பிரமாண்டமான ஒற்றைக்கல் பாறை
பிரமாண்டமான ஒற்றைக்கல் பாறை
கனடாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்
செயின்ட் லாரன்ஸ் வளைகுடாவிலுள்ள காஸ்பே தீபகற்பத்தின் கிழக்குக் கோடியில் நிற்கிறது பெர்ஸே பாறை. அட்லாண்டிக் பெருங்கடல் சூழ்ந்திருக்க, கடலின் வெளிர் நீலநிற ஒளியில் இது பிரமாண்டமாய் காட்சி அளிக்கிறது. சுமார் 430 மீட்டர்வரை நீண்டிருக்கிற இந்தப் பாறை சுமார் 90 மீட்டர் அகலமாகவும் 88 மீட்டருக்கும் அதிக உயரமாகவும் இருக்கிறது. பல நூற்றாண்டுகளாக மீனவர்களும் கப்பலோட்டிகளும் இந்தப் பாறையை நம்பகமான நில எல்லைக் குறியாகக் கருதி வந்திருக்கிறார்கள். கவிஞர்களும் எழுத்தாளர்களும் ஓவியர்களும் இதனை தங்கள் கைவண்ணத்தில் புகழ்ந்திருப்பதால் மக்களின் மனதில் இது நீங்கா இடம் பெற்றுள்ளது. ஒற்றைக் கல்லாலான இந்தப் பாறை “விசித்திரமானது, வசீகரமானது” என்று ஒரு கலைக்களஞ்சியம் வர்ணிக்கிறது.
ஒரு காலத்தில், நெஞ்சுரம் படைத்த உள்ளூர்வாசிகள் செங்குத்தான இந்தப் பாறைமீது ஏறி பறவைகளின் கூடுகளிலிருந்து முட்டைகளை எடுத்தார்களாம். ஆகவே, இந்தப் பாறையையும் அதில் குடியிருக்கிற பறவைகளையும் பேணி, காப்பதற்கு 1985-ல் கியுபெக் அரசாங்கம், பெர்ஸே பாறையையும் அதன் அருகில் இருக்கிற பானவென்சர் தீவையும் பறவை சரணாலயங்களாக அறிவித்தது. வட துருவத்தில் வசிக்கும் கானெட் என்ற ஒருவித கடற்பறவையின் இனப்பெருக்கத்துக்கு இந்தப் பானவென்சர் தீவுதான் புகலிடமாக இருக்கிறது; இந்தப் பறவைக்கு உலகிலேயே இதுதான் இரண்டாவது பெரிய இனப்பெருக்க ஸ்தலம்.
வெகு காலத்துக்கு முன்பு இந்த பெர்ஸே பாறை காஸ்பே தீபகற்பத்தின் பாகமாக இருந்தது என்பதாகவும் பாறையில் கிட்டத்தட்ட நான்கு வளைவுகள் இருந்திருக்கலாம் என்பதாகவும் சிலர் சொல்கிறார்கள். ஆனால், இன்று இந்தப் பாறையில் 30 மீட்டருக்கும் அதிக அகலத்தில் ஒரே ஒரு வளைவு மட்டுமே கடல் பக்கமாக உள்ளது. கடல் அலைகள் உச்சளவில் உள்வாங்கும்போது இந்தப் பாறைக்கும் தீபகற்பத்துக்கும் இடையே போக்குவரத்துக்குப் பாதை அமைகிறது. கிட்டத்தட்ட நான்கு மணிநேரத்திற்கு இந்தப் பாதை அப்படியே இருப்பதால், நெஞ்சுரம் படைத்தவர்கள் இந்தப் பாறையின் அடிவாரம்வரை சென்று வரலாம்; அங்கிருந்து இந்தப் பாறையின் வளைவுக்குச் செல்ல சுமார் 15 நிமிடங்கள் ஆகும். பாறைமீது ஓயாமல் அடித்துக்கொண்டிருக்கிற அலைகளைச் சமாளித்து பாறையைப் பிடித்தவாறே நடந்து சென்றால் வளைவையும் போய்ப் பார்த்துவிட்டு வரலாம்.
துணிச்சல்மிக்க அத்தகைய பார்வையாளர்களுக்கு ஒரு சின்ன எச்சரிக்கை. உடைந்த கற்கள்மீது கைகளையும் கால்களையும் வைத்து ஏறி வளைவுக்கு சென்றுவந்த ஒரு சுற்றுலாப் பயணி இவ்வாறு சொல்கிறார்: “பாறைமீது தண்ணீர் வேகமாக வந்து மோதுகையில் சின்ன வெடிகுண்டு வெடிப்பதுபோல் ‘ஊஷ்’ என்ற பயங்கரமான இரைச்சலைக் கேட்பீர்கள். சில பாறைகள் ஒன்றின் மீதொன்று விழும்போது அது துப்பாக்கி வெடிக்கிற சத்தத்தைப்போல் இருக்கும்.”
அநேக பார்வையாளர்கள் சொல்கிறபடியே, பெர்ஸே பாறையின் அழகு மனதைக் கொள்ளைக் கொள்கிறது. இருந்தாலும், வியப்பில் ஆழ்த்துகிற நம் பூமியில் காணப்படும் பிரமிப்பூட்டும் இடங்களில் ஒன்றுதான் இது. இதுபோல் எத்தனையோ இடங்கள், எத்தனையோ விதங்களில்! இவற்றையெல்லாம் பார்க்கிறபோது, ஒருவேளை நீங்களும்கூட, ‘தரித்துநின்று தேவனுடைய ஆச்சரியமான கிரியைகளைத் தியானிக்க’ தூண்டப்பட்டிருப்பீர்கள்.—யோபு 37:14.
[பக்கம் 23-ன் படத்திற்கான நன்றி]
© Mike Grandmaison Photography