முதுமைக்குக் காரணம்?
முதுமைக்குக் காரணம்?
“பெண்ணிடம் பிறந்த மனிதருக்கு வாழ்நாளோ குறைவு; வருத்தமோ மிகுதி.”—யோபு 14:1, பொது மொழிபெயர்ப்பு.
கிரைண்டர், மிக்ஸி போன்ற இயந்திரங்களுக்குக் காலப்போக்கில் என்ன ஆகிறது? தினசரி உபயோகத்தினால் அவை கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து கடைசியில் ஒரேயடியாய் நின்றுவிடுகின்றன. அதேபோல், மிருகங்கள்கூட கிழடுதட்டி இறுதியில் செத்துப் போகின்றன. ஆக, உயிருள்ள அனைத்தும் இயந்திரங்களைப் போலவே காலப்போக்கில் செயலிழந்து போவதுதான் இயல்பு என நீங்கள் நினைக்கலாம். ஆனால் விலங்கியல் பேராசிரியரான ஸ்டீவன் ஆஸ்டாட் இவ்வாறு சொல்கிறார்: “உயிரினங்கள் வேறு, இயந்திரங்கள் வேறு. உயிரினங்களுக்கே உரிய சிறப்பம்சம், தங்களைத் தாங்களே சீரமைத்துக்கொள்ளும் திறன்தான்.”
ஏதோவொரு காயம் ஏற்படும்போது உங்கள் உடல் தன்னைத்தானே சீர்ப்படுத்திக்கொள்ளும்; இது ஓர் அற்புதம். அதேசமயத்தில், அதன் அன்றாட ‘சீரமைப்புப் பணிகளோ’ அற்புதத்திலும் அற்புதம். உதாரணத்திற்கு, உங்கள் எலும்புகளை எடுத்துக்கொள்ளுங்கள். சைன்டிஃபிக் அமெரிக்கன் பத்திரிகை இவ்வாறு சொல்கிறது: “எலும்புகள் பார்ப்பதற்கு உயிரற்றவை போல் தெரியலாம். ஆனால் உண்மையில் அவை உயிருள்ள திசுக்கள்; வளர்ச்சியடைந்தவர்களின் உடலில், அவை பட்டுப்போவதும் மீண்டும் உருவாவதுமாக ஓயாமல் புதுப்பித்துக்கொள்கின்றன. இதனால் பத்து வருடத்திற்கு ஒருமுறை எலும்புக்கூடு முழுவதும் புதிதாகிவிடுகிறது.” உடலின் மற்ற பாகங்கள் இன்னும் அடிக்கடி புதுப்பித்துக்கொள்கின்றன. உங்கள் தோல், ஈரல், குடல் ஆகியவற்றிலுள்ள சில செல்கள் கிட்டத்தட்ட தினமும் மாற்றீடு செய்துகொள்கின்றன. இதற்காக உங்கள் உடல் ஒவ்வொரு விநாடியும் சுமார் இரண்டரை கோடி புதிய செல்களை உருவாக்குகிறது. இப்படி உங்கள் உடலின் எல்லா பாகங்களும் தவறாமல் புதுப்பிக்கப்படாமல் அல்லது மாற்றீடு செய்யப்படாமல் போனால் பிள்ளைப் பருவத்திலேயே கிழடுதட்டிவிடுவீர்கள்!
உயிரியல் நிபுணர்கள் செல்களில் உள்ள மூலக்கூறுகளை ஆராய ஆரம்பித்தபோது, ‘தேய்மானம்’ அடையாத அதன் அற்புத திறனைக் கண்டு இன்னுமதிகமாக மலைத்துப் போனார்கள். பழைய செல்களுக்குப் பதிலாகப் புதிய
செல்கள் உருவாகின்றன என்று கவனித்தோம், அல்லவா? அந்தப் புதிய செல்கள் ஒவ்வொன்றும் பழைய செல்களிலுள்ள டிஎன்ஏ என்ற மூலக்கூறை நகலெடுக்கின்றன. (உங்கள் உடல் முழுவதையும் மீண்டும் உருவாக்குவதற்குத் தேவையான பெருமளவு தகவல்கள் அடங்கிய மூலக்கூறுதான் டிஎன்ஏ.) அப்படியென்றால், இதுவரை உங்கள் உடலில் மட்டுமல்ல, பூமியில் வாழ்ந்திருக்கும் அத்தனை பேருடைய உடல்களிலும், டிஎன்ஏ எத்தனை தடவை நகல் எடுக்கப்பட்டிருக்கும்! இது எப்பேர்ப்பட்ட அதிசயம் என்பதை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள். ஏதேனும் ஓர் ஆவணத்தை நீங்கள் ஜெராக்ஸ் மெஷினில் நகல் எடுக்கிறீர்கள். பிறகு அந்த நகலை வைத்து இன்னொரு நகல் எடுக்கிறீர்கள். இப்படியே தொடர்ந்து செய்துவந்தால் என்னவாகும்? நகல்கள் மங்கலாகிக்கொண்டே போய் கடைசியில் படிக்க முடியாதளவுக்கு ஆகிவிடும். ஆனால் சந்தோஷமான ஒரு விஷயம்: நம்முடைய செல்கள் மீண்டும் மீண்டும் நகலெடுத்துக்கொண்டே இருந்தாலும் அவற்றிலுள்ள தகவல் களஞ்சியமான டிஎன்ஏ ‘மங்கிப்போவதே’ இல்லை. ஏன்? ஏனென்றால் நம் செல்கள், நகல் எடுக்கையில் ஏற்படும் பிழைகளை தானாகவே பல்வேறு வழிகளில் திருத்திக்கொள்கின்றன. அப்படி மட்டும் நடக்காமல் இருந்தால், மனிதகுலம் எப்போதோ மண்ணோடு மண்ணாகியிருக்கும்!நம் உடலில் பெரிய பெரிய உறுப்புகளிலிருந்து சின்னஞ்சிறிய மூலக்கூறுகள்வரை அனைத்துமே ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் புதுப்பித்துக்கொள்வதால் அல்லது மாற்றீடு செய்துகொள்வதால், செல்களின் ‘தேய்மானமே’ முதுமைக்குக் காரணமென சொல்ல முடியாது. உடலிலுள்ள பல்வேறு மண்டலங்கள், அவற்றிற்கே உரிய முறையிலும் வேகத்திலும் சுயமாகப் புதுப்பித்துக்கொள்கின்றன அல்லது மாற்றீடு செய்துகொள்கின்றன, அதுவும் வருடக்கணக்கில்! அப்படியென்றால், அவை அனைத்தும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் பழுதடைய ஆரம்பிப்பது ஏன்?
மரபியல் காரணமா?
பூனை 20 வருடங்கள் வாழும்போது, அதே அளவுள்ள ஓப்போசம் என்ற விலங்கு வெறும் 3 வருடங்கள் வாழ்வது ஏன்? a வௌவால் 20 அல்லது 30 வருடங்கள் வாழும்போது, சுண்டெலி 3 வருடங்களுக்குள் இறந்துவிடுவது ஏன்? ராட்சஸ ஆமை 150 வருடங்களுக்கு உயிர்வாழ்கையில் யானை வெறும் 70 வருடங்கள் வாழ்வது ஏன்? உணவு, உடலின் எடை, மூளையின் அளவு, வாழ்க்கை ஓட்டம் போன்றவை இதற்குக் காரணமாகத் தெரியவில்லை. என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா இவ்வாறு குறிப்பிடுகிறது: “ஓர் உயிரினம் இத்தனை வயதுவரைதான் வாழும் என்று மரபியல் தொகுப்பில் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.” ஆக, ஆயுட்காலம் மரபணுக்களில் எழுதப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. என்றாலும், அந்த ஆயுட்காலத்தின் முடிவு நெருங்க நெருங்க உடலின் இயக்கங்கள் அனைத்தும் குன்ற ஆரம்பிப்பது எதனால்?
மூலக்கூறு-உயிரியல் நிபுணரான டாக்டர் ஜான் மெடினா இவ்வாறு எழுதுகிறார்: “குறிப்பிட்ட சில நேரங்களில் மர்மமான ஏதோ சிக்னல்கள் தோன்றி, ‘போதும் இனி இயங்காதே!’ என வளர்ச்சியடைந்த செல்களிடம் சொல்கின்றன. . . . சில மரபணுக்கள்கூட, வயதாகிச் சாகும்படி செல்களிடமோ முழு உடலிடமோ தெரிவிக்கின்றன.”
நமது உடலை ஒரு கம்பெனிக்கு ஒப்பிடலாம். அந்த கம்பெனி பல ஆண்டுகள் லாபகரமாக வியாபாரம் செய்து வந்திருக்கிறதென வைத்துக்கொள்ளுங்கள். திடீரென்று அதன் மானேஜர்கள், வேலைக்கு ஆட்களை எடுத்து பயிற்சி தர மறுத்துவிடுகிறார்கள்; ரிப்பேரான மெஷின்களை சரிசெய்வதையும் பழையதை கழித்துவிட்டு புதியதை வாங்குவதையும் நிறுத்திவிடுகிறார்கள்; கட்டடங்களைப் பழுதுபார்ப்பதையும் புதுப்பிப்பதையும் விட்டுவிடுகிறார்கள். அப்போது என்ன ஆகும்? சீக்கிரத்திலேயே வியாபாரம் நொடித்துப்போக ஆரம்பிக்கும். கம்பெனிக்குப் பயன் அளித்த காரியங்களை எல்லாம் அந்த மானேஜர்கள் ஏன் திடீரென நிறுத்திவிட்டார்கள்? முதுமையை ஆராயும் உயிரியல் நிபுணர்கள் இதேபோன்ற ஒரு கேள்விக்குத்தான் விடை தேடுகிறார்கள். த க்ளாக் ஆஃப் ஏஜஸ் புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “செல்கள் பெருகுவதை திடீரென நிறுத்திவிட்டு ஏன் செத்துப்போக ஆரம்பிக்கின்றன என்பதுதான் முதுமை பற்றிய ஆராய்ச்சியில் மிகப் பெரிய புதிராக இருக்கிறது.”
முதுமைக்கு நிவாரணம் உண்டா?
முதுமைதான் “உடல் ரீதியிலான பிரச்சினைகளிலேயே மிகச் சிக்கலானது” என சொல்லப்படுகிறது. ஆண்டாண்டு காலமாக அறிவியல் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தும், முதுமைக்கான காரணமே இன்னும் விளங்கவில்லை; அப்படியிருக்கும்போது, நிவாரணத்தைப் பற்றி கேட்கவே வேண்டாம். முதுமையை ஆராயும் 51 நிபுணர்கள் கொடுத்த எச்சரிக்கையை சைன்டிஃபிக் அமெரிக்கன் பத்திரிகை 2004-ல் வெளியிட்டது. அது சொன்னதாவது: “தற்போது விற்பனை செய்யப்படும் எந்தப் பொருளாலுமே முதுமையின் வேகத்தைக் குறைக்கவோ, அதை நிறுத்தவோ, அல்லது மாற்றவோ முடியவில்லை.” உண்மைதான், சத்துள்ள உணவும் சீரான உடற்பயிற்சியும் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இள வயதிலேயே வியாதிப்பட்டு இறப்பதைத் தவிர்க்க உதவும்; என்றாலும், எதுவுமே முதுமையின் வேகத்தைக் குறைப்பதாகத் தெரியவில்லை. இதையெல்லாம் கவனிக்கையில், இயேசு சொன்ன இந்த வார்த்தைகளை நினைக்காமல் இருக்க முடியாது: “கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் ஆயுளின் அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?”—மத்தேயு 6:27, திருத்திய மொழிபெயர்ப்பு.
முதுமைக்கு நிவாரணம் கண்டுபிடிக்க எடுக்கப்படும் முயற்சிகளைப் பற்றி மெடினா இவ்வாறு முடிவாக எழுதுகிறார்: “ஏன் முதுமை அடைகிறோம் என்றே இன்னும் நமக்குத் தெரியாது. . . . புற்றுநோயை ஒழிக்கப்போவதாகப் பல ஆண்டுகளுக்கு முன்பு உறுதிபூண்டோம், ஆனால் இன்னமும் அதற்கு நிவாரணம் கண்டுபிடித்த பாடில்லை. அப்படியிருக்கும்போது, புற்றுநோயைவிட எத்தனையோ மடங்கு சிக்கலாக இருக்கும் முதுமைக்கு எப்படித்தான் நிவாரணம் கண்டுபிடிக்கப் போகிறோமோ.”
ஆராய்ச்சிகளின் முக்கியமான முடிவு
உயிரினங்கள் செயல்படும் விதத்தையும் அவை முதுமை அடைவதற்கான காரணத்தையும் பற்றிய ஆராய்ச்சிகளைப் பார்த்து, நாம் நீண்ட காலம் வாழ்வதற்கு வாய்ப்பே கிடையாதென நினைக்க வேண்டியதில்லை. இந்த ஆராய்ச்சிகளிலிருந்து சிலர் மறுக்க முடியாத ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள்; முதுமையைப் புரிந்துகொள்வதற்கு அது அத்தியாவசியமானது. மூலக்கூறு-உயிர்வேதியியல் நிபுணரான மைக்கல் பிஹி இவ்வாறு எழுதுகிறார்: “உயிர்வேதியியல் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக செல்களின் ரகசியங்களை வெளிப்படுத்தி வந்திருக்கிறது. . . . செல்களின் மூலக்கூறுகளை ஆராய்வதற்கு அடுத்தடுத்து எடுக்கப்பட்ட இந்த எல்லா முயற்சிகளுக்கும் பிறகு, அது ‘வடிவமைக்கப்பட்டதே!’ என எவ்வித சந்தேகமுமின்றி அடித்துச் சொல்லலாம்.” ஆக, புத்திக்கூர்மையுள்ள யாரோ ஒருவர் உயிரினங்களை வடிவமைத்திருக்கிறார். முதன்முதலாக இந்த முடிவுக்கு வந்தவர் மைக்கல் பிஹி அல்ல. பல்லாண்டுகளுக்கு முன் வாழ்ந்த பைபிள் கவிஞர் ஒருவர், மனித உடலின் வடிவமைப்பைப் பற்றி சிந்தித்த பிறகு இவ்வாறு எழுதினார்: ‘நான் பிரமிக்கத்தக்க [விதத்தில்] அதிசயமாய் உண்டாக்கப்பட்டிருக்கிறேன்.’—சங்கீதம் 139:14.
எல்லா உயிரினங்களும் வடிவமைக்கப்பட்டவை என்றால், ஆர்வத்தைத் தூண்டும் ஒரு கேள்வி எழும்புகிறது: தலைசிறந்த வடிவமைப்பாளரான கடவுள், மனிதர்களுக்கும் அநேக மிருகங்களுக்கும் கிட்டத்தட்ட ஒரே ஆயுட்காலத்தைக் கொடுத்திருக்கிறாரா, அல்லது மிருகங்களைவிட மனிதர்கள் நீண்ட காலம் வாழ வேண்டுமென விரும்புகிறாரா?
[அடிக்குறிப்பு]
a வயிற்றுப் பையில் குட்டிகளைச் சுமக்கும் ‘மார்ஸுபியல்’ வகை விலங்குகளில் ஒன்றுதான் இந்த ஓப்போசம். இது வட அமெரிக்காவில் காணப்படுகிறது.
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
‘நாம் அதிசயமாய் உண்டாக்கப்பட்டிருக்கிறோம்’
[பக்கம் 4, 5-ன் படம்]
செல்களின் ‘தேய்மானத்தினால்’ முதுமை ஏற்படுகிறதா?
[பக்கம் 6-ன் படத்திற்கான நன்றி]
டிஎன்ஏ: ஃபோட்டோ: www.comstock.com