Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அழிவுக்கு அறிகுறிகளா?

அழிவுக்கு அறிகுறிகளா?

அழிவுக்கு அறிகுறிகளா?

“துவாலூ தீவுகளில் வசிக்கும் 73 வயது வாவல் லேசாவுக்கு, விஞ்ஞானிகள் தரும் அறிக்கைகளை வைத்துத்தான் கடல் மட்டம் உயர்வதைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்ற அவசியமில்லை. ஏனென்றால், அவர் சிறு வயதில் ஓடியாடித் திரிந்த அந்தக் கடற்கரைகளெல்லாம் இப்போது கடலுக்கு அடியில் போய்விட்டன. அவருடைய குடும்பத்தின் பசியை ஆற்றிவந்த பயிர்களெல்லாம் இப்போது உப்பு நீருக்கு இரையாகிவிட்டன. [2007] ஏப்ரல் மாதத்தில் அமாவாசை அலைகள் சீறி எழுந்து கற்களையும் குப்பைக்கூளங்களையும் அவருடைய வீட்டில் குவித்துவிட்டன. அதனால், வேறு வழியில்லாமல் அந்த இடத்தைவிட்டு அவர் வெளியேறினார்” என்கிறது தி நியுஜிலாந்து ஹெரால்ட்.

கடல் மட்டத்திலிருந்து வெறும் 13 அடி உயரத்தில் அமைந்துள்ள தீவுக் கூட்டமான துவாலூவில் வசிக்கும் மக்களுக்கு, புவிச் சூடடைதல் என்பது விஞ்ஞானிகள் சொல்லி தெரியவந்த விஷயமல்ல, அவர்கள் “அன்றாடம் காணும் காட்சி” என்று ஹெரால்ட் அறிவிக்கிறது. a ஏற்கெனவே ஆயிரக்கணக்கானோர் அத்தீவிலிருந்து தங்கள் பெட்டி படுக்கைகளைத் தூக்கிக்கொண்டு கிளம்பிவிட்டார்கள், இன்னும் அநேகர் கிளம்ப தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவிலுள்ள பிரிஸ்பேனில் வசிக்கும் ராபர்ட் என்பவர் ஒருகாலத்தில் தன் தோட்டத்திற்கு “டியூப்” போட்டு தாராளமாகத் தண்ணீர் பாய்ச்சினார். ஆனால், இப்போது ஒரு பக்கெட்டில் கொண்டுபோய்தான் செடிகொடிகளின் தாகத்தை தீர்க்கிறார்​—⁠அதுவும் குறிப்பிட்ட நாட்களில்தான். அவருடைய காரை கழுவுவதற்கும் சுழற்சி செய்யப்பட்ட நீரைத்தான் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. அதுவும் முழு காரை அல்ல, கண்ணாடி, ஜன்னல், நம்பர் பிளேட் போன்றவற்றை கழுவத்தான் தண்ணீர் கிடைக்கும். ஏன் இந்தத் தட்டுப்பாடு? ஏனென்றால், ராபர்ட் வசித்து வரும் பிரிஸ்பேன் நகரம் இந்த நூற்றாண்டிலேயே படுமோசமான வறட்சியைச் சந்தித்தது. மற்ற பகுதிகளைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. ஆஸ்திரேலியாவும் துவாலூவும் எதிர்ப்படும் பிரச்சினைகள் புவி சூடடைவதற்கு அறிகுறிகளா?

சிலருடைய கணிப்புகள்

பூமி வெப்பமடைவதற்கு மனிதனின் தாறுமாறான நடவடிக்கைகளே காரணமென அநேகர் சொல்கிறார்கள். புவிச் சூட்டினால் சீதோஷ்ண நிலையிலும் சுற்றுச்சூழலிலும் படுபயங்கரமான பாதிப்புகள் ஏற்படலாம். உதாரணமாக, நிலப்பரப்பில் உள்ள பனிப் படலங்கள் பெருமளவு உருகுவதாலும், தண்ணீர் சூடாகி சமுத்திரம் விரிவடைவதாலும் கடலின் நீர்மட்டம் கிடுகிடுவென உயரலாம். கடல்மட்டத்திலிருந்து சற்றே உயரத்தில் இருக்கும் துவாலூ போன்ற தீவுக்கூட்டங்கள் வரைபடத்திலிருந்து காணாமல் போகலாம். இப்படி மறைந்து போகவிருக்கும் இடங்களின் பட்டியலில் நெதர்லாந்தையும் ப்ளோரிடாவையும் சேர்த்துக்கொள்ளலாம். ஷாங்காய், கொல்கொத்தா போன்ற இடங்களிலிருந்தும் வங்காள தேசத்தின் சில பகுதிகளிலிருந்தும் லட்சோபலட்ச மக்கள் குடிபெயர்ந்து போகவேண்டிய நிலைக்கு வரலாம்.

அதேசமயம், வெப்பநிலை உயர்வால் புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை சக்திகள் சீற்றமடையலாம். இமய மலைகளில், ஏழு ஜீவ நதிகளுக்கு ஊற்றாய் விளங்கும் பனிப் பாறைகள் உருகி வருவதால் உலகின் ஜனத்தொகையில் 40 சதவீதத்தினருக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்தும் இருக்கிறது. அதோடு, ஆயிரக்கணக்கான விலங்கினங்கள் அடியோடு அழியும் ஆபத்தில் இருக்கின்றன. தங்களுடைய வயிற்றுப் பாட்டுக்கு பனிப் பிரதேசங்களை நம்பியிருக்கும் பனிக் கரடிகளின் கதி என்ன ஆகுமென்று நினைத்துப் பார்த்தீர்களா? அறிக்கைகள் காட்டுகிறபடி, ஏற்கெனவே நிறைய பனிக் கரடிகள் எலும்பும் தோலுமாக இருக்கின்றன; இன்னும் சில பட்டினியால் வாடிக்கொண்டிருக்கின்றன.

வெப்பநிலை உயர்வதால் கொசுக்கள், உண்ணிகள், நோய்க் கிருமிகள் பூஞ்சணங்கள் ஆகியவை பெருகி பல இடங்களில் நோய்களைப் பரப்பலாம். “சீதோஷ்ண மாற்றத்தால் ஏற்படும் ஆபத்துகள், அணு ஆயுதங்களால் ஏற்படும் ஆபத்துகளைப் போலவே நாசகரமான விளைவுகளை உண்டாக்கலாம். அதன் விளைவுகள் உடனடியாகத் தெரியாமல் போனாலும், . . . முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு கண்டிப்பாகத் தெரியவரும். அப்போது, தட்பவெப்ப மாற்றத்தினால், மனிதர் நம்பியிருக்கும் வாழிடங்கள் சரிசெய்ய முடியாதளவுக்கு கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும்” என அணுஆற்றல் விஞ்ஞானிகளின் குறிப்பேடு என்ற ஆங்கில நூல் சொல்கிறது. இன்னும் அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவென்றால், புவிச் சூடடைவதால் ஏற்படும் மாற்றங்கள் எதிர்பார்த்ததைவிட அதிவேகமாக நடைபெற்று வருவதாக விஞ்ஞானிகள் சிலர் சொல்கிறார்கள்.

இந்தக் கணிப்புகளை நாம் நம்பலாமா? பூமியில் வாழும் உயிர்களுக்கு உண்மையிலேயே சாவுமணி அடிக்கப்பட்டுவிட்டதா? குலைநடுங்க வைக்கும் இந்தக் கணிப்புகள் ஆதாரமற்றவை என சந்தேகவாதிகள் சிலர் குரல் எழுப்புகிறார்கள். மற்றவர்களோ மதில் மேல் பூனையாக இருக்கிறார்கள். அப்படியானால், எது உண்மை? பூமியின் எதிர்காலமும் நம்முடைய எதிர்காலமும் கேள்விக்குறியாக இருக்கிறதா? (g 8/08)

[அடிக்குறிப்பு]

a “புவி சூடடைதல்” என்பது பூமி மற்றும் கடலின் வெப்பநிலை அதிகரிப்பதைக் குறிக்கிறது.