Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வெண் படை நோய் என்றால் என்ன?

வெண் படை நோய் என்றால் என்ன?

வெண் படை நோய் என்றால் என்ன?

தென் ஆப்பிரிக்காவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

சிபாங்கிலி என்ற பெண்மணி சில சமயங்களில் தன்னுடைய சருமத்தின் தோற்றத்தைப் பற்றி நகைச்சுவை ததும்ப பேசுவதுண்டு. புன்னகை மாறாமல் அவர் இவ்வாறு சொல்கிறார்: “கருப்பாக பிறந்தேன், பின்னர் வெள்ளை வெளேரென்று ஆகிவிட்டேன், அதனால் இப்போது நான் எந்த இனத்தவள் என்று எனக்கே தெரியவில்லை.” ஆம், அவருக்கு விட்டிலிகோ (vitiligo) எனும் வெண் படை நோய் உள்ளது.

இந்த நோய், வெண் குஷ்டம் (leukoderma) என்றும் அழைக்கப்படுகிறது; தோலில் நிறமிகளை உற்பத்தி செய்யும் செல்களின் எண்ணிக்கை குறைவுபடுகையில் இந்நோய் வருகிறது. இதனால் தோலில் ஆங்காங்கே வெண்மை நிற புள்ளிகளும் படைகளும் உருவாகின்றன. சில நோயாளிகளுக்கு ஒரேவொரு இடத்தில் படை வருவதுடன் சரி, அதற்கு மேல் வருவதில்லை. வேறு சிலருக்கு அது மளமளவென உடல் முழுவதும் பரவி விடுகிறது. இன்னும் சிலருக்கு அது வருடக்கணக்கில் மெல்ல மெல்ல உடல் முழுவதும் பரவிக் கொண்டே இருக்கலாம். வெண் படை உடலுக்கு வேதனை அளிப்பதில்லை, இதற்கு தொற்றும் தன்மையும் இல்லை.

சிபாங்கிலி போன்று கருத்த தோலுள்ளவர்களுக்கு வெண் படை இருப்பது பார்த்ததுமே பளிச்சென தெரிந்துவிடும், ஆனால் எல்லாருக்கும் அப்படித் தெரிவதில்லை. இருப்பினும் வெவ்வேறுபட்ட அளவுகளில் அநேகர் இந்நோயால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள். மொத்த ஜனத்தொகையில் 1 முதல் 2 சதவீதத்தினர் வெண் படையால் பாதிக்கப்பட்டிருப்பதாக புள்ளிவிவரம் காட்டுகிறது. வெண் படை பாரபட்சமின்றி எல்லா இனத்தவரையும் தாக்குகிறது, ஆண், பெண் என்ற வேற்றுமையும் அதற்கு கிடையாது. ஆனால் இந்நோய் ஏன் வருகிறது என்பது இன்னும் புரியாப் புதிராகவே இருக்கிறது.

வெண் படையைப் போக்க திட்டவட்டமான நிவாரணிகள் ஏதும் இல்லாததால் அதை சமாளிக்க பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன. உதாரணமாக, வெளுத்த தோலுள்ள நோயாளிகளின் சருமம் வெயிலில் கறுத்துப் போகையில் பாதிக்கப்பட்ட பகுதி அப்பட்டமாக தெரிந்துவிடுகிறது. எனவே வெயிலை தவிர்க்கையில் இந்நோயிருப்பது அவ்வளவாக தெரிவதில்லை. கருத்த தோலுள்ளவர்கள் பிரத்தியேகமாக மேக்-அப் செய்து கொள்வதன் மூலம் சருமத்தில் காணப்படும் நிற வேறுபாட்டை ஓரளவு மறைத்துக் கொள்ளலாம். தோலில் நிறமி செல்களை மீண்டும் அதிகரிக்க செய்யும் சிகிச்சை முறை சிலருக்குப் பயனளித்திருக்கிறது. இந்தச் சிகிச்சை முறையில், பல மாதங்களுக்கு மருந்து சாப்பிட வேண்டும், இதற்கு விசேஷித்த புறஊதா கருவியும் பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சிகிச்சை சிலருக்கு உதவியாக இருந்திருக்கிறது, ஆம், நோய் பீடிக்கப்பட்ட சருமத்தின் பகுதிகள் பழையபடி இயல்பான நிறத்தைப் பெற்றிருக்கின்றன. இன்னும் சில நோயாளிகள் தோல் நிறமிகளை முற்றிலும் அகற்றும் சிகிச்சை முறையைத் தேர்ந்தெடுக்கிறார்கள். தோலில் நிறமிகளை உண்டுபண்ணும் செல்களை முற்றிலுமாக அழிப்பதன் மூலம் பாதிக்கப்பட்ட தோலை அடையாளம் காண முடியாதபடி எல்லாவற்றையும் ஒரே நிறத்திற்கு மாற்றிவிடுவதுதான் இந்தச் சிகிச்சை முறையின் நோக்கம்.

வெண் படையால் பாதிக்கப்பட்டவர் உணர்ச்சி ரீதியில் பெரிதும் அவதிப்படலாம்; அதிலும் முக்கியமாய் அது முகத்தில் பரவும்போது அதிகமாக வேதனைப்படலாம். “சமீபத்தில் இரண்டு பிள்ளைகள் என்னைப் பார்த்துவிட்டு அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள். இன்னும் சிலர், எனக்குத் தொற்று நோய் வந்திருக்கிறது என நினைத்துக்கொண்டு அல்லது நான் பண்ணிய பாவம்தான் இதற்குக் காரணம் என நினைத்துக்கொண்டு என்னிடம் பேசுவதற்கே தயங்குகிறார்கள். ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன், இதுபோல் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டு மக்கள் பயப்பட வேண்டியதில்லை. தொடுவதன் மூலமோ, காற்றின் மூலமோ இந்த வெண் படை அவர்களுக்குப் பரவாது” என சிபாங்கிலி விளக்குகிறார்.

சிபாங்கிலி ஒரு யெகோவாவின் சாட்சியாக இருக்கிறார், பைபிள் பிரசங்க வேலையை அதிகமாக விரும்புகிறார்; இந்நோய் எவ்விதத்திலும் அந்த வேலைக்கு முட்டுக்கட்டையாக இருக்க அவர் அனுமதிப்பதில்லை. இந்தப் பிரசங்க வேலையில் ஜனங்களை அவர்களது வீடுகளில் சந்திக்கவும், அவர்களுடன் நேருக்கு நேர் உரையாடவும் வேண்டும். “என் தோற்றத்தை பார்த்துப் பார்த்து எனக்குப் பழகிப் போய்விட்டது. இப்போது என் தோற்றத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை, யெகோவா தேவன் வாக்குறுதி அளித்திருக்கும் பரதீஸிய பூமியில் என் தோல் பழைய நிறத்திற்குத் திரும்பப் போகிற அந்த நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்” என சொல்கிறார் அவர்.​—⁠வெளிப்படுத்துதல் 21:3-5. (g04 9/22)

[பக்கம் 12-ன் படம்]

1967-⁠ல், நோயால் பீடிக்கப் படுவதற்கு முன்