ஆழ்கடலில் வர்ணஜாலம்
ஆழ்கடலில் வர்ணஜாலம்
இரண்டடி நீளமுள்ள கணவாய் மீன் ஒரு பாறை இடுக்கில் சலனமின்றி அசைவாடிக் கொண்டிருந்தது. மீன் போல் துடுப்பை அசைத்தவாறு பாறையின் அடித்தளத்தில் நீந்திச் சென்ற முக்குளிப்பவரின் (scuba diver) “கண்-வலையில்” சட்டென்று அந்த மீன் மாட்டிக் கொண்டது. நீலம்-சாம்பல் கலந்த சுற்றுச்சூழலுடன் அந்த மீனின் நிறமும் இரண்டற கலந்திருந்தது. முக்குளிப்பவர் அதன் அருகில் சென்றவுடன் அது செக்கச் செவேலென பளிச்சிட்டது. அவர் பின்வாங்கிய போதோ அதன் நிறம் பழையபடி மாறிவிட்டது. ஆக்டோபஸ், சிப்பிமீன் இனங்களில் சிலவற்றைப் போல, இந்த வியத்தகு மெல்லுடலிகள் எப்படி இவ்வளவு திறமையாக நிறத்தை மாற்றிக்கொள்கின்றன என்று எப்போதாவது நீங்கள் யோசித்திருக்கிறீர்களா?
இவற்றின் தோலில் குரோமட்டோஃபோர்ஸ் (chromatophores) என்னும் நிறமி செல்கள் இருப்பதால்தான் இவற்றால் நிறங்களை மாற்றிக்கொள்ள முடிகிறது. தசைகளை நரம்புகள் சுருங்கி விரியச் செய்கின்றன, தசைகள் இப்படி சுருங்கி விரிவதால் இந்த நிறமி செல்களின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த உயிரினங்கள் வெவ்வேறு நிறங்களில் காட்சியளிப்பதற்கு காரணம் அதுதான்.
பல வகை சிப்பி மீன்களும்கூட தங்கள் நிறத்தை மாற்றிக்கொள்கின்றன, அதுமட்டுமல்ல, சொந்தமாகவும் ஒளியை உமிழ்கின்றன; அதாவது மின்மினிப் பூச்சிகள் போல் ஒளிரச் செய்கின்றன. ஜெல்லி ஃபிஷ் தொடங்கி கூனிறால் வரை ஏராளமான கடல் பிராணிகளின் உடல்கள் இவ்வாறு ஒளிவீசுகின்றன; இதற்குக் காரணம், ஃபோட்டோசைட்ஸ் என்ற செல்களில் அல்லது ஃபோட்டோஃபோர்ஸ் என்னும் உறுப்புகளில் நிகழும் சிக்கலான வேதியியல் மாற்றங்களே. அவற்றின் உடலில் தஞ்சம் புகுந்திருக்கும் ஒளிவீசும் பாக்டீரியாக்களாலும்கூட அவை அவ்வாறு பிரகாசிக்கலாம்.
சிக்கலான வேதியியல் மாற்றங்களைப் பொருத்தமட்டில் ஒளிவீசும் செல்களிலும் உறுப்புகளிலும் லூஸிஃபெரின் என்ற ரசாயனம் உள்ளது. அது ஒரு என்ஸைமின் உதவியுடன் ஆக்சிஜனோடு கலந்து ஒளியை உற்பத்தி செய்கிறது. அந்த ஒளி வழக்கமாக நீலம் கலந்த பச்சை நிறமாக இருக்கிறது. ஒளிவீசும் உறுப்புகள் சில, “நுட்பமான கருவிகளாகும். அவற்றில் ஒரு ஃபோகஸ் லென்ஸ், ஒரு கலர் ஃபில்டர், ஆஃப்/ஆன் ஸ்விட்ச் போல் செயல்படும் ஒரு மடிப்பு ஆகியவை இருக்கின்றன. ஃபோட்டோஃபோர்ஸ், குரோமட்டோஃபோர்ஸ் ஆகிய இரண்டையும் தோலில் பெற்றிருக்கும் சிப்பி மீன்களால் நிறத்தையும் மாற்ற முடியும், ஒளியின் செறிவையும் கட்டுப்படுத்த முடியும்” என்று ஸைன்டிஃபிக் அமெரிக்கன் பத்திரிகை சொல்கிறது.
பாக்டீரியாக்களின் உதவியால் ஒளிவீசுகிற உயிரினங்கள், கண்ணுக்குத் தெரியாத அந்த விருந்தாளிகளுக்கு தங்களுடைய விசேஷ ஒளி உறுப்புகளில் தஞ்சம் அளிக்கின்றன. இந்த உறுப்புகளில் இரத்த ஓட்டம் மிகுதியாக இருக்கிறது. பாக்டீரியாக்களுக்குத் தேவையான சத்துக்களை இந்த இரத்த ஓட்டம் தந்துவிடுகிறது. இவ்வாறு, பாக்டீரியாவுக்கு “மின் கட்டணத்தைச்” செலுத்திவிடுகிறது. (g04 9/22)
[பக்கம் 31-ன் படங்களுக்கான நன்றி]
உள்படம்: Courtesy Jeffrey Jeffords/www.divegallery.com
© David Nicholson/Lepus/Photo Researchers, Inc.