதிலுள்ள குடிகளையும் 2032-ம் ஆண்டுக்குள் எந்தளவு பாதிக்கும் என்பதை இப்பொழுது நாம் நன்றாக அறிந்திருக்கிறோம்.”
1972-ல் UNEP ஸ்தாபிக்கப்பட்டது முதற்கொண்டு சுற்றுச்சூழலில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. த டோரன்டோ ஸ்டார் இவ்வாறு அறிக்கை செய்கிறது: “ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் காற்றின் தரமும் ஆற்றுநீரின் தரமும் உயர்ந்துள்ளது. இரசாயன கழிவுப் பொருட்களின் மீது தடை விதிக்கப்பட்டதால் ஓசோன் படலம் பாதிக்கப்படுவதை ஓரளவு சரிப்படுத்த முடிந்துள்ளது.” கனடா, பின்லாந்து, நார்வே, ஐக்கிய மாகாணங்கள் ஆகிய நாடுகளில் காடுகளைப் பாதுகாக்க திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன; இதைப் போன்ற திட்டங்கள், “மரத்திற்காக காடுகளை மிதமிஞ்சி வெட்டுவதால் வரும் பின்விளைவுகளைக் குறைத்திருக்கின்றன.” என்றாலும், பொருளாதார வளர்ச்சி கட்டுப்படுத்தப்படாமல் இப்படியே நகரங்கள் அதிகமதிகமாய் நிலங்களை ஆக்கிரமித்தால், வனவிலங்கு மற்றும் பல்வகை உயிரினங்களின் வாழ்க்கைச் சூழல் பயங்கர பாதிப்பிற்குள்ளாகும் என UNEP அறிக்கை கூறுகிறது. குளோப் கூறியதாவது: “உலகிலுள்ள ஆறுகளில் பாதி ஆறுகள் மாசுபடுத்தப்பட்டுள்ளன அல்லது பேரளவாய் வற்றியுள்ளன. உலக மக்கள்தொகையில் 40 சதவீதத்தினர் வசிக்கும் எண்பது நாடுகளில் பயங்கர தண்ணீர் பற்றாக்குறை உள்ளது.”
“உறுதியான நடவடிக்கை நல்ல பலன்களைத் தரும்” என டோப்ஃபர் கருதுகிறார். அவர் மேலும் கூறுகிறார்: “திட்டவட்டமான நடவடிக்கையும் . . . உறுதியான திட்டங்களும் . . . மிக முக்கியமாக, தெளிவான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அவசியம்.” ஆனால், நமது கோளத்தின் நன்மைக்காக உலக தலைவர்கள் செயல்பட மனமில்லாதிருப்பதால் என்ன நம்பிக்கை இருக்கிறது?
ஒருவர் உண்மையில் அப்படிப்பட்ட “தெளிவான அதிகாரப்பூர்வ அறிவிப்பு” செய்திருக்கிறார், “உறுதியான நடவடிக்கை”யும் எடுக்கப்போகிறார்; இதில் உங்களுக்கு சந்தேகமே வேண்டாம். அவர் யெகோவா தேவன். சொல்லப்போனால், அவர் பூமியின் விவகாரத்தில் தலையிட்டு ‘பூமியைக் கெடுக்கிறவர்களைக் கெடுக்கப் போவதாக’ தெளிவாக கூறியிருக்கிறார். (வெளிப்படுத்துதல் 11:18) மேலும், பூமியின் சூழியல் மண்டலங்கள் பழையபடி பரிபூரணமாக செயல்படும் என்றும் கடவுள் உறுதியளிக்கிறார். வனாந்தரம் பூத்துக்குலுங்கும். (ஏசாயா 35:1) ஏராளமான உணவு கிடைக்கும். ஆறுகள் எந்தவித மாசுகளாலும் பாதிக்கப்படா. (சங்கீதம் 72:16; 98:8) பூமியில் வாழும் உயிருள்ள ஒவ்வொன்றையும் ஆசீர்வதிப்பதாக கடவுள் உத்தரவாதம் அளிக்கிறார்.—சங்கீதம் 96:11, 12. (g04 2/8)
[பக்கம் 29-ன் படத்திற்கான நன்றி]
NASA photo