Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஓர் ஆசிரியையின் கண்ணோட்டம் மாறியது

ஓர் ஆசிரியையின் கண்ணோட்டம் மாறியது

ஓர் ஆசிரியையின் கண்ணோட்டம் மாறியது

சில வருடங்களுக்கு முன்பு, ஜார்ஜியா, பட்டூமியைச் சேர்ந்த ஓர் ஆசிரியை தன்னுடைய மாணவர்களிடம் பத்துக் கட்டளைகளை ஒப்பிக்கச் சொன்னார். ஆங்னா என்ற ஒரு மாணவி அவற்றைச் சரியாகச் சொன்னதைக் கேட்டு அந்த ஆசிரியைக்கு ஒரே ஆச்சரியம். பைபிள் சம்பந்தமான மற்ற கேள்விகளுக்கும் அவள் ‘பட்பட்’ என்று பதில் சொன்னாள். இதெல்லாம் அவளுக்கு எப்படித் தெரியுமென அந்த ஆசிரியை ஆவலுடன் கேட்டார். யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிள் படித்ததால் இதெல்லாம் கற்றுக்கொண்டதாக ஆங்னா சொன்னபோது, ‘அவர்கள் மத வெறியர்கள்’ என்று சொல்லி சட்டெனப் பேச்சை வெட்டினார் அந்த ஆசிரியை.

ஒரு முறை, ‘ஜார்ஜியாவில் வாழ்க்கையும், அந்நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளும்’ என்ற தலைப்பில் மாணவர்களை ஒரு கட்டுரை வரையச் சொன்னார். ஆங்னா தன்னுடைய கட்டுரையின் முடிவில் இப்படி எழுதியிருந்தாள்: “சமுதாயத்தை அடியோடு மாற்றுவதற்கு மக்கள் எடுக்கும் எந்த முயற்சியும் வெற்றி பெறாது; ஏனென்றால், ‘மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்ல, தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்ல’ என்று எரேமியா 10:23 கூறுகிறது. கடவுளுடைய அரசாங்கத்தால் மட்டுமே எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியும்.”

அடுத்த நாள், அந்த ஆசிரியை வகுப்புக்கு வந்து, “ஆங்னா எழுதிய கட்டுரை மிக அருமையாக இருந்தது, அதை மிகவும் ரசித்துப் படித்தேன். தன் சொந்த வார்த்தைகளில் அதை எழுதியிருந்தாள். உலக நிலைமைகள் எப்படி மாறும் என்பதைச் சிறப்பாக விளக்கியிருந்தாள்” என்று பாராட்டினார். ஆங்னாவின் நல்நடத்தையையும் அடக்கமான உடையையும் கண்டு ஆசிரியை மனங்கவரப்பட்டு, வகுப்பில் எல்லாருக்கும் முன்பாக அவளைப் புகழ்ந்துப் பேசினார்.

யெகோவாவின் சாட்சிகள் அந்த ஆசிரியையை வீட்டில் சந்தித்தபோது, முன்பு அவர்களை மத வெறியர்கள் என்று கருதியதாகவும், ஆங்னா என்ற மாணவி தன் கண்ணோட்டத்தை மாற்றிவிட்டதாகவும் சொன்னார். 2007-⁠ல் நடந்த இயேசுவின் நினைவுநாள் அனுசரிப்பில் யெகோவாவின் சாட்சிகளுடன் அந்த ஆசிரியையும் கலந்துகொண்டு, அந்த நிகழ்ச்சியைக் கூர்ந்து கவனித்தார்.

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, யெகோவாவின் சாட்சிகள் பைபிளை மிக நன்றாக அறிந்திருப்பதைக் கண்டு வியந்துபோனார். இப்போது யெகோவாவின் சாட்சிகளுடன் தவறாமல் பைபிள் படித்து வருகிறார். இந்த ஆசிரியையைப் போலவே, மற்றவர்களுடைய நம்பிக்கைகளையும் அவர்களுடைய நடத்தையையும் ஊடுருவி பார்ப்பதற்கு நீங்களும் பரந்த மனமுள்ளவர்களாய் இருப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறோம். பைபிளைப் பற்றி இலவசமாகக் கற்றுக்கொள்ள நீங்கள் ஏன் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரைத் தொடர்புகொள்ளக் கூடாது? (g 3/09)

[பக்கம் 9-ன் படம்]

கட்டுரை எழுதும் ஆங்னா