ஒற்றைப் பெற்றோரே, வெற்றி நிச்சயம்!
ஒற்றைப் பெற்றோரே, வெற்றி நிச்சயம்!
பெற்றோர் இருவரும் உள்ள குடும்பங்களை இன்று காண்பது அரிதாகவே இருக்கிறது. இதைச் சற்று கவனியுங்கள்: அமெரிக்காவில் மட்டும் 1 கோடியே 30 லட்சம் ஒற்றைப் பெற்றோர் இருக்கிறார்கள்; இவர்களில் பெரும்பாலோர் தாய்மார்கள். அந்த நாட்டிலுள்ள பிள்ளைகளில் சுமார் பாதிப்பேர், தங்கள் இளமைப் பருவத்தில் கொஞ்சக் காலத்தையாவது ஒற்றைப் பெற்றோருடன்தான் கழிப்பார்கள் என்று ஆய்வு காட்டுகிறது.
நீங்கள் ஒற்றைப் பெற்றோரா? அப்படியென்றால், குடும்ப வாழ்க்கையில் உங்களுக்கு வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையோடு இருங்கள். பின்வரும் ஆலோசனைகளைப் பின்பற்ற முயற்சி செய்யுங்கள்.
◼ விரக்தியோடு பேசுவதைத் தவிருங்கள். “ஒடுக்கப்பட்டோருக்கு ஒவ்வொரு நாளும் தொல்லை நாளே; மனமகிழ்ச்சி உள்ளவருக்கோ எல்லா நாள்களும் விருந்து நாள்களே.” (நீதிமொழிகள் 15:15, பொது மொழிபெயர்ப்பு) உண்மைதான், உங்களுடைய வாழ்க்கையின் நாட்கள் விருந்து நாட்களைப் போல் தோன்றாதிருக்கலாம். ஆனால், இந்த வசனம் காட்டுகிறபடி, மகிழ்ச்சி ஒருவருடைய சூழ்நிலைகளைவிட மனநிலையையே பெருமளவு சார்ந்திருக்கிறது. (நீதிமொழிகள் 17:22) உங்கள் பிள்ளைகளுடைய கதி அதோகதிதான் என்றோ, உங்கள் குடும்பம் சிதைந்து சின்னாபின்னமாகிவிட்டது என்றோ நினைப்பதால் எந்தப் பயனும் இல்லை. இதனால் உங்களுக்குச் சோர்வுதான் மிஞ்சும்; அதோடு, பெற்றோராக உங்கள் கடமைகளைச் செய்வது இன்னும் கஷ்டமாகிவிடும்.—நீதிமொழிகள் 24:10.
ஆலோசனை: உங்கள் நிலையை நினைத்து விரக்தியுடன் பேசும் வார்த்தைகளைப் பட்டியலிடுங்கள்; பின்பு, அவற்றிற்குப் பதிலாக எப்படி நம்பிக்கையோடு பேசலாம் என்பதை அவை ஒவ்வொன்றுக்கும் பக்கத்தில் எழுதுங்கள். உதாரணத்திற்கு, “எனக்குத் தாங்கிக் கொள்கிற சக்தியே இல்லை” என்ற வாக்கியத்திற்குப் பக்கத்தில், “தனி ஆளாக நின்று என் கடமையைச் செய்ய என்னால் முடியும், தேவையான உதவியைப் பெறவும் முடியும்” என்று எழுதுங்கள்.—பிலிப்பியர் 4:13.
◼ திட்டமிட்டுச் செலவழியுங்கள். ஒற்றைப் பெற்றோர் பலருக்கு, முக்கியமாகத் தாய்மாருக்கு, பணம்தான் பெரிய பிரச்சினை. ஆனால், சிலருடைய விஷயத்தில், திட்டமிட்டுச் நீதிமொழிகள் 22:3) பணவிஷயத்தில் “ஆபத்தை” தவிர்ப்பதற்கு, முன்னதாகத் திட்டமிடுவதும் முன்யோசனையுடன் செயல்படுவதும் அவசியம்.
செலவழிக்கிற திறமையால் அந்தப் பிரச்சினையைச் சமாளிக்கலாம். “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (ஆலோசனை: உங்கள் வரவுசெலவு கணக்கை ஒரு பேப்பரில் எழுதுங்கள். ஒரு மாதம் செலவழிக்கிற பணத்திற்குக் கணக்கு எழுதுங்கள்; உங்கள் பணத்தை எவற்றிற்கெல்லாம் செலவழிக்கிறீர்கள் என்று பாருங்கள். பணத்தை நீங்கள் செலவழிக்கிற விதம் சரிதானா என்று சிந்தியுங்கள். எதை வாங்கினாலும் கடன் வைக்கிற பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா? அப்பா/அம்மா இல்லாத குறை தெரியக்கூடாது என்பதற்காகப் பிள்ளைகள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிற பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா? உங்கள் பிள்ளைகள் பெரியவர்களாக இருந்தால் அவர்களோடு உட்கார்ந்து, எப்படிப் பணத்தை மிச்சப்படுத்தலாம் என்று பேசிப் பாருங்கள். அது அவர்களுக்கு நல்ல பயிற்சியாய் அமையும். அவர்களும்கூட ஒருசில நடைமுறை ஆலோசனைகளைக் கொடுக்கலாம்!
◼ உங்கள் முன்னாள் துணையுடன் சமாதானமாய் நடந்துகொள்ளுங்கள். பிள்ளையை வளர்க்கும் பொறுப்பை முன்னாள் துணையுடன் நீங்கள் பகிர்ந்துகொள்கிறீர்கள் என்றால், அவரைப் பற்றி பிள்ளையிடம் மோசமாகப் பேசாதீர்கள்; அல்லது, அவர் என்னென்ன செய்கிறார் என்பதைத் துப்பறிய உங்கள் பிள்ளையைப் பயன்படுத்தாதீர்கள். இப்படிச் செய்வது கெடுதலானது. * மாறாக, உங்கள் பிள்ளையைக் கண்டிக்கிற விஷயத்திலும் பிள்ளையின் நலனைப் பாதிக்கிற மற்ற விஷயங்களிலும் உங்கள் முன்னாள் துணையைச் சக பணியாளர் போல் நினைத்து நடந்துகொள்வது மிகவும் நல்லது. “கூடுமானால், உங்களால் முடிந்தவரை எல்லாரோடும் சமாதானமாகுங்கள்” என்று பைபிள் சொல்கிறது; இது, உங்கள் முன்னாள் துணையையும் உட்படுத்துகிறது.—ரோமர் 12:18.
ஆலோசனை: அடுத்த முறை உங்கள் முன்னாள் துணையுடன் கருத்து வேறுபாடு எழுந்தால், அவரைச் சக பணியாளர் போல் நினைத்து நடந்துகொள்ளுங்கள். வேலை செய்யுமிடத்தில் எல்லாருடனும், உங்களுக்கு அவ்வளவாகப் பிடிக்காதவர்களுடனும்கூட, சமாதானமாய் இருக்க நீங்கள் முயற்சி செய்வீர்கள். அதேபோல் உங்கள் முன்னாள் துணையுடனும் நடந்துகொள்ளுங்கள். உங்கள் இருவராலும் எப்போதுமே ஒத்துப்போக முடியாவிட்டாலும் சின்னச் சின்ன விஷயங்களையெல்லாம் பெரிதுபடுத்த வேண்டியதில்லை.—லூக்கா 12:58.
◼ நல்ல முன்மாதிரி வையுங்கள். உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என் பிள்ளைகள் என்னென்ன ஒழுக்கநெறிகளைப் பின்பற்ற வேண்டும், என்னென்ன குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்? அதே ஒழுக்கநெறிகளை நான் பின்பற்றுகிறேனா, அதே குணங்களை நான் வெளிக்காட்டுகிறேனா?’ உதாரணத்திற்கு, நீங்கள் ஒற்றைப் பெற்றோராக இருந்தாலும், மொத்தத்தில் சந்தோஷமாக இருக்கிறீர்களா? அல்லது உங்கள் நிலைமையை நினைத்து வாழ்க்கையே வெறுத்துப் போயிருக்கிறீர்களா? உங்கள் முன்னாள் துணை உங்களை நடத்திய விதத்தை எண்ணி இன்னமும் மனதுக்குள் புகைந்துகொண்டிருக்கிறீர்களா? அல்லது, உங்களையும் மீறி நடந்த அநீதிகளைச் சகித்துக்கொண்டு வாழ்கிறீர்களா? (நீதிமொழிகள் 15:18) இவையெல்லாம் சாதாரண விஷயங்கள் அல்ல என்பதும், இவற்றை உங்களால் முழுக்க முழுக்கச் சமாளிக்க முடியாது என்பதும் உண்மைதான். ஆனால், உங்களுடைய நடத்தையும் மனப்பான்மையும் உங்கள் பிள்ளைகளைத் தொற்றிக்கொள்ளலாம்.
ஆலோசனை: உங்கள் பிள்ளைகள் வளர்ந்து ஆளாகும்போது என்ன மூன்று குணங்களை வெளிக்காட்டும்படி நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்பதை எழுதுங்கள். * அவற்றை அவர்கள் வளர்த்துக்கொள்வதற்கு நீங்கள் முன்மாதிரி வைக்க இப்போதே என்ன செய்யலாம் என்பதை அந்த ஒவ்வொரு குணத்திற்கும் பக்கத்தில் எழுதுங்கள்.
◼ உங்களையும் கவனித்துக்கொள்ளுங்கள். பம்பரமாகச் சுழலும் இந்த வாழ்க்கையில், உங்கள் உடல்நலத்தையும் மனநலத்தையும் கவனிக்காமல் விட்டுவிடுவது எளிது. ஆனால், அந்தத் தவறை மட்டும் செய்துவிடாதீர்கள்! ‘ஆன்மீக விஷயங்களில் ஆர்வப் பசியை’ தீர்த்துக்கொள்வது மிக முக்கியம்! (மத்தேயு 5:3) பெட்ரோல் இல்லாத காரை ரொம்ப தூரம் ஓட்ட முடியாது என்பதை நினைவில் வையுங்கள். அதேபோல், நீங்கள் அவ்வப்போது “பெட்ரோல் போட்டுக்கொள்ளாவிட்டால்,” அதாவது ஆன்மீக உணவு அருந்தாவிட்டால், வாழ்க்கையை ஓட்ட முடியாது.
அதோடு, ‘நகைக்கவும் ஒரு காலமுண்டு,’ ‘நடனம்பண்ணவும் ஒரு காலமுண்டு.’ (பிரசங்கி 3:4) பொழுதுபோக்கு, நேரத்தை வீணடிக்கும் ஒன்றல்ல. அது உங்களுக்குப் புத்துணர்ச்சியையும் தெம்பையும் அளித்து, ஒற்றைப் பெற்றோராக எல்லாவற்றையும் சகிக்க உதவும்.
ஆலோசனை: உங்களைப் போன்ற ஒற்றைப் பெற்றோர் எப்படித் தங்களைக் கவனித்துக்கொள்கிறார்களென அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். ‘மிக முக்கியமான காரியங்கள் எவையென நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்ளும்’ அதே சமயத்தில், உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் ஏதேனும் பொழுதுபோக்கில் ஒவ்வொரு வாரமும் சிறிது நேரத்தையாவது செலவிட முடியுமா? (பிலிப்பியர் 1:10) நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதையும், அதை எப்போது செய்ய விரும்புகிறீர்கள் என்பதையும் பேப்பரில் எழுதுங்கள். (g09 10)
[அடிக்குறிப்புகள்]
^ கூடுதல் தகவலுக்கு இந்தப் பத்திரிகையில், “பிளவுபட்ட குடும்பம்—பாதிக்கப்படும் பருவ வயது பிள்ளைகள்” என்ற தலைப்பில் பக்கங்கள் 18-21-லுள்ள கட்டுரையைப் பாருங்கள்.
^ “மதிப்புமரியாதை,” “நியாயம்,” “மன்னித்து, மறப்பது” போன்ற சில குணங்களை எழுதலாம்; இவை இந்தப் பத்திரிகையில் பக்கங்கள் 6-8-ல் சிந்திக்கப்பட்டுள்ளன.