குடிப்பழக்கத்துக்கு ‘குட்பை’
குடிப்பழக்கத்துக்கு ‘குட்பை’
உணவு அருந்துகையில் கொஞ்சம் மது அருந்துவது உணவை முழுமையாக்கலாம் அல்லது பண்டிகையின்போது சிறிதளவு குடிப்பது மகிழ்ச்சியைக் கூட்டலாம். எனினும், மது அருந்துவது சிலரை மோசமான பிரச்சினைகளில் சிக்க வைக்கிறது. குடிப்பழக்கத்துக்கு அடிமைப்பட்டிருந்த ஒருவர் அந்தச் சங்கிலியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்ட அனுபவத்தை வாசித்துப் பாருங்கள்.
எங்கள் வீட்டில் நிலவிய பதற்றமான சூழலை விவரிக்கையில் இப்பொழுதுகூட என் நெஞ்சம் கனக்கிறது, வேதனை கொப்பளிக்கிறது. அம்மாவும் அப்பாவும் குடிக்க ஆரம்பிப்பார்கள். அம்மாவை அப்பா அடிப்பார். அந்தச் சமயங்களில் பெரும்பாலும் அவருடைய தாக்குதலுக்கு நான் இலக்காகிவிடுவேன். அப்பா அம்மா பிரிந்துபோகத் தீர்மானித்தபோது எனக்கு நான்கு வயதுதான் ஆகியிருந்தது. அப்போது, பாட்டியம்மா வீட்டில் என்னைக் கொண்டுபோய்விட்டது எனக்கு நினைவிருக்கிறது.
என்னை யாருக்குமே பிடிக்காததைப் போல உணர்ந்தேன். யாருடைய கண்ணிலும் படாமல் சட்டென நிலவறைக்குப் போய் வீட்டிலேயே தயாரித்திருந்த திராட்சை மதுவைக் குடித்தேன்; அது என் துக்கத்துக்கு அருமருந்துபோல் தோன்றியது; அப்போது எனக்கு ஏழு வயது. 12 வயதானபோது, என்னைக் குறித்து அம்மாவும் பாட்டியம்மாவும் காரசாரமாக விவாதித்தார்கள். என் அம்மாவின் கோபம் தலைக்கேறியபோது தன் கையிலிருந்த வைக்கோல் அள்ளும் கவர்க்கோலை என்மீது தூக்கியெறிந்தார். நல்லவேளை, நான் ஒரு குதி குதித்து காயப்படாமல் எப்படியோ தப்பினேன்! இதுபோல் எத்தனையோ முறை என் உயிருக்கு ஆபத்து வந்திருந்தது. இருப்பினும், என் மனதில் ரணமாகிப்போன வடுக்களோடு ஒப்பிட, உடம்பில் ஏற்பட்டிருந்த தழும்புகளெல்லாம் ஒன்றுமேயில்லை என்பேன்.
எனக்கு 14 வயதானபோது எந்த நேரமும் குடித்துக்கொண்டே இருந்தேன். கடைசியில், 17 வயதில் வீட்டைவிட்டு ஓடிப்போனேன். இவ்வாறு குடிப்பது சுதந்திரப் பறவை போன்ற உணர்வை எனக்குள் ஏற்படுத்தியது; முரட்டுத்தனமாக நடந்துகொள்ள ஆரம்பித்தேன், உள்ளூர் “பார்”-ல் சதா கலாட்டாதான். குடிப்பது மட்டுமே எனக்கு சந்தோஷத்தைத் தந்தது. ஒவ்வொரு நாளும் எவ்வளவு குடித்தேன் தெரியுமா? 5 லிட்டர் ஒயின், சில பாட்டில் பியர், அது போதாதென்று பிராந்தி, விஸ்கி போன்ற மதுபானங்களையும் குடித்தேன்.
திருமணம் செய்துகொண்டபோது என் குடிப்பழக்கத்தால் தாங்கமுடியாதளவு பிரச்சினைகளை என் மனைவிக்குக் கொடுத்தேன். கோபமும் வெறுப்பும் எனக்குள் வேர்விட்டு வளர ஆரம்பித்தன; இதனால், என் மனைவியையும் பிள்ளைகளையும் போட்டு அடித்தேன். ஆம், நான் வளர்ந்து வந்த மோசமான சூழலையே என் குடும்பத்திலும் உருவாக்கினேன். கிட்டத்தட்ட நான் சம்பாதித்த பணமெல்லாம் மதுபானத்தில் கரைந்தது. எங்கள் வீட்டில் மேசை, நாற்காலி, கட்டில் என எதுவுமே இல்லாதிருந்தது; இதனால் நானும் என் மனைவியும் தரையில் படுத்துத் தூங்கினோம். அர்த்தமில்லாத வாழ்க்கை வாழ்ந்து வந்தேன், என் சூழ்நிலையை மாற்றிக்கொள்ள எந்த முயற்சியும் செய்யாதிருந்தேன்.
ஒருநாள், யெகோவாவின் சாட்சி ஒருவரிடம் பேசினேன். ஏன் இந்தளவுக்குத் துன்பம் நிலவுகிறதென அவரிடம் கேட்டேன். பிரச்சினைகளே இல்லாத ஓர் உலகை ஏற்படுத்தப் போவதாக கடவுள் வாக்குறுதி அளித்திருப்பதை பைபிளிலிருந்து அவர் எடுத்துக்காட்டினார். எனக்குள் நம்பிக்கை பிறந்தது, யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து பைபிள் படிக்க ஆரம்பித்தேன். பைபிள் போதனைகளைப் பின்பற்றத் தொடங்கியபோது, குடிப்பதைக் குறைத்துக்கொண்டேன்; இதனால், எங்கள் குடும்ப வாழ்வு பெருமளவு முன்னேற்றம் அடைந்தது.
எனினும், யெகோவா தேவன் ஏற்றுக்கொள்கிற விதத்தில் அவரைச் சேவிக்க வேண்டுமென்றால் குடிப்பழக்கத்தை அடியோடு விட்டுவிடுவது அவசியம் என்பதைப் புரிந்துகொண்டேன். மூன்று மாத பெரும் போராட்டத்திற்குப் பிறகு குடிப்பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தேன். ஆறு மாதங்களுக்குப் பிறகு கடவுளுக்கு என்னை ஒப்புக்கொடுத்து, முழுக்காட்டுதல் பெற்றேன்.மதுப்பழக்கத்தின் அடிமைச் சங்கிலியை உடைத்தெறிந்ததால், ஏற்கெனவே பட்டிருந்த கடன்களை எல்லாம் என்னால் அடைக்க முடிந்தது. பிறகு ஒரு வீட்டை வாங்கினேன், காரையும்கூட வாங்கினேன்; அந்த காரை கிறிஸ்தவக் கூட்டங்களுக்காகவும் வீட்டுக்கு வீடு ஊழியத்திற்காகவும் பயன்படுத்துகிறேன். கடைசியில், தன்மானத்தைச் சம்பாதித்திருக்கிறேன்.
சில சமயங்களில், பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறபோது மது அருந்த அழைப்பு கிடைக்கிறது. பெரும் போராட்டத்தின் மத்தியில் இந்தப் பழக்கத்தை விட்டிருக்கிறேன் என்பதும் ஒரே ஒருமுறை குடித்தால்கூட பழையபடி அந்த அடிமைச் சங்கிலி மீண்டும் என்னைச் சுற்றி இறுக்கிவிடும் என்பதும் அநேகருக்குத் தெரியாது. குடிக்க வேண்டுமென்ற ஆசை எனக்குள் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. ஊக்கமாய் ஜெபிப்பதும், குடிக்க அழைக்கும்போது உறுதியாய் மறுப்பதும் அவசியமாய் இருக்கிறது. தாகத்திற்காக ஏதாவது குடிக்கத் தோன்றுகையில் மது சேர்க்கப்படாத எந்தப் பானத்தையாவது வேண்டிய மட்டும் குடிக்கிறேன். நான் குடியை நிறுத்தி பத்து வருடங்கள் ஆகிவிட்டன. அதன்பின் இதுவரை மதுவைக் கையிலும் தொட்டது கிடையாது.
மனிதனால் முடியாதது யெகோவாவால் முடியும். என்னால் முடியுமென கனவிலும் நினைத்துப் பார்த்திராத விடுதலையை ருசிக்க அவர் எனக்கு உதவியிருக்கிறார். பிள்ளைப் பருவத்தில் உணர்ச்சி ரீதியாக நொறுங்கிப் போனதால் ஏற்பட்ட வடுக்கள் இன்னமும் வலிக்கின்றன; சோர்வூட்டுகிற எண்ணங்களுக்கு இடங்கொடுக்காமல் சதா போராடி வருகிறேன். மறுபட்சத்தில், கடவுளுடன் அருமையான பந்தத்தை அனுபவிப்பதற்காகவும், சபையில் அருமையான நண்பர்களைப் பெற்றிருப்பதற்காகவும், என் அன்புக் குடும்பம் சத்தியத்தில் இருப்பதற்காகவும் சந்தோஷப்படுகிறேன். குடிப்பழக்கத்தை எதிர்க்கும் என் போராட்டத்தில் என் மனைவியும் பிள்ளைகளும் எனக்கு முழு ஆதரவை அளிக்கிறார்கள். என் மனைவி இவ்வாறு சொல்கிறாள்: “முன்பு, என் வாழ்வில் சொல்ல முடியாதளவுக்கு வேதனைகளை அனுபவித்தேன். இன்று என் கணவரோடும் இரண்டு பிள்ளைகளோடும் சந்தோஷமாக வாழ்கிறேன். இதற்காக யெகோவாவுக்குக் கோடானுகோடி நன்றி சொல்கிறேன்.”—அளிக்கப்பட்டது.
[பக்கம் 21-ன் சிறு குறிப்பு]
எனக்கு 14 வயதானபோது எந்த நேரமும் குடித்துக்கொண்டே இருந்தேன்
[பக்கம் 22-ன் சிறு குறிப்பு]
மனிதனால் முடியாதது யெகோவாவால் முடியும்
[பக்கம் 22-ன் பெட்டி/படங்கள்]
பைபிளும் மதுபானமும்
◼ மது அருந்துவதை பைபிள் கண்டனம் செய்வதில்லை. “மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சரசத்தை [அதாவது, திராட்சை மதுவை]” மனிதகுலத்திற்குக் கடவுள் கொடுத்த பரிசு என அது விவரிக்கிறது. (சங்கீதம் 104:14, 15) திராட்சைச் செடியை செல்வச் செழிப்புக்கும் பாதுகாப்புக்கும் அடையாளம் என்றுங்கூட பைபிள் குறிப்பிடுகிறது. (மீகா 4:4) சொல்லப்போனால், திருமண விருந்தில் தண்ணீரை திராட்சரசமாக மாற்றியதுதான் இயேசு கிறிஸ்து செய்த முதல் அற்புதமாக இருந்தது. (யோவான் 2:7-9) தீமோத்தேயுவுக்கு ‘அடிக்கடி ஏற்படும் உடல்நலக் குறைவுக்காக’ “சிறிதளவு திராட்சை மதுவும்” குடிக்கும்படி அவருக்கு பவுல் சிபாரிசு செய்தார்.—1 தீமோத்தேயு 5:23, பொது மொழிபெயர்ப்பு.
◼ ஆனால், மட்டுக்கு மீறி குடிப்பதை பைபிள் கண்டனம் செய்கிறது:
‘குடிவெறியர் . . . கடவுளுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கவே மாட்டார்கள்.’—1 கொரிந்தியர் 6:9-11, “த ஜெருசலேம் பைபிள்.”
‘துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளா[திருங்கள்].’—எபேசியர் 5:18.
“ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்கு காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்? மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித்தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே. மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும். முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும். உன் கண்கள் பரஸ்திரீகளை நோக்கும்; உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும்.”—நீதிமொழிகள் 23:29-33.
இத்துடன் உள்ள கட்டுரை விவரிக்கிற விதமாக, மதுபானப் பழக்கத்தால் பிரச்சினைகளைச் சந்தித்திருப்பவர்களில் சிலர் அதிலிருந்து ஒட்டுமொத்தமாக விலகியிருப்பதென ஞானமாய் முடிவுசெய்திருக்கிறார்கள்.—மத்தேயு 5:29.