‘சாவதற்குள் கடவுளுக்குச் சேவை செய்ய விரும்புகிறேன்’
‘சாவதற்குள் கடவுளுக்குச் சேவை செய்ய விரும்புகிறேன்’
மாமி ஃப்ரீயின் கதை
லைபீரியாவில் 1990-வது வருடம் உள்நாட்டுப் போர் வெடித்தது. போர் தீவிரமாக ஆனபோது, க்ரான் இனத்தைச் சேர்ந்த மாமி என்ற 12 வயது பெண்ணும் அவளுடைய குடும்பமும் வெளியே ஓடிப்போக முடியாமல் வீட்டுக்குள் மாட்டிக்கொண்டார்கள். அவர்களுடைய வீடு தலைநகரான மன்ரோவியாவில் இருந்தது. “பக்கத்து வீட்டில் வெடிச்சத்தம் கேட்டது, அந்த வீட்டின் மீது ஒரு குண்டு விழுந்து தீப்பிடித்துக்கொண்டது. அதனால் பக்கத்திலிருந்த எங்களுடைய வீட்டிற்கும் தீ பரவியது” என்று மாமி சொல்கிறாள். போர் படுபயங்கரமாக நடந்துகொண்டிருந்தது. அத்தகைய சூழலிலும் மாமி, அவளுடைய அம்மா, அவளுடைய தாய்மாமா அனைவரும் அங்கிருந்து ஓடிப்போனார்கள்.
“திடீரென்று, என்மீது ஏதோ பாய்ந்தது” என்கிறாள் மாமி.
“‘என்ன ஆச்சு?’ என அம்மா கேட்டார்.”
“‘என்மீது ஏதோ பாய்ந்துவிட்டது, குண்டுதான் பாய்ந்திருக்க வேண்டும்’ என்றேன்.”
மாமி தரையில் விழுந்து மிகுந்த வேதனையுடன், “கடவுளே தயவுசெய்து என் ஜெபத்தைக் கேளுங்கள். நான் செத்துவிடுவேன் போலிருக்கிறது. ஆனால் சாவதற்கு முன் உங்களுக்குச் சேவை செய்ய விரும்புகிறேன்” என்று ஜெபம் செய்தாள். பிறகு நினைவிழந்துபோனாள்.
மாமி இறந்துவிட்டதாக நினைத்துக்கொண்டு அக்கம்பக்கத்திலிருந்த ஆண்கள் சிலர் பக்கத்திலிருந்த கடற்கரையில் அவளை அடக்கம் செய்வதற்காக வந்தார்கள். ஆனால், அருகிலிருந்த ஆஸ்பத்திரிக்கு அவளை எடுத்துச்செல்லும்படி அவளுடைய அம்மா வற்புறுத்தினார். அந்த ஆஸ்பத்திரியிலோ கூட்டம் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. அடிபட்டுக் கிடந்திருந்த அத்தனை ஆண்களையும் பெண்களையும் குழந்தைகளையும் கவனிப்பதற்கு அங்கு போதிய வசதியும் இருக்கவில்லை. மாமியின் தாய் மாமாவுக்கும் அடிபட்டிருந்தது; அவர் அன்று இரவே இறந்துவிட்டார். ஆனால் மாமி பிழைத்துக்கொண்டாள், இருந்தாலும் அவளுடைய இடுப்பிலிருந்து பாதம்வரை செயலிழந்துவிட்டது.
அவளது உடலுக்குள் இரத்தம் கசிந்துகொண்டிருந்தது, அதனால் தாங்க முடியாத வலியில் துடித்துக்கொண்டிருந்தாள். நான்கு மாதங்களுக்குப் பிறகுதான் டாக்டர்கள் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தார்கள். அவளுடைய இருதயத்திற்கும் நுரையீரல்களுக்கும் இடையே குண்டு பாய்ந்திருப்பதை எக்ஸ்ரே ரிப்போர்ட் காட்டியது. அந்தக் குண்டை எடுக்க ஆபரேஷன் செய்தால் மாமியின் உயிருக்கே ஆபத்தாகிவிடும் எனச் சொல்லப்பட்டதால், ஊருக்குள் இருந்த ஒரு மூலிகை மருத்துவரிடம் மாமியின் அம்மா அவளை அழைத்துச் சென்றார். “அவர் என் நெஞ்சை ரேசர் பிளேடால் கிழித்து அடிபட்டிருந்த இடத்தில் அவருடைய வாயை வைத்து குண்டை உறிஞ்சி எடுக்க முயன்றார். பிறகு, தன் வாயிலிருந்து ஒரு குண்டை
எடுத்துக்காட்டி, ‘இதோ வந்துவிட்டது பாருங்கள்’ என்றார். அதன்பின், அவருக்குப் பணம் கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம்” என்கிறாள் மாமி.ஆனால், அந்த மருத்துவர் சொன்னது பொய். ஏனென்றால், அதன் பிறகு எடுத்த எக்ஸ்ரே ரிப்போர்ட்டுகள், குண்டு அப்படியே இருந்ததைக் காட்டின. மாமியும் அவளுடைய அம்மாவும் மறுபடியுமாக அந்த மூலிகை மருத்துவரிடம் சென்றார்கள். குண்டு எடுக்கப்பட்டிருப்பதை ஒன்பது மாதங்களுக்குப் பிறகுதான் எக்ஸ்ரே காண்பிக்கும் என்று சொல்லி அவர்களை அனுப்பிவிட்டார், ஆனால் அதுவும் பொய். அவருடைய பேச்சைக் கேட்டுக்கொண்டு அவர்களும் வீடு திரும்பினார்கள், ஒன்பது மாதங்கள் பொறுமையாகக் காத்துக்கொண்டிருந்தார்கள். அதற்கிடையில் வலியைத் தாக்குப்பிடிக்க மாமி நிறைய மருந்து மாத்திரைகளைச் சாப்பிட்டாள். ஒன்பது மாதங்கள் கழிந்தன, இன்னும் நிறைய முறை எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. குண்டு இன்னும் உள்ளேயேதான் இருந்தது. அந்த மூலிகை மருத்துவர் எங்கோ தலைமறைவாகிவிட்டார்.
மாமியின் உடலுக்குள் குண்டு பாய்ந்து 18 மாதங்கள் உருண்டோடின, அப்போதும் அது வெளியே எடுக்கப்படவில்லை. அவளுடைய சொந்தக்காரர் ஒருவர் அவளை ஒரு சூனியக்காரியிடம் அழைத்துச் சென்றார். அந்தச் சூனியக்காரி உதவி செய்வதற்குப் பதிலாக, ஒரு தேதியைக் குறிப்பிட்டு அந்தத் தேதியில் மாமியின் உயிரோ அவளுடைய அம்மாவின் உயிரோ போய்விடும் என்று சொல்லி பயமுறுத்திவிட்டாள். மாமிக்கு அப்போது 13 வயதுதான் ஆகியிருந்தது. “நான் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தேன். ஆனால் அந்தச் சூனியக்காரி சொன்ன அந்தத் தேதியில் நானும் சாகவில்லை, அம்மாவும் சாகவில்லை” என்கிறாள் மாமி.
அதன் பிறகு, அவளுடைய அப்பாவின் சகோதரர் ஒருவர் அவளை ஒரு சர்ச் தலைவரிடம் அழைத்துச் சென்றார். அந்த சர்ச் தலைவர் ஒரு தரிசனத்தைக் கண்டாராம். அதன்படி, மாமிக்கு குண்டு பாய்ந்ததால் அல்ல, ஆனால் யாரோ அவளுக்கு செய்வினை வைத்ததாலேயே பக்கவாதம் ஏற்பட்டிருந்ததாகக் கூறினார். மேலும், சில சடங்குகளைச் செய்தால் ஒரே வாரத்தில் மாமியால் எழுந்து நடக்க முடியும் என்றார். மாமி இவ்விதமாக விளக்குகிறாள்: “நிறைய முறை நான் புனித நீரில் நீராடினேன்; விரதம் இருந்தேன்; நடுராத்திரியில் பல மணிநேரம் தரையில் உருண்டு கடவுளிடம் மன்றாடினேன். ஆனால் இவையெல்லாம் செய்தும் என் உடல்நிலை தேறவே இல்லை.”
காலப்போக்கில் நிறைய ஆஸ்பத்திரிகள் அங்கு ஆரம்பிக்கப்பட்டன, எனவே, ஒருவழியாக மாமியின் உடலிலிருந்து குண்டு வெளியே எடுக்கப்பட்டது. ஆக, இரண்டு வருடங்களுக்கும் மேல் வேதனையில் அவள் தத்தளிக்க வேண்டியிருந்தது. “ஆபரேஷன் முடிந்த பிறகு வலி பெருமளவு குறைந்தது. என்னால் சுலபமாக மூச்சுவிட முடிந்தது. என்னுடைய பக்கவாதம் சரியாகவில்லை என்றாலும், கைத்தடியின் உதவியினால் என்னால் நிற்க முடிந்தது” என மாமி கூறுகிறாள்.
யெகோவாவின் சாட்சிகள் மாமியைச் சந்திக்கிறார்கள்
ஆபரேஷன் முடிந்து சில வாரங்களுக்குப் பிறகு மாமியின் அம்மா யெகோவாவின் சாட்சிகளில் இருவரைச் சந்தித்தார். தனது மகளுக்கு பைபிளை வாசிக்கப் பிடிக்கும் என்பதால் சாட்சிகளை வீட்டுக்கு அழைத்தார். மாமி உடனடியாக அவர்களுடன் பைபிளைப் படிக்க ஒத்துக்கொண்டாள். ஆனால், பல மாதங்களுக்குப் பிறகு, அவள் மறுபடியும் ஆஸ்பத்திரியில் சேர வேண்டியிருந்ததால் சாட்சிகளைச் சந்திக்க முடியாமல் போய்விட்டது.
இருந்தாலும், பைபிள் அறிவைப் பெற்றுக்கொள்வதில் மாமிக்கு இருந்த ஆர்வம் தணியவில்லை. அதனால் ஒரு சர்ச் தலைவர் அவளுக்கு உதவிசெய்ய முன்வந்தபோது உடனடியாக அதை அவள் ஏற்றுக்கொண்டாள். ஒருமுறை ‘சண்டே ஸ்கூலின்போது’ ஒரு மாணவன், “இயேசு கடவுளுக்குச் சமமானவரா?” என்று ஆசிரியரிடம் கேட்டான்.
“ஆமாம், சமமானவர்தான். ஆனால் சரிசமமானவரல்ல” என்று ஆசிரியர் சொன்னார்.
‘கடவுளுக்கு சரிசமமானவர் அல்ல என்றால்? அது அர்த்தமற்றதாக இருக்கிறதே. இதில் ஏதோ தவறு இருக்கிறது’ என மாமி யோசித்தாள். இது பைபிளிலுள்ள சத்தியமாக அவளுக்குத் தோன்றவில்லை, அதனால் நாளடைவில் அந்த சர்ச்சுக்குப் போவதையே நிறுத்தினாள்.
1996-ல் மான்ரோவியாவில் மறுபடியும் போர் வெடித்தது. அப்போது மாமியின் குடும்பத்தில் மேலும் இரண்டு பேர் உயிரிழந்தார்கள். மறுபடியும் அவளுடைய வீடு தீப்பற்றிக்கொண்டது. ஒருசில மாதங்களுக்குப் பிறகு இரண்டு சாட்சிகள், வீட்டிற்கு வீடு ஊழியம் செய்தபோது மாமியை சந்தித்தார்கள். மாமி மீண்டும் தன் பைபிள் படிப்பை தொடர்ந்தாள். அவள் முதன்முதலாக ராஜ்ய மன்றத்திற்கு வந்தபோது அங்கிருந்த ஒவ்வொருவரும், ஏன் மூப்பரும்கூட
மன்றத்தைச் சுத்தம் செய்வதைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள். அந்த வருடக் கடைசியில் முதன்முறையாக யெகோவாவின் சாட்சிகளின் பெரிய மாநாட்டிற்குச் சென்றாள். அந்த மாவட்ட மாநாட்டின் தலைப்பு, “தேவ சமாதானத் தூதுவர்கள்.”“அப்படியே மெய்சிலிர்த்துப் போனேன். சாட்சிகள் வெவ்வேறு இனத்திலிருந்து வந்திருந்தாலும் அவர்கள் ஒருவரையொருவர் உண்மையாக நேசித்ததைப் பார்த்தேன். எல்லாமே நல்லபடியாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது” என மாமி சொல்கிறாள்.
விரும்பியபடியே கடவுளுக்குச் சேவை செய்கிறாள்
1998-ல் போர் மறுபடியும் மூண்டது. அதனால் வேறு வழியில்லாமல் மாமியும் அவளுடைய அம்மாவும் பக்கத்திலிருந்த கோட் டீவோருக்குத் தப்பியோடி, பீஸ் டவுன் என்ற அகதிகள் முகாமில் குடியேறினார்கள். லைபீரியா நாட்டைச் சேர்ந்தவர்கள் கிட்டத்தட்ட 6,000 பேர் அங்கிருந்தார்கள். மாமி தொடர்ந்து யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் படித்து வேகமாக முன்னேற்றங்களைச் செய்தாள். சீக்கிரத்திலேயே தான் கற்றதை மற்றவர்களுக்குச் சொல்ல விரும்பினாள். ஆகவே, அவளுடைய சபையிலிருந்த சகோதர சகோதரிகள் அவளை வீல் சேரில் தள்ளிச் சென்று ஊழியம் செய்ய அவளுக்கு உதவினார்கள். இப்படியாக, அகதிகள் முகாமிலிருந்த அநேகருக்கு மாமியால் சிறந்த விதத்தில் சாட்சி கொடுக்க முடிந்தது.
அவளால் நடக்க முடியாதபோதிலும் ஆறு கிலோமீட்டர் பயணம் செய்து ராஜ்ய மன்றத்திற்குச் செல்வாள். ஒரு கூட்டத்தையும் தவறவிடமாட்டாள். மே 14, 2000-ல் நடந்த விசேஷ மாநாட்டில் கலந்துகொள்வதற்காக 190 கிலோமீட்டருக்கும் அதிகமாகப் பயணம் செய்தாள். கடவுளுக்கு தன்னை ஒப்புக்கொடுத்ததன் அடையாளமாக அங்கு அவள் முழுக்காட்டுதல் பெற்றாள். (மத்தேயு 28:19, 20) மாமி, ஒரு நீரோடைக்குள் தூக்கிச்செல்லப்பட்டு முழுக்காட்டப்பட்டதைப் பார்த்த அநேகருடைய கண்கள் குளமாயின. அவள் தண்ணீரிலிருந்து வெளியே வந்தபோது அவளுடைய முகம் சந்தோஷத்தில் பிரகாசித்தது.
இன்று கானாவிலுள்ள அகதிகள் முகாம் ஒன்றில் வசிக்கும் மாமி, ஓர் ஒழுங்கான பயனியராக, அதாவது முழு நேர ஊழியராகச் சேவை செய்ய வேண்டும் என்று இலக்கு வைத்திருக்கிறாள். அவளுடைய அம்மாவும் இப்போது யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் படிக்கிறார். கற்றதை மற்றவர்களுக்குச் சொல்லவும் ஆரம்பித்திருக்கிறார். “முடவன் மானைப் போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்” என்று கடவுளுடைய வார்த்தை வாக்குறுதி அளித்துள்ள சமயத்திற்காக அவர்கள் இருவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.—ஏசாயா 35:5-7.
[பக்கம் 22-ன் படம்]
மாமியின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட குண்டு
[பக்கம் 23-ன் படம்]
முழுக்காட்டப்படுவதற்காக மாமி ஒரு நீரோடைக்குள் எடுத்துச்செல்லப்பட்டபோது
[பக்கம் 23-ன் படம்]
அவளுடைய அம்மாவுடன் (எம்மா) பைபிள் படிப்பு நடத்தப்படுகிறது