யெகோவாவின் சாட்சிகளிடம் என்னை ஈர்த்த விஷயம்
யெகோவாவின் சாட்சிகளிடம் என்னை ஈர்த்த விஷயம்
டோமஸ் ஒராஸ்கோ என்பவரின் அனுபவம்
நான் முதல் முறையாக ராஜ்ய மன்றத்திற்குச் சென்றபோது அங்கு ஒரு சிறுவன் பேச்சு கொடுத்தான். பேச்சாளருக்குரிய பீடத்தைவிட அவன் குள்ளமாக இருந்தபோதும் அவனுடைய கண்ணியமான தோற்றமும் பேச்சு திறமையும் என்னை வியக்க வைத்தன.
அவனுடைய பேச்சை எல்லாரும் கவனித்துக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். நான் அமெரிக்காவுக்கான பொலிவிய நாட்டு ராணுவ தூதராகவும் ராணுவத் தளபதியாகவும் ஜனாதிபதிக்குத் தனிப்பட்ட உதவியாளராகவும் இருந்ததால் எல்லாரிடமும் மரியாதை வாங்கியே எனக்குப் பழக்கம். ஆனால், இந்தச் சிறுவனுக்குக் கிடைத்த மரியாதையைப் பார்த்த பின்பு வாழ்க்கையில் என் லட்சியங்கள் மாறிவிட்டன.
பராகுவே மற்றும் பொலிவியாவுக்கு இடையே நடந்த சாக்கோ போரில் கிட்டத்தட்ட 1935-ல் என் அப்பா இறந்துவிட்டார். கொஞ்ச நாட்களுக்குள் என்னை ஒரு கத்தோலிக்க போர்டிங் ஸ்கூலில் சேர்த்தார்கள். பல வருடங்களாக தினசரி பூசைகளுக்குச் செல்வதும் பக்திப் பாடல்கள் பாடுவதும், கேட்டிகிஸம் வகுப்புகளில் கலந்துகொள்வதும், ஜெபங்களை மனப்பாடம் செய்து ஒப்பிப்பதும் என் வழக்கமாக இருந்தது. அங்கு பாதிரிக்கு உதவி செய்ததோடு ஆலய பாடல் குழுவிலும் சேர்ந்துகொண்டேன். ஆனால், நான் ஒருமுறைகூட பைபிளை வாசித்ததில்லை, ஏன், பார்த்ததுகூட இல்லை.
பண்டிகை திருநாள் எதாவது வந்துவிட்டால் எனக்கு ரொம்பப் பிடிக்கும், ஏனென்றால், வீடே கொண்டாட்டத்தில் மூழ்கிவிடுமல்லவா? தினசரி வேலைகளிலிருந்து கொஞ்சம் ஓய்வு கொடுப்பதால் பண்டிகைகளை விரும்பினேன். ஆனால், மதத்தைப் பற்றி கற்பித்த பாதிரிமார்களும் மற்றவர்களும் ரொம்ப கொடூரமாக நடந்துகொண்டார்கள். அவர்களைப் பார்த்தபோது மதம்மீது எனக்கு பற்று ஏற்படுவதற்குப் பதில் வெறுப்புதான் வந்தது. மதத்தின் மீது எனக்குச் சலிப்பு தட்டிவிட்டது.
ராணுவத்தின் ஒழுங்கு என்னை கவர்ந்தது
ஒரு பிரகாசமான காலைப்பொழுது அது. நேர்த்தியான சீருடை அணிந்த இரண்டு இளம் ராணுவ அதிகாரிகள் என் சொந்த ஊரான டாரிஹாவில் நடந்து செல்வதைப் பார்த்தேன். இவர்கள் பொலிவியாவின் தலைநகரான லாபாஸிலிருந்து விடுமுறைக்காக வந்திருந்தார்கள். நகரத்தின் முக்கிய சதுக்கம் வழியாக அவர்கள் ‘ஸ்டைலாகவும்’ கண்ணியமாகவும் நடந்து சென்றார்கள். அவர்களுடைய கம்பீரத்தையும் சுத்தத்தையும் மிடுக்கையும் கண்டு அசந்துபோனேன். பச்சை நிற சீருடையில் பளபளக்கும் விளிம்புடைய தொப்பியுடன் பார்க்கவே ரொம்ப அழகாக இருந்தார்கள். ஒரு ராணுவ அதிகாரியாக வேண்டும் என்ற ஆசை அந்தக் கணமே என் மனதில் வந்துவிட்டது. அவர்கள் வாழ்க்கையில் சுவாரஸ்யமான அனுபவங்கள் பல இருக்கும் என்றும் தேசத்திற்காக பல தியாகங்கள் செய்திருப்பார்கள் என்றும் எண்ணினேன்.
எனக்கு 16 வயதாக இருந்தபோது 1949-ல் பொலிவியாவின் ராணுவ கல்லூரியில் சேர்க்கப்பட்டேன். பாசறைக்குச் செல்லும் வாயிற்கதவு வரை நீண்டிருந்த வாலிபர்களின் பெரிய வரிசையில் என் அண்ணனும்
என்னோடுகூட நின்றிருந்தார். அண்ணன் என்னை துணை அதிகாரியிடம் அறிமுகப்படுத்திவிட்டு, நன்றாகப் பார்த்துக்கொள்ளும்படி சொன்னார். பின்பு, அவரிடம் என்னைப் புகழ்ந்துப் பேசினார். அண்ணன் போனபிறகு, புதியவர்களுக்கு கிடைக்கும் ‘முதல் மரியாதை’ எனக்கும் கிடைத்தது. அந்த அதிகாரி என்னைக் கீழே தள்ளிவிட்டு, “இங்கே யார் உன்னைப் புகழ்வார்கள் என்று பார்க்கலாம்!” என்றார். இப்படித்தான் ராணுவத்தின் ஒழுங்குக்கும், கண்டிப்புக்கும் அறிமுகமானேன். அதை நான் பெரிதுபடுத்தவில்லை என்றாலும், என் பெருமை மட்டும் கொஞ்சம் அடிவாங்கியது.கால ஓட்டத்தில், யுத்தம் செய்ய கற்றுக்கொண்டேன், பின்பு மரியாதைக்குரிய ஒரு ராணுவ அதிகாரியாக ஆனேன். ராணுவ அதிகாரிகளின் சுத்தமான, மிடுக்கான சீருடையைப் பார்த்து ஏமாந்துபோக வாய்ப்பிருக்கிறது என்பதை அனுபவப்பட்ட பின்பு தெரிந்துகொண்டேன்.
விசேஷ பொறுப்பு பெற்றேன்
ராணுவத்தில் சேர்ந்த புதிதில், ஆர்ஜெண்டினாவின் கப்பற்படை போர்க் கப்பலான கெனரல் பெல்கிரானோவில் எனக்கு பயிற்சி கிடைத்தது. 1000-க்கும் அதிகமானோர் பயணிக்குமளவுக்கு பெரிய கப்பல் அது. இரண்டாம் உலக யுத்தத்திற்கு முன்பு யுஎஸ்எஸ் ஃபோனிக்ஸ் என்ற பெயரில் அமெரிக்க ராணுவம் இந்தக் கப்பலைப் பயன்படுத்தியது; பின்பு 1941-ல் ஹவாயிலுள்ள பேர்ல் ஹார்பர்மீது ஜப்பானியர்கள் நடத்திய குண்டு தாக்குதலையும் இந்தக் கப்பல் தாக்குப்பிடித்திருந்தது.
காலப்போக்கில், பதவி உயர்வுகள் பல பெற்று ஒரு கட்டத்தில் பொலிவிய கப்பற்படையின் தலைமை அதிகாரிக்கு அடுத்த ஸ்தானத்தை அடைந்தேன். பொலிவியாவின் எல்லைகளான நீர்நிலைகளை அந்தக் கப்பற்படை கண்காணித்தது. அமேசான் படுகையின் ஆறுகளும், கப்பல் செல்லத்தக்க உலகிலேயே உயரமான டிடிகாகா ஏரியும் அந்த நீர்நிலைகளில் அடங்கும்.
இதற்கிடையில், 1980 மே மாதம், அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன், டி.சி.-க்கு அனுப்பப்பட்ட ராணுவ தூதுக்குழுவில் நானும் ஒருவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். தரைப்படை, விமானப்படை, கப்பற்படை ஆகிய மூன்று துறைகளிலிருந்தும் உயர் அதிகாரி ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனக்கு அதிக அனுபவம் இருந்ததால் அந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டேன். கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் அமெரிக்காவிலேயே இருந்தேன். பின்பு பொலிவிய ஜனாதிபதிக்கு தனிப்பட்ட உதவியாளராக ஆனேன்.
ஒரு ராணுவ அதிகாரியாக இருந்ததால் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுக்குப் போக வேண்டியிருந்தது. ராணுவ மதகுருக்களும் பாதிரிமார்களும் புரட்சிகளிலும் போர்களிலும் ஈடுபட்டதைப் பார்த்து மதம் மேல் எனக்கு இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும்
சுத்தமாகப் போய்விட்டது. இரத்தம் சிந்துவதில் சர்ச்சுகள் ஈடுபடுவது தவறு என்று எனக்குத் தெரிந்திருந்தது. இருந்தாலும், இவர்களுடைய இந்தப் போலித்தனத்தைப் பார்த்து மதத்தையே வெறுப்பதற்குப் பதிலாக உண்மையான மதத்தைக் கண்டுபிடிக்க தூண்டப்பட்டேன். அதுவரை பைபிளையே படிக்காத நான் அவ்வப்போது பைபிளை எடுத்து, அங்கொன்றும் இங்கொன்றுமாக வசனங்களை வாசித்தேன்.ராஜ்ய மன்றத்தில் ஒழுங்கு
என் மனைவி மானுவெலா, மிஷனரியாக சேவை செய்த ஜானெட் என்ற யெகோவாவின் சாட்சியுடன் பைபிளைப் படிக்க ஆரம்பித்திருந்ததை முதன்முதலில் கேட்டபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பின்பு, ராஜ்ய மன்றங்களில் நடைபெற்ற சாட்சிகளுடைய கூட்டங்களுக்கும் மானுவெலா செல்ல ஆரம்பித்தாள். அவளைக் காரில் கொண்டுபோய் விடுவேனே தவிர ஒரு நாளும் நான் அந்தக் கூட்டத்திற்குச் செல்லவில்லை. அந்தக் கூட்டங்களுக்கு வரும் மக்கள் கூச்சல் போடுவார்கள், உணர்ச்சிவசப்படுவார்கள் என்று நினைத்ததே அதற்குக் காரணம்.
ஜானெட்டின் கணவர் இயன் என்னை வந்து சந்திக்கலாமா என்று மானுவெலா ஒருநாள் என்னிடம் கேட்டாள். முதலில் மறுத்தேன். பின்பு, மதத்தைப் பற்றி எனக்கு உள்ள அறிவை வைத்து அவர் சொல்வதை தவறென நிரூபித்துவிடலாம் என்ற எண்ணத்தில் ஒத்துக்கொண்டேன். இயனை முதல் முதலில் பார்த்தபோது அவர் சொன்ன விஷயங்களைவிட அவர் நடந்துகொண்ட விதம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. தன் பைபிள் அறிவைக் கொண்டு அவர் என்னைத் திணறடிக்கவில்லை. பதிலாக, அன்புடனும் மரியாதையுடனும் நடந்துகொண்டார்.
அதற்கு அடுத்த வாரம், ராஜ்ய மன்றத்திற்குச் செல்ல தீர்மானித்தேன். அப்போதுதான் நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அந்தச் சிறுவன் பேச்சு கொடுத்ததைக் கேட்டேன். ஏசாயா புத்தகத்திலிருந்து சில வசனங்களை வாசித்து அவற்றுக்கு விளக்கம் கொடுத்தான்; அதைக் கேட்டபோது யெகோவாவின் சாட்சிகளுடையது ஒரு வித்தியாசமான அமைப்பு என்பதை உணர்ந்தேன். நான் சிறுவனாக இருந்தபோது மதிப்புக்குரிய ராணுவ அதிகாரியாக வேண்டுமென ஆசைப்பட்டேன்; ஆனால் இப்போது, அந்தச் சிறுவனைப் போல் பைபிளிலிருந்து போதிக்க வேண்டுமென ஆசைப்பட்டேன், வேடிக்கையாக இருக்கிறதல்லவா? திடீரென என் உள்ளம் உருகியதைப் போல் உணர்ந்தேன், பைபிளைப் பற்றி கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை எனக்குள் பிறந்ததைக் கண்டேன்.
நாட்கள் செல்லச் செல்ல, சாட்சிகளின் காலந்தவறாமையும், எப்போதும் என்னை நட்புள்ளத்துடன் வரவேற்று சௌகரியமாக உணர வைத்த விதமும் என்னை மிகவும் கவர்ந்தன. அவர்களுடைய சுத்தமான, நேர்த்தியான உடையும் என்னைக் கவர்ந்தது. குறிப்பாக எனக்கு பிடித்த விஷயம் என்னவென்றால், சபை கூட்டங்களில் கடைப்பிடிக்கப்பட்ட ஒழுங்கு. உதாரணத்திற்கு, இந்த நாள் இந்தப் பேச்சு கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டால் அந்த நாள் அதே பேச்சுதான் கொடுக்கப்படும், அதில் எந்த மாற்றமும் இருக்காது. ஆனால், இவர்களுடைய ஒழுங்கு, பயத்தின் விளைவாக இல்லாமல் அன்பின் விளைவாக உருவாகியிருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.
முதல் முறை கூட்டத்திற்குப் போய் வந்ததும், சகோதரர் இயனுடன் பைபிளைப் படிக்க ஒத்துக்கொண்டேன். நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்திலிருந்து படித்தோம். * மூன்றாவது அதிகாரத்தில், யுத்தத்திற்குப் போகும் போர் வீரர்களை பிஷப் ஆசீர்வதிப்பதைக் காட்டும் அந்தப் படம் இன்றும் என் நினைவில் நிற்கிறது. அது எவ்வளவு உண்மை என்பதை என்னால் உணர முடிந்தது. ஏனென்றால், அதையெல்லாம் என் கண்ணால் நேரடியாகப் பார்த்திருக்கிறேன். வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் என்ற புத்தகத்தை ராஜ்ய மன்றத்திலிருந்து பெற்றுக்கொண்டேன். நடுநிலைமை வகிப்பதைப் பற்றி பைபிள் சொல்வதைப் படித்தபோது நான் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தேன். இனி கத்தோலிக்க சர்ச்சுக்குப் போகவே கூடாது என்று முடிவு செய்தேன். அதுமுதல் தொடர்ந்து ராஜ்ய மன்றத்திற்குச் செல்ல ஆரம்பித்தேன். ராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கும் முடிவு செய்தேன்.
ஞானஸ்நானம் பெற முன்னேற்றம்
சில வாரங்களுக்குப் பிறகு, வரவிருந்த மாநாட்டிற்காக சபையினர் அனைவரும் ஒன்றுசேர்ந்து மாநாடு நடைபெறும் அரங்கத்தைச் சுத்தம் செய்யப்போவதாக கேள்விப்பட்டேன். அந்த மாநாட்டில் கலந்துகொள்ள ஆவலாய் இருந்தேன்; அதனால் அந்த அரங்கத்தைச் சுத்தம் செய்வதற்கு நானும் சென்றேன். சகோதரர்களுடைய கூட்டுறவை அனுபவித்துக்கொண்டு எல்லாரோடும் சேர்ந்து சந்தோஷமாக சுத்தம் செய்தேன். நான் தரையைப் பெருக்கிக்கொண்டிருந்தபோது ஒரு இளைஞன் என்னிடம் வந்து, ‘நீங்கள் கப்பற்படைத் தலைவர்தானே’ என்று கேட்டான்.
“ஆமாம்” என்றேன்.
“ஒரு கப்பற்படைத் தலைவர் தரையைப் பெருக்குகிறாரா, என் கண்ணையே என்னால் நம்ப முடியவில்லை!” என்று அவன் ஆச்சரியம் பொங்க சொன்னான். உயர் அதிகாரியாக இருப்பவர் தரையில் விழுந்த காகிதத்தை எடுப்பதுகூட அபூர்வம், அப்படியிருக்க நான் தரையைப் பெருக்குவதைக் கண்டு அவனுக்கு ஆச்சரியம் தாளவில்லை. அந்த இளைஞன் ராணுவத்தில் என்னுடைய டிரைவராக இருந்தான், இப்போது ஒரு யெகோவாவின் சாட்சியாக இருக்கிறான்!
அன்பின் அடிப்படையில் ஒத்துழைப்பு
ராணுவத்தில், ஒருவருடைய பதவியை வைத்துதான் அவருக்கு மரியாதை கொடுக்கப்படும்; அந்த எண்ணம் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. சொல்லப்போனால், பதவி அல்லது பொறுப்பு அடிப்படையில் யெகோவாவின் சாட்சிகளில் யார் மேலானவர் என்றுகூட கேட்டிருக்கிறேன். பதவி, ஸ்தானம் பற்றிய என் எண்ணத்தை என்னால் மாற்றிக்கொள்ள முடியவில்லை. ஆனால், அது சீக்கிரத்தில் தலைகீழாக மாறவிருந்தது.
சுமார் 1989-ல் நியு யார்க்கிலிருந்து யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு அங்கத்தினர் ஒருவர் பொலிவியாவுக்கு வருகிறார் என்றும் அரங்கத்தில் அவர் பேச்சு கொடுக்கப்போகிறார் என்றும் கேள்விப்பட்டேன். அமைப்பின் “முக்கியமான” நபருக்கு எப்படிப்பட்ட மரியாதை கொடுக்கப்படுகிறது என்பதைப் பார்க்க ஆவலாய் காத்திருந்தேன். அவ்வளவு பெரிய பொறுப்பில் இருப்பவர் பகட்டுடனும் ஆடம்பரத்துடனும்தான் வருவார் என்று எதிர்பார்த்தேன்.
ஆனால், கூட்டம் தொடங்கியபோது, முக்கியமான நபர் எவரும் வந்திருப்பதாக ஒரு அறிகுறியும் இல்லை, எனக்கோ ஒரே குழப்பம். எனக்கும் மானுவெலாவுக்கும் பக்கத்தில் வயதான ஒரு தம்பதி உட்கார்ந்திருந்தார்கள். அந்தப் பெண்மணியிடம் ஆங்கில மொழி பாடல் புத்தகம் இருந்ததை மானுவெலா கவனித்தாள், அதனால் இடைவேளையின்போது அவரிடம் பேசினாள். கொஞ்ச நேரம் கழித்து அந்தத் தம்பதியினர் போய்விட்டார்கள்.
பின்பு அந்தப் பெண்மணியின் கணவர் மேடையேறி முக்கியமான பேச்சைக் கொடுத்தபோது எனக்கும் என் மனைவிக்கும் ஆச்சரியமோ ஆச்சரியம்! பதவி, மரியாதை, அதிகாரம், அந்தஸ்து போன்றவற்றைப் பற்றி ராணுவம் எனக்குள் வளர்த்த எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமென அந்த நொடியில் உணர்ந்தேன். “அந்த அரங்கத்தின் வசதியில்லாத நாற்காலிகளில் நம் பக்கத்தில் அமர்ந்திருந்த சகோதரர் ஆளும் குழு அங்கத்தினரா!” என்று சொல்லி சொல்லி வியந்தேன்.
“நீங்கள் எல்லாரும் சகோதரர்களாக இருக்கிறீர்கள்” என்று மத்தேயு 23:8-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகளை எனக்குப் புரியவைக்க சகோதரர் இயன் எவ்வளவு பாடுபட்டார் என்பதை நினைக்கும்போது இப்போது எனக்கு வெட்கமாக இருக்கிறது.
ஊழியத்தில் முதல் முறையாக
ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றபின், வீட்டுக்கு வீடு ஊழியத்தில் தன்னுடன் சேர்ந்துகொள்ளும்படி இயன் என்னை அழைத்தார். (அப்போஸ்தலர் 20:20) நாங்கள் சென்ற பகுதி ஒரு ராணுவ குடியிருப்பு. எங்கு போகக்கூடாது என்று நினைத்தேனோ அதே இடத்திற்கு வந்துவிட்டேன். எந்தத் தளபதியின் வீட்டுக்குப் போய்விடக்கூடாது என்று நினைத்தேனோ அதே தளபதியின் வீட்டு கதவைத் தட்டிவிட்டேன். அவர்தான் கதவைத் திறந்தார். என் கையில் இருந்த பெட்டியையும் பைபிளையும் பார்த்து, “உனக்கு என்ன ஆனது?” என்று அவர் ஏளனமாகக் கேட்டபோது எனக்கு உதறல் எடுக்க ஆரம்பித்துவிட்டது.
சட்டென மனதுக்குள் ஜெபம் செய்தேன். எனக்குள் தன்னம்பிக்கையும் சாந்தமும் பிறந்ததை உணர்ந்தேன். பிறகு பேச ஆரம்பித்தேன். நான் சொன்னதை அந்தத் தளபதி காதுகொடுத்து கேட்டார், சில பைபிள் பிரசுரங்களையும் வாங்கிக்கொண்டார். யெகோவாவுக்கு என் வாழ்க்கையை அர்ப்பணிக்க அந்தச் சம்பவம் எனக்கு ஊக்கமளித்தது. 1990-ஆம் ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதி என் அர்ப்பணிப்புக்கு அடையாளமாக ஞானஸ்நானம் பெற்றேன்.
பின்பு என் மனைவியும் மகனும் மகளும் யெகோவாவின் சாட்சிகளானார்கள். இப்போது சபையில் ஒரு மூப்பராகவும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி முழு நேரமாக அறிவிக்கும் ஊழியனாகவும் இருக்கிறேன். என் வாழ்க்கையில் கிடைத்த மிகப் பெரிய பாக்கியம், யெகோவாவைப் பற்றி தெரிந்துகொண்டதும், அவருடைய அங்கீகாரத்தைப் பெற்றதுமே. இதுதான் இந்த உலகத்திலேயே மிகப் பெரிய பதவி, அந்தஸ்து, கௌரவம் எல்லாமே. ஒழுங்கு என்பது பயத்தினாலோ கண்டிப்பினாலோ அல்ல அன்பினாலும் அக்கறையினாலும் வரவேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டேன். ஏனென்றால், யெகோவா ஒழுங்கை விரும்புகிறார் என்றாலும், அன்பே அவருடைய பிரதான குணம்.—1 கொரிந்தியர் 14:33, 40; 1 யோவான் 4:8. (g10-E 03)
[அடிக்குறிப்பு]
^ யெகோவாவின் சாட்சிகளால் அச்சடிக்கப்பட்டது. இப்போது அச்சில் இல்லை.
[பக்கம் 15-ன் படம்]
1950-ல் என் அண்ணன் ரெனடோவுடன்
[பக்கம் 15-ன் படம்]
சீனாவிலிருந்தும் மற்ற நாடுகளிலிருந்தும் வந்திருந்த ராணுவ அதிகாரிகளுடன் ஒரு சமூக நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது