வழி 1 முக்கியமானவற்றிற்கு முதலிடம் கொடுத்தல்
வழி 1 முக்கியமானவற்றிற்கு முதலிடம் கொடுத்தல்
‘மிக முக்கியமான காரியங்கள் எவையென நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்.’—பிலிப்பியர் 1:10.
இதன் அர்த்தம். இனிய இல்லற வாழ்வில் கணவன் தன் மனைவியின் தேவைகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பார், மனைவியும் தன் கணவனின் தேவைகளுக்கே முதலிடம் தருவார்; சொந்த விருப்புவெறுப்புகளுக்கும், உடைமைகளுக்கும், வேலைகளுக்கும், நண்பர்களுக்கும் சொந்தபந்தங்களுக்கும்கூட இரண்டாவது இடம்தான். கணவனும் மனைவியும் ஒன்றுசேர்ந்து நிறைய நேரம் செலவிடுவார்கள். பிள்ளைகளோடு சேர்ந்தும் அதிக நேரம் செலவழிப்பார்கள். இருவரும் குடும்ப நலனுக்காக எதையும் தியாகம் செய்யத் தயாராய் இருப்பார்கள்.—பிலிப்பியர் 2:4.
இதன் முக்கியத்துவம். குடும்ப ஏற்பாட்டை பைபிள் உயர்வாகக் கருதுகிறது. சொல்லப்போனால், குடும்பத்தைப் பராமரிக்காதவர் ‘விசுவாசத்தில் இல்லாதவரைவிட மோசமானவராக’ இருப்பார் என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (1 தீமோத்தேயு 5:8) என்றாலும், எது முக்கியம், எது முக்கியமில்லை என்ற கருத்துகள் காலப்போக்கில் மாறலாம். குடும்ப நல ஆலோசகர் ஒருவர், குடும்பஸ்தர்களோடு ஒரு கலந்தாய்வை நடத்தினார்; அதில் கலந்துகொண்ட முக்கால்வாசிப் பேர் தங்கள் குடும்பத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட்டுவிட்டு வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்ததாய் அவருக்குத் தோன்றியது. குடும்பத்தில் பிரச்சினைகள் எழுந்தால் அவற்றைச் சட்டெனச் சரிசெய்துவிட்டு மீண்டும் வேலையில் மூழ்கிவிட அவர்கள் வழிதேடினார்களாம். இதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? குடும்பத்திற்கு முதலிடம் தருவதாகச் சொல்வது எளிது, ஆனால் அதைச் செய்வது கடினம் என்பதைத் தெரிந்துகொள்கிறோம்.
இதைச் செய்து பாருங்கள். குடும்பத்திற்கு எந்தளவு முக்கியத்துவம் தருகிறீர்களென உங்களையே சோதித்துப் பாருங்கள். அதற்காக, உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்:
◼ என் மனைவியும்/கணவரும் பிள்ளைகளும் என்னிடம் பேச வரும்போது, அவர்கள் சொல்வதை உடனடியாகக் காதுகொடுத்துக் கேட்கிறேனா?
◼ நான் என்னென்ன செய்தேன் என்பதைப் பற்றி மற்றவர்களிடம் பேசும்போது, என் குடும்பத்தாருடன் சேர்ந்து செய்தவற்றைப் பற்றி அடிக்கடி சொல்கிறேனா?
◼ குடும்பத்தாருடன் நேரம் செலவிட வேண்டியிருந்தால், (வேலையிலோ மற்றபடியோ) எனக்குக் கொடுக்கப்படும் கூடுதல் பொறுப்புகளை ஏற்க மறுத்துவிடுவேனா?
இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் ஆம் என்று பதிலளித்தால், சரியான காரியங்களுக்கே முதலிடம் தருகிறீர்களென நீங்கள் முடிவு செய்யலாம். ஆனால், இதே கேள்விகளை உங்கள் மனைவியிடமும்/கணவரிடமும் பிள்ளைகளிடமும் கேட்டால், உங்களைப் பற்றி என்ன சொல்வார்கள்? உண்மையில், நாம் சரியான காரியங்களுக்குத்தான் முதலிடம் தருகிறோமா என்பதைத் தெரிந்துகொள்ள, நம்மை நாமே எப்படி எடைபோடுகிறோம் என்பது மட்டும் முக்கியமல்ல. மற்றவர்கள் நம்மை எப்படி எடைபோடுகிறார்கள் என்பதும் முக்கியம். இந்த நியதி, இல்லறம் நல்லறமாவதற்குக் கைகொடுக்கிற மற்ற வழிகளுக்கும் பொருந்தும்; அவற்றை இனிவரும் பக்கங்களில் நாம் பார்ப்போம்.
தீர்மானம் எடுங்கள். உங்கள் குடும்பத்திற்கே முதலிடம் தருகிறீர்கள் என்பதை நீங்கள் காட்டுவதற்கான ஓரிரண்டு வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள். (உதாரணத்திற்கு, முக்கியமில்லாத காரியங்களுக்கு நேரம் செலவிடுவதைக் குறைத்துக்கொண்டு, அந்த நேரத்தைத் துணையோடும் பிள்ளைகளோடும் செலவிடத் தீர்மானியுங்கள்.)
உங்கள் தீர்மானங்களைப் பற்றி உங்கள் குடும்பத்தாரிடம் ஏன் சொல்லக் கூடாது? மாற்றங்கள் செய்ய ஒருவர் ஒத்துக்கொள்ளும்போது பெரும்பாலும் மற்றவர்களும் ஒத்துக்கொள்வார்கள். (g09 10)
[பக்கம் 3-ன் படம்]
குடும்பத்திற்கு முதலிடம் தருபவரே இல்லற வாழ்வில் வெற்றிபெறுகிறார்