கடவுளும் கிறிஸ்துவும் பெண்களை எப்படிக் கருதுகிறார்கள்?
கடவுளும் கிறிஸ்துவும் பெண்களை எப்படிக் கருதுகிறார்கள்?
யெகோவா தேவன், பெண்களை எப்படிக் கருதுகிறார் என்பதை நாம் எவ்வாறு நன்றாகத் தெரிந்துகொள்ளலாம்? இயேசு கிறிஸ்துவின் மனப்பான்மையையும் அவர் பழகிய விதத்தையும் ஆராய்வது இதற்கு ஒரு வழியாகும்; ஏனெனில், அவர் ‘அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமாகவும்,’ ஒவ்வொரு விஷயத்திலும், கடவுள் எப்படி நடந்திருப்பாரோ, அப்படியே நடந்துகொள்பவராகவும் இருக்கிறார். (கொலோசெயர் 1:15) பூமியில் வாழ்ந்த காலத்தில் அவர் பெண்களிடம் நடந்துகொண்ட விதத்திலிருந்து, யெகோவாவும் இயேசுவும் பெண்களை மதிப்பதைத் தெரிந்துகொள்கிறோம்; அதோடு, இன்று அநேக நாடுகளில் சர்வசாதாரணமாக பெண்களுக்கு இழைக்கப்படுகிற கொடுமைகளை அவர்கள் நிச்சயம் ஆதரிப்பதில்லை என்பதையும் தெரிந்துகொள்கிறோம்.
உதாரணத்திற்கு, கிணற்றின் அருகே ஒரு பெண்ணிடம் இயேசு பேசிய சம்பவத்தை எடுத்துக்கொள்வோம். “சமாரியா நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ள வந்தாள், இயேசு அவளை நோக்கி: தாகத்துக்குத்தா என்றார்” என்பதாக யோவானின் சுவிசேஷம் சொல்கிறது. யூதர்களில் பெரும்பாலோர் சமாரியர்களுடன் எந்தத் தொடர்பும் வைத்திராவிட்டாலும்கூட, ஒரு சமாரியப் பெண்ணிடம் பொதுவிடத்தில் பேச இயேசு தயங்கவில்லை. தி இன்டர்நேஷனல் ஸ்டான்டர்டு பைபிள் என்ஸைக்ளோப்பீடியா என்ற புத்தகத்தின்படி, “குறிப்பாக, பொதுவிடத்தில் ஒரு பெண்ணுடன் பேசுவதை வெட்கங்கெட்ட செயலாக” யூதர்கள் கருதினார்கள். ஆனாலும் இயேசு பெண்களை மரியாதையுடன் நடத்தினார், அவர்களுடைய உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுத்தார், இன வேறுபாடோ, ஆண்/பெண் பாகுபாடோ காட்டாதிருந்தார். சொல்லப்போனால், அந்த சமாரியப் பெண்ணிடம்தான் முதன்முறையாக தாம் மேசியா என்பதை அவர் வெளிப்படையாய் சொன்னார்.—யோவான் 4:7-9, 25, 26.
இன்னொரு சந்தர்ப்பத்தில், 12 ஆண்டுகளாக இரத்தப்போக்கால் அவதிப்பட்டு, சிரமப்பட்டு வந்த ஒரு பெண், இயேசுவிடம் சென்றாள். அவரைத் தொட்ட அந்த வினாடியே குணமடைந்தாள். “இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.” (மத்தேயு 9:22) நியாயப்பிரமாண சட்டத்தின்படி, அவளைப் போன்ற பெண்கள் பொதுவாக ஜனக்கூட்டத்தார் மத்தியில் வரவும்கூடாது, கண்டிப்பாக மற்றவர்களைத் தொடவும் கூடாது. ஆனால், இயேசு அவளிடம் கோபப்படவில்லை. மாறாக, கனிவுடன் ஆறுதலாய்ப் பேசி, அவளை “மகளே” என்று அழைத்தார். அந்த வார்த்தை பயந்துபோயிருந்த அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு ஆறுதலாய் இருந்திருக்கும்! அவளைக் குணப்படுத்தியபோது இயேசுவும் எவ்வளவாய் ஆனந்தப்பட்டிருப்பார்!
உயிர்த்தெழுப்பப்பட்ட பிறகு இயேசு முதலாவதாக மகதலேனா மரியாளுக்கும் ‘மற்ற மரியாள்’ என பைபிள் குறிப்பிடும் ஒரு சீஷிக்கும் தரிசனமானார். பேதுருவுக்கோ யோவானுக்கோ வேறொரு சீஷருக்கோ அவர் முதலாவது தரிசனமாகியிருக்கலாம். அவ்வாறு செய்யாமல், தம்முடைய உயிர்த்தெழுதலை முதலில் காணும் வாய்ப்பை பெண்களுக்குத் தருவதன்மூலம் இயேசு அவர்களை கௌரவித்தார். வியப்பூட்டும் இந்தச் சம்பவத்தைக் குறித்து இயேசுவின் சீஷர்களுக்கு அறிவிக்கும்படி ஒரு தேவதூதன் அவர்களிடம் சொன்னார். வழியில் இயேசுவும் அவர்களைப் பார்த்து, ‘நீங்கள் போய், என் சகோதரருக்கு . . . சொல்லுங்கள்’ என்று அந்தப் பெண்களிடம் சொன்னார். (மத்தேயு 28:1, 5-10) நீதிமன்றத்தில் பெண்கள் சாட்சி சொன்னால் அது செல்லுபடியாகாது என்று அந்த யூதர்கள் கருதினார்கள். இப்படிப் பெண்களிடம் பாகுபாடு காட்டுவது இயேசுவின் காலத்திலிருந்த யூதர்களுக்கு சகஜமாய் இருந்தாலும் அவர் அப்படி நடந்துகொள்ளவே இல்லை.
இப்படிப்பட்ட நிலைமையில், பெண்களிடம் பாரபட்சம் காட்டாமல் அல்லது எந்த விதத்திலும் ஆண் ஆதிக்கத்தை ஆதரிக்காமல், பெண்களிடம் தமக்கு மதிப்பு மரியாதை இருந்ததை இயேசு வெளிக்காட்டினார். அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை இயேசுவின் போதனைகளுக்கு முற்றிலும் நேர்மாறாக இருந்தது; அவர் எந்தவொரு விஷயத்திலும் தம்முடைய தகப்பனாகிய யெகோவாவின் மனப்பான்மையை அப்படியே வெளிக்காட்டினார் என்பதில் நாம் நிச்சயமாய் இருக்கலாம்.
பெண்களிடம் கடவுள் அக்கறை காட்டிய விதம்
“இன்று மேற்கத்திய சமுதாயத்திலுள்ள பெண்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தை பூர்வ காலத்தில் மத்தியதரைக்கடல் பகுதியிலோ மத்திய கிழக்கிலோ வாழ்ந்த பெண்கள் ருசிக்கவே இல்லை. எஜமானனுக்கு அடிமையும், முதியோருக்கு இளைஞரும் கீழ்ப்பட்டிருந்ததைப் போல ஆண்களுக்குப் பெண்கள் கீழ்ப்பட்டிருப்பது வழக்கமாய் இருந்தது. . . . பெண் பிள்ளைகளைவிட ஆண் பிள்ளைகள் உயர்வாய் மதிக்கப்பட்டார்கள்; சில நேரங்களில், மழையிலும் குளிரிலும் அவதிப்பட்டு சாகும்படி பெண் குழந்தைகள் கைவிடப்பட்டார்கள்.” இது, பூர்வ காலங்களில் பொதுவாகப் பெண்கள் எப்படிக் கருதப்பட்டார்கள் என்பதைப் பற்றிய ஒரு பைபிள் அகராதியின் விவரிப்பாகும். அநேக சமயங்களில், கிட்டத்தட்ட அடிமைகளுக்குச் சமமாய் அவர்கள் நடத்தப்பட்டார்கள்.
பைபிள் எழுதப்பட்ட சமயத்தில் இப்படிப்பட்ட பழக்கவழக்கங்கள் புழக்கத்தில் இருந்தன. எனினும், பைபிளில் கடவுள் அளித்திருந்த சட்டம் பெண்களை உயர்வாய் மதித்தது; அன்றைய கலாச்சாரங்கள் பலவற்றில் நிலவிய போக்குக்கு முற்றிலும் நேர்மாறாக இது இருந்தது.
ஆதியாகமம் 12:14-20; 20:1-7) தன் மனைவியாகிய லேயாளிடம் யாக்கோபு அந்தளவு நேசத்தைக் காட்டாதபோது, அவள் ‘கர்ப்பந்தரித்து,’ ஒரு மகனைப் பெற்றெடுக்கும்படி ஆசீர்வதித்ததன்மூலம் கடவுள் அவளிடம் கனிவு காட்டினார். (ஆதியாகமம் 29:31, 32) எகிப்தில் நடந்த சிசுக்கொலையிலிருந்து எபிரெய ஆண் குழந்தைகளைக் காப்பாற்ற, கடவுள் பயமுள்ள இஸ்ரவேல மருத்துவச்சிகள் இருவர் தங்கள் உயிரையும் பணயம் வைத்து செயல்பட்டபோது அதற்குக் கைமாறாக யெகோவா “அவர்களுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார்.” (யாத்திராகமம் 1:17, 20, 21) அன்னாளின் உருக்கமான ஜெபத்திற்கும் அவர் பதில் அளித்தார். (1 சாமுவேல் 1:10, 20) ஒரு தீர்க்கதரிசியின் மனைவி விதவையான பிறகு, பட்ட கடனை அடைக்க முடியாமல் திண்டாடினாள்; கடன் கொடுத்தவர் அதற்கு ஈடாக அவளுடைய பிள்ளைகளை அடிமைகளாகக் கொண்டு செல்ல முயற்சி செய்தார். இந்த இக்கட்டான நிலையில் யெகோவா அவளைக் கைவிடவில்லை. தீர்க்கதரிசியாகிய எலிசாவை உபயோகித்து அவளிடமிருந்த எண்ணெய் மிகுதியாகும்படி செய்தார்; இவ்வாறு, கடனை அடைக்கவும் தன்னுடைய குடும்பத்தைப் பராமரிக்கவும் போதுமானளவு எண்ணெய்யைப் பெற உதவினார். இப்படியாக அவளுடைய குடும்பத்தையும் அவளுடைய மானம் மரியாதையும் காப்பாற்றினார்.—யாத்திராகமம் 22:22, 23; 2 இராஜாக்கள் 4:1-7.
தம்மை வழிபடும் பெண்களுக்கு யெகோவா உதவிய அநேக சம்பவங்களிலிருந்து, பெண்களின் நலனில் அவருக்கு இருக்கும் அக்கறை தெளிவாய்த் தெரிகிறது. ஆபிரகாமின் அழகிய மனைவியாகிய சாராளின் கற்புக்குக் களங்கம் ஏற்படாதிருக்க இரண்டுமுறை அவர் தலையிட்டு அவளைக் காப்பாற்றினார். (சுயநலத்துடன் பெண்களைப் பயன்படுத்தி ஆதாயம் தேடுவதை அல்லது அவர்களைக் கொடுமைப்படுத்துவதை தீர்க்கதரிசிகள் திரும்பத் திரும்பக் கண்டித்தார்கள். “நீங்கள் நியாயமும் நீதியும் செய்து, பறிகொடுத்தவனை ஒடுக்குகிறவனுடைய கைக்குத் தப்புவியுங்கள்; நீங்கள் பரதேசியையும் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்காமலும், கொடுமை செய்யாமலும், இவ்விடத்தில் குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தாமலும் இருங்கள்” என்று இஸ்ரவேலரிடம் எரேமியா தீர்க்கதரிசி யெகோவாவின் பெயரில் ஆணையிட்டார். (எரேமியா 22:2, 3) முன்னதாக, வீடுகளிலிருந்து பெண்களைத் துரத்திவிட்டு, அவர்களுடைய பிள்ளைகளை மோசமாக நடத்திய இஸ்ரவேல செல்வச்சீமான்களும் அதிகாரிகளும் கண்டிக்கப்பட்டார்கள். (மீகா 2:9) இப்படி, பெண்களுக்கும் அவர்களுடைய பிள்ளைகளுக்கும் துன்பம் தருவதை நீதியின் கடவுள் பார்த்து, தீய செயலெனக் கண்டிக்கிறார்.
“திறமையுள்ள மனைவி”
நீதிமொழிகளை எழுதிய பண்டைய எழுத்தாளர் திறமையுள்ள மனைவியைப் பற்றிய சரியான கருத்தை அளித்திருக்கிறார். மனைவியின் பங்கையும் ஸ்தானத்தையும் பற்றிய இந்த மனங்கவரும் விவரிப்பு யெகோவாவின் வார்த்தையில் இருப்பதால் இதை அவர் அங்கீகரிக்கிறார் என நாம் நிச்சயம் நம்பலாம். அத்தகைய பெண், அடக்கி ஒடுக்கப்படுவதற்கு அல்லது தரக்குறைவாக நடத்தப்படுவதற்கு மாறாக அருமையானவளாக, மதிப்புமிக்கவளாக, நம்பகமானவளாகக் கருதப்படுகிறாள்.
நீதிமொழிகள் 31-ஆம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ள “திறமையுள்ள மனைவி” (NW) சுறுசுறுப்பாகவும் கடினமாகவும் உழைக்கிறாள். “தன் கைகளினால் உற்சாகத்தோடே” கடினமாய் வேலை செய்கிறாள், வியாபாரம் செய்கிறாள், வீடுகளையும் நிலங்களையும் வாங்குவது விற்பது போன்ற காரியங்களிலும் ஈடுபடுகிறாள். ஒரு வயலைப் பார்த்து, வாங்குகிறாள். உள்ளாடைகளைத் தயாரித்து விற்கிறாள். வியாபாரிகளிடம் கச்சைகளைக் கொடுக்கிறாள். உடலுறுதியோடு, பம்பரமாய் சுழல்கிறாள். அதோடு, அவளுடைய விவேகமான பேச்சும், கனிவான செயல்களும் பெரிதும் மதிக்கப்படுகின்றன. இதனால், அவளுடைய கணவரும் பிள்ளைகளும் அவளை உயர்வாக மதிக்கிறார்கள். எல்லாரையும்விட முக்கியமாக யெகோவா அவளைப் பொக்கிஷமாகக் கருதுகிறார்.
பெண்களைத் தங்களுடைய சுயநலத்துக்காக ஆண்கள் தவறான விதத்தில் பயன்படுத்திக்கொள்கிறார்கள், கேவலமாய் நடத்துகிறார்கள், அல்லது ஏதோவொரு விதத்தில் கொடுமைப்படுத்துகிறார்கள்; பெண்களை இப்படித் தவறாக நடத்தக்கூடாது. மாறாக, மனைவியானவள் தன் கணவருக்கு சந்தோஷத்தை அள்ளித்தருகிறவளாக, திறம்பட்ட விதத்தில் “பூர்த்தி செய்பவளாக” இருக்கிறாள்.—ஆதியாகமம் 2:18, NW.
அவர்களுக்கு மதிப்பு கொடுங்கள்
தங்கள் மனைவிகளை நடத்த வேண்டிய முறை குறித்து மெய் கிறிஸ்தவ கணவர்களுக்கு கடவுளுடைய வழிநடத்துதலால் பேதுரு எழுதியபோது, யெகோவாவும் இயேசு கிறிஸ்துவும் காட்டும் மனப்பான்மையைப் 1 பேதுரு 3:7) ஒருவருக்கு மதிப்புக்கொடுப்பது என்பது, அவரை உயர்வாய்க் கருதுவதை, அவருக்கு மதிப்பு மரியாதை காட்டுவதை அர்த்தப்படுத்துகிறது. எனவே, தன் மனைவிக்கு மதிப்புக்கொடுக்கிற கணவர் அவளைக் கூனிக்குறுக வைக்க மாட்டார், மட்டம்தட்டிப் பேச மாட்டார், கொடுமைப்படுத்த மாட்டார். மாறாக, தனிமையிலும்சரி, பொதுவிடத்திலும்சரி தான் அவளை மதிப்பதையும், மனமார நேசிப்பதையும் தன்னுடைய சொல்லிலும் செயலிலும் அவர் காட்டுவார்.
பின்பற்றும்படி அவர்களை ஊக்கப்படுத்தினார். “புருஷர்களே, [தொடர்ந்து] . . . அவர்களுக்குச் செய்ய வேண்டிய கனத்தைச் செய்யுங்கள் [“மதிப்புக்கொடுங்கள்,” பொது மொழிபெயர்ப்பு]” என்று அவர் எழுதினார். (ஒருவர் தன் மனைவிக்கு மதிப்புக்கொடுக்கும்போது, உண்மையிலேயே அது மணவாழ்வில் மகிழ்ச்சியைத் தருகிறது. உதாரணத்திற்கு, கார்லூஷ், சேசீல்யா தம்பதியரை எடுத்துக்கொள்வோம். திருமணமாகி சில காலத்திலேயே, அவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது, பிரச்சினைக்கோ எந்தத் தீர்வும் காணவில்லை. சிலசமயங்களில், ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதையே நிறுத்திவிடுவார்கள். தங்கள் பிரச்சினைகளை எப்படிச் சரிசெய்வதெனத் தெரியாமல் திண்டாடினார்கள். கார்லூஷ் பயங்கர கோபக்காரராக இருந்தார்; சேசீல்யா எதிலுமே எளிதில் திருப்தியடையாத பெண்ணாக இருந்தார், அகம்பாவத்துடன் நடந்துகொண்டார். ஆனால், இவர்கள் இருவரும் பைபிள் படிக்க ஆரம்பித்து, கற்றுக்கொண்டதைக் கடைப்பிடிக்க துவங்கியபோது, வாழ்க்கை மேம்பட ஆரம்பித்தது. “இயேசுவின் போதனைகளும் அவருடைய முன்மாதிரியும்தான் எங்கள் இருவருடைய குணங்களையும் அடியோடு மாற்றின. இயேசுவுடைய முன்மாதிரியைப் பார்த்து, மனத்தாழ்மையை அதிகமாக வளர்த்துக்கொண்டேன், புரிந்துகொண்டு நடக்கவும் ஆரம்பித்திருக்கிறேன். இயேசுவைப் போலவே நானும் யெகோவாவிடம் உதவி கேட்டு ஜெபம் செய்ய வேண்டுமென்பதைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். கார்லூஷ் இப்போது பொறுமைசாலியாக ஆகிவிட்டார், ரொம்பவே சுயகட்டுப்பாடோடு நடந்துகொள்கிறார். யெகோவா விரும்புகிற விதத்தில் மதிப்பு மரியாதையோடு என்னை நடத்துகிறார்” என சேசீல்யா சொல்கிறாள்.
இப்போது அவர்கள் மத்தியில் பிரச்சினைகளே இல்லை என்று சொல்ல முடியாவிட்டாலும், பல வருடங்களாக அவர்களுடைய மணவாழ்வு மணம்வீசிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில், அவர்கள் கடினமான பிரச்சினைகளைச் சந்திக்க நேர்ந்திருக்கிறது; கார்லூஷ் வேலையை இழக்க நேரிட்டது, புற்றுநோய் அறுவைசிகிச்சை அவருக்குச் செய்யப்பட்டது. இருப்பினும், இந்தத் துயர்தரும் பிரச்சினைகள் அந்தத் தம்பதியரின் பந்தத்தை நிலைகுலையச் செய்வதற்கு மாறாக இன்னும் பலப்படுத்தியிருக்கின்றன.
மனிதர் பாவம் செய்து அபூரணர்களானதுமுதல், அநேக கலாச்சாரங்களில் பெண்கள் கேவலமாக நடத்தப்பட்டிருக்கிறார்கள். உடலளவில், மனதளவில், பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் இப்படி நடத்தப்பட வேண்டுமென்பது யெகோவாவின் நோக்கமே இல்லை. பெண்களைக் குறித்து சமுதாயத்தில் எப்படிப்பட்ட கருத்து நிலவினாலும்சரி, எல்லா பெண்களையுமே மதிப்பு மரியாதையுடன் நடத்த வேண்டும் என்பதை பைபிள் தெளிவுபடுத்துகிறது. இது கடவுள் அவர்களுக்கு அளித்திருக்கிற உரிமை. (g 1/08)
[பக்கம் 4, 5-ன் படம்]
வியாதிப்பட்ட பெண்
[பக்கம் 4, 5-ன் படம்]
சமாரியப் பெண்
[பக்கம் 4, 5-ன் படம்]
மகதலெனா மரியாள்
[பக்கம் 6-ன் படம்]
சாராளை இரண்டு முறை யெகோவா காப்பாற்றினார்
[பக்கம் 7-ன் படம்]
கார்லூஷ், சேசீல்யா தம்பதியரின் மணவாழ்வில் விரிசல் விழவிருந்தது
[பக்கம் 7-ன் படம்]
இன்று கார்லூஷ், சேசீல்யா தம்பதியர்