வெற்றிப் படியில்—பகுதி ஒன்று
வெற்றிப் படியில்—பகுதி ஒன்று
விழித்தெழு! பத்திரிகையின் இந்தச் சிறப்பிதழ் ஏற்கெனவே விளக்கியபடி, சந்தோஷமான குடும்பங்களில் பிரச்சினைகள் வராமல் இல்லை. இதில் ஆச்சரியப்படுவதற்கும் ஒன்றுமில்லை; ஏனென்றால், ‘சமாளிப்பதற்குக் கடினமான கொடிய காலங்களில்’ நாம் வாழ்வதாக பைபிள் சொல்கிறது. (2 தீமோத்தேயு 3:1) ஆகவே, ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதோவொரு பிரச்சினை வரத்தான் செய்யும்; ஆம், வீட்டுக்கு வீடு வாசற்படிதான்.
ஆனால், எந்தக் குறையுமே இல்லாமல் சகல சௌபாக்கியங்களுடன் வாழ்ந்தால்தான் வெற்றிகாண முடியும் என்றில்லை. மாறாக, “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 5:3) சில குடும்பங்கள், பைபிள் நியமங்களைக் கடைப்பிடித்து தங்கள் ஆன்மீக ஆர்வப்பசியைத் தீர்த்துக்கொள்கின்றன; அப்படிப்பட்ட குடும்பங்கள், சகல சௌபாக்கியங்களையும் பெறாத சூழ்நிலைகளில்கூட வெற்றியின் ரகசியத்தைக் கண்டிருக்கின்றன. இதோ, சில உதாரணங்கள்:
குறைபாடுள்ள குழந்தையைக் கவனித்துக்கொள்ளுதல். குடும்பத்திலுள்ளவர்களை, அதுவும் ஏதேனும் குறைபாடுள்ளவர்களை, கவனித்துக்கொள்வது மிக முக்கியமென பைபிள் சுட்டிக்காட்டுகிறது. “ஒருவன் தன்னை நம்பியிருப்பவர்களை, முக்கியமாகத் தன் குடும்ப அங்கத்தினர்களை, கவனிக்கவில்லை என்றால் அவன் விசுவாசத்தை நிராகரித்தவனாகவும் விசுவாசத்தில் இல்லாதவனைவிட மோசமானவனாகவும் இருப்பான்” என்று அது குறிப்பிடுகிறது.—1 தீமோத்தேயு 5:8.
பக்கம் 15-ல், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த விக்டர் என்ற தகப்பனின் அனுபவம் கொடுக்கப்பட்டிருக்கிறது; உடல் குறைபாடுள்ள ஒரு மகனை அவரும் அவரது மனைவியும் எப்படி 40 வருடங்களுக்கும் மேலாகக் கவனித்து வந்திருக்கிறார்கள் என அவர் விவரிக்கிறார்.
தத்துப்பிள்ளையாக வளருதல். பெற்றெடுத்த தாயும் தகப்பனும் கைவிட்டாலும் தன்மானத்தை இழக்காமல் சுயகௌரவத்தோடு வாழ பைபிள் நியமங்கள் ஒருவருக்கு உதவலாம். சொல்லப்போனால், தகப்பனில்லாத பிள்ளைகளுக்கு யெகோவா தேவன் ‘சகாயராக,’ அதாவது துணையாக, இருக்கிறாரென பைபிள் சொல்கிறது.—சங்கீதம் 10:14.
பக்கம் 16-ல், அமெரிக்காவைச் சேர்ந்த கென்யாட்டா என்ற இளம் பெண் தன் அனுபவத்தைச் சொல்கிறார்; பெற்றெடுத்த அம்மா அப்பாவைக் கண்ணில்கூட பார்க்காமல் வளர்ந்த சோகத்தை அவர் எப்படிச் சமாளிக்கக் கற்றுக்கொண்டாரென விளக்குகிறார்.
அம்மாவையோ அப்பாவையோ பறிகொடுத்த துக்கத்தைச் சமாளித்தல். பெற்றோரில் ஒருவர் இறந்துவிடும்போது பிள்ளைகளின் மனதில் ஏற்படும் ரணம் எளிதில் ஆறுவதில்லை. ஆனால், பைபிள் அவர்களுக்கு அருமருந்து அளிக்கலாம். அதன் எழுத்தாளரான யெகோவா, ‘எல்லா விதமான ஆறுதலின் கடவுளாக’ இருக்கிறார்.—2 கொரிந்தியர் 1:3.
பக்கம் 17-ல், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆன்ஜலா என்ற இளம் பெண்ணின் அனுபவத்தை வாசித்துப் பாருங்கள்; கடவுளோடு நெருங்கியிருப்பது, தனக்கு ஏற்பட்ட பேரிழப்பைச் சமாளிக்க எப்படி உதவுகிறதென அவர் விளக்குகிறார்.
சவால்களைச் சந்திக்காத குடும்பங்களே இல்லை. ஆனால், பைபிள் நியமங்களைக் கடைப்பிடிக்கிறவர்கள், சவால்களை வெற்றிகரமாகச் சமாளிப்பதற்கான முக்கிய வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த உண்மையை, இனிவரும் பக்கங்களில் உள்ள அனுபவங்கள் எடுத்துக்காட்டும். (g09 10)
[பக்கம் 15-ன் பெட்டி/படங்கள்]
குறைபாடுள்ள குழந்தையைக் கவனித்துக்கொள்ளுதல்
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த விக்டர் மேன்ஸ் சொல்கிறார்
“என் மகன் ஆன்ட்ரூ பிறந்ததிலிருந்தே, அவனுக்கு டிரஸ் போடுவது, குளிப்பாட்டுவது என எல்லாவற்றையும் நாங்கள்தான் செய்கிறோம்; சிலசமயங்களில் ஊட்டியும் விடுகிறோம். இப்போது அவனுக்கு 44 வயது.”
ஒரு வயதாகியும் ஆன்ட்ரூ நடக்க ஆரம்பிக்காதபோது, அவனுக்கு ஏதாவது பிரச்சினை இருக்குமோ என சந்தேகப்பட்டோம். அந்தச் சமயம் பார்த்து அவனுக்கு வலிப்பு ஏற்பட்டது. அவனை ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக்கொண்டு ஓடினோம்; அவனுக்குக் காக்காய்வலிப்பு நோய் இருப்பது அப்போதுதான் தெரியவந்தது. அதுமட்டுமல்ல, மற்ற சோதனைகள் செய்ததில், அவனுடைய மூளை பாதிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
பல சிகிச்சைகளை அவனுக்கு அளித்துப் பார்த்ததில், ஒருவழியாக அவனுக்கு வலிப்புகள் வருவது நின்றது. கொஞ்சக் காலத்திற்கு, அவன் தினமும் நான்கு விதமான மருந்துகளை மூன்று வேளையும் சாப்பிட வேண்டியிருந்தது. ஆனால், அவனுடைய மூளைக்கோளாறைச் சரிப்படுத்த எந்த மருந்தும் இல்லை. இப்போது 44 வயதாகிவிட்டாலும், ஐந்து அல்லது ஆறு வயது குழந்தையின் அளவுக்குத்தான் அவனுக்கு மூளை வளர்ச்சி இருக்கிறது.
ஆன்ட்ரூவை ஏதாவதொரு விசேஷ மருத்துவமனையில் சேர்த்துவிடும்படி டாக்டர்கள் ஆலோசனை கொடுத்தார்கள், ஆனால் எங்களுக்கு அதில் விருப்பம் இல்லை. ஆன்ட்ரூவை எங்களாலேயே கவனித்துக்கொள்ள முடியுமென நினைத்தோம்; அதனால், எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அவனை வீட்டிலேயே வைத்து பார்த்துக்கொள்ள முடிவு செய்தோம்.
ஆகவே, எங்கள் வீட்டிலுள்ள எல்லாருமே அவனைக் கவனித்துக்கொண்டிருந்தோம். எங்களுடைய இன்னொரு மகனும் இரண்டு மகள்களும் எங்களோடு வசித்த சமயத்தில் ரொம்ப உதவியாக இருந்தார்கள், அவர்களுக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்! அதுமட்டுமல்லாமல், நாங்கள் யெகோவாவின் சாட்சிகள் என்பதால், எங்கள் சபையிலுள்ளவர்களும் எங்களுக்கு எப்போதும் பக்கபலமாக இருந்தார்கள். சிலசமயங்களில் அவர்கள் எங்களுக்காகச் சாப்பாடு தயாரித்துக் கொடுத்தார்கள்; அதுமட்டுமா, நாங்கள் ஊழியத்திற்குப் போனபோதோ மற்ற வேலைகளைச் செய்தபோதோ அவர்களே ஆன்ட்ரூவைக் கவனித்துக்கொண்டார்கள்.
வருங்காலத்தில், “எவரும், ‘நான் நோயுற்றுள்ளேன்’ என்று சொல்ல மாட்டார்கள்” என ஏசாயா 33:24 (ஈஸி டு ரீட் வர்ஷன்) சொல்கிறது. கடவுளுடைய இந்த வாக்குறுதியை நாங்கள் எப்போதுமே நினைவில் வைத்திருக்கிறோம். அவர் புதிய உலகைக் கொண்டுவந்து எல்லாவித நோய்நொடிகளையும் ஒழித்துக்கட்டப்போவதாகச் சொல்லியிருக்கிறார், அதைக் கண்டிப்பாகச் செய்து காட்டுவார் என்று நாங்கள் முழுமையாக நம்புகிறோம். (2 பேதுரு 3:13) ஆகவே, ஆன்ட்ரூ பூரண சுகமடையப்போகும் அந்த நாளுக்காக ஆவலோடு காத்திருக்கிறோம். அதுவரை, கடவுளுடைய வேலைகளுக்கு வாழ்க்கையில் முதலிடம் கொடுத்தால் எங்களுக்குத் தேவையானதையெல்லாம் கடவுள் கொடுப்பார் என்று இயேசு சொன்ன வார்த்தைகளில் நம்பிக்கை வைத்திருக்கிறோம். (மத்தேயு 6:33) அவை நூற்றுக்கு நூறு உண்மை என்பதை நாங்கள் அனுபவத்தில் கண்டிருக்கிறோம். எங்களுக்கு எப்போதுமே எந்தக் குறையும் இருந்ததில்லை.
உடல்நலக் குறைபாடுள்ள ஒரு குடும்ப அங்கத்தினரை வீட்டில் வைத்துக் கவனிப்பது எல்லாருக்குமே வசதிப்படாது என்பது உண்மைதான். ஆனால், அப்படிக் கவனிப்பவர்களுக்கு நான் சில விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன். முதலாவதாக, எப்போதும் உருக்கமாக ஜெபம் செய்துகொண்டே இருங்கள். (1 பேதுரு 5:6, 7) இரண்டாவதாக, உங்கள் பிள்ளையை எந்நேரமும் கண்ணுக்குக் கண்ணாகப் பார்த்துக்கொள்ளுங்கள்; யெகோவா தேவனைப் பற்றி புரிந்துகொண்டு அவரை நேசிக்கிற திறன் அவனுக்கு இல்லையென ஒருபோதும் முடிவுகட்டிவிடாதீர்கள். (எபேசியர் 6:4) மூன்றாவதாக, வீட்டிலுள்ள எல்லாருமே அவனைக் கவனித்துக்கொள்ள வாய்ப்பு கொடுங்கள். நான்காவதாக, உங்கள் வீட்டில்தான் உங்கள் பிள்ளைக்கு அன்பும் பாசமும் பெருமளவு கிடைக்கும் என்பதை நினைவில் வையுங்கள். ஒவ்வொருவருடைய சூழ்நிலைகளும் வேறுபடலாம் என்பது நிஜம்தான். ஆனால் எங்களைப் பொறுத்தவரை, ஆன்ட்ரூவை வீட்டிலேயே வைத்துப் பார்த்துக்கொள்ள முடிவு செய்ததற்காக நாங்கள் ஒருபோதும் வருந்தியதில்லை. ஆன்ட்ரூ இப்போது ஒரு ஆம்பிளைதான் என்றாலும், அவன் இன்னமும் என் உயிருக்கு உயிரான குழந்தை! (g09 10)
[பக்கம் 16-ன் பெட்டி/படங்கள்]
தத்துப்பிள்ளையாக வளருதல்
அமெரிக்காவைச் சேர்ந்த கென்யாட்டா யங் சொல்கிறார்
“இரண்டாம் தாரத்தின் பிள்ளையாக இருந்தால் ஓரளவாவது இரத்த பந்தம் இருக்கும். ஆனால், நான் தத்துப்பிள்ளையாக இருப்பதால், அதற்குக்கூட எனக்குக் கொடுத்து வைக்கவில்லை. நான் அம்மா ஜாடையா, அப்பா ஜாடையா என்றுகூட எனக்குத் தெரியாது.”
என் அப்பா யாரென்று எனக்குத் தெரியாது, என் அம்மாவையும் நான் பார்த்தது கிடையாது. நான் அம்மாவின் வயிற்றில் இருந்தபோது அவர் அளவுக்குமீறி குடித்தார், எக்கச்சக்கமாகப் போதைமருந்தை எடுத்தார். நான் பிறந்ததிலிருந்தே யார் யாரோ என்னை வளர்த்தார்கள்; கிட்டத்தட்ட இரண்டு வயதானபோதுதான் நான் தத்தெடுக்கப்பட்டேன்.
என்னைத் தத்தெடுத்த அப்பா, முதன்முதலில் என் ஃபோட்டோவைப் பார்த்ததுமே உடனடியாக என்னைத் தத்தெடுப்பதென முடிவு செய்துவிட்டாராம். நானும், புதிதாகக் கிடைத்த அம்மாவிடம் சட்டென ஒட்டிக்கொண்டேன். ‘நீங்கள்தான் என் அம்மா, என்னை உங்கள் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போவீர்களா?’ என்று கேட்டேன்.
ஆனால், நான் சின்னப்பிள்ளையாக இருந்தபோது, ஏதாவது தப்பு செய்துவிட்டால் என்னைத் திருப்பி அனுப்பிவிடுவார்களோ என்று பயந்தது இப்போதும் ஞாபகம் இருக்கிறது. நான் மற்ற பிள்ளைகளைப் போல் உம்மென்று இருக்கக் கூடாது, சுகமில்லாமல் படுத்துவிடக் கூடாது என்றெல்லாம் நினைத்தேன். சொல்லப்போனால், எனக்குச் சளி பிடித்துவிடக் கூடாதென்றுகூட ஜாக்கிரதையாக இருந்தேன்! என் பெற்றோர் அடிக்கடி என்னிடம், “உன்மேல் நாங்கள் உயிரையே வைத்திருக்கிறோம், உன்னை ஒருபோதும் திருப்பி அனுப்ப மாட்டோம்” என்று சொன்னார்கள்.
இப்போது வளர்ந்த பிறகும், சிலசமயங்களில் வேண்டாத யோசனைகள் வருகின்றன; ‘என்னயிருந்தாலும், நான் தத்துப்பிள்ளைதானே, சொந்தப் பிள்ளையைப் போல் ஆவேனா’ என்றெல்லாம் யோசிக்கிறேன். ஒருவழியாக என் மனதைச் சமாதானப்படுத்துவதற்குள் யாராவது வந்து “உனக்கு எவ்வளவு அருமையான அம்மா அப்பா கிடைத்திருக்கிறார்கள்! உன்னை இப்படிக் கஷ்டப்பட்டு வளர்ப்பதற்கு நீ எவ்வளவு நன்றியுடன் இருக்க வேண்டும்!” என்பார்கள். நான் நன்றியுடன் இருக்கிறேன்தான். ஆனால், அப்படியெல்லாம் சொல்வது, என்னிடம் ஏதோ குறை இருப்பதுபோலவும், ஒருவர் கஷ்டப்பட்டுத்தான் என்மேல் அன்பு காட்ட முடியும் என்பதுபோலவும் நினைக்க வைக்கிறது.
என் சொந்த அப்பா யாரென்று என்னால் தெரிந்துகொள்ள முடியாமலே போய்விடலாம் என்ற நிஜத்தை என்னால் ஜீரணிக்க முடிவதில்லை. சிலசமயங்களில் என்னைப் பெற்றெடுத்த அம்மாவை நினைத்தால் கோபமாக வரும்; அவர் தன் கெட்ட பழக்கங்களை விட்டுவிட்டு என்னை வளர்த்திருக்கலாம் அல்லவா, நான் என்ன அவ்வளவு வேண்டாதவளா என்று தோன்றும். ஆனால் மற்ற சமயங்களில், அவரை நினைத்தால் பாவமாக இருக்கும். என்றாவது ஒரு நாள் அவரைப் பார்த்தால், ‘நான் சந்தோஷமாக இருக்கிறேன், என்னை அம்போவென விட்டுவிட்டுப் போனதற்காக வருத்தப்படாதீர்கள்’ என்று சொல்ல வேண்டுமென நினைப்பேன்.
என்னைத் தத்தெடுத்த பெற்றோர் யெகோவாவின் சாட்சிகள்; அவர்கள் எனக்குச் செய்த மிகப் பெரிய நல்ல காரியம், பைபிளைப் பற்றிக் கற்றுக்கொடுத்ததுதான். எப்போதுமே என் மனதை வருடும் ஒரு வசனம், சங்கீதம் 27:10. “என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்” என்று அது சொல்கிறது. என் விஷயத்தில் அது முழுக்க முழுக்க உண்மை. தத்தெடுக்கப்படுவதில் சில நன்மைகளும் உண்டு. உதாரணத்திற்கு, என் சொந்த குடும்பத்தைப் பற்றி எனக்குத் தெரியாததால், மற்றவர்களுடைய குடும்பத்தையும், அவர்களுடைய வித்தியாசமான பின்னணிகளையும் தெரிந்துகொள்வதில் எனக்கு அதிக ஆர்வம் இருக்கிறது. ஜனங்கள் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும், கிறிஸ்தவ ஊழியம் செய்வதற்கு அது மிகவும் முக்கியம். நான் யெகோவாவின் சாட்சியாக இருப்பதால் பைபிளைப் பற்றி மற்றவர்களிடம் பேசுகிறேன்; இதனால் தன்மானமும், வாழ்க்கைக்கு ஓர் அர்த்தமும் கிடைத்திருக்கிறது. நான் சோர்வடையும் போதெல்லாம் ஊழியத்திற்குப் போய் மற்றவர்களுக்கு உதவுகிறேன். அவர்களுக்கு பைபிளைப் பற்றிக் கற்றுக்கொடுப்பதன் மூலம் உண்மையிலேயே அவர்களுடைய நெருங்கிய நண்பராக ஆக முடிகிறது. ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒவ்வொரு கதைதான். (g09 10)
[பக்கம் 17-ன் பெட்டி/படங்கள்]
அம்மாவையோ அப்பாவையோ பறிகொடுத்த துக்கத்தைச் சமாளித்தல்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆன்ஜலா ரட்ஜர்ஸ் சொல்கிறார்
“என் அப்பா இறந்தபோது, ‘எனக்கு இனி என்ன ஆகுமோ ஏது ஆகுமோ’ என்று பயப்பட ஆரம்பித்தேன். என்னைப் பற்றி முழுக்க முழுக்க தெரிந்து வைத்தவர் என் அப்பாதான், எனக்கு வந்த எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்து வைத்தவரும் என் அப்பாதான். அவரே இல்லாமல் போய்விட்டதை நினைத்து தவித்தேன்.”
பத்து வருடங்களுக்கு முன்பு நான் டீனேஜ் பருவத்தில் இருந்தபோது என் அப்பா இறந்தார். அதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு அவருக்கு ஒரு ஆபரேஷன் நடந்தது. அவர் ஆஸ்பத்திரியில் இருந்தபோதே, இனி ஒன்றும் செய்ய முடியாதென டாக்டர்கள் கைவிரித்துவிட்டார்கள். ஆனால், இன்னும் ஏதாவது செய்ய முடியுமா என தெரிந்துகொள்ள என் அம்மா துடித்தார், என் அண்ணன் மயங்கி விழுந்தான், நானோ ஏதேதோ உணர்ச்சிகளால் பைத்தியம் பிடித்தவள் போல் இருந்தேன். ஆறு மாதங்களுக்குப் பிறகு, என் அப்பா இறந்துவிட்டார்.
கொஞ்சக் காலத்திற்கு, ஒரு தெளிவே இல்லாமல் இப்படியும் அப்படியுமாக யோசித்துக் கொண்டிருந்தேன். உதாரணத்திற்கு, என் உணர்ச்சிகளை என் நண்பர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென நினைத்தேன்; அதேசமயத்தில், ‘ஐயோ, பாவம்’ என்பதுபோல் என்னை அவர்கள் நடத்தக்கூடாதென்றும் நினைத்தேன். அதனால், என் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் மனதுக்குள் பொத்தி வைக்க முயற்சி செய்தேன். அதுமட்டுமல்ல, அவர்களோடு எப்போதும்போல் சிரித்துப் பேசிப் பழகினால், நான் ஓரளவுக்கு சகஜ நிலைக்குத் திரும்பிவிட்டேன் என்று நினைத்துவிடுவார்களோ என பயந்தேன், உண்மையில் நான் சகஜ நிலைக்குத் திரும்பவில்லை. இப்போது நினைத்துப் பார்த்தால், என் நண்பர்கள் என்னை எந்தளவுக்குப் பொறுத்துப் போயிருக்கிறார்களென புரிகிறது!
அப்பா இறந்ததால் அடிக்கடி குற்றவுணர்வால் வேதனைப்படுகிறேன். அவரிடம், “எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்!” என்று இன்னும் நிறைய முறை சொல்லியிருக்க வேண்டும்போல் தோன்றுகிறது. இன்னும் நிறையத் தடவை அவரைக் கட்டி அணைத்திருக்க வேண்டும், இன்னும் நிறைய நேரம் அவரோடு செலவிட்டிருக்க வேண்டும் என்றெல்லாம் ஏக்கமாக இருக்கிறது. ‘நீ இப்படி யோசிக்க வேண்டுமென அவர் நினைக்கவே மாட்டார்’ என எனக்கு நானே எவ்வளவுதான் சொல்லிக்கொண்டாலும், திரும்பத் திரும்ப அதே எண்ணம் வந்து என்னை வாட்டுகிறது.
நான் ஒரு யெகோவாவின் சாட்சி; அதனால், இறந்தவர்கள் மறுபடியும் உயிரோடு வருவார்களென பைபிள் தரும் நம்பிக்கை எனக்கு மிகுந்த ஆறுதல் அளிக்கிறது. (யோவான் 5:28, 29) என் அப்பா வெளிநாட்டிற்குத்தான் போயிருக்கிறார், என்றாவது ஒருநாள் மறுபடியும் வந்துவிடுவார் என நினைத்துக்கொள்ள நான் முயற்சி செய்கிறேன். ஆரம்பத்தில், “உன் அப்பா மறுபடியும் உயிரோடு வருவார்” என்று மற்றவர்கள் சொன்னபோது, எனக்கு எவ்விதத்திலும் ஆறுதலாக இருக்கவில்லை. ‘எனக்கு இப்போதே அப்பா வேண்டும்!’ என்று நினைத்தேன். ஆனால், அவர் வெளிநாட்டிற்குச் சென்றிருப்பதாக நினைப்பது எனக்கு உதவியாக இருந்தது. சீக்கிரத்தில் அவர் வந்துவிடுவார் என்ற நம்பிக்கையை அது தந்தது, அதேசமயத்தில் அவரது இழப்பைச் சமாளிக்கவும் எனக்கு உதவியது.
மற்ற யெகோவாவின் சாட்சிகள் உறுதுணையாக இருந்தார்கள். அவர்களில் ஒருவர், ‘உன் அப்பா இறந்ததைப் பற்றி பேசவே ரொம்ப வேதனையாக இருக்கிறது, தொண்டை அடைக்கிறது; ஆனால், நான் எப்போதுமே உன்னையும் உன் குடும்பத்தையும் பற்றி நினைக்கிறேன்’ என்று சொன்னார். அதை நான் அடிக்கடி நினைத்துப் பார்த்தேன். அது, யாரும் ஒன்றும் சொல்லாத நாட்களில் எனக்கு மிகுந்த ஆறுதல் தந்தது; ஏனென்றால், அவர்கள் எதுவும் சொல்லாவிட்டாலும் என்னையும் என் குடும்பத்தையும் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எனக்குப் புரிய வைத்தது. அந்த நினைப்புதான் எனக்கு அதிக தெம்பளித்தது!
என் அப்பா இறந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு என் அம்மா இன்னுமதிகமாக ஊழியத்தில் ஈடுபட ஆரம்பித்தார்; அதில் அவருக்கு மிகுந்த சந்தோஷம் கிடைத்ததை நான் கண்கூடாகப் பார்த்தேன். அதனால், நானும் அவரோடு சேர்ந்து ஊழியம் செய்தேன். மற்றவர்களுக்கு உதவுவது, நமக்கே எந்தளவுக்கு உதவியாய் இருக்கிறதென பார்த்து ஆச்சரியப்பட்டேன். அது, யெகோவாவின் புத்தகத்திலும் அவரது வாக்குறுதிகளிலும் என் நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது; அதோடு, இப்போது என் பிரச்சினைகளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்காதிருக்க உதவுகிறது. (g09 10)