எமது வாசகரிடமிருந்து
எமது வாசகரிடமிருந்து
இளைஞர் கேட்கின்றனர் . . . சாப்பிடுகிற விஷயத்தில் எனக்குப் பிரச்சினையா? (அக்டோபர் 2006) இந்தக் கட்டுரையை வாசித்தபிறகு, நான் மனதுக்குள் துவண்டுபோனேன். சாப்பிடுகிற விஷயத்தில் பிரச்சினையோடு என் வாழ்நாள் முழுவதும் போராடியிருக்கிறேன். இளம் வயதிலேயே இந்தப் பிரச்சினையை நான் “சரிசெய்திருக்க” வேண்டுமென்று இதைப் படித்த பிறகு என் மனதுக்குப் பட்டது. இருந்தபோதிலும், இந்த மோசமான வியாதியோடு இன்றுவரை நான் போராடி வருகிறேன்; இதிலிருந்து என்னால் இனி மீளவே முடியாதென நினைக்கிறேன். இந்தக் கட்டுரை, உறுதியான விசுவாசத்தால் மட்டுமே இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க முடியுமென கருத்துத் தெரிவித்ததாக எனக்குத் தோன்றியது.
ஜெ. ஜெ., ஐக்கிய மாகாணங்கள்
“விழித்தெழு!” பதில்: “இளைஞர் கேட்கின்றனர் . . . ” தொடர் கட்டுரைகளில் கலந்தாலோசிக்கப்படுகிற தகவல்கள் குறிப்பாக இளைஞர்களை மனதில் வைத்து எழுதப்பட்டவையாய் இருந்தாலும்கூட, அவற்றிலுள்ள பைபிள் நியமங்கள் எல்லா வயதினருக்கும் பொருந்துகின்றன. சாப்பிடுகிற விஷயத்தில் பிரச்சினை, சமாளிப்பதற்கு மிகக் கஷ்டமான நோய்களில் ஒன்று என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். சாப்பிடுகிற விஷயத்தில் பிரச்சினை உள்ளவர்கள் விசுவாசமில்லாதவர்கள் என்ற கருத்தை இந்தக் கட்டுரை தெரிவிக்கவில்லை. இப்பிரச்சினையால் அவதிப்படுகிறவர்கள் இதைச் சமாளிக்க யெகோவாவிடம் உதவி கேட்டு மன்றாடலாம் என்பதாக மட்டுமே சிபாரிசு செய்தது. இப்பிரச்சினையோடு போராடுகிறவர்கள் கடவுளிடம் ஊக்கமாக மன்றாடுவதோடுகூட, ‘பெற்றோர் அல்லது பெரியவர் ஒருவருடைய’ உதவியை நாட வேண்டுமென்றும் இக்கட்டுரை ஊக்கம் அளித்தது. அதோடு, “இப்பிரச்சினையிலிருந்து முற்றிலும் வெளிவருவது அவ்வளவு எளிதல்ல” என்றும் இதில் மறுபடியும் சிக்கிக்கொள்ள நேரிடலாம் என்றும் இந்தக் கட்டுரை ஒளிவுமறைவின்றித் தெரிவித்தது. பல வருடங்களானாலும்கூட இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க இன்னும் போராடி வருவது, நீங்கள் நம்பிக்கை இழந்துவிடவில்லை என்பதைக் காட்டுகிறது.
ளைஞர் கேட்கின்றனர் . . . வாழ்க்கையில் என் இலட்சியம் என்ன? (ஜூலை 2006) என் பள்ளிப் படிப்பை விரைவில் முடிக்கப் போகிறேன். என்னுடைய வாழ்க்கையைக் கவனமாய் திட்டமிட வேண்டிய ஒரு கட்டத்தில் இருக்கிறேன். முழுநேர ஊழியத்தில் அடியெடுத்து வைப்பதற்கான என்னுடைய இலட்சியத்தில் இன்னும் உறுதியாயிருக்க இக்கட்டுரை உதவியிருக்கிறது. இதைப்போல பலனுள்ளதும், பேரானந்தத்தைத் தருகிறதுமான வேலை வேறொன்றுமில்லை.
ஹெச். டபிள்யு., ஹாங்காங்
இந்தக் கட்டுரையைப் பிரசுரித்ததற்கு மிகவும் நன்றி. பொருளாசைமிக்க இவ்வுலகில், என்னைப் போன்ற இளைஞர்கள் வாழ்க்கையில் ஆன்மீக இலட்சியங்களுக்குத்தான் முதலிடம் கொடுக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள இது எனக்கு உதவியிருக்கிறது.
எ. எஸ்., பிரேசில்
தினமும் அவசரகதியில் ஓடிக்கொண்டிருப்பதால் நான் அடிக்கடி என்னுடைய இலட்சியங்களை மறந்துவிடுகிறேன். யெகோவாவின் சேவையில் முடிந்தளவுக்கு முழுமையாக ஈடுபட வேண்டுமென்ற என் தீர்மானத்தை உறுதிப்படுத்திக்கொள்ள இந்தக் கட்டுரை உதவியிருக்கிறது. இளைஞர்களாகிய எங்கள்மீது கண்ணும்கருத்துமாக இருப்பதற்கு மிக்க நன்றி.
இ.எம்., ஜப்பான்
சந்தோஷமான மணவாழ்விற்கு . . . (ஜூலை 2006) இந்தத் தொடர் கட்டுரைகளை ஓர் உன்னதப் படைப்பு எனலாம். மணத்துணைகள் ஒருவரையொருவர் எவ்வாறு நடத்த வேண்டும் என்பதற்குத் தம்முடைய சீஷர்களை இயேசு நடத்திய விதத்தை மாதிரியாகக் காட்டியது மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. உங்களுடைய அருமையான பணி தொடர வாழ்த்துக்கள். ஒவ்வொரு மாதமும் பத்திரிகைகளைப் பெற்றுக்கொள்ள நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம்.
எஸ். சி., ஐக்கிய மாகாணங்கள்
நம்பிக்கையிழந்த வாழ்வில் சுடர்விட்ட சந்தோஷம் (ஜூலை 2006) எதற்கும் அருகதையற்றவன் என்ற எண்ணத்தைச் சமாளிக்க நானும் சகோதரர் கொன்ஸ்ஸாலேஸைப்போல போராடியிருக்கிறேன். ‘பாவச்சேற்றிலிருந்து கரையேறிய என்னைப் போன்ற ஒருவனை நேசிப்பது யெகோவாவுக்குக் கஷ்டமாக இருக்கலாம்’ என நினைத்திருக்கிறேன். யெகோவா உண்மையிலேயே கரிசனையுள்ளவராக, மன்னிக்கிறவராக, அன்பானவராக இருக்கிறார் என்பதை அறிவது எனக்கு அதிக தெம்பளிக்கிறது! சபை அள்ளித்தந்த அன்பான ஆதரவும் ஆலோசனைகளும் அதோடு, யெகோவாவின் பரிசுத்த ஆவியும் பைபிள் சத்தியங்களை வாழ்க்கையில் கடைப்பிடிக்க எனக்கு உதவியிருக்கின்றன. ஏற்ற சமயத்தில் இந்த ஆன்மீக உணவை அளித்ததற்கு நன்றி.
டி. ஏ., ஐக்கிய மாகாணங்கள்