Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகச் செய்திகள்

உலகச் செய்திகள்

அமெரிக்கா

அமெரிக்க ராணுவத்தின் முன்னாள் அங்கத்தினர்களில் 20 பேருக்கும்மேல் ஒவ்வொரு நாளும் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கான அமெரிக்க நிறுவனத்தின் பராமரிப்பிலுள்ள நபர்களில் சுமார் 950 பேர் ஒவ்வொரு மாதமும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

சீனா

“சொந்த ஊரைவிட்டு வேறொரு ஊருக்கு வேலை தேடிச் சென்ற 30 வயதுக்குட்பட்ட பெண்களில் ஏறக்குறைய பாதி பேர் திருமணம் ஆவதற்கு முன்னரே கர்ப்பமாகியிருக்கிறார்கள். மணமாகாத [சீன] தாய்மார்களின் எண்ணிக்கையை முந்தைய சந்ததியோடு ஒப்பிட, இது மிகப் பெரிய அதிகரிப்பு” என்று சைனா டெய்லி செய்தித்தாள் சொல்கிறது. சீன சமுதாயம், “மணமாகாமல் சேர்ந்து வாழும் கலாச்சாரத்தை . . . சர்வ சகஜமாக ஏற்றுக்கொள்கிறது” என்றும் அது சொல்கிறது.

கிரீஸ்

1974-ல் முற்றிலும் ஒழிக்கப்பட்டதாகக் கருதப்பட்ட மலேரியா மீண்டும் தலைதூக்கியிருக்கிறது. பொது மக்களின் மருத்துவப் பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட பணம் குறைக்கப்பட்டதும், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதும்தான் இதற்குக் காரணமென்று குறைகூறப்படுகிறது.

இந்தியா

மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கத்தினால் இந்திய சமுதாயத்தில் அநேக மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், ஓர் ஆய்வு காட்டுகிறபடி 74 சதவீதத்தினர் காதல் திருமணங்களைவிட பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களையே விரும்புகிறார்கள். 89 சதவீதத்தினர் தனிக்குடித்தனத்தைவிட கூட்டுக் குடும்பத்தையே விரும்புகிறார்கள். (g13-E 08)

இத்தாலி

“செல்வச் செழிப்பான ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் [கத்தோலிக்க] சர்ச் களையிழந்து கிடக்கிறது. நம் கலாச்சாரம் பழமையாகிவிட்டது, நம் சர்ச்சுகள் பகட்டாக இருக்கின்றன, கன்னிகாமடங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. சர்ச் நிர்வாகிகள் திறனற்றவர்களாய் இருக்கின்றனர், நம் சம்பிரதாயங்களும் நம்முடைய மேலங்கிகளும் ஆடம்பரமாக இருக்கின்றன. . . . கால ஓட்டத்தில் சர்ச் 200 வருடம் பின்தங்கியிருக்கிறது.”—கத்தோலிக்க கார்டினல் கார்லோ மரியா மார்டினியுடன் பேட்டி, அவரது மறைவுக்குப்பின் கொரீரி டெல்லா சேரா என்பவரால் பிரசுரிக்கப்பட்டது.