Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆன்மீக காரியங்களில் எப்படி ஆர்வமாய் ஈடுபடலாம்?

ஆன்மீக காரியங்களில் எப்படி ஆர்வமாய் ஈடுபடலாம்?

இளைஞர் கேட்கின்றனர்

ஆன்மீக காரியங்களில் எப்படி ஆர்வமாய் ஈடுபடலாம்?

படுக்கையில் சொகுசாக படுத்துக்கொண்டிருக்கிறான் 16 வயது ஜோஷ். கதவருகே அம்மா வந்து, “ஜோஸ், எழுந்திருக்கிறியா இல்லையா? இன்னைக்கு மீட்டிங் இருக்கு, தெரியாதா?” என்கிறாள் கண்டிப்புடன். ஜோஸ் ஒரு யெகோவாவின் சாட்சியின் குடும்பத்தைச் சேர்ந்தவன்; கிறிஸ்தவ கூட்டங்களுக்குப் போவது அவனுடைய குடும்பத்தினரின் வழக்கம். கொஞ்ச காலமாக கூட்டங்களுக்குப் போவதில் அவனுக்கு ஆர்வமே இல்லை.

“ஐய் . . . யோ . . . என்னம்மா நீங்க, நான் கண்டிப்பா வரணுமா? நீ . . . ங்க போங்க.”

“சும்மா சிணுங்கிக்கொண்டே இருக்காதே, சீக்கிரம் எழுந்திருச்சு கிளம்பு” என்று சொல்கிறாள் அவனுடைய தாய். “வாராவாரம் லேட்டா போறது எனக்குக் கொஞ்சம்கூட பிடிக்கல” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து போய்விடுகிறாள்.

அவள் இரண்டடிதான் எடுத்துவைத்திருப்பாள், “இதோ பாருங்கமா, உங்க மதம் உங்களுக்கு வேணும்னா பிடிச்சிருக்கலாம், ஆனா அது எனக்கும் பிடிச்சிருக்கணும்னு அவசியமில்ல” என்று சப்தமாகச் சொல்கிறான் ஜோஸ். இது அம்மாவின் காதில் விழுந்திருக்கும் என்று அவனுக்குத் தெரியும். ஏனென்றால், அவள் நடந்து போய்க்கொண்டிருந்த காலடி ஓசை சட்டென நிற்கிறது. ஆனால், அதற்கு அவள் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து நடையைக் கட்டிவிடுகிறாள்.

இப்படிச் சொல்லிவிட்டோமே என்று ஜோஸ் கொஞ்சம் மனஸ்தாபப்படுகிறான். அம்மா மனதை நோகடிக்க வேண்டுமென்பதற்காக அவன் இப்படிச் சொல்லவில்லை. அதேசமயம், அதற்காக மன்னிப்புக்குக் கேட்கவும் அவனுக்கு மனதில்லை. ஆனால், ஒன்று செய்யலாம் . . .

சலித்துக்கொண்டே, படுக்கையைவிட்டு எழுந்து கிளம்ப ஆரம்பிக்கிறான் ஜோஸ். அம்மாவிடம் புலம்பியதைவிட இப்போது தனக்குள்ளேயே அதிகமாகப் புலம்புகிறான்: “இன்னைக்கில்லனாலும் என்னைக்காவது நான் ஒரு முடிவுக்கு வந்தாகணும். அதேசமயம் எல்லாரும் கூட்டத்திற்கு போறாங்க என்பதற்காக நானும் போக முடியாது. மொத்தத்தில கிறிஸ்தவனா இருக்கவே எனக்கு இஷ்டமில்ல!”

ஜோஸ் மாதிரி நீங்கள் என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா? மற்றவர்களெல்லாம் ஆன்மீக காரியங்களில் ஆர்வமாக ஈடுபடும்போது, நீங்கள் மட்டும் ஏதோ கடமைக்காக அவற்றில் ஈடுபடுவதுபோல் உணருகிறீர்களா? உதாரணத்திற்கு:

பைபிள் வாசிப்பதையும் ஹோம்வர்க் மாதிரி நினைக்கிறீர்களா?

வேண்டா வெறுப்பாக வீட்டுக்குவீடு சென்று நற்செய்தியை அறிவிக்கிறீர்களா?

கிறிஸ்தவ கூட்டங்கள் உங்களுக்கு ‘போர் அடிக்கிறதா’?

இப்படித்தான் நீங்கள் நினைக்கிறீர்கள் என்றால் கவலைப்படாதீர்கள். சின்ன சின்ன மாற்றங்களைச் செய்தால், நீங்களும் கடவுளுடைய சேவையில் இன்பம் காணலாம். எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.

சவால் #1:பைபிளைப் படிப்பது

ஏன் சுலபமல்ல. “படிப்புக்கும் எனக்கும் ரொம்ப தூரம்” என நீங்கள் உணரலாம். சீக்கிரத்திலேயே உங்கள் மனம் அலைபாய ஆரம்பித்துவிடலாம்​—⁠எதிலும் கவனம் செலுத்துவது உங்களுக்குக் கடினமாக இருக்கலாம். ஸ்கூல் பாடங்கள் வேறு தலைக்குமேல் இருக்கின்றன, அப்படித்தானே?

ஏன் படிக்க வேண்டும். கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் பைபிள் எழுதப்பட்டது. அதுமட்டுமல்ல, “அவை கற்பிப்பதற்கும், கடிந்துகொள்வதற்கும், காரியங்களைச் சரிசெய்வதற்கும், நீதியின்படி கண்டித்துத் திருத்துவதற்கும் பிரயோஜனமுள்ளவையாய் இருக்கின்றன.” (2 தீமோத்தேயு 3:16, NW) பைபிளைப் படித்து தியானிப்பது, உங்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும். இதை நீங்கள் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்: உழைக்காமல் எந்தப் பலனும் கிடைக்காது. ஏதாவது ஒரு விளையாட்டில் வீரராக வேண்டுமென்றால் அதன் விதிமுறைகளைக் கற்றுக்கொண்டு நன்கு பயிற்சி எடுக்க வேண்டும். நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் உடற்பயிற்சி செய்தாக வேண்டும். அதேபோல், படைப்பாளரைப் பற்றி கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் கடவுளுடைய வார்த்தையை நீங்கள் படிக்கத்தான் வேண்டும்.

உங்கள் சகாக்களின் அனுபவங்கள். “ஹை ஸ்கூலுக்கு போனபோது என் வாழ்க்கையில் நான் தீர்மானம் எடுக்க வேண்டிய ஒரு கட்டம் வந்தது. என் க்ளாஸ் பசங்க எல்லாவிதமான அட்டூழியங்களையும் செய்துவந்தாங்க. ‘இப்படித்தான் நானும் இருக்க விரும்புகிறேனா? என் பெற்றோர் எனக்குச் சொல்லித்தருவதெல்லாம் உண்மையானவையா?’ இதை நான்தான் கண்டுபிடிக்க வேண்டும்.”​—⁠ஷெட்ஸா.

“நான் கத்துக்கிட்ட விஷயங்களெல்லாம் உண்மை என்று எனக்குத் தெரியும். ஆனால், என் மனசுல அதை ஆணித்தரமா பதியவைக்க வேண்டியிருந்தது. ‘அது என் அப்பா அம்மாவுடைய மதம்’ என்று இல்லாமல், ‘என்னுடைய மதம்’ என்று சொல்லிக்கொள்கிற அளவுக்கு அதில் நான் ஈடுபாடு காட்ட வேண்டியிருந்தது.”​—⁠நெலிஸா.

நீங்கள் என்ன செய்யலாம். உங்களுக்கு ஏற்ற மாதிரி/பிடித்த மாதிரி நீங்களே ஒரு அட்டவணை போட்டு படியுங்கள். எந்த விஷயங்களை ஆராய்வதென்று நீங்களே தேர்ந்தெடுங்கள். சரி, நீங்கள் எதிலிருந்து ஆரம்பிக்கலாம்? பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? போன்ற புத்தகத்தைப் பயன்படுத்தி நீங்கள் பைபிளை அலசி ஆராயலாமே? உங்கள் நம்பிக்கைகளுக்கான ஆதாரத்தைக் கண்டுபிடிக்கலாமே? a

செயல் திட்டம். முதலாவதாக, கீழே உள்ள பைபிள் தலைப்புகளில் உங்களுக்கு சுவாரஸ்யமான ஓரிரண்டு தலைப்புகளை ‘டிக்’ செய்யுங்கள். அல்லது உங்களுக்குப் பிடித்த வேறு சில தலைப்புகளைக்கூட நீங்கள் எழுதிக்கொள்ளலாம்.

❑ கடவுள் இருக்கிறாரா?

❑ கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் பைபிள் எழுதப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம்?

❑ பரிணாமத்தை நம்புவதற்குப் பதிலாக ஏன் நான் படைப்பை நம்ப வேண்டும்?

❑ கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன, அது நிஜமான ஓர் ஆரசாங்கம் என்பதை எப்படி நான் நிரூபிக்க முடியும்?

❑ ஒருவர் சாகும்போது என்ன நேரிடுகிறது என்பதை எப்படி நான் விளக்கலாம்?

❑ இறந்தவர்கள் நிச்சயம் உயிர்பெற்று வருவார்கள் என்பதை நான் ஏன் நம்ப வேண்டும்?

❑ உண்மையான மதம் எது என்பதை எப்படி நான் உறுதிப்படுத்திக்கொள்ளலாம்?

.....

சவால் #2:ஊழியத்தில் ஈடுபடுவது

ஏன் சுலபமல்ல. பைபிளைப் பற்றி மற்றவர்களிடம் அல்லது பள்ளித் தோழர்களிடம் பேசுவதை நினைத்தாலே பயமாய் இருக்கலாம்.

ஏன் ஈடுபட வேண்டும். “எல்லாத் தேசத்தாரையும் சீடர்களாக்கி, . . . நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி அவர்களுக்குக் கற்பியுங்கள்.” (மத்தேயு 28:19, 20, NW) இதைத் தவிர வேறு காரணங்களும் இருக்கின்றன. சில இடங்களில் பதின் வயதினரில் பெரும்பாலானோருக்கு கடவுள் மீதும் பைபிள் மீதும் நம்பிக்கை இருக்கிறது என்பதை ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. அதேசமயம் எதிர்காலத்தைக் குறித்து அவர்களுக்கு எந்தவொரு நம்பிக்கையும் இல்லை. நீங்கள் பைபிளை படித்து வந்தால் அவர்கள் தேடுகிற தகவல்கள், அதுவும் அவர்களுக்குத் தேவையான தகவல்கள் உங்கள் கைவசம் இருக்கும்.

உங்கள் சகாக்களின் அனுபவங்கள். “மற்றவர்களுக்கு ஆர்வமூட்டும் விதத்தில் எப்படிப் பேசலாம் என்று நானும் என் ஃபிரண்ட்டும் யோசித்துப் பார்த்தோம். இப்படிச் செய்ததால எதிர்ப்புகளை எப்படிச் சமாளிப்பது, மறுசந்திப்புகள் எப்படிச் செய்வது என்பதைக் கத்துக்கிட்டோம். நல்லா முயற்சி எடுத்து ஊழியத்தில அதிகதிகமா ஈடுபட ஆரம்பித்ததும் அது எனக்கு ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது.”​—⁠நெலிசா.

“சபையிலிருந்த ஒரு சகோதரி எனக்கு ரொம்ப உதவி செஞ்சாங்க. அவங்க என்னைவிட ஆறு வயசு பெரியவங்க. ஊழியத்திற்குப் போகும்போது என்னையும் கூட்டிட்டுப் போவாங்க, சில சமயம் ஹோட்டலுக்கும் போவோம். அவங்க பைபிளிலிருந்து காட்டின வசனங்களெல்லாம் எனக்கு ரொம்ப ஊக்கமளித்தது. என்னுடைய மனச மாத்திக்க உதவியா இருந்தது. அவங்களுடைய சிறந்த முன்மாதிரியினால இப்ப என்னால் நிறைய பேரை சந்திச்சு பேச முடியுது. இந்த உதவிக்கெல்லாம் நான் எப்படி அவங்களுக்கு கைமாறு செய்வேனோ?”​—⁠ஷான்டே.

நீங்கள் என்ன செய்யலாம். உங்கள் பெற்றோரின் அனுமதியுடன், சபையில் உங்களைவிட வயதில் மூத்த ஒருவரைக் கண்டுபிடித்து, அவருடன் சேர்ந்து ஊழியம் செய்யுங்கள். (அப்போஸ்தலர் 16:1–3) “இரும்பை இரும்பு கூர்மையாக்குவது போல ஒருவர்தம் அறிவால் மற்றவரை கூர்மதியாளராக்கலாம்.” (நீதிமொழிகள் 27:17, பொது மொழிபெயர்ப்பு) அதிக அனுபவமுள்ள முதியவர்களுடன் நட்பு வைத்துக்கொள்வதில் அநேக நன்மைகள் இருக்கின்றன. “பெரியவங்களோடு இருக்கும்போது எவ்வளவு நிம்மதியா இருக்கும் தெரியுமா” என்கிறான் 19 வயது ஆலெக்ஸிஸ்.

செயல் திட்டம். உங்கள் அப்பா அம்மா உட்பட, ஊழியத்தில் உங்களுக்கு உதவி செய்யக்கூடிய சகோதர சகோதரிகளின் பெயர்களைக் கீழே எழுதுங்கள்.

.....

சவால் #3: கிறிஸ்தவ கூட்டங்களுக்குச் செல்வது

ஏன் சுலபமல்ல. நாள் முழுக்க பள்ளிக்கூடத்தில் உட்கார்ந்து பாடம் படித்துவிட்டு வந்த பிறகு, இரண்டு மணி நேரம் பைபிள் பேச்சுகளைக் கேட்க வேண்டுமென்றால் ரொம்ப ‘போர்’ அடிக்கலாம்.

ஏன் போக வேண்டும். “சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்து வருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்ல வேண்டும்” என்று கிறிஸ்தவர்களை பைபிள் உற்சாகப்படுத்துகிறது.​—எபிரெயர் 10:24, 25.

உங்கள் சகாக்களின் அனுபவங்கள். “கூட்டங்களுக்கு தயாரிப்பது ரொம்ப ரொம்ப முக்கியம். சில சமயம் அது ரொம்ப கஷ்டமா இருந்தாலும், படிக்கிற ஆர்வத்தை வளர்த்துக்கணும். நீங்கள் தயார் செஞ்சிட்டு போனால் அங்கே என்ன பேசப்போறாங்க என்பது உங்களுக்கு முன்னாடியே தெரியும். ஆர்வமாக உட்கார்ந்து கேட்க அது உங்களுக்கு உதவியா இருக்கும். பதில் சொல்லவும் முடியும்.”​—⁠எல்டா.

“கூட்டத்துல நான் எப்பவெல்லாம் பதில் சொன்னேனோ அப்பவெல்லாம் அது எனக்கு ரொம்ப ஆர்வமா இருந்ததை கவனிச்சேன்.”​—⁠ஜெஸிக்கா

நீங்கள் என்ன செய்யலாம். முன்கூட்டியே தயாரிக்க நேரம் ஒதுக்குங்கள். முடிந்தால் பதில் சொல்லுங்கள். அப்போதுதான் அந்தப் பேச்சோடு நீங்கள் ஒன்றிவிடுவீர்கள்.

உதாரணமாக: எது உங்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும்​—⁠டிவியில் மேட்ச் பார்ப்பதா அல்லது விளையாடுவதா? சும்மா உட்கார்ந்து பார்ப்பதைவிட அதில் கலந்துகொள்ளும்போதுதான் அதிக சுவாரஸ்யமாக இருக்கும். கிறிஸ்தவ கூட்டங்களைப் பொறுத்ததிலும் ஏன் அப்படியே செய்யக்கூடாது?

செயல் திட்டம். சபை கூட்டத்திற்காகத் தயாரிப்பதற்கு வாரத்தில் எப்போது நீங்கள் 30 நிமிடங்களை ஒதுக்க முடியும் என்பதை கீழே எழுதுங்கள்.

.....

‘யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்’ என்று சங்கீதம் 34:8 சொல்வது எவ்வளவு உண்மை என்பதை இளைஞர்கள் அநேகர் தங்களுடைய அனுபவத்தில் கண்டிருக்கிறார்கள். நாக்கில் எச்சில் ஊறவைக்கும் ஓர் உணவைப் பற்றி யாராவது உங்களிடம் சொன்னாலே திருப்தியாகிவிடுவீர்களா? அதை சாப்பிட்டுப் பார்த்தால்தானே உங்களுக்கு அதன் ருசி தெரியும். ஆன்மீக விஷயத்திலும் இதுவே உண்மை. ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவது உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியூட்டும் என்பதை நீங்களே ருசித்துப் பாருங்கள். ‘கேட்கிறவனாக இல்லாமல் செய்கிறவனாக இருப்பவன் அதிக சந்தோஷமாக இருக்கிறான்’ என பைபிள் சொல்கிறது.​—யாக்கோபு 1:25, NW. (g 7/08)

இளைஞர் கேட்கின்றனர் . . .  என்ற தொடர் கட்டுரைகளுக்கு www.watchtower.org/ype என்ற வெப் சைட்டில் காண்க

சிந்திப்பதற்கு

இளைஞருக்கு ஆன்மீக காரியங்கள் ஏன் சலிப்பூட்டுவதாக தோன்றலாம்?

இந்தக் கட்டுரையில் சிந்திக்கப்பட்ட மூன்று அம்சங்களில் எந்த அம்சத்தில் நீங்கள் முன்னேற வேண்டுமென நினைக்கிறீர்கள், அதற்காக என்ன செய்வீர்கள்?

[அடிக்குறிப்பு]

a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

[பக்கம் 12, 13-ன் படம்]

நீங்கள் உடல் ரீதியில் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதேபோல், ஆன்மீக ரீதியில் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் கடவுளுடைய வார்த்தையைப் படிக்க வேண்டும்