Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அபித்ஜன் சலவைக்காரர்கள் —கடின உழைப்பாளிகள்

அபித்ஜன் சலவைக்காரர்கள் —கடின உழைப்பாளிகள்

அபித்ஜன் சலவைக்காரர்கள்—⁠கடின உழைப்பாளிகள்

கோட் டீ வ்வாரிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

கோட் டீ வ்வாரிலுள்ள அபித்ஜன் நகரத்திலிருந்து மேற்குப் பக்கமாக வந்து கொண்டிருந்தோம். எப்போதும் ஜேஜே என்று இருக்கும் இந்த மேற்கு ஆப்பிரிக்க நகரின் அழகைக் கண்டுகளித்துக்கொண்டும் சுற்றிலும் கேட்கும் சத்தத்தைக் காதில் பருகிக்கொண்டும் பயணித்தோம். திடீரென கண்ணைக் கவரும் ஒரு காட்சி எங்கள் கவனத்தை ஈர்த்தது. பரந்த புல்வெளியில் கண்ணைப்பறிக்கும் வண்ணங்களில் ஆயிரக்கணக்கான துணிமணிகள் விரிக்கப்பட்டிருந்தன. எதற்காக? காரணத்தை கோட் டீ வ்வார் நகரத்தைச் சேர்ந்த எங்களுடைய நண்பர்கள் உற்சாகமாய் விளக்கினார்கள். நாங்கள் பார்த்த அந்தக் காட்சி ஃபானீகோவின் கைவண்ணந்தான்.

யார் இந்த ஃபானீகோ? இவர்கள், கடினமாய் உழைக்கிற சலவைத் தொழிலாளிகள். காலைமுதல் மாலைவரை நூற்றுக்கணக்கான ஆண்களும் பலமுள்ள பெண்கள் சிலரும் பாங்கோ ஆற்றில் கைகளாலேயே துணிகளைத் துவைத்து பிழைப்பு நடத்துகிறார்கள். இவர்கள் எப்படி இந்தப் பெயரைப் பெற்றார்கள்? டியூலா அல்லது ஜுலா இனத்தவர் பேசுகிற மொழியில் ஃபானீ என்றால் “துணிகள்,” கோ என்றால் “துவைப்பது.” இவற்றை ஒன்றாகச் சேர்த்தால் உருவாகும் ஃபானீகோ என்ற வார்த்தைக்கு “துணி துவைப்பவர்கள்” என்று அர்த்தம்.

சலவைக்காரர்களின் வேலை

இந்த ஃபானீகோவின் சுவாரஸ்யமான தொழிலைப்பற்றி அதிகம் தெரிந்துகொள்ள ஒருநாள் அதிகாலை அவர்கள் வேலை செய்யுமிடத்திற்கே சென்று பார்த்தோம். என்ன வேகம், என்ன சுறுசுறுப்பு! நாங்கள் அங்கே சென்றபோது அவர்கள் வேலை சூடுபிடித்திருந்தது. ஓரளவு அழுக்காயிருந்த பாங்கோ ஆறெங்கும் பெரிய பெரிய டயர்களும் அவற்றின் நடுவிலே பாறாங்கற்களும் வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு டயரின் பக்கத்திலும், தொடையளவு அல்லது இடுப்பளவு தண்ணீரில் சலவைக்காரர்கள் நின்றுகொண்டு துணிகளுக்கு சோப்பு போட்டு, பாறையில் அடித்து, பிரஷ்ஷால் தேய்த்து துவைத்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு ஃபானீகோ விடியலுக்கு வெகு முன்பே வீடு வீடாகச் சென்று அழுக்குத் துணிகளைச் சேகரித்து வருகிறார். அவருடைய வாடிக்கையாளர்களில் சிலர் சலவை செய்யுமிடத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் வசிக்கிறார்கள். ஃபானீகோ அழுக்குத் துணிகள் எல்லாவற்றையும் கட்டை வண்டியில் வைத்து கஷ்டப்பட்டு ஆற்றுக்குத் தள்ளிக்கொண்டு வருகிறார் அல்லது அவற்றை ஒரு பெரிய மூட்டையாகக் கட்டி தலையில் சுமந்து வருகிறார். ஆற்றுக்கு அவர் வந்து சேர்ந்தவுடன் அங்குள்ள சக தொழிலாளிகள் அவரை ஒரே சமயத்தில் ஏககுரலில் வரவேற்கிறார்கள், அவர்கள் எல்லாரும் ஆப்பிரிக்காவின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களாய் இருப்பதால் வெவ்வேறு மொழிகளில் வரவேற்கிறார்கள். 60 வயதைத் தாண்டியும் கட்டுக்கோப்பாக உடலை வைத்திருக்கும் திரு. பிராமா என்பவரைப் போல சிலர் அந்தப் பகுதியிலேயே வருடக்கணக்காக வசித்து வருகிறார்கள். வருடத்தில் மூன்று நாட்களைத் தவிர மற்ற எல்லா நாட்களிலும் அங்கே சுறுசுறுப்பாக வேலை நடைபெறுகிறது.

துணி துவைப்பது ஒன்றும் சாதாரண வேலையல்ல. ஒரு சலவைக்காரர் தன் துணிமூட்டையைக் கீழே வைத்ததைப் பார்த்தோம், அடேயப்பா! ஒரு சராசரி இல்லத்தரசி மட்டும் அங்கிருந்திருந்தால் தலைசுற்றி கீழே விழுந்திருப்பாள்!! அவ்வளவு பெரிய மூட்டை!!! அந்தச் சலவைக்காரர் மூட்டையைப் பிரித்து அதிலிருந்து ஒவ்வொரு துணியாக எடுத்து தண்ணீரில் நனைத்தார். பிறகு, பாமாயிலில் தயாரிக்கப்பட்ட ஒரு பெரிய சோப்புக் கட்டியை நுரைவரும்வரை துணியில் தேய்த்து, அதை பாறைமீது அடித்துத் துவைத்தார். துணிகளில் உள்ள கறைகள் விடாப்பிடியாகப் போக மறுத்தபோது சில சமயங்களில் பிரஷ்ஷைப் பயன்படுத்தி அழுத்தித் தேய்த்தார். சரி, இப்படித் துணிகளைச் சலவைச் செய்து கொடுக்கும்போது எவ்வளவு பணம் கிடைக்கலாம்? ஒரு சட்டைக்கு 7 அமெரிக்க சென்ட்டுகளும், ஒரு படுக்கை விரிப்புக்கு 14 சென்ட்டுகளும் கிடைக்கலாம். ஒரு ஃபானீகோ தன் பிழைப்புக்காக ஏன் அவ்வளவு துணிகளைத் துவைக்கிறாரென இப்போது உங்களுக்குப் புரிகிறதா?

அவர்கள் இவ்வளவு துணிகளைத் துவைப்பதைப் பார்க்கையில் ‘எந்தத் துணி யாருடையது என்பதை அவர்கள் எப்படித்தான் ஞாபகம் வைத்துக்கொள்கிறார்களோ?’ என நீங்கள் யோசிக்கலாம். ஒருவேளை, தங்களுக்கு மட்டுமே தெரிகிற விதத்தில் இந்தியாவிலுள்ள சலவைக்காரர்களின் ஒரு தொகுதியினர் பயன்படுத்தும் ரகசிய குறியீட்டு முறையை இவர்களும் பயன்படுத்துகிறார்களோ என நாங்கள் நினைத்தோம். ஆனால், ஃபானீகோ பயன்படுத்தும் முறையானது இந்திய சலவைக்காரர்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமாய் இருக்கிறது. எனினும், இவர்களுடையதும் மிகச் சிறந்த முறையே.

ஃபானீகோ சம்பந்தமாக எல்லா விஷயங்களையும் அறிந்திருந்த எங்கள் வழிகாட்டி அவர்களுடைய தொழில் முறையை எங்களுக்கு விளக்கத் தொடங்கினார். முதலாவதாக, சலவைக்காரர் வீடுகளிலிருந்து அழுக்குத் துணிகளை எடுத்துவரும்போது ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்களுடைய உருவ அளவையும் பார்த்துக்கொள்வார், அப்போதுதான் எந்தத் துணி யாருடையது என்பதை அவர் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியும். துணிகளில் குறியிடவும் மாட்டார், சீட்டுக்கட்டவும் மாட்டார். ஒரே வீட்டிலிருந்து எடுத்துவரப்பட்ட ஒவ்வொரு துணியையும் குறிப்பிட்ட அதே இடத்தில் முடிச்சுப்போட்டு வைப்பார்; உதாரணத்திற்கு, சட்டையின் இடது கையிலோ வலது கையிலோ காலரிலோ இடுப்பு பட்டையிலோ அவர் முடிச்சுப்போட்டு வைப்பார். துவைக்கும்போதும், ஒவ்வொரு வீட்டுத் துணிகளையும் தனித்தனியாக வைப்பதில் கவனமாய் இருப்பார். எனினும், ஞாபக சக்திக்கு இது ஒரு கஷ்டமான பரிட்சைதான் என்றே எங்களுக்குத் தோன்றியது. எனவே, என்றாவது துணிகளைத் தொலைத்திருக்கிறீர்களா அல்லது மற்றவர்களிடம் மாற்றிக் கொடுத்திருக்கிறீர்களா என ஒரு ஃபானீகோவிடம் கேட்டோம். அவர் அதிர்ந்துபோய் எங்களைப் பார்த்த பார்வையிலிருந்தே நாங்கள் புரிந்துகொண்டோம், அப்படி எதுவும் நடந்ததில்லை என்று. ‘ஃபானீகோ துணிகளைத் தொலைத்ததாகச் சரித்திரமே இல்லை!’

யார் வேண்டுமானாலும் பாங்கோ ஆற்றுக்கு வந்து துணிகளைத் துவைக்கலாமா? அது முடியவே முடியாது! அதற்குக் கண்டிப்பான விதிமுறைகள் சிலவற்றைப் பின்பற்ற வேண்டும். ஃபானீகோ ஆக விரும்புகிறவருக்கு அனுபவம் வாய்ந்த சலவைக்காரர்மூலம் மூன்று மாதங்களுக்குப் பயிற்சி கொடுக்கப்படுகிறது. இந்தச் சமயத்தில்தான் விசேஷித்த விதத்தில் ஞாபகம் வைக்கும் உத்தியை அவர் கற்றுக்கொள்கிறார். இதை அவர் கற்றுக்கொள்ளாவிட்டால் வேறு இடத்தில் வேலை தேட வேண்டியதுதான். என்றாலும், அந்தப் புதிய ஃபானீகோ கெட்டிக்காரராக இருந்தால் அவர் ஒரு சிறிய கட்டணத்தைச் செலுத்திவிட்டு அவருக்கென ஒரு டயரையும் பாறையையும் பெற்றுக்கொள்ளலாம். அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு வேறு யாரும் வரமாட்டார்கள்.

பாமாயில் சோப்பு

ஒரு சலவைக்காரரின் வேலையில் சோப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. அதனால் வருங்கால ஃபானீகோவுக்கு, பாமாயில் சோப்பை சரியாகப் பயன்படுத்துவதிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மூன்று வெவ்வேறு நிற சோப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. வெள்ளை, மஞ்சள் நிற சோப்புகள் லேசான அழுக்குள்ள துணிகளுக்கும் கறுப்பு நிற சோப்புகள் அதிக அழுக்குப் படிந்த துணிகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. சோப்பின் முக்கியக் கூறான பாமாயில் அதிகளவு சேர்க்கப்பட்டிருப்பதால் அது கறுப்பாக இருக்கிறது. ஒவ்வொரு ஃபானீகோவுக்கும் குறைந்தபட்சம் 10 சோப்புக் கட்டிகள் தினமும் தேவைப்படுவதால் பக்கத்திலிருக்கிற சோப்பு தயாரிப்பாளர்கள் அவற்றை எப்போதுமே கையிருப்பில் வைத்திருக்கிறார்கள்.

துணி துவைக்கும் இடத்திற்கு அருகே உள்ள மலைச்சரிவில் சோப்பு தயாரிக்குமிடம் உள்ளது. அது ஒரு சிறிய தயாரிப்பு கூடமாக இருக்கிறது. காலையில் ஆறு மணிக்கே சோப்பு தயாரிக்கும் வேலை மும்முரமாய் துவங்கிவிடுகிறது. அங்கு வேலை செய்யும் தொழிலாளிகள் சோப்பு தயாரிப்புக்குத் தேவையான பொருள்களை முன்னமே உள்ளூர் கடைகளிலிருந்து வாங்கி வந்திருந்தார்கள். அவர்கள் வாங்கி வந்திருந்த பொருள்களில், கெட்டியான பாமாயில், பொட்டாசியம், உப்பு, சோர்சப் மரச்சாறு, தேங்காய் எண்ணெய், கொக்கோ வெண்ணெய் ஆகியவை அடங்கும்; இவை எல்லாமே இயற்கையாகவே சிதைவடையக்கூடியவை. விறகு அடுப்புமீது ஒரு பெரிய ஸ்டீல் அண்டாவை வைத்து அதில் இவை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கி கொதிக்க வைக்கிறார்கள். இந்தக் கலவையைச் சுமார் ஆறு மணிநேரத்திற்குக் கொதிக்க வைத்த பிறகு கெட்டியாவதற்காகத் தகர தட்டுகளிலும் கிண்ணங்களிலும் ஊற்றி வைக்கிறார்கள். பல மணிநேரங்களுக்குப் பிறகு அவற்றைப் பெரிய பெரிய சோப்புக் கட்டிகளாக வெட்டி எடுக்கிறார்கள்.

பின்னர், சோப்பு தயாரிப்பவர் சோப்புக் கட்டிகளை பிளாஸ்டிக் பாத்திரத்தில் நிரப்பிக்கொண்டு தலையில் சுமந்தபடி மலையிலிருந்து இறங்கி ஃபானீகோ இருக்கிற இடத்திற்குச் செல்கிறார். சலவைக்காரர்கள் ஆற்றில் மும்முரமாய் துவைத்துக்கொண்டிருந்தால் இந்த சோப்புகளை அவர் எப்படி வினியோகிப்பார்? அவர் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி அந்தப் பாத்திரத்தை மிதக்க விடுகிறார். யாருக்கு தேவையோ அவர்களுக்கு சோப்புகளைத் தருகிறார்.

வேலை முடிகிறது

ஃபானீகோ எல்லா துணிகளையும் துவைத்து முடித்த பிறகு அவற்றை அருகிலுள்ள மலைச்சரிவுக்கு எடுத்துச் சென்று புல்வெளியிலோ கயிற்றிலோ வரிசையாகக் காயப்போடுகிறார். இந்த வண்ணக்காட்சிதான் ஆரம்பத்தில் எங்கள் கவனத்தைக் கவர்ந்தது. காலையிலிருந்து இடுப்பொடிய வேலை செய்கிற சலவைக்காரர் இப்போது சற்று ஓய்வெடுக்க முடியும். மதியத்திற்கு மேல், எல்லா துணிகளும் காய்ந்த பிறகு அவர் ஒவ்வொன்றையும் நேர்த்தியாக மடித்து, தேவைப்பட்டால் சில துணிகளுக்கு இஸ்திரியும் போடுவார்; இதற்கு கரி இஸ்திரிப் பெட்டியைப் பயன்படுத்துவார். மாலையில், மடித்த துணிகளையும் இஸ்திரி போடப்பட்ட துணிகளையும் மூட்டைக் கட்டிக்கொண்டு அவரவர் வீடுகளுக்கு எடுத்துச் சென்று கொடுத்துவிடுவார்.

துணிகள் வரிசைவரிசையாகக் காயப்போடப்பட்டிருந்ததை முதன்முதல் பார்த்தபோது, அதற்குப் பின்னால் இத்தனை வேலைகள் செய்யப்படுவதை நாங்கள் அறியவில்லை. இப்போதோ, அபித்ஜன் நகரத்தின் ஃபானீகோவைப் பார்த்ததில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. ஏனென்றால், உலக முழுவதிலும் உள்ள சலவைக்காரர்களைப்பற்றி எங்களால் அதிகம் தெரிந்துகொள்ள முடிந்தது.

[பக்கம் 10-ன் தேசப்படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

கோட் டீ வ்வார்

[பக்கம் 12-ன் படம்]

சோப்பு தயாரிப்பவர் சோப்பு கட்டிகளை விற்கிறார்

[பக்கம் 10-ன் படத்திற்கான நன்றி]

PhotriMicroStock™/C. Cecil