கடவுளிடம் நெருங்கி வர நம்மை நாமே வருத்திக்கொள்ள வேண்டுமா?
பைபிளின் கருத்து
கடவுளிடம் நெருங்கி வர நம்மை நாமே வருத்திக்கொள்ள வேண்டுமா?
ஒருவர் தன்னையே காயப்படுத்திக்கொள்வதை மக்கள் பார்த்தால் முகம் சுளிப்பார்கள். ஆனால், பக்தி என்ற பெயரில் இன்று சிலர் தங்களையே சாட்டையால் அடித்துக்கொள்கிறார்கள், கடுமையாக விரதம் இருக்கிறார்கள், முள்ளால் ஆன உடையை அணிந்துகொள்கிறார்கள்; அவர்களை மக்கள் பக்திமான் என்று கொண்டாடுகிறார்கள். இவையெல்லாம் நம் பாட்டன் முப்பாட்டன் காலத்தில் மட்டுமே நடந்தவையல்ல. இன்றுள்ள பிரபல மதத் தலைவர்கள்கூட இப்படிச் செய்வதாகச் சமீபத்தில் வெளியான செய்தி அறிக்கைகள் காட்டுகின்றன.
சிலர் ஏன் இப்படித் தங்களையே வருத்திக்கொண்டு கடவுளை வழிபடுகிறார்கள்? ஒரு கிறிஸ்தவ அமைப்பின் பிரதிநிதி இவ்வாறு சொன்னார்: “நம்மைப் பாவத்திலிருந்து விடுவிப்பதற்காக இயேசு கிறிஸ்து மனமுவந்து பல பாடுகளைப் பட்டார். நாமும் வேண்டுமென்றே நம்மை வருத்திக்கொண்டால் இயேசுவுடனும் அவர் பட்ட பாடுகளுடனும் ஒன்றிவிடுவோம்.” மதத் தலைவர்கள் சிலர் இப்படி மார்தட்டிக்கொண்டாலும், இதைக் குறித்து பைபிள் என்ன சொல்கிறது?
உங்கள் உடலை நெஞ்சார நேசியுங்கள்
கடவுளை வழிபட உடலை வருத்திக்கொள்ள வேண்டும் என்றோ, அது அவரவர் விருப்பம் என்றோ பைபிள் சொல்வதில்லை. சொல்லப்போனால், தேவபக்தியுள்ளவர்கள் தங்களுடைய உடலை நன்கு கவனித்துக்கொள்ள வேண்டும் என்று பைபிள் திரும்பத் திரும்ப சொல்கிறது. உதாரணத்திற்கு, கணவன்-மனைவி இடையே இருக்க வேண்டிய பாசப் பிணைப்பைப் பற்றி பைபிள் சொல்வதை கவனியுங்கள்; அதில் கணவன்மார்கள் இயல்பாகவே தங்கள் உடலை எப்படிக் கவனித்துக்கொள்வார்கள் என்று சொல்கிறது: ‘கணவர்கள் தங்கள் சொந்த உடல்மீது அன்பு காட்டுவதுபோல் தங்கள் மனைவிமீதும் அன்பு காட்ட வேண்டும்; . . . ஒருவனும் தன் உடலை வெறுக்க மாட்டான்; ஆனால், அதைப் போஷித்து நெஞ்சார நேசிக்கிறான்; கிறிஸ்துவும் இப்படித்தான் சபையை நேசிக்கிறார்’ என்று அறிவுறுத்துகிறது.—எபேசியர் 5:28, 29.
ஒருவர் தன்னையே கொடூரமாகக் காயப்படுத்திக்கொண்டுதான் தம்மை வழிபட வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கிறார் என்றால், ‘உன் சொந்த உடலை நேசிப்பதைப் போலவே உன் மனைவியையும் நேசி’ என்ற கட்டளைக்கு அர்த்தமில்லாமல் போய்விடும், அல்லவா? பைபிள் நியமங்கள்படி வாழ விரும்புகிறவர்கள் தங்கள் சொந்த உடலை நெஞ்சார நேசிக்க வேண்டும், இதே போன்ற அன்பைத் தங்களுடைய துணையிடமும் காட்ட வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கிறார்.
ஒருவர் தன் உடலை நேசிக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதற்கு நிறைய பைபிள் நெறிகள் உள்ளன. உதாரணத்திற்கு, அளவான உடற்பயிற்சியால் வரும் நன்மைகளைப் பற்றி பைபிள் குறிப்பிடுகிறது. (1 தீமோத்தேயு 4:8) மருத்துவ குணமுள்ள சில உணவுகளைப் பற்றியும் அளவுக்குமீறி சாப்பிடுவதால் வரும் கெடுதல்களைப் பற்றியும் சொல்கிறது. (நீதிமொழிகள் 23:20, 21; 1 தீமோத்தேயு 5:23) அதேசமயம், ஆரோக்கியமாக இருந்தால்தான் சுறுசுறுப்பாக வாழ முடியும் என்றும் சொல்கிறது. (பிரசங்கி 9:4) ‘இப்படியெல்லாம் செய்து உங்கள் உடலைக் கவனித்துக்கொள்ளுங்கள்’ என்று பைபிள் ஒருபக்கம் சொல்லிவிட்டு இன்னொரு பக்கம் ‘உங்கள் உடலை வருத்திக்கொள்ளுங்கள்’ என்றும் சொல்லுமா?—2 கொரிந்தியர் 7:1.
கிறிஸ்துவின் பாடுகளை ஒருவர் அப்படியே அனுபவிக்க வேண்டுமா?
சில மத அமைப்புகள், இயேசுவும் அவருடைய ஆரம்பகால சீடர்களும் சகித்த பாடுகளை உருக உருக விவரித்து, தங்கள் அங்கத்தினர்களும் அதேபோல் தங்களை வருத்திக்கொள்ள வேண்டும் என்று தவறாக ஊக்குவிக்கின்றன. ஆனால், இயேசுவும் அவருடைய சீடர்களும் அனுபவித்த பாடுகளெல்லாம் அவர்களாகவே வரவழைத்துக்கொண்டவை அல்ல. புதிய ஏற்பாட்டை, அதாவது கிரேக்க வேதாகமத்தை, எழுதியவர்கள் கிறிஸ்துவின் பாடுகளைப் பற்றி ஏன் சுட்டிக்காட்டினார்கள்? கிறிஸ்தவர்கள் துன்பங்களை சகிக்க வேண்டும் என்பதற்காகத்தான், வேண்டுமென்றே துன்பங்களை வரவழைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அல்ல. எனவே, யாராவது தங்களையே வருத்திக்கொண்டால் அவர்கள் உண்மையில் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவதில்லை.
இதைக் கொஞ்சம் யோசித்து பாருங்கள்: உங்களுக்கு ரொம்ப பிடித்த நண்பரை, கொலைவெறி பிடித்த கும்பல் அவமானப்படுத்தி தாக்குகிறது. அந்தக் கும்பல் அவரை என்னதான் திட்டினாலும் அடித்தாலும் அவர் அதையெல்லாம் பொறுமையாகவும் அமைதியாகவும் சகித்துக்கொள்கிறார், அவர்களை திருப்பி தாக்குவதில்லை. நீங்களும் உங்கள் நண்பரைப் போலவே இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்; அதற்காக, உங்களையே நீங்கள் அடித்துக்கொள்வீர்களா? திட்டிக்கொள்வீர்களா? நிச்சயம் அப்படிச் செய்யமாட்டீர்கள். அப்படிச் செய்தால் நீங்கள் அந்தக் கும்பலைத்தான் பின்பற்றுகிறீர்கள். எனவே, உங்கள் நண்பரை நீங்கள் பின்பற்ற விரும்பினால் யாராவது தாக்கும்போது திரும்ப தாக்கமாட்டீர்கள்.
அப்படியென்றால், கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களும் தங்களையே காயப்படுத்திக்கொள்ளக் கூடாது; அப்படிச் செய்தால் அவர்கள் இயேசுவைச் சித்திரவதைச் செய்து கொலை செய்யத் துடித்த அந்தக் கும்பலைத்தான் உண்மையில் பின்பற்றுகிறார்கள். (யோவான் 5:18; 7:1, 25; 8:40; 11:53) அதற்குப் பதிலாக, துன்பங்களைப் பொறுமையாகவும் அமைதியாகவும் சகிக்கும்போது அவர்கள் இயேசுவைப் பின்பற்றுகிறார்கள்.—யோவான் 15:20.
பைபிளுக்கு எதிரான பழக்கம்
கிறிஸ்தவ மதம் தோன்றுவதற்கு முன்பே, யூதர்களின் வாழ்க்கை முறையையும் வழிபாட்டையும் பற்றி பைபிளில் பல கட்டளைகள் கொடுக்கப்பட்டன; அதில் அவர்கள் தங்களையே காயப்படுத்திக்கொள்ளக் கூடாது என்று ஒரு கட்டளையும் உள்ளது. உதாரணத்திற்கு, யூதர்கள் தங்கள் உடலை ஆழமாக கீறக்கொள்ளக் கூடாது என்று திருச்சட்டம் நேரடியாகக் கட்டளையிட்டது. சொல்லப்போனால், இந்தப் பழக்கம் அன்று யூதர்களல்லாத மக்கள் மத்தியில் சர்வசாதாரணமாக இருந்தது. (லேவியராகமம் 19:28; உபாகமம் 14:1) உடலைக் கீறிக்கொள்ளக் கூடாது என்று கடவுள் சொல்கிறார் என்றால் சாட்டையால் அடித்துக்கொள்வதை மட்டும் அவர் ஏற்றுக்கொள்வாரா? எனவே, இந்த விஷயத்தைப் பற்றி பைபிளின் தெளிவான கருத்து இதுவே: ஒருவர் வேண்டுமென்றே தன்னைக் காயப்படுத்திக்கொள்வதை கடவுள் வெறுக்கிறார்.
ஓர் ஓவியர் தன் கைவண்ணத்தில் பிறந்த ஓவியத்தை மற்றவர்கள் கிழிக்கவோ கிறுக்கவோ விரும்பமாட்டார், அதேபோல் நம்மைப் படைத்த யெகோவா தேவனும் அவருடைய கைவண்ணமான நம் உடலை நாம் காயப்படுத்திக்கொள்ளவோ வருத்திக்கொள்ளவோ விரும்பமாட்டார். (சங்கீதம் 139:14-16) ஆக, ஒருவர் தன்னைத்தானே வருத்திக்கொள்வதால் கடவுளிடம் நெருங்கி வர முடியாது, மாறாக அவர் கடவுளைவிட்டு விலகியே செல்கிறார். அதுமட்டுமல்ல, இப்படித் தன்னையே காயப்படுத்திக்கொள்வது இயேசுவின் போதனைகளுக்கு முரணானது.
மனிதர்கள் உருவாக்கிய இந்தக் கொள்கைகளை, உடலை வருத்தும் பழக்கங்களை, பற்றி கடவுளுடைய சக்தியால் தூண்டப்பட்டு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “இப்படிப்பட்ட விதிமுறைகள், இஷ்டப்படி வழிபடுவதையும் போலியாகத் தாழ்மை காட்டுவதையும் உடலை வருத்திக்கொள்வதையும் ஞானமானவைபோல் தோன்றச் செய்வது உண்மைதான்; என்றாலும், பாவ இச்சைகளை எதிர்த்துப் போராட இவை எவ்விதத்திலும் உதவாது.” (கொலோசெயர் 2:20-23) எனவே, ஒருவர் தன்னையே வருத்திக்கொள்வது கடவுளிடம் நெருங்கி வர கொஞ்சமும் உதவாது. உண்மை வழிபாடு சம்பந்தமாக கடவுள் கொடுத்த சட்டங்கள் அனைத்தும் புத்துணர்ச்சி அளிப்பவை, மென்மையானவை, லேசானவை.—மத்தேயு 11:28-30. (g11-E 03)
உங்கள் பதில்?
● மனித உடலைப் பற்றிக் கடவுளுடைய கண்ணோட்டம் என்ன?—சங்கீதம் 139:13-16.
● கெட்ட ஆசைகளை அடக்க ஒருவர் தன் உடலை வருத்திக்கொள்ள வேண்டுமா?—கொலோசெயர் 2:20-23.
● உண்மை வழிபாடு பாரமானதாக, கடுமையானதாக இருக்க வேண்டுமா? —மத்தேயு 11:28-30.
[பக்கம் 11-ன் சிறுகுறிப்பு]
பைபிளின் தெளிவான கருத்து இதுவே: ஒருவர் வேண்டுமென்றே தன்னைக் காயப்படுத்திக்கொள்வதை கடவுள் வெறுக்கிறார்
[பக்கம் 10-ன் படம்]
பக்தர் ஒருவர் மண்டியிட்டபடியே சர்ச் படிகட்டுகளில் ஏறுகிறார்
[படத்திற்கான நன்றி]
© 2010 photolibrary.com