அறிவியலும் ஆதியாகமமும் முரண்படுகின்றனவா?
பைபிளின் கருத்து
அறிவியலும் ஆதியாகமமும் முரண்படுகின்றனவா?
படைப்பு பற்றிய பைபிள் பதிவை அறிவியல் தவறென நிரூபித்துவிட்டதாக அநேகர் அடித்துச் சொல்கின்றனர். ஆனால், உண்மையான முரண்பாடு அறிவியலுக்கும் பைபிளுக்கும் இடையே அல்ல; மாறாக அறிவியலுக்கும் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் அடிப்படைவாதிகளின் கருத்துக்களுக்கும் இடையேதான். ஏனெனில், சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்னால் 24 மணிநேரம் கொண்ட ஆறு நாட்களில் இந்தப் பிரபஞ்சமும் அதிலுள்ள அனைத்தும் படைக்கப்பட்டுவிட்டதாக பைபிள் கூறுகிறது என்று அடிப்படைவாத தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் தவறாக கூறுகிறார்கள்.
என்றாலும், இதுபோன்ற கருத்துகளை பைபிள் ஆதரிப்பதில்லை. அப்படி ஆதரித்திருந்தால், கடந்த நூறாண்டுகளில் வெளிச்சத்துக்கு வந்த எண்ணற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் பைபிளின் உண்மைத்தன்மையின் மேல் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கும். பைபிளைக் கவனமாகப் படிக்கும்போது, நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளுடன் அது எவ்விதத்திலும் முரண்படுவதில்லை என்பது தெரியவருகிறது. அதனாலேயே, அடிப்படைவாத கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்தவர்களும்
படைப்புவாதிகளும் சொல்வதை யெகோவாவின் சாட்சிகள் ஏற்றுக்கொள்வதில்லை. இது தொடர்பாக பைபிள் உண்மையில் என்ன கற்பிக்கிறது என்பதை பின்வரும் குறிப்புகள் காட்டுகின்றன.“ஆரம்பம்” எப்போது?
“ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்” என்ற எளிமையான, வலிமையான வார்த்தைகளோடு ஆதியாகமப் புத்தகம் ஆரம்பமாகிறது. (ஆதியாகமம் 1:1) வானத்தையும் பூமியையும் படைத்த பிறகே, மூன்றாம் வசனத்திலிருந்து சொல்லப்பட்டுள்ள படைப்பு வேலைகள் ஆரம்பமாயின என்பதை இந்த வசனம் விளக்குவதாக பைபிள் அறிஞர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். இத்தகவல் மிக முக்கியமானது. பைபிளின் ஆரம்ப வார்த்தைகளின்படி, படைப்பு நாட்கள் தொடங்குவதற்கு கோடானுகோடி வருடங்களுக்கு முன்பே இப்பிரபஞ்சமும் அதிலுள்ள நமது கிரகமாகிய பூமியும் படைக்கப்பட்டிருந்தன.
பூமி சுமார் 400 கோடி ஆண்டுகள் பழமையானது என்று நில இயல் வல்லுநர்கள் கணித்துள்ளார்கள்; இப்பிரபஞ்சம் 1500 கோடி ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என வானவியல் வல்லுநர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள். இந்த கண்டுபிடிப்புகள்—எதிர்காலத்தில் இவ்விஷயத்தைக் குறித்து கிடைக்கவிருக்கும் துல்லியமான தகவல்கள்—ஆதியாகமம் 1:1-டன் முரண்படுகின்றனவா? இல்லை. ‘வானம், பூமி’ ஆகியவற்றின் உண்மையான வயதை பைபிள் குறிப்பிடுகிறதில்லை. இவ்விஷயத்தில் பைபிளின் கருத்து தவறென அறிவியல் நிரூபிக்கவில்லை.
படைப்பு நாட்கள் எவ்வளவு நீண்டவை?
படைப்பு நாட்கள் எவ்வளவு நீண்டவை? ஒவ்வொன்றும் 24 மணிநேரங்களைக் கொண்டவையா? ஆதியாகமத்தை எழுதியவரான மோசே ஆறு படைப்பு நாட்களுக்குப் பின்வந்த நாளை வாராந்தர ஓய்வு நாளுக்கு மாதிரியாய் இருந்ததாகப் பிற்பாடு குறிப்பிட்டார்; ஆகவே ஒவ்வொரு படைப்பு நாளும் 24 மணிநேரத்தை கொண்டவை என்று சிலர் வாதிடுகிறார்கள். (யாத்திராகமம் 20:11) ஆதியாகமத்திலுள்ள வார்த்தைகள் இதை ஆதரிக்கிறதா?
நிச்சயமாகவே இல்லை. “நாள்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற எபிரெய வார்த்தை 24 மணிநேர காலப்பகுதியை மட்டுமே குறிப்பதில்லை; பல்வேறு கால அளவுகளைக் குறிப்பிட அது பயன்படுத்தப்படலாம் என்பதுதான் உண்மை. உதாரணமாக, கடவுளின் படைப்பு வேலைகளை மோசே சுருக்கமாக சொல்லும்போது, ஆறு படைப்பு நாட்களையும் சேர்த்து ஒரே நாளாக குறிப்பிடுகிறார். (ஆதியாகமம் 2:4) கூடுதலாக, முதல் சிருஷ்டிப்பு நாளில், “தேவன் வெளிச்சத்துக்குப் பகல் (“நாள்”, NW) என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்.” (ஆதியாகமம் 1:5) இங்கே, 24 மணிநேரம் கொண்ட காலத்தின் ஒரு பகுதியை “நாள்” என்கிற வார்த்தை குறிக்கிறது. நிச்சயமாகவே, ஒவ்வொரு படைப்பு நாளும் 24 மணிநேரம் கொண்டதாக இருந்திருக்க வேண்டும் என்ற ஊகத்திற்கு எந்தவித வேதப்பூர்வ அத்தாட்சியும் இல்லை.
அப்படியென்றால், படைப்பின் நாட்கள் எவ்வளவு நீண்டவை? படைப்பில் நீண்ட காலம் உட்பட்டிருந்ததை ஆதியாகமம் முதல் இரண்டு அதிகாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
படிப்படியாக நிகழும் படைப்புகள்
மோசே தன்னுடைய பதிவை எபிரெயு மொழியில் எழுதினார்; பூமியிலிருந்து பார்க்கும் ஒரு நபரின் கண்ணோட்டத்திலிருந்து எழுதினார். இந்த இரண்டு உண்மைகளையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்; அதோடு, படைப்பின் காலங்கள், அல்லது “நாட்கள்” தொடங்கும் முன்னே இப்பிரபஞ்சம் படைக்கப்பட்டிருந்தது என்ற தகவலையும் கருத்தில் கொள்ள வேண்டும். படைப்பைப் பற்றி ஆதியாகமம் சொல்வது குறித்து எழும்பும் விவாதங்களை தீர்க்க இத்தகவல்கள் உதவும். எப்படி?
ஆதியாகமப் பதிவை கவனமாக ஆராயும்போது ஒரு ‘நாளில்’ ஆரம்பமாகும் நிகழ்வுகள் ஒன்று அல்லது அதற்குமதிகமான நாட்களிலும் தொடர்வது தெளிவாகிறது. உதாரணமாக, முதல் படைப்பு “நாள்” தொடங்கும் முன், ஏற்கனவே இருந்த சூரியனிலிருந்து வந்த வெளிச்சம் பூமியை அடையாதபடி ஏதோவொன்று தடுத்தது, ஒருவேளை அடர்த்தியான மேகமாக இருக்கலாம். (யோபு 38:9) முதல் “நாளில்” அந்தத் தடை விலகத் தொடங்கியது, இதன் விளைவாக, காற்றுமண்டலத்தை ஊடுருவி மங்கலான வெளிச்சம் பரவியது. a
ஆதியாகமம் 1:14-16) வேறு வார்த்தைகளில் சொன்னால், பூமியில் இருக்கும் ஒரு நபரால் சூரியனையும் சந்திரனையும் பார்க்க முடிந்தது. இந்த சம்பவங்கள் படிப்படியாக நிகழ்ந்தன.
இரண்டாம் “நாளில்,” காற்றுமண்டலம் கொஞ்சம் கொஞ்சமாக தெளிவானது; இவ்வாறாக, மேலேயுள்ள அடர்ந்த மேகத்திற்கும் கீழேயுள்ள சமுத்திரத்திற்கும் இடையில் வெட்டவெளி உண்டாகிறது. நான்காம் “நாளில்” காற்றுமண்டலம் படிப்படியாக தெளிவாகியிருந்தது. அதனால், “வானம் என்கிற ஆகாயவிரிவிலே” இருந்த சூரியனும் சந்திரனும் கண்ணுக்குப் புலப்பட்டன. (காற்றுமண்டலம் தொடர்ந்து தெளிவாகி வந்தபோது, ஐந்தாம் “நாளில்” பூச்சிகள், மெல்லிய சிறகுடைய ஜீவராசிகள் உட்பட எல்லாவித பறக்கும் இனங்களும் தோன்ற ஆரம்பித்தன என்று ஆதியாகம விவரப்பதிவு சொல்கிறது. என்றாலும், ஆறாவது “நாளில்” ‘வெளியின் சகலவித மிருகங்களையும், ஆகாயத்தின் சகலவித பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கும்’ வேலையை கடவுள் தொடர்ந்து செய்துகொண்டிருந்ததாக பைபிள் சுட்டிக்காட்டுகிறது.—ஆதியாகமம் 2:19.
படைப்பு “நாளில்,” அல்லது படைப்பு காலத்தில் நடந்த பெரிய சம்பவங்கள் சட்டென நடந்திருக்க முடியாது, படிப்படியாக நடந்திருக்க வேண்டும் என்பது பைபிளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தைகளிலிருந்து தெரியவருகிறது; ஒரு “நாளில்” உருவாக ஆரம்பித்த சில படைப்பு வேலைகள் முடிவடைய கூடுதலாக சில ‘நாட்கள்’ தேவைப்பட்டிருக்கலாம்.
அந்தந்த இனத்தின்படியே
தாவரங்களும் விலங்குகளும் படிப்படியாகத் தோன்றின என்பதை கவனித்தோம். அப்படியானால், பலவகையான உயிரினங்களை உருவாக்குவதற்கு கடவுள் பரிணாமத்தைப் பயன்படுத்தினார் என்று இது அர்த்தப்படுத்துகிறதா? இல்லை. எல்லா அடிப்படை தாவர ‘இனங்களையும்’ மிருக ‘இனங்களையும்’ கடவுள்தான் படைத்தார் என்று பைபிள் பதிவு தெளிவாகச் சொல்கிறது. (ஆதியாகமம் [தொடக்க நூல்] 1:11, 12, 20-25, பொது மொழிபெயர்ப்பு) தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றின் ஆரம்ப ‘இனங்கள்’ சுற்றுச்சூழலுக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் திறனோடு வடிவமைக்கப்பட்டிருந்தனவா? ஓர் ‘இனத்திற்கு’ இருக்கும் வரம்புகளை எது நிர்ணயிக்கிறது? இக்கேள்விகளுக்கு பைபிள் எந்த நேரடி பதிலையும் கொடுப்பதில்லை. என்றாலும், உயிரினங்கள் ‘அவ்வவற்றின் இனத்தின்படி திரள்திரளாய்‘ படைக்கப்பட்டதாக பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் [தொடக்க நூல்] 1:21, பொ.மொ.) ஓர் ‘இனம்’ எந்தளவுக்கு மாறுதலுக்கு உட்படலாம் என்பதில் சில வரம்புகள் இருப்பதை இவ்வசனத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். எண்ணிலடங்கா ஆண்டுகள் ஆகியும் தாவரங்கள் விலங்குகளின் அடிப்படை இனங்களில் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதற்கு புதைபடிவ பதிவும் நவீன ஆராய்ச்சியும் சான்றளிக்கின்றன.
பூமியும் அதிலுள்ள உயிரினங்களும் உட்பட இப்பிரபஞ்சம் முழுவதும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், அதுவும் ஒருசில நாட்களிலேயே படைக்கப்பட்டன என்று அடிப்படைவாதிகள்தான் கூறுகின்றனர். இந்தக் கருத்தை ஆதியாகமம் கற்பிப்பதில்லை. மாறாக, இந்தப் பிரபஞ்சமும், பூமியும் அதிலுள்ள உயிரினங்களும் படைக்கப்பட்டது பற்றி ஆதியாகமம் கொடுக்கும் தகவல்கள் சமீபத்திய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு இசைவாகவே இருக்கின்றன.
கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று பைபிள் கூறுவதை பல விஞ்ஞானிகள் ஏற்றுக்கொள்வதில்லை. அவர்களுடைய தத்துவ நம்பிக்கைகளே அதற்குக் காரணம். படைப்பைப் பற்றி கூறும் பைபிள் புத்தகமாகிய ஆதியாகமம் மிகப் பழமையானது. அதை எழுதியவரான மோசே, இப்பிரபஞ்சத்திற்கு ஓர் ஆரம்பம் இருந்ததையும், நீண்ட காலப்பகுதியில் உயிரினங்கள் படிப்படியாக உருவானதையும் பற்றி எழுதியிருக்கிறார். விஞ்ஞானப்பூர்வமாக துல்லியமாய் இருக்கும் இந்த விவரங்கள் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்பே மோசேக்கு எப்படிக் கிடைத்தன? இதற்கு ஒரேவொரு நியாயமான பதில்தான் இருக்கிறது. இந்த வானத்தையும் பூமியையும் படைக்க வல்லமையும் ஞானமும் உள்ள ஒருவரால் மட்டுமே மோசேக்கு இந்த விஞ்ஞான உண்மைகளை தெரிவிக்க முடிந்திருக்கும். இது பைபிள் “தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது” என்ற உண்மைக்கு வலுவான அத்தாட்சியைக் கொடுக்கிறது, அல்லவா?—2 தீமோத்தேயு 3:16.
நீங்கள் யோசித்ததுண்டா?
◼ எவ்வளவு காலத்திற்குமுன் கடவுள் இப்பிரபஞ்சத்தைப் படைத்தார்?—ஆதியாகமம் 1:1.
◼ பூமி 24 மணிநேரம்கொண்ட ஆறு நாட்களில் படைக்கப்பட்டதா?—ஆதியாகமம் 2:4.
◼ பூமியின் ஆரம்பம் பற்றிய மோசேயின் கருத்துகள் விஞ்ஞானரீதியில் துல்லியமாக இருப்பதற்குக் காரணம் என்ன?—2 தீமோத்தேயு 3:16.
[அடிக்குறிப்பு]
a முதல் “நாளில்” நடந்ததைப் பற்றிய விவரிப்பில், வெளிச்சம் என்பதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கும் எபிரெய வார்த்தை ஆர் என்பதாகும். இது பொதுவான கருத்தில் வெளிச்சத்தைக் குறிக்கிறது; ஆனால் நான்காம் “நாளில்” மாஆர் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது, இது வெளிச்சத்தின் ஊற்றுமூலத்தைக் குறிக்கிறது.
[பக்கம் 19-ன் சிறு குறிப்பு]
சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், ஒருசில நாட்களுக்குள் இந்தப் பிரபஞ்சம் படைக்கப்பட்டுவிட்டதாக ஆதியாகமம் கற்பிப்பதில்லை
[பக்கம் 20-ன் சிறு குறிப்பு]
“ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.” —ஆதியாகமம் 1:1
[பக்கம் 18-ன் படத்திற்கான நன்றி]
பிரபஞ்சம்: IAC/RGO/David Malin Images
[பக்கம் 20-ன் படத்திற்கான நன்றி]
NASA photo