இளைஞர் கேட்கின்றனர்
நான் எப்படிப்பட்டவன்/ள்?
பிரேம் மைக்கேலிடம் வருகிறான். அவன் எதற்கு வருகிறான் என்று மைக்கேலுக்கு நன்றாகத் தெரியும்; பயத்தில் மைக்கேலுக்கு உதறலெடுக்கிறது. “ஏய் மைக், இந்தாடா, இத குடிச்சி பாரு” என்கிறான் பிரேம். அவன் கையில் மைக்கேல் எதிர்பார்த்த மாதிரியே கஞ்சா சிகரெட். மைக்கேலுக்கு அதை வாங்கவும் பிடிக்கவில்லை, ஆனால் வேண்டாம் என்று சொல்லவும் முடியவில்லை. ஃபிரெண்ட்ஸ் மத்தியில் அவமானமாகிவிடுமோ என்று கவலை. மைக்கேல் அரைமனதாக, “ம்ம்... இன்னிக்கு வேண்டான்டா, இன்னொரு நாள் பார்க்கலாம்...” என்று சொல்கிறான்.
பிரேம் ஜெஸிக்காவிடம் வருகிறான். அவன் எதற்கு வருகிறான் என்று ஜெஸிக்காவுக்கு நன்றாகத் தெரியும். அவனை எதிர்கொள்ள அவள் தயாராக இருக்கிறாள். “ஹாய் ஜெஸி, இந்தா, இத குடிச்சி பாரு” என்கிறான் பிரேம். அவன் கையில் ஜெஸிக்கா எதிர்பார்த்த மாதிரியே கஞ்சா சிகரெட். ஜெஸிக்கா உறுதியாகச் சொல்கிறாள்: “வேண்டாம். நான் நிறைய நாள் உயிரோட இருக்கணும்னு ஆசைப்படறேன். ஆமா... நீ ரொம்ப புத்திசாலின்னு நினைச்சேன். நீயா சிகரெட் பிடிக்கிற?”
இந்த இரண்டு பேரில் ஜெஸிக்காதான் வளைந்து கொடுக்காமல் உறுதியாக இருந்தாள். எப்படி அவளால் மட்டும் முடிந்தது? மைக்கேலிடம் இல்லாத ஒன்று அவளிடம் இருந்தது. அது என்ன? அவளுக்கென ஓர் அடையாளம். அடையாளம் என்றதும் பெயரும், புகைப்படமும் இருக்கும் அடையாள அட்டை என நினைத்துவிடாதீர்கள். உங்களுக்கான அடையாளம் என்பது நீங்கள் எப்படிப்பட்டவர், எதைச் செய்ய உறுதியாக இருக்கிறீர்கள் என்பதைச் சொல்லும் உள்ளான உணர்வைக் குறிக்கிறது. இந்த அடையாளம் உங்களுக்கு இருந்தால், தவறு செய்யும்படி யாராவது தூண்டும்போது ‘மாட்டேன்’ என்று உறுதியாக சொல்வீர்கள். அதோடு, உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் இருக்கும், நண்பர்கள் கையில் இருக்காது. உங்களுக்கென்று ஓர் அடையாளத்தை வைத்துக்கொள்ள நீங்கள் என்ன செய்ய வேண்டும்? கீழே உள்ள கேள்விகளுக்கு நீங்கள் சொல்லும் பதில்தான் ஆரம்பம்.
1. எதெல்லாம் என் பலம்?
ஏன் கேட்டுக்கொள்ள வேண்டும்? உங்களுக்கு இருக்கும் திறமைகளையும் நல்ல குணங்களையும் தெரிந்துகொண்டால் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
சிந்திக்க: ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான திறமைகள் உண்டு. உதாரணமாக, சிலர் நன்றாக ஓவியம் வரைவார்கள்... சிலர் இனிமையாக பாடுவார்கள்... சிலர் விளையாட்டில் வெளுத்துக் கட்டுவார்கள். ரீனாவை எடுத்துக்கொள்ளுங்கள். கார் ரிப்பேர் செய்வதில் அவள் கில்லாடி. * “எனக்கு ஒரு 15 வயசு இருக்கும்போது மெக்கானிக் ஆகணும்னு ஆசை வந்துச்சு” என்கிறாள் அவள்.
பைபிள் உதாரணம்: “எனக்குப் பேச்சுத்திறன் இல்லாமல் இருக்கலாம், ஆனால் நிச்சயமாகவே அறிவுத்திறன் இல்லாமல் இல்லை” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (2 கொரிந்தியர் 11:6) பைபிள் வசனங்களை பவுல் நன்கு புரிந்து வைத்திருந்ததால், மற்றவர்கள் அவருக்கு எதிராகப் பேசியபோதும் அவரால் உறுதியாக இருக்க முடிந்தது. அவர்களுடைய தவறான அபிப்பிராயங்களால் பவுலுடைய தன்னம்பிக்கை தடுமாறவில்லை.—2 கொரிந்தியர் 10:10; 11:5.
உங்களையே கேட்டுக்கொள்ள: உங்களுக்கு இருக்கும் ஒரு திறமையைக் கீழே எழுதுங்கள்.
.....
இப்போது உங்களுடைய நல்ல குணம் ஒன்றை எழுதுங்கள்.
(உதாரணமாக, நீங்கள் மற்றவர்கள்மேல் அக்கறை உள்ளவரா? தாராள குணம் படைத்தவரா? நம்பகமானவரா? நேரம் தவறாதவரா?).....
“கஷ்டத்துல இருக்கிறவங்களுக்கு உதவ முதல் ஆளா இருக்கணும்னு நினைப்பேன். யாராவது என்கிட்ட பேச வரும்போது நான் பிஸியா ஏதாவது செஞ்சிட்டிருந்தாலும், அத அப்படியே விட்டுட்டு அவங்க சொல்றத காதுகொடுத்து கேப்பேன்.”—பிருந்தா.
உங்களிடம் என்ன நல்ல குணம் இருக்கிறது என்றே உங்களுக்குத் தெரியவில்லை என்றால், நீங்கள் வளர வளர எந்த விஷயத்தில் நல்ல மாற்றத்தை செய்திருக்கிறீர்கள் என்பதை யோசித்துப் பார்த்து அதை எழுதுங்கள்.—உதாரணத்திற்கு, “ உங்கள் நண்பர்கள் சொல்வது...” என்ற பெட்டியைப் பாருங்கள்.
․․․․․
2. எதெல்லாம் என் பலவீனம்?
ஏன் கேட்டுக்கொள்ள வேண்டும்? ஒரு சங்கிலி எந்தளவுக்குப் பலமாக இருக்கிறது என்பது அதன் இடையிடையே உள்ள இணைப்புகளைப் பொறுத்தே உள்ளது. இணைப்புகள் பலவீனமாக இருந்தால் சங்கிலி சீக்கிரம் அறுந்துவிடும். அதேபோல், உங்களிடம் குறைகள் நிறைய இருந்தால் உங்களுடைய அடையாளம் படிப்படியாக மறைந்துவிடும்.
சிந்திக்க: குறையே இல்லாதவர்கள் யாரும் இல்லை. (ரோமர் 3:23) தங்களிடம் உள்ள பலவீனத்தை மேற்கொள்ள வேண்டும் என்றுதான் எல்லாரும் நினைக்கிறார்கள். ஷாலினியும் இதைத்தான் சொல்கிறாள்: “நான் ஏன் சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப்படுறேன்னு தெரியல. ஒன்னுமில்லாத விஷயத்துக்குக்கூட டென்ஷனாகி கத்த ஆரம்பிச்சுடுறேன்.”
பைபிள் உதாரணம்: பவுல் தன்னுடைய பலவீனங்களை நன்கு அறிந்திருந்தார். “கடவுளுடைய சட்டத்தைக் குறித்து என் உள்ளத்தின் ஆழத்தில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், என் மனதின் சட்டத்திற்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு சட்டம் என் உடலுறுப்புகளில் இருப்பதைக் காண்கிறேன்; . . . பாவத்தின் சட்டமாகிய அது என்னைச் சிறைபிடித்து வைத்திருக்கிறது” என்று எழுதினார்.—ரோமர் 7:22, 23.
உங்களையே கேட்டுக்கொள்ள: எந்தக் குறையைச் சரிசெய்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
.....
“காதல் காட்சிகள் நிறைந்த படங்களைப் பார்த்த பிறகு, என் மனசுல ஒரு தவிப்பு வந்துடுது, யாரையாவது காதலிக்கனும் என்ற ஆசை என்னை தொத்திக்குது. அதனால இனிமே பொழுதுபோக்கு விஷயங்கள தேர்ந்தெடுக்கும்போது ஜாக்கிரதையா இருக்கணும்னு தெரிஞ்சிக்கிட்டேன்.”—பீனா.
3. என்னுடைய லட்சியங்கள் என்ன?
ஏன் கேட்டுக்கொள்ள வேண்டும்? உங்களுக்கென்று ஒரு லட்சியம் இருந்தால்தான் உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கும்; நீங்கள் சரியான திசையில் பயணிப்பீர்கள். அதோடு, உங்கள் லட்சியங்களை அடைவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிற ஆட்களையோ சூழ்நிலையையோ தவிர்க்கப் பார்ப்பீர்கள்.
சிந்திக்க: நீங்கள் ஒரு ‘டாக்ஸியில்’ ஏறி உட்கார்ந்து டிரைவரிடம், ‘பெட்ரோல் தீர்ற வரைக்கும் இந்தத் தெருவையே சுத்தி சுத்தி வாங்க’ என்று சொல்வீர்களா? அது சுத்தப் பைத்தியக்காரத்தனம், வீணாக பணம்தான் செலவாகும். அதேபோல், நம் வாழ்விலும் ஒரு வட்டத்திற்குள் சுற்றிச் சுற்றி வருவது முட்டாள்தனம். அதைத் தவிர்க்க உங்களுக்கு லட்சியங்கள் தேவை. அப்படி லட்சியங்கள் இருந்தால், எங்கே செல்ல வேண்டும், எப்படிச் செல்ல வேண்டும் என்பதில் நீங்கள் தெளிவாக இருப்பீர்கள்.
பைபிள் உதாரணம்: “நான் இப்போது ஓடுகிறேன், ஆனால் சேரவேண்டிய இடத்தை அறியாதவன்போல் அல்ல” என்று பவுல் சொன்னார். (1 கொரிந்தியர் 9:26) பவுல் மனம்போன போக்கில் வாழ்வதற்குப் பதிலாகத் தனக்கென்று லட்சியங்களை வைத்துக்கொண்டு அதை அடைய முயற்சி செய்தார்.—பிலிப்பியர் 3:12-14.
உங்களையே கேட்டுக்கொள்ள: ஒரு வருடத்திற்குள் நீங்கள் அடைய நினைக்கும் மூன்று லட்சியங்களை இங்கே எழுதுங்கள்.
-
.....
-
.....
-
.....
இவற்றில் மிக முக்கியமான ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதை அடைய இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று எழுதுங்கள்.
.....
“நான் எப்பவுமே ஏதாவது லட்சியங்கள வச்சு அத அடைய முயற்சி பண்ணிட்டே இருப்பேன். இல்லன்னா குண்டுச் சட்டியில குதிரை ஓட்ற மாதிரி வாழ்க்கையில ஒரு சுவாரஸ்யமே இருக்காது.”—ஜோஸ்.
4. என்னுடைய நம்பிக்கைகள் என்ன?
ஏன் கேட்டுக்கொள்ள வேண்டும்? நம்பிக்கைகள் இல்லாவிட்டால் வாழ்க்கையில் ஒரு தெளிவு இருக்காது, உறுதியான தீர்மானமும் எடுக்க முடியாது. ஒரு பச்சோந்தி நிறம் மாறுவதுபோல சூழ்நிலைக்கேற்ப உங்களை மாற்றிக்கொள்வீர்கள்; நண்பர்கள் சொல்வதற்கெல்லாம் தலை ஆட்டுவீர்கள். இப்படிச் செய்தால் உங்களுக்கென்று ஓர் அடையாளம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
சிந்திக்க: “நன்மையானதும் பிரியமானதும் பரிபூரணமானதுமான கடவுளுடைய சித்தம் என்னவென்பதை உங்களுக்கு நீங்களே நிச்சயப்படுத்திக்கொள்ள” வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (ரோமர் 12:2) மற்றவர்கள் என்ன செய்தாலும் சரி, உங்கள் நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படும்போது உங்களுக்கென்று ஓர் அடையாளம் இருக்கும்.
பைபிள் உதாரணம்: இளம் தானியேல், அவருடைய பெற்றோரையும் ஜனங்களையும் விட்டு வேறு நாட்டில் இருந்தார்; அந்தச் சூழ்நிலையிலும்கூட கடவுளுடைய சட்டங்களை மீறக் கூடாது என்று “தன் இருதயத்தில் தீர்மானம் பண்ணி” இருந்தார். (தானியேல் 1:8) அப்படிச் செய்ததால் அவருக்கென்று ஓர் அடையாளம் இருந்தது, அதை அவர் யாருக்காகவும் மாற்றிக்கொள்ளவில்லை. ஆம், தானியேல் தன் நம்பிக்கைகளுக்கு ஏற்றபடி வாழ்ந்தார்.
உங்களையே கேட்டுக்கொள்ள: உங்கள் நம்பிக்கைகள் என்ன? உதாரணமாக:
-
கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறீர்களா? ஏன் நம்புகிறீர்கள்? எதை வைத்து அவர் இருக்கிறார் என நீங்கள் நம்புகிறீர்கள்?
-
கடவுள் கொடுத்திருக்கும் ஒழுக்க நெறிகள் உங்கள் நன்மைக்குத்தான் என நம்புகிறீர்களா? ஏன்? உதாரணமாக, உங்கள் வயது பிள்ளைகள் செக்ஸ் விஷயங்களில் எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல், சுதந்திரப் பறவையாக இருக்க நினைக்கிறார்கள். இந்த விஷயத்தில் கடவுளுடைய கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால் அவர்களைவிட சந்தோஷமாக வாழ முடியும் என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்?
இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் கடகடவென்று பதில் சொல்ல வேண்டும் என்று அவசியமில்லை. நீங்கள் ஏன் நம்புகிறீர்கள் என்பதை நிதானமாக யோசித்துப் பாருங்கள். அப்போதுதான் அதைப் பற்றி கேட்பவர்களிடம் உங்களால் தெளிவாகப் பதிலளிக்க முடியும்.—நீதிமொழிகள் 14:15; 1 பேதுரு 3:15.
“ஒரு விஷயத்துல நீங்க உறுதியா இல்லனா ஸ்கூல்ல உங்க ஃபிரெண்ட்ஸ் அத வைச்சு கேலி பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. நான் அவங்ககிட்ட மாட்டிக்க விரும்பல, என் நம்பிக்கைகளை விட்டுக்கொடுக்கவே கூடாதுன்னு தீர்மானிச்சேன். அதனால ஒரு விஷயத்தை நான் ஏன் நம்புறேன் என்றதுக்கான காரணங்களை முன்னாடியே நல்லா யோசிச்சு பாப்பேன். அவங்ககிட்ட ‘எங்க மதத்துல இப்படி செஞ்சா ஏத்துக்க மாட்டாங்க’-ன்னு சொல்றதவிட ‘இது தப்புன்னு நான் நெனக்கிறேன். அதனால இத செய்ய மாட்டேன்’-ன்னு சொல்றதுதான் சரியா இருக்கும். இப்படி இருக்கத்தான் நான் விரும்புறேன்.”—டயானா.
கீழே விழுந்த ஒரு இலை மெதுவாக வீசும் காற்றுக்குக்கூட அங்குமிங்கும் அலைபாயும். ஆனால், நன்கு வேரூன்றிய ஒரு மரம் பலமாக வீசும் புயல்காற்றுக்குக்கூட அசையாமல் உறுதியாய் இருக்கும். நீங்கள் எப்படிப்பட்டவராக இருக்க விரும்புகிறீர்கள்? கீழே விழுந்த இலையாகவா, அசையாமல் நிற்கும் மரமாகவா? வாழ்க்கையில் உங்களுக்கென்று ஓர் அடையாளம் இருக்கட்டும். அப்போதுதான் மரத்தைப் போல் இருப்பீர்கள். ஆக, நான் எப்படிப்பட்டவன்/ள்? என்ற கேள்விக்குப் பதில் உங்கள் கையில். (g11-E 10)
உங்களுக்கென்று ஓர் அடையாளம் இருந்தால், பலமான காற்று வீசினாலும் ஆட்டம் காணாத மரத்தைப் போல் இருப்பீர்கள்
^ இந்தக் கட்டுரையில் வரும் சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.