Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உடன் பிறந்தவர் தற்கொலை செய்துகொண்டால் . . .

உடன் பிறந்தவர் தற்கொலை செய்துகொண்டால் . . .

இளைஞர் கேட்கின்றனர்

உடன் பிறந்தவர் தற்கொலை செய்துகொண்டால் . . .

“ஷீலா போய்விட்டாள்” என்று கரனுடைய அப்பா சொன்னதோடு சரி அதற்குமேல் அவரால் பேச முடியவில்லை. அதைக் கேட்டபோது கரனுக்குத் தலையில் இடி விழுந்ததுபோல் இருந்தது. கரனும் அவளுடைய அப்பாவும் கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டார்கள். புத்தியில்லாமல் ஷீலா தற்கொலை செய்துகொண்டதை அவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. a

வாலிபர் ஒருவர் மரிக்கையில், அவருடைய குடும்பத்தினர்மீது அக்கறையுள்ளவர்கள் பொதுவாக பெற்றோருக்கே ஆறுதல் சொல்கிறார்கள். தற்கொலை செய்துகொண்டவருடைய சகோதரரிடமோ சகோதரியிடமோ, “அம்மா அப்பா எப்படி இருக்கிறார்கள்? இன்னும் நடந்ததை நினைத்தே அழுதுகொண்டிருக்கிறார்களா?” என்று விசாரிக்கிறார்கள். ஆனால், “நீ எப்படி இருக்கிறாய்” என கேட்க மறந்துவிடலாம். இவ்வாறு அந்தப் பிள்ளைகளுக்கு ஆறுதல் சொல்ல தவறிவிடலாம்.

கூடப்பிறந்தவர்களுடைய இறப்பு இளைஞர்களின் உள்ளத்தில் அழியாத வடுவை ஏற்படுத்திவிடுகிறது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. “மாபெரும் இந்த இழப்பு கூடப்பிறந்தவர்களுடைய உடல்நலத்தையும் சுபாவத்தையும் படிப்பையும் சுயமரியாதையையும் வளர்ச்சியையும் கடுமையாகப் பாதிக்கிறது” என உடன்பிறந்தவரைப் பறிகொடுத்த சோகத்திலிருந்து மீளுதல் என்ற ஆங்கில புத்தகத்தில் மனநல மருத்துவரான டாக்டர் பி. கில் வைட் எழுதியிருக்கிறார்.

வளர்ந்த பிள்ளைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. ஷீலா தற்கொலை செய்துகொண்டபோது அவளுடைய அக்கா கரனுக்கு 22 வயது. என்றாலும், சில சமயங்களில் தங்கையை நினைத்து அவள் ரொம்பவே நொடிந்துப்போய்விடுவாள். “என் பெற்றோரைவிட நான் ரொம்ப துக்கப்பட்டேன் என்று சொல்ல வரவில்லை. ஆனால், அவர்களைப் போல் என்னால் அந்தளவு சீக்கிரமாக துக்கத்திலிருந்து மீண்டுவர முடியவில்லை” என்கிறாள் கரன்.

கரனைப் போல் நீங்களும் கூடப்பிறந்தவரை மரணத்தில் பறிகொடுத்திருக்கிறீர்களா? அப்படியானால், “நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள்முழுதும் துக்கப்பட்டுத் திரிகிறேன்” என்று எழுதிய சங்கீதக்காரனான தாவீதைப் போலவே நீங்களும் உணரலாம். (சங்கீதம் 38:6) துக்கத்திலிருந்து மீண்டுவர நீங்கள் என்ன செய்யலாம்?

“நான் மட்டும் . . .”

உங்கள் சகோதரனோ சகோதரியோ தற்கொலை செய்துகொண்டால், அதற்கு நீங்கள்தான் காரணமென்று நினைத்து ஒருவேளை தினம்தினம் மனதிற்குள் புழுங்கலாம். ‘நான் மட்டும் அப்படிச் செய்யாமல் இருந்திருந்தால், அவன்/அவள் உயிரோடு இருந்திருப்பான்/ள்’ என்று நீங்கள் நினைக்கலாம். அதற்கு ஆதாரம் இருப்பதாகவும் உங்களுக்குத் தோன்றலாம். தன்னுடைய 18 வயது தம்பி தற்கொலை செய்துகொண்டபோது 21 வயதான கிரிஸ் அப்படித்தான் நினைத்தார். அவர் சொல்வதாவது: “என் தம்பி என்னிடம்தான் கடைசியாகப் பேசிவிட்டுப் போனான். எதையோ விபரீதமாகச் செய்யப்போகிறான் என்பதை நான் கண்டுபிடித்திருக்க வேண்டும். நான் மட்டும் அவன் சொன்னதை நன்றாகக் கேட்டிருந்தால் அவன் மனதிலிருப்பதை என்னிடம் சொல்லியிருப்பான் என்று என் மனம் உறுத்தியது.”

கிரிஸ்ஸும் அவருடைய தம்பியும் அடிக்கடி சண்டைப் போட்டுக்கொண்ட நினைவுகள் அவர் வேதனையைக் கூட்டின. “அவன் சாவதற்கு முன் எழுதி வைத்த கடிதத்தில், நான் ஒரு நல்ல அண்ணனாக இருந்திருக்கலாம் என சொல்லியிருந்தான்” என்று கிரிஸ் சொன்னபோது அவர் குழல் தழுதழுத்தது. “அவன் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்ததால்தான் இப்படி எழுதியிருக்கிறான் என்பது எனக்குத் தெரியும், இருந்தாலும் அந்த வார்த்தைகள் என் மனதை முள்ளாய் குத்திக்கொண்டு இருக்கின்றன” என்கிறார் கிரிஸ். பெரும்பாலும், கூடப்பிறந்தவர் சாகும் முன் அவருடன் ஏற்பட்ட சூடான வாக்குவாதங்களின் நினைவுகள், ஏற்கெனவே குற்ற உணர்வால் தவிக்கும் நபருக்கு எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல் இருக்கிறது. “இறந்துபோனவருடன் பல மாதங்களுக்கு அல்லது பல வருடங்களுக்கு முன்பு போட்ட சண்டையை இன்னமும் மறக்கமுடியாமல் தவிப்பதாக துக்கிக்கும் சகோதர சகோதரிகள் அநேகர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்” என்கிறார் முன்பு குறிப்பிடப்பட்ட டாக்டர் வைட், விழித்தெழு! நிருபரிடம் பேட்டி அளித்தபோது.

கூடப்பிறந்தவர் தற்கொலை செய்துகொண்டதற்கு நீங்கள்தான் காரணமென்று நினைத்து இன்னமும் குமுறுகிறீர்களா? அப்படியானால், இந்தக் கேள்வியை உங்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘மற்றவருடைய ஒவ்வொரு செயலையும் நம்மால் கட்டுப்படுத்த முடியுமா?’ அதைக் குறித்து கரன் சொல்வதைக் கேளுங்கள்: “ஒரு நபருடைய பிரச்சினையையும் அதைத் தீர்ப்பதற்கு அவர் எடுத்த முடிவையும் தடுக்க வேறு யாராலும் முடியாது.”

ஆனால், இறந்துபோன உங்கள் சகோதரனின் அல்லது சகோதரியின் மனதைப் புண்படுத்தும் விதத்தில் நீங்கள் பேசின சில வார்த்தைகளை உங்களால் மறக்க முடியவில்லை என்றால் என்ன செய்வது? காரியங்களை எதார்த்தமாகப் பார்க்க பைபிள் உங்களுக்கு உதவும். “நாம் எல்லாரும் பலமுறை தவறு செய்கிறோம், பேச்சில் தவறு செய்யாதவன் எவனோ அவனே குறையற்ற மனிதன்” என்று பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 3:2, NW; சங்கீதம் 130:3) உடன் பிறந்தவரிடம் கோபமாய் பேசினதாக அல்லது நடந்துகொண்டதாக நீங்கள் நினைக்கும் சம்பவத்தையே யோசித்துக்கொண்டிருந்தால் உங்கள் துக்கம் அதிகரிக்குமே தவிர நிச்சயம் குறையாது. இப்படிப்பட்ட சம்பவங்களை நினைக்கையில் உங்களுக்கு ரொம்ப வேதனையாக இருந்தாலும் ஒரு விஷயத்தை மறந்துவிடாதீர்கள்: உங்கள் கூடப்பிறந்தவர் இறந்ததற்கு நீங்கள் காரணமல்ல. b

துக்கத்திலிருந்து மீள . . .

எல்லாருமே ஒரேமாதிரி துக்கப்படுவார்கள் என்று சொல்ல முடியாது. சிலர் எல்லோருக்கும் முன்பு வாய்விட்டு அழலாம், அதில் தவறேதுமில்லை. தாவீதின் மகன் அம்னோன் இறந்த செய்தியைக் கேட்டபோது, அவர் ‘மிகவும் புலம்பி அழுதார்’ என்று பைபிள் சொல்கிறது. (2 சாமுவேல் 13:36) தம்முடைய நண்பரான லாசருவின் மறைவால் அங்கிருந்த மக்கள் துக்கித்து அழுததைப் பார்த்து இயேசுவும் “கண்ணீர் விட்டார்.”​—யோவான் 11:33–35.

மறுபட்சத்தில், யாராவது அகால மரணம் அடைகையில் சிலர் உடனே அழமாட்டார்கள். “நான் அதிர்ச்சியில் உறைந்துபோனேன். சில நாட்களுக்கு நடைப்பிணமாய்த் திரிந்தேன். சகஜ நிலைக்கு வர எனக்கு கொஞ்ச நாள் எடுத்தது” என்கிறாள் கரன். உடன்பிறந்த ஒருவர் தற்கொலை செய்துகொள்கையில் அநேக இளைஞர் இப்படித்தான் உணருகிறார்கள். “தற்கொலை நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. துக்கப்படுவதற்கு முன்பு அந்த அதிர்ச்சியிலிருந்து வெளியே வர வேண்டும். இறந்துபோனவருடைய குடும்பத்தினர் அந்த அதிர்ச்சியிலிருந்து வெளிவருவதற்கு முன்பாகவே அவர்களை அழ வைக்க சில மனநல மருத்துவர்கள் முயற்சி செய்கிறார்கள். ஆனால், அவர்கள் இன்னமும் அந்த அதிர்ச்சியிலிருந்து வெளிவராமல் இருக்கிறார்கள்” என்கிறார் டாக்டர் வைட், விழித்தெழு! நிருபரிடம்.

கூடப்பிறந்தவர் இறந்துவிட்டார் என்ற கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்ள நிச்சயம் நாள் எடுக்கும். நடந்ததை வைத்து பார்க்கும்போது இதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறதல்லவா? “எங்கள் குடும்பம், உடைந்துபோய் மீண்டும் ஒட்டவைக்கப்பட்ட கண்ணாடி ஜாடியைப் போல் இருக்கிறது. இப்போதெல்லாம் ஒரு சிறிய விஷயத்தைக் கேட்டால்கூட எங்களால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை; தொட்டாலே ‘உடைந்துவிடும்’ நிலையில் இருக்கிறோம்” என்கிறார் கிரிஸ். இதிலிருந்து மீள இதோ சில ஆலோசனைகள்:

ஆறுதல் அளிக்கும் பைபிள் வசனங்களை எழுதி வைத்துக்கொண்டு ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அவற்றை எடுத்து வாசியுங்கள்.​—சங்கீதம் 94:19.

கனிவான, நம்பகமான ஒருவரிடம் பேசுங்கள். இப்படிப் பேசினால் உங்கள் மனபாரம் குறையலாம்.​—நீதிமொழிகள் 17:17.

இறந்தவர்கள் மீண்டும் இதே பூமியில் வாழ்வார்கள் என்ற பைபிளின் வாக்குறுதியைக் குறித்து ஆழமாக யோசித்துப் பாருங்கள்.​—யோவான் 5:28, 29.

உங்கள் உணர்ச்சிகளையெல்லாம் ஒரு புத்தகத்தில் எழுதிவைத்தால் உங்கள் துக்கம் கொஞ்சம் குறையும். சில நாட்களுக்காவது இப்படிச் செய்துப் பாருங்கள். உங்கள் மனதிலிருப்பதை கீழே உள்ள பெட்டியில் ஏன் எழுதிப் பார்க்கக்கூடாது?

“தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்” என்பதை நீங்கள் உறுதியாய் நம்பலாம். (1 யோவான் 3:20) உங்கள் கூடப்பிறந்தவர் தற்கொலை செய்துகொண்டதற்கு என்ன காரணம், அவர் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தார் என்பதையெல்லாம் எந்த மனிதனையும்விட கடவுள் நன்கு அறிந்திருக்கிறார். உங்களைப் பற்றியும் அவர் தெரிந்துவைத்திருக்கிறார். சொல்லப்போனால், உங்களைப்பற்றி உங்களைவிட அவருக்கு நன்றாகவே தெரியும். (சங்கீதம் 139:1–3) எனவே, உங்களுடைய சூழ்நிலையை அவர் நன்கு அறிந்திருக்கிறார் என்பதில் உங்களுக்கு எந்தச் சந்தேகமும் வேண்டாம். தாளமுடியாத வேதனையில் நீங்கள் சிக்கித் தவிப்பதுபோல் உணர்ந்தால் சங்கீதம் 55:22-ஐ நினைவுகூருங்கள்: “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.” (g 6/08)

www.watchtower.org/ype என்ற வெப்சைட்டில் “இளைஞர் கேட்கின்றனர்” தொடரின் கூடுதலான கட்டுரைகளைக் காண்க

சிந்திப்பதற்கு

◼ தாங்க முடியாத வேதனையில் நீங்கள் தவிக்கையில் யாரிடம் பேசலாம்?

◼ துக்கத்தில் துவண்டு போயிருக்கும் ஓர் இளைஞருக்கு நீங்கள் எவ்வாறு ஆறுதல் சொல்லலாம்?

[அடிக்குறிப்புகள்]

a இந்தக் கட்டுரையில் வரும் பெயர்கள் நிஜப் பெயர்கள் அல்ல.

b வியாதியினாலோ விபத்தினாலோ ஒருவர் மரிக்கையிலும் இதுவே உண்மை. உங்கள் கூடப்பிறந்தவர்மீது நீங்கள் எவ்வளவுதான் அன்பு வைத்திருந்தாலும் “சமயமும் எதிர்பாராத சம்பவமும்” நடப்பதை உங்களால் தடுத்து நிறுத்த முடியாது.​—⁠பிரசங்கி 9:11, NW.

[பக்கம் 30-ன் பெட்டி/படம்]

துக்கத்தில் ஆழ்ந்திருப்போருக்கு ஆறுதல்

அன்பானவரை மரணத்தில் பறிகொடுத்த சோகத்திலிருந்து மீண்டு வருவதைப்பற்றி அதிகமான தகவல் தெரிந்து​கொள்ள யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில் என்ற சிற்றேட்டைப் பாருங்கள்.

[பக்கம் 31-ன் பெட்டி]

உங்கள் மனதில் இருப்பதை எழுத்தில் வடிப்பது துக்கத்தைச் சமாளிக்க பெரிதும் உதவும். எனவே, தற்கொலை செய்துகொண்ட உங்கள் கூடப்பிறந்தவரைப்பற்றி உங்களுக்கு இருக்கும் பசுமையான நினைவுகளையும், அவரிடம் நீங்கள் சொல்ல நினைத்ததையும் எழுதுங்கள். அதோடு, கீழே உள்ள கேள்விகளுக்கும் பதிலளியுங்கள்.

என் சகோதரன் அல்லது சகோதரியைப்பற்றி எனக்கிருக்கும் பசுமையான நினைவுகளில் மூன்று:

1 .....

2 .....

3 .....

என் சகோதரனோ சகோதரியோ உயிரோடு இருந்தபோது இப்படியெல்லாம் சொல்லியிருக்கலாம் என்று நினைக்கிறேன்:

.....

தன் சகோதரன் அல்லது சகோதரியின் மரணத்திற்குத் தான்தான் காரணமென்று நினைக்கும், வயதில் குறைந்த ஒருவரிடம் என்ன சொல்வீர்கள்?

.....

இவற்றில் எந்த வசனம் உங்கள் மனதுக்கு அதிக ஆறுதலை அளிக்கிறது, ஏன்?

“நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் [யெகோவா] சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்.”—சங்கீதம் 34:18.

“உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்.”—சங்கீதம் 22:24.

“கல்லறைகளில் உள்ளோர் அனைவரும் அவரது [இயேசுவுடைய] குரலைக் கேட்டு வெளியே வருவர்.”—யோவான் 5:28, 29, பொது மொழிபெயர்ப்பு.