உலகை கவனித்தல்
உலகை கவனித்தல்
நீர்யானையின் சன்-ஸ்கிரீன்
“நீர்யானைகள் தங்கள் மழமழப்பான சருமத்தை வெயிலிலிருந்து பாதுகாக்க சன்-ஸ்கிரீன் திரவத்தைச் சுரக்கின்றன; இது வெயில் காப்புக்காக மனிதர் உபயோகிக்கும் கிரீமைப் போலவே உள்ளது” என அறிக்கை செய்கிறது லண்டனில் வெளியாகும் தி இன்டிப்பென்டன்ட் செய்தித்தாள். ஜப்பானில், கியோடோவிலுள்ள அறிவியலாளர்கள், டோக்கியோ மிருகக்காட்சி சாலையிலுள்ள ஒரு நீர்யானை சுரந்த திரவத்தைப் பரிசோதித்து, அது சருமத்தை எப்படி வெப்பமண்டல உஷ்ணத்திலிருந்தும் தூசியிலிருந்தும் காக்கிறது என்பதை அறிந்துகொண்டார்கள். கெட்டியான, பிசுபிசுப்பான, நிறமற்ற அந்தத் திரவம் மெல்ல மெல்ல சிவப்பாக மாறுகிறது, பின்னர் பிளாஸ்டிக் போல் இறுகி பழுப்பு நிறமாகிறது. அப்போது, காரத் தன்மையிலிருந்து அமிலத் தன்மைமிக்கதாக மாறுகிறது; இவ்வாறு திறம்பட்ட கிருமிநாசினி போல் செயல்படுகிறது. செயற்கை கிரீமைப் போலவே இந்தப் பழுப்பு நிறப் பூச்சு, புற ஊதா ஒளியை உறிஞ்சுவதன் மூலம் சன்-ஸ்கிரீன் போலவும் செயல்படுகிறது. இருப்பினும், அழகு சாதன கம்பெனிகள் நீர்யானையின் சன்-ஸ்கிரீனை எதிர்காலத்தில் விற்பனைக்களத்தில் இறக்க முடியாது; அதற்கு ஒரு காரணம், உலகில் வெகு சில நீர்யானைகளே இருக்கின்றன; இன்னொரு காரணம், அந்தத் திரவம் துர்நாற்றமுள்ளது என அந்தச் செய்தித்தாள் இறுதியில் குறிப்பிட்டது. (g05 3/22)
மிருகங்களுக்குள் நட்பு
விரிகுளம்புள்ள மிருகங்கள் மந்தையிலுள்ள பிற மிருகங்களிடம் தனிப்பட்ட நட்பை வளர்த்துக்கொள்ள முடியும் என குடியானவர்களும் மேய்ப்பர்களும் நீண்ட காலம் நம்பி வந்திருக்கிறார்கள், ஆனால் சமீபத்தில்தான் ஆன்யா வாசிலாஃப்ஸ்கி என்ற உயிரியலாளர் மேற்கொண்ட அறிவியல் ஆய்வு அதை உறுதிப்படுத்தியது. குதிரைகள், கழுதைகள், மாடுகள், ஆடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்த வாசிலாஃப்ஸ்கி சொல்கிறபடி, அந்த மிருகங்கள் அடிக்கடி ஒன்றோடொன்று நெருங்கியிருப்பதன் மூலமும், ஓய்வெடுக்கும்போதோ மேயும்போதோ உரசிக்கொள்வதன் மூலமும், தீவனத்தைப் பகிர்ந்துகொள்வதன் மூலமும், ஒன்றுக்கொன்று ரோமத்தைக் கோதிவிடுவதன் மூலமும் தங்கள் நேயத்தை வெளிப்படுத்துகின்றன. உதாரணத்திற்கு, ஓர் ஆடு வேறொரு மிருகத்துடன் சண்டை போட்டிருந்தால், அந்த ஆட்டின் நண்பன் அதன் தலையோடு தலை வைத்துத் தேய்க்கிறது. இச்செயல், சண்டை போட்ட ஆட்டை ஆசுவாசப்படுத்தி, அதற்கு ஆறுதல் சொல்வதைப் போல் உள்ளது என ஜெர்மனியில் வெளியாகும் டீ ட்ஸைட் என்ற செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. கழுதைகளைப் பொறுத்தவரை அவை பொதுவாக ஒரேவொரு நண்பரையே வைத்துக்கொள்கின்றன, ஆனால் அந்த நட்பு காலா காலத்திற்கும் நிலைக்கும். இருப்பினும், விலங்குகளை மனிதரைப் போல் கருதுவதைத் தவிர்ப்பதற்காக, அத்தகைய சமூக உறவுகளின் செயல்பாட்டையும் பாதிப்புகளையும் பற்றி ஊகிப்பதில் ஆராய்ச்சியாளர்கள் கவனமாய் இருக்கிறார்கள். (g05 3/8)
கார்கள் Vs சைக்கிள்கள்
“சீனாவின் பொருளாதார வளர்ச்சியால், அங்குள்ள மக்கள் சைக்கிளுக்குப் பதிலாக நான்கு சக்கர மோட்டார் வாகனங்களையே அதிகம் விரும்புகிறார்கள். உதாரணமாக, 10 ஆண்டுகளுக்கு முன் பெய்ஜிங் நகரவாசிகளில் 60 சதவீதத்தினர் போக்குவரத்துக்குச் சைக்கிளைத்தான் பயன்படுத்தினார்கள், ஆனால் இப்போது அங்கு 25 சதவீதத்தினர் மட்டுமே அதை உபயோகிக்கிறார்கள். “பெய்ஜிங்கில் மாத்திரம் ஒவ்வொரு வருடமும் 4,00,000-க்கும் அதிகமான புதிய வாகனங்கள் சாலையில் ஓட ஆரம்பிக்கின்றன” என டோரான்டோ ஸ்டார் செய்தித்தாள் கூறுகிறது. இதனால் அந்நகர “சாலைகளில் வாகனங்கள் சராசரியாக மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே இப்போது ஓடுகின்றன.” சீனாவில், 2003-ம் ஆண்டின்போது “புதிதாக முளைத்த பணக்கார தொழிலதிபர்கள் 20 லட்சத்திற்கும் அதிகமான கார்களை வாங்கினார்கள்; இந்த எண்ணிக்கை 2002-ம் ஆண்டில் இருந்ததைவிட 70 சதவீதம் அதிகம்” என நேஷனல் ஜியோகிராஃபிக் அறிக்கை செய்கிறது. சீனர்கள், சைக்கிளைவிட பெட்ரோல் வாகனங்களையே பெருமளவு சார்ந்திருக்கிற நிலை ஏற்பட்டிருப்பதால், “பெட்ரோலை உபயோகிப்பதில் ஜப்பானையும் சீனா விஞ்சிவிட்டது; இப்போது பெட்ரோலைப் பயன்படுத்தும் நாடுகளில் அது இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது” என அந்த அறிக்கை மேலும் கூறுகிறது. என்றாலும், சீனாவில் இன்னமும் 47 கோடி சைக்கிள்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. (g05 1/22)
பாண்டாக்களும் மூங்கிலும்
“சீனாவின் அடையாளச் சின்னமாகவும் வனவிலங்கு பாதுகாப்பின் அடையாளச் சின்னமாகவும் விளங்கும் ஜயண்ட் பாண்டா கரடி எதிர்பார்த்தளவு அழிந்து போய்விடவில்லை” என லண்டனில் வெளியாகும் த டெய்லி டெலிகிராஃப் என்ற செய்தித்தாள் குறிப்பிடுகிறது. வனத்தில் 1,000 முதல் 1,100 பாண்டாக்கள் இருக்குமென முன்னர் கணக்கிடப்பட்டது; இப்போதோ 1,590-க்கும் அதிக பாண்டாக்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது; இது, இயற்கை வையக விரிவு நிதியமும் சீன அரசாங்கமும் சேர்ந்து நடத்திய நான்கு வருட ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. செயற்கைக் கோளுடன் இணைக்கப்பட்ட பொஸிஷனிங் சிஸ்டம் போன்ற மேம்பட்ட தொழில் நுட்பத்தின் உதவியோடு அவை வாழ்கிற இடங்களைக் கண்டறிந்ததால் அவற்றின் எண்ணிக்கையை வெகு துல்லியமாகக் கணக்கிட முடிந்தது. இது பாதுகாவலர்களுக்கு நல்ல செய்தியாக இருந்தாலும், காடுகள் அழிக்கப்படுவது இப்பாண்டாவின் முக்கிய உணவான மூங்கிலுக்குப் பெரும் ஆபத்தாக இருக்கிறதென இங்கிலாந்து, கேம்பிரிட்ஜிலுள்ள உவர்ல்டு கன்சர்வேஷன் மானிட்டரிங் சென்டர் எச்சரிக்கிறது. “ஒவ்வொரு வகையையும் சேர்ந்த [மூங்கில்கள்] 20 முதல் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரே சமயத்தில் பூத்துவிட்டு, பின்னர் காய்ந்துவிடுகின்றன”; இதுவே மளமளவென காடுகள் அழிக்கப்படுகையில் மூங்கில்கள் பெரிதும் பாதிக்கப்பட காரணமாகிறது” என த காரிடியன் ஆஃப் லண்டன் அறிக்கை செய்கிறது. (g05 3/8)
கொசு விரட்டி—உஷார்!
ஆசியாவில் பூச்சிகளை விரட்ட எங்கும் பயன்படுத்தப்படும் கொசுவத்தி சுருள்கள் முக்கியமாகக் குழந்தைகளுக்குக் கெடுதல் செய்யலாம் என இரண்டு ஆய்வுகள் குறிப்பிடுவதாக இந்தியாவில் வெளியாகும் டௌன் டு எர்த் என்ற பத்திரிகை அறிக்கை செய்கிறது. முதலாவது ஆய்வின்படி, மெல்ல மெல்ல புகையும் இந்தக் கொசுவத்திகளைப் பயன்படுத்துபவர்கள் நுரையீரல் புற்றுநோயுக்கு ஆளாகிறார்கள் என அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். வளரும் நாடுகளிலுள்ள பல குடும்பங்கள் தங்கள் சிறிய வீடுகளில் கொசுவத்திகளைப் பயன்படுத்துகின்றன. “போதாக்குறைக்கு, தூங்கும் சமயத்தில் ஜன்னல்களையும் அடைத்து வைக்கின்றன” என அந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் சொல்கிறார்கள். இரண்டாவது ஆய்வின்படி, எட்டு மணிநேரம் புகையும் ஒரு கொசுவத்தி “75 முதல் 137 சிகரெட்டுகளுக்குச் சமமான துகள்களை வெளிவிடுகிறது” என மலேசியாவையும் அமெரிக்காவையும் சேர்ந்த அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். இதற்குப் பதிலாக, வேப்ப மரம் போன்ற தாவரங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தும்படி நிபுணர்கள் பரிந்துரை செய்கிறார்கள். “இவை பயனுள்ளவையாகவும் ஆரோக்கியத்திற்கு உகந்தவையாகவும் மட்டுமல்ல, மலிவானவையாகவும் இருக்கின்றன” என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. (g05 3/8)
பளு தூக்குவது வயதானோரின் மன உளைச்சலைக் குறைக்கிறது
“வயதானவர்கள் பளு தூக்குவது அவர்களுடைய மன உளைச்சலை 50 சதவீதம் குறைக்கலாம்” என ஓர் ஆய்வு காட்டுவதாக ஆஸ்டிரேலியன் என்ற செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. இவ்வாறு வயதானவர்களுக்கு வரும் மன உளைச்சலைப் பொறுத்தவரை, பளு தூக்குவது மருத்துவ சிகிச்சைக்குச் சமமாக இருக்கலாம் என்கிறார் முதுமையின் பிரச்சினைகளுக்குச் சிகிச்சை அளிக்கும் டாக்டர் நாலன் சிங்; இவர் சிட்னியின் ராயல் பிரின்ஸ் ஆல்ஃபிரட் மருத்துவமனையில் பணிபுரிகிறார். சராசரியாக 72 வயதுள்ள 60 ஆண்களையும் பெண்களையும் வைத்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், “பளு தூக்காமல் கிரமமாக மருத்துவ சிகிச்சை பெற்றவர்களைப் போன்றே” ஓரளவு இலகுவான உடற்பயிற்சியைச் செய்தவர்கள் விஷயத்திலும் “மன உளைச்சல் 30 சதவீதம் குறைந்தது” என அந்தச் செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பளு தூக்குவது மன உளைச்சலை எதிர்த்துப் போராடுவதோடுகூட “முதுமையால் வலுவிழந்து வரும் எலும்புகளையும் தசைகளையும்” பலப்படுத்தி, “முதியவர்கள் விழாமல் இருக்கச் செய்கிறது. மூட்டு அழற்சி, சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவும் அது உதவுகிறது” என அந்தச் செய்தித்தாள் குறிப்பிடுகிறது. “மன உளைச்சலுக்குச் சிகிச்சை அளிக்கையில், குறிப்பாக வயதானவர்களுக்கு [பளு தூக்குவதை] முக்கிய சிகிச்சையாக அளிக்க வேண்டும்” என சிங் ஆலோசனை தருகிறார். (g05 3/22)
பச்சோந்தியின் மின்னல் வேக நாக்கு
இரையைப் பிடிப்பதற்கு பச்சோந்தி தன் நாக்கை எப்படி மின்னல் வேகத்தில் வெளியே விட்டு இழுக்கிறது? “காட்டபுல்ட்டை இழுத்து விடுவதற்கு முன்பு அதன் எலாஸ்டிக்கில் விசை சேகரிக்கப்படுவதைப் போல விசையை சேகரிக்கும் ஸ்பிரிங் போன்ற அமைப்பு பச்சோந்திக்கு இருக்கிறது” என அறிக்கை செய்கிறது நியூ சையன்டிஸ்ட் பத்திரிகை. பச்சோந்தியின் நாக்கில் உள்ள திசுக்களாலான உறைகளைச் சுற்றி “முடுக்கிவிடும் தசை” இருப்பதை அறிவியலாளர்கள் அறிந்திருந்தார்கள். பச்சோந்தி இரையைப் பிடிப்பதற்கு வெறும் 200 மில்லி செகண்டுகளுக்கு முன், “முடுக்கிவிடும் தசையை உபயோகித்து தன் நாக்கிலுள்ள திசு உறைகளில் விசையை சேகரிக்கிறது; இவ்வாறு பல அடுக்குகள் உள்ள டெலஸ்கோப் போல் அந்த உறைகள் ஒன்றுக்குள் ஒன்றாக அடுக்கப்படுகின்றன” என்பதை இப்போது ஸ்லோ-மோஷன் வீடியோ படத்தின் உதவியோடு டச்சு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இரையை ‘லபக்’கென பிடிக்கையில் “சேகரித்து வைத்துள்ள விசையை பச்சோந்தி வெறும் 20 மில்லி செகண்டுகளில் விடுவிக்க முடிகிறது, அப்போது அதன் நாக்கு மின்னல் வேகத்தில் வெளியே வந்துபோகிறது.” (g05 3/22)