Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மனிதர் மரித்தபின் தேவதூதர்களாக ஆகிறார்களா?

மனிதர் மரித்தபின் தேவதூதர்களாக ஆகிறார்களா?

பைபிளின் கருத்து

மனிதர் மரித்தபின் தேவதூதர்களாக ஆகிறார்களா?

ஆரியிரா என்ற சிறுமி ஏழு வயதில் இறந்துபோனாள். தாங்க முடியாத வேதனையிலிருந்த அவளுடைய பெற்றோர், வெள்ளை உடையில் சவப்பெட்டியில் கிடத்தப்பட்டிருந்த மகளைப் பார்த்து அழுதுகொண்டிருந்தார்கள். அவர்களை ஆறுதல்படுத்த நினைத்த பாதிரியார் அவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “கடவுளுக்கு இன்னொரு தேவதூதர் தேவைப்பட்டதால் ஆரியிராவை எடுத்துக்கொண்டார். இப்போது அவளுடைய ஆத்துமா சர்வவல்லவரின் சிங்காசனத்தைச் சுற்றி சிறகடித்துப் பறந்துகொண்டிருக்கிறது.”

இறந்துபோன மனிதர்களின் ஆத்துமாக்களே தேவதூதர்கள் என்ற கருத்தை அநேகர் மனதார நம்புகிறார்கள். என்றாலும், சில மதங்களே இக்கருத்தை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்கின்றன. இறந்துபோன ஆட்கள் தேவதூதர்களாக மாறும்போது உயிரோடிருக்கிறவர்களுக்கு உதவுவார்கள், அவர்களைப் பாதுகாப்பார்கள் என்ற கருத்தை மீடியாக்கள் திரைப்படங்களிலும் டிவி சீரியல்களிலும் பரப்பியிருக்கின்றன.

உங்கள் அன்பானவர்கள் இறந்துபோகையில் அவர்கள் உண்மையில் தேவதூதர்களாக மாறுகிறார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா? இந்த விஷயத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? இதற்குப் பதிலைக் காண்பதற்கு முன், தேவதூதர்களின் இயல்பையும், இறந்தவர்களின் நிலையையும் பற்றி பைபிள் உண்மையில் என்ன சொல்கிறது என்பதை முதலில் ஆராயலாம்.

தேவதூதர்கள்​—⁠ஒப்பற்ற படைப்புகள்

தேவதூதர்களை நாம் பார்க்க முடியாது, கடவுளுடைய இந்த ஊழியர்கள் சக்திபடைத்தவர்கள். இவர்கள் பரலோகத்தில் வசிப்பவர்கள். இவர்கள் மனிதர்களைச் சார்ந்து வாழ்பவர்கள் அல்ல. இவர்கள் கடவுளால் படைக்கப்பட்ட ஆவி சிருஷ்டிகள். அதைப் பற்றி பைபிள் இவ்வாறு சொல்கிறது: ‘அவைகள் [தேவதூதர்கள்] கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவது; அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டன.’​சங்கீதம் 148:2, 5.

சேராபீன்கள், கேருபீன்கள் உட்பட உண்மையுள்ள லட்சோப லட்சம் தூதர்கள் தங்களது வித்தியாசப்பட்ட பதவிகளுக்கும் நியமிப்புகளுக்கும் ஏற்ப தங்களுக்குரிய வேலையைக் கீழ்ப்படிதலோடு செய்கிறார்கள் என்று பைபிள் காண்பிக்கிறது. (சங்கீதம் 103:20, 21; ஏசாயா 6:1-7; தானியேல் 7:9, 10) இத்தனை அநேக தேவதூதர்களை உருவாக்க மனிதர்கள் இறக்கும்படி கடவுள் காத்திருக்க வேண்டியிருந்ததா? சொல்லப்போனால், அதற்கு சாத்தியமே இல்லை. ஏன்?

மனிதர் படைக்கப்படுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே தேவதூதர்கள் படைக்கப்பட்டார்கள் என பைபிள் காட்டுகிறது. மனிதர் வெகு காலத்திற்குப்பின் குடியிருக்கவிருந்த இந்தக் கிரகத்தை யெகோவா படைத்தபோது தூதர்கள் ‘ஏகமாய்ப்பாடி, கெம்பீரித்தார்கள்.’ இவர்களை விடியற்காலத்து நட்சத்திரங்கள் என கவிதை நடையில் பைபிள் வர்ணிக்கிறது. (யோபு 38:4-7) ஆக, பூமியில் மனிதர் படைக்கப்படுவதற்கு முன்பே, யுகா யுகங்களுக்கு முன்பே தேவதூதர்கள் இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, தேவதூதர்களும் மனிதர்களும் வித்தியாசமான இயல்புடையவர்கள்; யெகோவாவுடைய நோக்கத்தில் அவர்கள் வகிக்கும் பாகமும் வித்தியாசப்பட்டது. a மனிதனைக் கடவுள் ‘தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக’ உண்டாக்கினார். (எபிரெயர் 2:7) ஆகவே, இந்த ஆவி சிருஷ்டிகளை மனிதருக்கு அப்பாற்பட்டவர்களாகக் கருதுவது சரியானதே. அவர்கள் மிக அதிகளவு மனத்திறனும் சக்தியும் படைத்தவர்கள். பரலோகம்தான் ‘அவர்களுக்குரிய ‘வாசஸ்தலம்.’ (யூதா 6) மனிதரைப் பொறுத்தவரை, அவர்கள் பூமியில் என்றென்றும் வாழ வேண்டுமென்பதே ஆரம்பத்திலிருந்து கடவுளுடைய நோக்கமாகும். (ஆதியாகமம் 1:28; 2:17; சங்கீதம் 37:29) முதல் மனித தம்பதியர் கடவுளுக்குக் கீழ்ப்படிந்திருந்தால், அவர்கள் இறந்திருக்கவே மாட்டார்கள். அப்படியானால், ஆரம்பத்திலிருந்தே மனிதர்களும் தேவதூதர்களும் கடவுளுடைய நோக்கத்தில் வெகு வித்தியாசப்பட்ட பாகங்களை வகித்திருக்கிறார்கள்.

இறக்கும்போது என்ன நடக்கிறது?

நாம் சிந்திக்க வேண்டிய இன்னும் சில முக்கிய கேள்விகள்: மனிதர் இறக்கும்போது என்ன சம்பவிக்கிறது? அவர்கள் வேறொரு ரூபத்தில், ஒருவேளை ஆவி பிரதேசத்தில் தேவதூதர்களாகத் தொடர்ந்து உயிர்வாழ்கிறார்களா? இக்கேள்விகளுக்கு எளிய, தெளிவான பதிலை பைபிள் அளிக்கிறது: “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்.” (பிரசங்கி 9:5) ஆகவே, மனிதர்கள் இறந்தபின் எங்குமே உயிர்வாழ்வதில்லை. அவர்களால் எதையுமே அறியவும், உணரவும், அனுபவிக்கவும் முடியாது.

ஆனால், இறந்தவர்களுக்கு ஏதேனும் நம்பிக்கை இருக்கிறதா? ஆம், இருக்கிறது! இறந்துபோன அநேகர் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்ற நம்பிக்கையை பைபிள் அளிக்கிறது. பூமி ஒரு பூங்காவன பரதீஸாக மாறும்போது இறந்துபோன ஏராளமானோர் மீண்டும் மனிதர்களாக உயிரோடு எழுப்பப்படுவார்கள்.​—லூக்கா 23:43; யோவான் 5:28.

மனிதரில் சிலர் பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்படும் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறார்கள். அவர்கள் சொற்ப எண்ணிக்கையினரே; மொத்தம் 1,44,000 பேர் மட்டுமே. என்றாலும், இந்த 1,44,000 பேர், தேவதூதர்கள் என பொதுவாக அழைக்கப்படுகிற ஆவி சிருஷ்டிகளிலிருந்து முற்றிலும் வித்தியாசப்பட்டவர்கள். உதாரணமாக, இந்த 1,44,000 பேர் சாவே இல்லாத அரசர்களாகவும் ஆசாரியர்களாகவும் கிறிஸ்துவுடன் ஆட்சி செய்வார்கள். நியாயத்தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தையும் இவர்கள் பெற்றிருக்கிறார்கள். (1 கொரிந்தியர் 6:3; வெளிப்படுத்துதல் 20:6) இவர்கள் எல்லாரும் இறந்துபோன குழந்தைகளா? இல்லை. இவர்கள் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள், முற்றிலும் சோதிக்கப்பட்டவர்கள்!​—லூக்கா 22:28, 29.

இறந்துபோன மனிதர்களுக்கும் உயிருள்ள தேவதூதர்களுக்கும் இடையிலான வேறுபாடுகளையும் சிந்தித்துப் பாருங்கள். இறந்துபோன மனிதர்கள் “ஒன்றும் அறியார்கள்,” அதாவது, இவர்கள் எந்த உணர்வும் இல்லாதவர்கள்; தேவதூதர்களோ உணர்வும் உணர்ச்சிகளும் தீர்மானம் செய்யும் திறமையும் உள்ளவர்கள். இவர்கள் தெரிவு செய்யும் சுதந்திரம் பெற்றவர்கள். (ஆதியாகமம் 6:2, 4; சங்கீதம் 146:4; 2 பேதுரு 2:4) இறந்தவர்களை “செயலற்றவர்கள்,” அதாவது சக்தியற்றவர்கள் என்றும், தேவதூதர்களை “வலிமைமிக்கவர்கள்” என்றும் பைபிள் விவரிக்கிறது. (ஏசாயா 26:14, NW; சங்கீதம் 103:20, NW) பாவம் மற்றும் அபூரணத்தின் விளைவாக ஆதாமின் சந்ததியரான மனிதர்கள் இறக்கிறார்கள்; அதேசமயத்தில் கடவுள் பயமுள்ள தேவதூதர்களோ பரிபூரணராகவும் அவரால் அங்கீகரிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள்.​—மத்தேயு 18:10.

இறந்துபோன மனிதர்களின் ஆத்துமாக்களே தேவதூதர்கள் என்ற கருத்து டிவி நிகழ்ச்சிகளிலோ திரைப்படங்களிலோ வரும் கற்பனை கதைகளுக்குப் பொருத்தமாக இருக்கலாம். ஆனால், இந்தக் கருத்துக்கு பைபிளில் எந்த ஆதாரமும் இல்லை. இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ள பைபிள் சத்தியங்கள், அன்பானவர்கள் இறந்துபோகையில் அவர்கள் என்னவாக ஆகிறார்கள் என்பதைப் பற்றிய தவறான கருத்தைத் தவிர்க்க நமக்கு உதவுகின்றன. தனித்தனியாகப் படைக்கப்பட்டவர்களும் கடவுளுடைய வலிமைமிக்க ஊழியர்களுமான உண்மையுள்ள தேவதூதர்கள், மனிதரைவிட உயர்ந்தவர்கள், யெகோவாவின் சித்தத்தைச் செய்ய எப்போதும் தயாராக இருப்பவர்கள் என்பதை பைபிள் நமக்கு உறுதிப்படுத்துகிறது. யெகோவாவை உள்ளப்பூர்வமாக மதித்து, அவருக்குச் சேவைசெய்ய விரும்புவோரைக் கண்காணிக்கவும் அவர்களுக்கு உதவவும் தேவதூதர்களைப் பயன்படுத்துவதுகூட கடவுளுடைய சித்தத்தில் ஒன்று என்பதை அறிவது மகிழ்ச்சி தருகிறது.​—சங்கீதம் 34:7.

நீங்கள் யோசித்ததுண்டா?

◼ இறந்துபோன உங்கள் அன்பானவர்கள் இப்பொழுது பரலோகத்தில் தேவதூதர்களாக கடவுளைச் சேவிக்கிறார்களா?​—⁠பிரசங்கி 9:5, 10.

◼ கடவுளுக்குத் தம்மைச் சுற்றி நிறைய தேவதூதர்கள் வேண்டும் என்பதால்தான் சிறு பிள்ளைகள் இறக்கிறார்களா?​—⁠யோபு 34:10.

◼ உயிரோடிருக்கிறவர்களைப் பாதுகாக்க இறந்தவர்களால் திரும்பி வரமுடியுமா?​—⁠ஏசாயா 26:14.

[அடிக்குறிப்பு]

a ‘தேவதூதர்’ என்ற வார்த்தையின் அர்த்தம் “கடவுளுடைய தூதுவர்” என்பதாகும். என்றாலும் அதற்கு பல அர்த்தங்கள் உள்ளன. கடவுளுடைய ஊழியர்களாகச் செயல்படும் பல்வேறு ஆவி சிருஷ்டிகளுக்கும் மனிதருக்கும்கூட இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இக்கட்டுரையில் தூதர்களென பைபிள் அழைக்கும் ஆவி சிருஷ்டிகளைப் பற்றியே குறிப்பிடுகிறோம்.

[பக்கம் 29-ன் சிறு குறிப்பு]

“அவைகள் [தேவதூதர்கள்] கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவது; அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது.” ​—⁠சங்கீதம் 148:2, 5