Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மீனவ கிராமம் மாநகரமான கதை

மீனவ கிராமம் மாநகரமான கதை

மீனவ கிராமம் மாநகரமான கதை

ஜப்பானிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

ஆகஸ்ட் 1590-ல் கோடைகாலத்தின் இனியதொரு நாள் அது. அன்றுதான் கிழக்கு ஜப்பானிலிருந்த எடோ என்றொரு மீனவ கிராமத்தில் கால் வைத்தார் ஈயியாஸு டோகுகாவா (வலது) என்பவர். பின்னர் இவர்தான் டோகுகாவா அரசகுலத்தின் முதல் ஷோகன் ஆனார். a அந்தச் சமயத்தில், “எடோவில் விவசாயிகளின் குடில்கள், மீனவர்களின் குடிசைகள் என சில நூறு வீடுகள் மட்டுமே இருந்தன, அவையும் மோசமான நிலையில் இருந்தன” என்பதாக ஷோகனின் நகரம்—டோக்கியோவின் வரலாறு (ஆங்கிலம்) என்ற புத்தகம் குறிப்பிடுகிறது. சுமார் நூறாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு, பராமரிக்காமல் விடப்பட்டிருந்த ஒரு கோட்டையும் அந்தப் பகுதியில் இருந்தது.

இருந்த இடம் தெரியாமல் நூற்றாண்டுகளாக மறைந்துகிடந்த இந்தக் கிராமம் ஜப்பானின் தலைநகராகிய டோக்கியோவாக உருவெடுத்தது மட்டுமல்லாமல், சுறுசுறுப்பாகச் செயல்படும் மாநகரமாகவும் மாறியது. ஆம், இன்று டோக்கியோவின் மாநகர பகுதியில் 120 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கிறார்கள். தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, போக்குவரத்து, வர்த்தகம் ஆகிய அனைத்து துறைகளிலும் உலகளவில் செல்வாக்குமிக்கதாகி வருகிறது டோக்கியோ; அதோடு, பிரபல நிதி நிறுவனங்களும் அங்குதான் குடிகொண்டுள்ளன. இப்பேர்ப்பட்ட ஆச்சரியமான மாற்றம் ஏற்பட்டது எவ்வாறு?

மீனவ கிராமத்திலிருந்து ஷோகனின் நகரமாக

1467-ஆம் வருடத்திற்குப் பிறகு வந்த நூறாண்டு காலம், போர்மேகம் சூழ்ந்த காலக்கட்டமாக இருந்தது. ஜப்பானின் வெவ்வேறு பகுதிகளை ஆதிக்கம் செலுத்திவந்த நிலப்பிரபுக்கள் மத்தியில் நடந்த போர்கள் காரணமாக ஜப்பான் பிரிவுற்றிருந்தது. கடைசியாக, ஏழை குடும்பத்தில் பிறந்து, பின்னர் நிலப்பிரபுவாக உயர்ந்த ஹிடீயோஷி டோயோடோமி என்பவர், நாட்டில் ஓரளவுக்கு ஒற்றுமை நிலவச் செய்து 1585-ல் மன்னர் சார்பாக ஆட்சி செய்யத் தொடங்கினார். பலம் படைத்த ஹிடீயோஷிக்கு எதிராக ஆரம்பத்தில் ஈயியாஸு சண்டையிட்ட போதிலும், பின்னர் அவருடன் கூட்டுச்சேர்ந்துகொண்டார். அவர்கள் இருவருமாகச் சேர்ந்து ஓடாவாரா என்ற இடத்திலுள்ள கோட்டையைச் சுற்றிவளைத்துப் பிடித்தார்கள். பலம் படைத்த ஹோஜோ இனத்தவருடைய இந்தக் கோட்டையைப் பிடித்ததால், கிழக்கு ஜப்பானின் கான்டோ பகுதி இவர்கள் வசமாயிற்று.

கான்டோவைச் சேர்ந்த எட்டு மாகாணங்கள் உள்ளடங்கிய பெரிய பகுதியை ஈயியாஸுவுக்கு அளித்தார் ஹிடீயோஷி. முன்பு இவை பெரும்பாலும், ஹோஜோ இனத்தவரின் பிராந்தியமாக இருந்தன. இதனால் ஈயியாஸு, தன்னுடைய ஆதிக்கத்திலிருந்த பிராந்தியத்தைவிட்டு கிழக்கு நோக்கி போகும்படி செய்தார் ஹிடீயோஷி. ஜப்பான் நாட்டின் தலைவராகிய பேரரசர் வீற்றிருந்த கியோடோவிலிருந்து ஈயியாஸுவை தொலை தூரத்திற்கு அனுப்பிவிடவேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டுத்தான் அவர் இவ்வாறு செய்ததாகத் தோன்றுகிறது. இருந்தாலும், ஈயியாஸு அந்த ஏற்பாட்டுக்குச் சம்மதித்து, ஆரம்பத்தில் விவரித்தபடி எடோவுக்கு வந்து சேர்ந்தார். ஏழைபாழைகள் வாழும் இந்த சாதாரண மீனவ கிராமத்தை தன்னுடைய ஆட்சி தலைநகராக மாற்றுவதற்கு முயற்சிகள் எடுத்தார்.

ஹிடீயோஷி மரணமடைந்தபின் ஈயியாஸு, பெரும்பாலும் கிழக்கு ஜப்பானிய படைகளாலான ஒரு கூட்டணியைத் தலைமைதாங்கி மேற்கு ஜப்பானிய படைகளுக்கு எதிராக 1600-ஆம் வருடம் போரிட்டு, ஒரே நாளில் வெற்றி பெற்றார். 1603-ல் ஈயியாஸுவே ஷோகனாக நியமிக்கப்பட்டார். உண்மையில் இவருக்கே நாட்டை ஆளும் அதிகாரம் இருந்தது. எடோ இப்போது ஜப்பானின் புதிய நிர்வாக தலைநகர் ஆனது.

பிரமாண்டமான ஓர் அரண்மனையைக் கட்டி முடிப்பதற்காக ஆட்களையும் பொருள் உதவியையும் தருமாறு நிலப்பிரபுக்களிடம் ஈயியாஸு கட்டளையிட்டார். தெற்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவிலிருந்த ஈஸூ தீபகற்பத்தின் செங்குத்தான பாறைகளிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட பெரிய கருங்கற்களை எடோவுக்குக் கொண்டுபோவதற்காக ஒரு சமயம் ஏறக்குறைய 3,000 கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன. துறைமுகத்திற்கு வந்துசேர்ந்த கருங்கற்களை நூறு பேர் அல்லது அதற்கும் அதிகமானோர் மிகவும் சிரமப்பட்டு, கட்டுமிடத்திற்கு எடுத்துச் சென்றார்கள்.

ஜப்பானிலேயே மிகப் பெரியதாக இருந்த அந்த அரண்மனை 50 வருடங்கள் கழித்து கட்டி முடிக்கப்பட்டது. அப்போது மூன்றாம் ஷோகன் ஆட்சி செய்துவந்தார். அன்று செழித்தோங்கிய டோகுகாவா ஆட்சியைச் சித்தரிக்கும் முக்கிய சின்னமாக அது அமைந்தது. போர் வீரர் இனத்தவரான சாமுராய் எனப்பட்டவர்கள் ஷோகன்களுக்கு சேவை செய்தனர். இந்த சாமுராய் இனத்தவர்கள் அந்த அரண்மனையைச் சுற்றி குடியிருந்தார்கள். நிலப்பிரபுக்கள் சொந்த பிராந்தியங்களில் மாளிகைகளை வைத்திருப்பதோடுகூட எடோவிலும் பெரிய மாளிகைகளை வைத்திருக்க வேண்டுமென்பது ஷோகனின் கட்டளை.

எடோவின் சுற்றுவட்டாரத்தில் சாமுராய் இனத்தவரே அதிகமாகக் குடியிருந்தார்கள். இவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நாடெங்குமிருந்து வியாபாரிகளும் கைவினைஞர்களும் திரள்திரளாக இங்கு வரத் தொடங்கினார்கள். இவர்களுடைய எண்ணிக்கை பெருகி, 1695-ம் ஆண்டிற்குள் எடோவின் மக்கள்தொகை பத்து இலட்சத்தைத் தொட்டது. ஈயியாஸு இந்தப் பகுதியில் கால்வைத்து சுமார் ஒரு நூற்றாண்டிற்குள் இவ்வளவு அதிகரிப்பு! அந்தச் சமயத்தில் உலகிலேயே அதிக மக்கள்தொகையை உடைய நாடானது எடோ.

கத்தியிலிருந்து கணக்கிற்கு

அமைதி நிலவச் செய்வதில் ஷோகன் ஆட்சி அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டதால் சாமுராய் போர் வீரர்களுக்கு வேலையே இல்லாமல் போய்விட்டது எனலாம். என்றாலும், அவர்கள் தங்கள் தொழிலைக் குறித்து பெருமைப்படாமல் இருக்கவில்லை. ஆனால், போகப்போக கத்தியைப் பயன்படுத்திய சாமுராய் இனத்தவரின் மகிமை குறைந்து கணக்குப் போடும் அபாக்கஸ் மணிச்சட்டத்தை பயன்படுத்திய வியாபார வர்க்கத்தினரின் மவுசு ஏறி வந்தது. கிழக்கத்திய நாடுகளில், கைகளால் கணக்குப்போடுவதற்கு பொதுவாகப் பயன்படுத்தப்பட்டுவந்த கால்குலேட்டர்தான் அபாக்கஸ். ஷோகன் ஆட்சியில் ஏறக்குறைய 250 வருடங்களுக்கும் மேல் அமைதியான சூழல் நிலவியது. பொது மக்கள், அதுவும் குறிப்பாக வியாபாரிகள் செழித்தோங்கினார்கள்; அதிக சுதந்திரத்தையும் அனுபவித்தார்கள். வித்தியாசமான தனி கலாச்சாரமொன்று உருவானது.

பிரபலமான காபூக்கி நாடகங்கள் (வரலாற்று நாடகங்கள்), புன்ராக்கூ (பொம்மலாட்டம்), ராக்கூகோ (வேடிக்கை கதை சொல்லுதல்) ஆகியவற்றை மக்கள் விரும்பி பார்த்தார்கள். வெப்பமான கோடைக்கால மாலைப் பொழுதுகளை, குளிர்ச்சியூட்டும் ஸூமீடா நதிக்கரையில் அவர்கள் கழித்தார்கள். இந்த நதியோரம்தான் எடோ நகரம் அமைந்துள்ளது. அவர்கள் வாணவேடிக்கைகளைப் பார்ப்பதிலும் ஆர்வம்கொண்டவர்கள்; பெயர்பெற்ற இந்தப் பாரம்பரிய பழக்கம் இன்றுவரை தொடர்கிறது.

என்றாலும், இந்த எடோ நகரைப்பற்றி வெளி உலகிற்கு தெரியாமலேயே இருந்தது. சுமார் 200 வருடங்களுக்கு மேல், அயல் நாட்டவருடன் தொடர்பு கொள்வதற்கு இங்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. டச்சுக்காரர்கள், சீனர்கள், கொரியர்கள் ஆகியோருக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது, அதுவும் அளவோடுதான். பின்னர் ஒரு நாள், எதிர்பாராத ஒரு சம்பவம் அந்த நகரின், ஏன், அந்த தேசத்தின் இயல்பையே மாற்றிவிட்டது.

எடோவிலிருந்து டோக்கியோவாக

கறுப்பாக புகையை வெளிவிட்டுக்கொண்டு வந்த விநோதமான கப்பல்கள் திடீரென்று எடோவின் கடற்கரை அருகே காட்சியளித்தன. அவற்றைக் கண்டு மலைத்துப்போன மீனவர்கள் அவை மிதக்கும் எரிமலைகள் என நினைத்தார்கள்! எடோவில் ஏதேதோ வதந்திகள் பரவியதால், அநேக மக்கள் நகரிலிருந்து வெளியேறினர்.

ஐ.மா. கப்பற்படையில் உயர் பதவி வகித்த மாத்யூ சி. பெரி என்பவரின் தலைமையில் வந்த அந்த நான்கு கப்பல்களும் ஜூலை 8, 1853 அன்று எடோ விரிகுடாவில் நங்கூரம் பாய்ச்சி நின்றன (இடது). ஜப்பான் தன் நாட்டோடு வாணிகத்தில் ஈடுபட வழிசெய்யும்படி பெரி என்பவர் ஷோகன் அரசிடம் கேட்டுக்கொண்டார். இராணுவ மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில், உலகிலுள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிட ஜப்பான் எவ்வளவு பின்னடைந்த நிலையில் உள்ளது என்பதை பெரியின் வரவால் ஜப்பானியர்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்தார்கள்.

இதனால் ஒன்றன்பின் ஒன்றாக முடுக்கிவிடப்பட்ட சில சம்பவங்கள், டோகுகாவா ஆட்சியின் வீழ்ச்சிக்கும் மீண்டும் மன்னர் ஆட்சி வருவதற்கும் வழிநடத்தின. 1868-ல் எடோவுக்கு டோக்கியோவென மறுபெயர் சூட்டப்பட்டது. டோக்கியோ என்றால் “கிழக்கத்திய தலைநகர்” என்று அர்த்தம். கியோடோவிலிருந்து பார்க்கையில், அது அமைந்திருக்கும் திசையைக் குறிக்கும் வகையில் இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது. கியோடோவிலுள்ள அரண்மனையிலிருந்து எடோவின் அரண்மனைக்கு மன்னர் குடிமாற்றம் செய்தார். இதுவே புதிய அரச அரண்மனையாக பின்னர் மாற்றப்பட்டது.

அப்போது உருவாகியிருந்த புதிய அரசாங்கம், மேற்கத்திய கலாச்சார தாக்கத்தின் விளைவாக, ஜப்பானை நவீனப்படுத்தும் முயற்சியில் இறங்கியது. அது சம்பந்தமாக அதிக வேலை செய்யப்பட வேண்டியிருந்தது. சிலர் இந்தக் காலப்பகுதியை அதிசயமான காலக் கட்டம் என்கிறார்கள். டோக்கியோவிற்கும் யோகோஹாமாவிற்கும் இடையே தந்தி சேவை 1869-ல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்குப் பின் விரைவில், இந்த இரு நகரங்களையும் இணைக்கும் முதல் ரயில் தொடர்பு அமைக்கப்பட்டது. மர வீடுகளுக்கு மத்தியில் திடீரென்று செங்கல் கட்டடங்கள் எழும்பின. வங்கிகள், ஹோட்டல்கள், பெரிய பெரிய அங்காடிகள், ரெஸ்டாரண்ட்டுகள் என அத்தனையும் தோன்றின. முதல் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன. மண் சாலைகளுக்குப் பதிலாக தளம்போடப்பட்ட சாலைகள் உருவாயின. நீராவியின் சக்தியால் இயங்கிய படகுகள் ஸூமீடா நதியில் நீரைக் கிழித்துக்கொண்டு இங்குமங்கும் போகவர ஆரம்பித்தன.

மக்களின் தோற்றத்திலும் மேற்கத்திய கலாச்சாரத்தின் வாடை வீசியது. பெரும்பாலான ஜப்பானியர்கள் பாரம்பரிய உடையாகிய கிமோனோக்களை அணிந்தார்கள், ஆனால், மேற்கத்திய உடை அணியும் பழக்கம் இவர்களிடம் அதிகரித்துக்கொண்டே வந்தது. ஆண்கள் மீசை வளர்த்து, குறுகிய விளிம்புள்ள தொப்பி போட்டுக்கொண்டு, கையில் தடியுடன் நடக்கத் தொடங்கினார்கள். பெண்களில் சிலர் அதிநாகரிக ஆடைகளை அணிந்து ‘வால்ட்ஸ்’ என்ற சுழற்சி நடனத்தையும் கற்றுக்கொண்டார்கள்.

அரிசியிலிருந்து தயாரிக்கப்பட்ட சாகி என்ற மதுபானத்தையே வழக்கமாக அருந்திவந்த இந்த மக்கள் பீர் குடிக்கவும் விரும்பினார்கள். விளையாட்டை எடுத்துக்கொண்டால், அவர்களுக்கு ஆர்வமூட்டிய ஸுமோ என்ற மல்யுத்தத்துடன் போட்டிபோட வந்தது ‘பேஸ்பால்’. பெரியதொரு பஞ்சைப்போல் டோக்கியோவின் மக்கள், அன்று பிரபலமாக இருந்த கலாச்சார கருத்துகளையும் அரசியல் சிந்தனைகளையும் உறிஞ்சிக்கொண்டு தங்களுடையதாகவே ஆக்கிக்கொண்டார்கள். இப்படி அந்நகரம் முன்னேற்றப் பாதையில் வளர்ச்சியடைந்து வருகையில் திடீரென்று ஒரு நாள் பேரழிவு தாக்கியது.

சாம்பலிலிருந்து மீண்டும் வளர்ச்சி பாதையில்

செப்டம்பர் 1, 1923-ல், அநேகர் மதிய உணவை தயாரித்துக்கொண்டிருந்த சமயம் அது. பயங்கரமான நிலநடுக்கம் கான்டோ பகுதியை உலுக்கி எடுத்தது. 24 மணிநேரங்களுக்கு பின்னர் ஏற்பட்ட கடுமையான ஓர் அதிர்ச்சி உட்பட, தொடர்ந்து நூற்றுக்கணக்கான பின்னதிர்வுகள் ஏற்பட்டன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பலத்த சேதத்தைவிடவும் அதனால் விளைந்த நெருப்பின் காரணமாக டோக்கியோவின் பெரும்பகுதி எரிந்து சாம்பலாகிவிட்டது. மொத்தத்தில், இறந்தவர்கள் 1,00,000-க்கும் அதிகமானோர், அதில் டோக்கியோவில் மட்டுமே 60,000 பேர்.

மீண்டும் நகரத்தைக் கட்டும் மிகப் பெரிய வேலையில் டோக்கியோ மக்கள் ஈடுபட்டார்கள். ஓரளவுக்கு மீண்டு வருகையில், அந்த நகரத்திற்கு அடிமேல் அடியாக வந்தது இரண்டாம் உலக போரின் விமான தாக்குதல்கள். குறிப்பாக 1945 மார்ச் 9/10 அன்று நள்ளிரவிலிருந்து விடியற்காலை சுமார் மூன்று மணி வரையாக பொழிந்த குண்டு மழை, நகரத்தைச் சூறையாடியது. 7,00,000 குண்டுகள் அங்கு வீசப்பட்டிருக்கலாம் என கணக்கிடப்பட்டிருக்கிறது. அங்கிருந்த அதிகபட்ச வீடுகள் மரத்தாலானவை. மக்னீசியத்தையும் பசைதன்மையுள்ள பெட்ரோலையும் உடைய, எளிதில் தீப்பற்றக்கூடிய நேப்பாம் குண்டுகளும் எரியூட்டும் புதுப்புது சாதனங்களும் மக்கள் நெருக்கடி நிறைந்த நகரின் மையப்பகுதியை எரித்து 77,000 மக்களைக் கொன்று குவித்தன. அணு ஆயுதங்களின்றி இந்தளவு சேதத்தை விளைவித்த குண்டுவீச்சு சம்பவம் வரலாற்றிலேயே இதுதான்.

எதிர்பாராத விதத்தில் இவ்வளவு பெரிய அழிவை எதிர்ப்பட்டபோதிலும், டோக்கியோ சாம்பலிலிருந்து மீண்டுவந்து ஒரு நகரமாக மீண்டும் கட்டப்பட்டது. 20 வருடங்கள் செல்வதற்குள், 1964-ஆம் வருடத்தில் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு நடத்தப்படும் அளவுக்கு அந்நகரம் முன்னேற்றம் அடைந்தது. கடந்த நாற்பது ஆண்டுகளாக அங்கு வானளாவ உயர்ந்து, காடாக விரிந்து பரவும் கான்கிரீட் கட்டட வளர்ச்சிக்கு முடிவே இல்லாததுபோல்தான் இருக்கிறது.

டோக்கியோ மக்களுக்கு கைகொடுத்த அவர்களது சுபாவம்

தற்போது டோக்கியோவாக அறியப்படும் எடோ நகருக்கு 400 வயதாகிற போதிலும் உலகின் மற்ற பெரிய நகரங்களோடு ஒப்பிட இது அவ்வளவு வயதானதல்ல. கடந்தகால வாடை வீசும் சில பகுதிகள் அந்நகரில் இருந்தாலும், பொதுவாக கடந்த காலத்தை நம் கண்முன் நிறுத்தும் கட்டடங்கள் அற்ப சொற்பமே. ஆனால், அந்நகரை உற்று கவனித்தோமானால், பண்டைய எடோவில் தோன்றிய வடிவமைப்பைத் தெரிந்துகொள்ள முடிகிறது.

டோக்கியோ மாநகர மையத்தில், பச்சைப் பசேலென காட்சியளிக்கும் பெரிய நிலப்பகுதி உள்ளது. பழைய எடோ அரண்மனை இருந்த அதே இடத்தில்தான் இப்போது அரச அரண்மனையும் அதனைச் சுற்றியுள்ள மைதானங்களும் அமைந்துள்ளன. மையத்திலிருந்து வெவ்வேறு திசை நோக்கி நீளும் சிலந்தி வலை இழைகளைப்போல் இந்த நகர மையத்திலிருந்துதான் பிரதான சாலைகள் அத்தனையும் பிரிந்து செல்கின்றன. எடோவில் அன்று இருந்த அதே அமைப்பைத்தான் இவை பிரதிபலிக்கின்றன. முறைப்படி இல்லாமல் நகரமெங்கும் இங்கொன்றும் அங்கொன்றுமாக அமைந்திருக்கும் தெருக்கள்கூட பண்டைய எடோ நகரின் சிக்கலான நகர அமைப்பையே நினைவுக்குக் கொண்டுவருகின்றன. சொல்லப்போனால், அநேக தெருக்களுக்குப் பெயர்களே கிடையாது! உலகின் மற்ற பெரிய நகரங்களில் காணப்படுவதைப் போன்று திட்டவட்டமான சதுரங்களாகப் பிரிக்கப்பட்ட நிலங்கள் இங்கு இல்லை; மாறாக, இங்குள்ள நிலங்கள் வெவ்வேறு வடிவங்களையும் அளவுகளையும் உடையவையாகும்.

ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, விசேஷமாகத் தெரிவது டோக்கியோ மக்களின் சுபாவம்தான். ஏனென்றால், புதியவற்றை, அதுவும் அயல் நாட்டவரின் கருத்துகளை இந்த மக்கள், பஞ்சுபோல் உறிஞ்சிக்கொண்டார்கள்; அதுமட்டுமா, நிலநடுக்கங்கள், நீண்டகாலம் தொடர்ந்த பொருளாதார பின்னடைவு, மக்கள்தொகை அதிகரிப்பால் ஏற்பட்ட சவால்கள் என்று பல பிரச்சினைகளுக்கு மத்தியிலும் மனவலிமையுடனும் உறுதியுடனும் முன்னேற்றப் பாதையில் நடைபோட்டார்கள். ஆம், அவர்களிடமுள்ள இந்தச் சிறந்த குணங்கள் மிகவும் கவனிக்கத்தக்கது. இருந்த இடம் தெரியாமல் இருந்த சிறிய மீனவ கிராமத்திலிருந்து சர்வதேச முக்கியத்துவம் பெற்ற நிலைக்கு உயர்ந்துள்ள டோக்கியோவின் உயிர்த்துடிப்பை நீங்களே வந்து பாருங்களேன். (g 1/08)

[அடிக்குறிப்பு]

a ஜப்பானின் படைத் தளபதி வம்சத்தைச் சேர்ந்தவரே ஷோகன். இவர் மன்னரின் தலைமையின்கீழ் முழு ஆட்சி பொறுப்பையும் ஏற்று நடத்தியவர் ஆவார்.

[பக்கம் 11-ன் தேசப்படம்]

ஜப்பான்

டோக்கியோ (எடோ)

யோகோஹாமா

கியோடோ

ஒசாகா

[பக்கம் 12, 13-ன் படம்]

இன்று டோக்கியோ

[படத்திற்கான நன்றி]

Ken Usami/photodisc/age fotostock

[பக்கம் 11-ன் படத்திற்கான நன்றி]

© The Bridgeman Art Library

[பக்கம் 13-ன் படத்திற்கான நன்றி]

The Mainichi Newspapers