Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

செல்வத்தைவிட சிறந்த செல்வம்

செல்வத்தைவிட சிறந்த செல்வம்

அமெரிக்காவில் ஒரு நல்ல வேலை பார்த்துவந்தார் ஜான். சின்ன வயதிலேயே உலகைச் சுற்றிவந்தார், கைநிறைய பணம் சம்பாதித்தார். அழகிய வீடு, சொகுசான வாழ்க்கை என அவரும் அவரது அருமை மனைவியும் சந்தோஷமாக வாழ்ந்துவந்தார்கள். பார்க்கிறவர்கள் எல்லாரும், “கொடுத்துவைத்தவர்கள்” என்று சொல்லி வாய்நிறைய வாழ்த்தினார்கள்.

இன்னொரு உதாரணத்தைக் கவனியுங்கள். பிரபல ஐரோப்பிய வங்கி ஒன்றில் வேலை கற்றுக்கொள்வதற்காக 5,000-⁠க்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்து குவிந்தன; ஆனால் எண்பது பேர்தான் தேர்வு செய்யப்பட்டார்கள், அதில் கோஸ்டாஸும் ஒருவர். * சில வருடங்களில், அவருக்கு மேலும் பல நல்ல வேலைகள் கிடைத்தன; கடைசியாக மற்றொரு வங்கியில் ஒரு பெரிய இலாகாவின் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். பின்பு, அந்த வேலையையும் விட்டுவிட்டுச் சொந்தமாக கம்பெனி ஒன்றை ஆரம்பித்தார்; பலர் ஆயுள்பூராவும் பாடுபட்டு சம்பாதிக்கும் பணத்தை இவர் ஒரே வருஷத்தில் சம்பாதித்தார். “நான் கொடுத்துவைத்தவன்” என்று இவரும் உணர்ந்தார்.

ஆனால், சொத்துசுகத்தைவிட சிறந்த செல்வம் இருக்கிறதென இந்த இரண்டு பேரும் இப்போது உறுதியாக நம்புகின்றனர். உதாரணமாக, இன்று கடவுளோடு நெருங்கிய பந்தத்தை வளர்த்துக்கொள்ள மக்களுக்கு உதவி செய்து, அவர்களுக்கு பைபிளைப் போதித்து வருகிறார் ஜான். “என் அனுபவத்திலிருந்து சொல்கிறேன், பொருள்களை வாங்கி குவிப்பதால் எந்தச் சந்தோஷமும் கிடைக்காது. ஓடி ஓடி பணம் சம்பாதிப்பதிலும், அதைப் பொத்திப்பொத்தி பாதுகாப்பதிலுமே நம்முடைய ஆயுசு கழிந்துவிடுகிறது. வேறொன்றுக்கும் நேரம் இருப்பதில்லை. ஆனால், பைபிள் நியமங்களின்படி வாழும்போது நிறைய ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றன​—⁠சந்தோஷமான மணவாழ்க்கை, மனநிம்மதி, சுத்தமான மனச்சாட்சி போன்றவை கிடைக்கின்றன” என்று ஜான் சொல்கிறார்.

கோஸ்டாஸும் இதேபோல்தான் சொல்கிறார்: “சொத்து சேர்ப்பதிலேயே வெறிபிடித்த மாதிரி நாம் அலைவதைக் கடவுள் விரும்புவதில்லை. என்னைக் கேட்டால், அன்றன்றைக்குத் தேவையானது இருந்தால் போதும், அதைவிட அதிகமாகக் கடவுள் நமக்கு எதைத் தருகிறாரோ அதை அவருடைய சித்தத்திற்கு இசைவாகப் பயன்படுத்துவது நம்முடைய கடமை என்றே நான் சொல்வேன்.” அநேகருக்கு பைபிள் நியமங்களைக் கற்றுக்கொடுப்பதற்காக, கோஸ்டாஸும் அவருடைய குடும்பத்தாரும் சமீபத்தில் மற்றொரு மொழியைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். “பெற்றுக்கொள்வதைவிட கொடுப்பதிலேயே அதிக சந்தோஷம் இருக்கிறது என்பதை நாங்கள் கற்றுக்கொண்டோம்” என்று சொல்லி முடிக்கிறார் வசிலிஸ்.​—அப்போஸ்தலர் 20:⁠35, NW.

எந்தவொரு செல்வத்தையும்விட ஆன்மீகச் செல்வமே மிகவும் மதிப்புமிக்கது என்பதை ஜானும் கோஸ்டாஸும் கற்றுக்கொண்டார்கள். “செல்வத்திற்கும் சந்தோஷத்திற்கும் இடையேயுள்ள சம்பந்தத்தைக் குறித்து [மனநல நிபுணர்கள்] பல பத்தாண்டுகளாகச் செய்த ஆராய்ச்சியின் முடிவைப்” பற்றி ஹார்வர்டு பல்கலை பேராசிரியர் டேனியேல் கில்பர்ட் சொல்கிறார். “ஒருவரைக் கொடிய வறுமையிலிருந்து விடுவித்து, நடுத்தர வாழ்க்கை வாழ்வதற்கு வழி செய்கிற வரைதான் செல்வம் மனிதனுக்குச் சந்தோஷத்தைத் தருகிறது. அதன்பிறகு எந்தச் சந்தோஷத்தையும் தருவதாகத் தெரியவில்லை என்ற முடிவுக்கு [நிபுணர்கள்] வந்திருக்கிறார்கள்” என்று அவர் மேலும் சொல்கிறார்.

பெரும்பாலும் அனுபவம்தான் பாடம் கற்பிக்கிறது

“ஒருவர் வறுமைக் கோட்டைத் தாண்டி வெளியே வந்தபிறகு, வருமானம் உயர்ந்தாலும் அவருடைய வாழ்க்கையில் சந்தோஷம் இருப்பதில்லை” என்கிறார் ஒரு சிந்தனையாளர். கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒரு செய்தியாளர் எஃகு தொழிலில் முன்னோடியாக விளங்கிய ஆன்ட்ரூ கார்னகீயைப் பேட்டி எடுத்தபோது அவர் சொன்ன வார்த்தைகளை இன்றும் மனதில் வைத்திருக்கிறார். ஆன்ட்ரூ கார்னகீ அப்போது உலகப் பணக்காரர்களில் ஒருவராய் விளங்கினார். அந்தச் செய்தியாளரிடம் கார்னகீ இவ்வாறு சொன்னார்: “என்னைப் பார்த்து யாரும் பொறாமைப்படாதீங்க. எனக்கு இவ்வளவு சொத்துசுகம் இருந்து என்ன பிரயோஜனம், எனக்கு இப்போது அறுபது வயசாகிறது. சாப்பிட்ட சாப்பாடுகூட ஜீரணிப்பதில்லை. எனக்கு மட்டும் இளமையும் ஆரோக்கியமும் திரும்ப கிடைப்பதாக இருந்தால், என்கிட்ட இருக்கிற எல்லாப் பணத்தையும் கொடுத்துவிடுவேன்.”

செய்தியாளர் மேலும் சொன்னது: “மிஸ்டர் கார்னகீ திடீரென என்பக்கம் திரும்பி கனத்த உள்ளத்துடன், ‘போன வாழ்க்கை திரும்பக் கிடைப்பதாக இருந்தால் அதற்காக நான் என்ன தியாகம் வேண்டுமானாலும் சந்தோஷமாகச் செய்வேன்’ என்று தழுதழுத்த குரலில் சொன்னபோது துக்கம் அவர் தொண்டையை அடைத்தது.” எண்ணெய்த் தொழிலில் பெரும்புள்ளியாக விளங்கிய ஜே. பால் ஜெட்டி என்ற இன்னொரு கோடீஸ்வரரும் இவரைப் போலவே சொன்னார்: “பணத்துக்கும் சந்தோஷத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. துக்கத்துடன் வேண்டுமானால் ஒருவேளை அதற்குச் சம்பந்தம் இருக்கலாம்.”

பைபிள் எழுத்தாளர் ஒருவர் கடவுளிடம் இப்படி வேண்டிக்கொண்டதை நீங்களும் ஆமோதிப்பீர்கள்: “எனக்குச் செல்வம் வேண்டாம், வறுமையும் வேண்டாம்; எனக்குத் தேவையான உணவை மட்டும் தந்தருளும். எனக்கு எல்லாம் இருந்தால், நான், ‘உம்மை எனக்குத் தெரியாது’ என்று மறுதலித்து, ‘ஆண்டவரைக் கண்டது யார்?’ என்று கேட்க நேரிடும். நான் வறுமையுற்றால், திருடனாகி, என் கடவுளின் திருப்பெயருக்கு இழிவு வருவிக்க நேரிடும்.”​—நீதிமொழிகள் 30:​8, 9, பொது மொழிபெயர்ப்பு.

பூர்வ இஸ்ரவேலை அரசாண்ட சாலொமோன், “எருசலேமில் எனக்குமுன் இருந்த எல்லாரையும்விடப் பெரிய செல்வனானேன்” என்றார். அதேசமயம், “அவை யாவும் வீண் . . . அவை அனைத்தும் காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்” என்ற உண்மையையும் மறைக்காமல் சொன்னார். அதோடு, ‘[யெகோவாவின்] ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்’ என்றும் கூறினார்.​—பிரசங்கி 2:9–11; 5:​12, 13, பொ.மொ.; நீதிமொழிகள் 10:⁠22.

நித்திய ஆசீர்வாதத்திற்கு வழி

ஆம், நம்முடைய ஆன்மீகத் தேவைகளைத் தகுந்த முறையில் திருப்தி செய்தால் மாத்திரமே உண்மையான சந்தோஷத்தை, நிரந்தரமான சந்தோஷத்தை, நாம் கண்டடைய முடியும். கடவுளுக்கு முதலிடம் கொடுத்தால் நம் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் செழித்தோங்குவோம், வெற்றி பெறுவோம்.

ஒரு சந்தோஷமான செய்தி என்னவென்றால், பணத்திற்காக நாம் என்றென்றைக்கும் இப்படிக் கவலைப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டியதில்லை. பேராசையும் சுரண்டலும் நிறைந்த இந்த வர்த்தக உலகம் வெகு சீக்கிரத்தில் அடியோடு ஒழிக்கப்படும் என பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது. (1 யோவான் 2:​15-⁠17) அதன்பின் புதிய உலகம் வரும்; அதில் கடவுளுடைய நீதியான நெறிமுறைகளே ஆதிக்கம் செலுத்தும். கடவுள் கொண்டிருந்த ஆதி நோக்கத்திற்கு இசைய இந்தப் பூமி பூஞ்சோலையாய் மாறும். இந்தப் பூமியெங்கும் சந்தோஷமும் சமாதானமும் அன்பும் அரசாளுவதைக் காண்பது எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதம்!​—ஏசாயா 2:2–4; 2 பேதுரு 3:13; 1 யோவான் 4:8–11.

கடவுளுக்கு முதலிடம் கொடுத்தால், நம் வாழ்க்கை செழித்தோங்கும்

அந்தச் சமயத்தில் வாழ்க்கை துறவறம் போலவும் இருக்காது, மந்த கதியிலும் நகராது. பூத்துக்குலுங்கும் பூங்காவன பூமியில் சதா காலமும் மனிதர்கள் வாழ வேண்டுமென்ற கடவுளுடைய ஆதி நோக்கம் நிறைவேறும்போது ஆன்மீகச் செல்வத்தோடு பொருட்செல்வமும் சேர்ந்து வரும். அங்கு அனைவரும் அனுபவித்து மகிழ்வதற்குப் போதிய உணவு, இருப்பிடம், அர்த்தமுள்ள வேலை இருக்கும்; வறுமையின் சுவடே தெரியாமல் போய்விடும் என்றெல்லாம் பைபிள் நமக்கு உறுதியளிக்கிறது.​—சங்கீதம் 72:16; ஏசாயா 65:​21-⁠23; மீகா 4:⁠4.

கடவுளாகிய யெகோவாமீது உண்மையான விசுவாசம் வைக்கும் அனைவரும் ஒருபோதும் ஏமாற்றம் அடைய மாட்டார்கள். (ரோமர் 10:​11-⁠13) ஆகவே, இப்போது இந்த உலகம் தருகிற செல்வத்தைவிட சிறந்த செல்வத்தை நாடுவது எவ்வளவு ஞானமான செயல்!​—1 தீமோத்தேயு 6:​6-⁠10. (g 3/09)

^ பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.