சர்ச்சுகள் ஏன் பாதை மாறுகின்றன?
சர்ச்சுகள் ஏன் பாதை மாறுகின்றன?
கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொள்ளும் சர்ச்சுகள் எப்படி இருக்கின்றன? நீங்கள் வசிக்கும் இடத்தில் அவை வளம்கொழிக்கின்றனவா, வலுவிழக்கின்றனவா? அமெரிக்கா, ஆப்பிரிக்கா, கிழக்கு ஐரோப்பா ஆகிய இடங்களில் மக்களுக்கு மதத்தில் ஆர்வம் பெருகியிருப்பதாகவும் சர்ச்சுகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் எப்பொழுதாவது நீங்கள் கேள்விப்படலாம். இருந்தாலும் உலகின் மற்ற பகுதிகளில், அதுவும் மேற்கு ஐரோப்பாவில் சர்ச்சுகள் மூடப்படுவதாகவும், சர்ச்சுகளில் கூட்டம் குறைவதாகவும், மதத்தின்பேரில் மக்களுக்கு வெறுப்பு அதிகரித்திருப்பதாகவும் செய்தி அறிக்கைகள் சொல்கின்றன.
கூட்டம் குறைவதால் அநேக சர்ச்சுகள் அவற்றின் பாணியை மாற்றியிருக்கின்றன. அவற்றுள் சில, “கண்டிக்காத” சர்ச்சுகளாகச் சொல்லிக்கொள்வதன்மூலம் எல்லா விதமான நடத்தையையும் கடவுள் ஏற்றுக்கொள்கிறார் என்ற கருத்தை மக்களின் மனதில் விதைக்கின்றன. பெரும்பாலான சர்ச்சுகள் கடவுளுடைய வார்த்தையிலிருந்து அறிவுரையைப் புகட்டுவதில்லை. மாறாக, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன, பரவசமூட்டும் பாணியைப் பின்பற்றுகின்றன, உலகத்திடம் கவனத்தை ஈர்க்கின்றன. சர்ச்சுகளில் நடந்துவரும் இந்த மாற்றங்கள் நவீன உலகத்திற்குத் தேவைதான் என சர்ச்சுக்குச் செல்லும் சிலர் நினைக்கிறார்கள். என்றாலும், இயேசு செய்யச் சொன்ன வேலையிலிருந்து சர்ச்சுகள் பாதை மாறிச் செல்கின்றனவா என நல்மனமுள்ள அநேகர் கவலைப்படுகிறார்கள். சமீப காலங்களில் சர்ச்சுகள் எவ்வாறு பாதை மாறுகின்றன என்பதை நாம் இப்போது ஆராயலாம்.