Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

டிப்ஸ் 2 ஆரோக்கியத்திற்கு அடிப்படையான விஷயங்களை அலட்சியம் செய்யாதீர்கள்

டிப்ஸ் 2 ஆரோக்கியத்திற்கு அடிப்படையான விஷயங்களை அலட்சியம் செய்யாதீர்கள்

‘ஒருவனும் தன் சொந்த உடலை வெறுக்கமாட்டான். ஒவ்வொருவனும் தன் உடலை நல்ல உணவு கொடுத்து காப்பாற்றுவான்.’ (எபேசியர் 5:29, ஈஸி டு ரீட் வர்ஷன்) உங்களுடைய உடலை கவனித்துக்கொள்வதற்காக நீங்கள் செய்கிற சின்னச் சின்ன, அடிப்படை விஷயங்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே கைகொடுக்கும்.

நன்றாகத் தூங்குங்கள். “வீணாக வெகு நேரம் வேலை செய்வதைவிட கொஞ்ச நேரம் ஓய்வெடுப்பது நல்லது.” (பிரசங்கி 4:6, NW) இந்த நவீன உலகத்தில் மக்கள் வேலை, பொழுதுபோக்கு போன்றவற்றில் சதா மூழ்கியிருக்கிறார்கள்; ஆனால், தூக்கத்தை ஓரங்கட்டிவிடுகிறார்கள். என்றாலும், நல்ல ஆரோக்கியத்திற்கு தூக்கம் மிகவும் அவசியம். தூங்கும்போது நம்முடைய உடலும் மூளையும் அவற்றையே புதுப்பித்துக்கொள்கின்றன; இதனால் நமது ஞாபக சக்தி அதிகரிக்கிறது, மனதும் உற்சாகமாக இருக்கிறது.

நாம் நன்றாகத் தூங்கினால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது; அதோடு, தொற்று நோய், நீரிழிவு நோய், பக்கவாதம், இதய நோய், புற்று நோய், உடல் பருமன், மனச்சோர்வு, ஏன் அல்சைமர் நோய்கூட வராமல் காக்கிறது. தூக்கம் என்பது நம்முடைய உடலின் இயற்கையான கவசம்; டீ, காபி, இனிப்புகள் அல்லது மருந்துகள் சாப்பிட்டு அதைச் செயற்கையான விதத்தில் தடை செய்துவிடக்கூடாது; உங்களுடைய உடல் தூக்கத்திற்காகக் கெஞ்சும்போது, உடனடியாகத் தூங்குங்கள். பொதுவாக, பெரியவர்கள் இரவில் தினமும் ஏழு முதல் எட்டு மணிநேரத்திற்குத் தூங்க வேண்டும். அப்படிச் செய்தால், அவர்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள், எப்போதும் உற்சாகமாக உணருவார்கள், பார்ப்பதற்கும் நன்றாக இருப்பார்கள். இளம் பிள்ளைகள் இன்னும் அதிக நேரத்திற்குத் தூங்க வேண்டும். தூக்கத்தை அசட்டை செய்கிற இளைஞர்கள் மனோ ரீதியில் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது; அதோடு, வாகனம் ஓட்டும்போது தூங்கிவிடும் அபாயமும் இருக்கிறது.

முக்கியமாக, உடல்நிலை சரியில்லாதபோது, நாம் கண்டிப்பாகத் தூங்க வேண்டும். ஜலதோஷம் போன்ற சாதாரண உடல்நலப் பிரச்சினைகள் வந்தால், நன்றாகத் தூங்கி, நிறைய நீர் ஆகாரம் சாப்பிட்டால் அவைச் சரியாகிவிடலாம்.

உங்கள் பற்களைப் பாதுகாத்திடுங்கள். சாப்பிட்ட பிறகும், குறிப்பாக, தூங்கப் போவதற்கு முன்பும் பல் தேயுங்கள். பல் இடுக்குகளைச் சுத்தம் செய்ய நூல்போன்ற ‘டென்டல் ஃப்ளாஸை’ (floss) பயன்படுத்துங்கள். அப்படிச் செய்தால் பல் சொத்தை, ஈறு நோய்கள், பல் இழப்பு ஆகியவை வராமல் காத்துக்கொள்ள முடியும். என்னதான் செயற்கை பல் வைத்துக்கொண்டாலும், நம்முடைய சொந்த பற்கள் போல் வராது. ஏனென்றால், நம்மால் அந்தளவுக்கு மென்று சாப்பிட முடியாமல் போய்விடும். யானைகளைப் பொருத்தவரை அவை வயதாகிச் சாவதில்லை, ஆனால், பற்கள் உடைந்து விழுவதால், அவற்றால் சரியாக மென்று சாப்பிட முடியாமல், பட்டினி கிடந்து சாவதாக அறிக்கைகள் காட்டுகின்றன. சாப்பிட்ட பிறகு, பல் தேய்க்கவும் ‘ஃப்ளாஸ்’ செய்யவும் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுத்தால், இப்போதும் எப்போதும் அவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

டாக்டரிடம் செல்லுங்கள். நோய் வந்தால், கண்டிப்பாக டாக்டரிடம் போக வேண்டும். நோயை எவ்வளவு சீக்கிரமாகக் கண்டுபிடிக்கிறோமோ அவ்வளவு சீக்கிரமாக அதைக் குணப்படுத்த முடியும், அதற்கான செலவையும் குறைக்க முடியும். எனவே, உடலில் ஏதாவது நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால், அந்த அறிகுறிகளைப் போக்குவதற்கு மருந்து சாப்பிடுவதற்குப் பதிலாக நோய்க்கான காரணத்தைக் கண்டறிந்து அதைச் சரிசெய்ய உடனடியாக முயற்சி செய்யுங்கள்.

முறைப்படி தேர்ச்சிபெற்ற மருத்துவர்களிடம் சென்று தவறாமல் பரிசோதனை செய்துகொண்டால், கொடிய நோய்களை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சரிசெய்துவிட முடியும்; அதேபோல், கர்ப்பமாய் இருக்கும்போதும், மருத்துவப் பரிசோதனையைத் தவறாமல் செய்துகொள்வது நல்லது. * என்றாலும், டாக்டர்களால் எல்லா நோய்களையும் கண்டுபிடித்து அற்புதமாகக் குணப்படுத்த முடியாது என்பதை மறந்துவிடாதீர்கள். கடவுள் ‘எல்லாவற்றையும் புதிதாக்கும்’ போதுதான் நாம் பூரணமான ஆரோக்கியத்தைப் பெற முடியும்.—வெளிப்படுத்துதல் 21:4, 5. (g11-E 03)

^ ஜூலை-செப்டம்பர், 2010 விழித்தெழு!-வில் “ஆரோக்கியமான தாய்மார்களுக்கு ஆரோக்கியமான குழந்தைகள்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.