Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

குடும்ப ஸ்பெஷல் | திருமணம்

எப்படி மன்னிப்பது

எப்படி மன்னிப்பது

சவால்

உங்களுக்கும் உங்கள் மணத்துணைக்கும் தகராறு ஏற்படும்போது, பழைய தவறுகளைப் பட்டியல் போட்டுக் காட்டுகிறீர்கள். எப்போதோ குழிதோண்டி புதைத்திருக்க வேண்டிய மனஸ்தாபங்களை மீண்டும் “தோண்டியெடுக்கிறீர்கள்.” உங்களிடம் உள்ள பிரச்சினை? உங்களில் ஒருவருக்கு அல்லது இருவருக்குமே மன்னிக்கத் தெரியவில்லை என்பதே.

என்றாலும், மன்னிப்பதற்கு உங்களால் கற்றுக்கொள்ள முடியும். ஆனால், ஒருவரையொருவர் மன்னிப்பது ஒரு தம்பதிக்கு ஏன் கடினமாக இருக்கலாம் என்பதை முதலில் பார்ப்போம்.

ஏன் கடினம்?

அதிகாரம். மணத்துணைமீது தங்கள் அதிகாரம் மேலோங்கியிருக்க வேண்டும் என்பதற்காகவே சில தம்பதிகள் ஒருவரையொருவர் மன்னிப்பதில்லை. ஒரு சண்டை வெடிக்கும்போது, பழைய சம்பவம் ஒன்றைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி தங்கள் துணைமீது ஆதிக்கம் செலுத்த நினைக்கிறார்கள்.

மனக்கசப்பு. மனக்காயங்கள் ஆறுவதற்கு நெடுநாள் ஆகலாம். எனவே, ‘மன்னித்துவிட்டேன்’ என ஒரு மணத்துணை வாயளவில் சொன்னாலும், மனதளவில் கசப்பு மட்டும் நீங்காமல் இருக்கலாம். பழிக்குப் பழி வாங்குவதற்குக்கூட துடித்துக்கொண்டிருக்கலாம்.

ஏமாற்றம். காதல் கதைகளில் வரும் காதல் ஜோடிகளைப் போல காலாகாலத்திற்கும் மகிழ்ச்சி மழையில் நனையலாம் என்று மனக்கோட்டை கட்டி, மணவாழ்க்கையில் கால்பதிக்கிறார்கள் சிலர். ஆனால், பிற்பாடு கருத்துவேறுபாடுகள் எழும்போது தங்கள் கருத்துகளை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் முரண்டு பிடிக்கிறார்கள். 100 சதவீதம் ஜோடிப் பொருத்தம் இருப்பதாக நினைத்துக்கொண்டிருந்த அவர்கள் அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் பயங்கர ஏமாற்றம் அடைகிறார்கள். எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல், குறை கண்டுபிடிப்பதிலேயே குறியாகிவிடுகிறார்கள், மன்னிக்கத் தயங்குகிறார்கள்.

கருத்துவேறுபாடு. மன்னிப்பதில் என்னவெல்லாம் உட்பட்டிருக்கிறது என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ளாததால்தான் அநேக தம்பதிகள் ஒருவரையொருவர் மன்னிப்பதில்லை. உதாரணத்திற்கு:

மன்னித்தால், அவர்(ள்) செய்தது அவ்வளவு பெரிய தவறில்லை என்றாகிவிடும்.

மன்னித்தால், நடந்ததை மறக்க வேண்டியிருக்கும்.

மன்னித்தால், இன்னும் என்னைப் போட்டு மிதிப்பார்(ள்).

உண்மையில், மேற்சொல்லப்பட்ட எதுவுமே மன்னிப்பதில் உட்படுவதில்லை. என்றாலும், மன்னிப்பது கடினம்தான்—முக்கியமாக, அன்யோன்ய பந்தமான திருமண பந்தத்தில்!

நீங்கள் என்ன செய்யலாம்?

மன்னிப்பதில் என்ன உட்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். பைபிளில், “மன்னித்தல்” என்ற வார்த்தை சிலசமயம் “விட்டுவிடுதல்” என்ற அர்த்தத்தைத் தருகிறது. எனவே, மன்னிப்பது எப்போதுமே மறந்துவிடுவதை அர்த்தப்படுத்துவதில்லை; ஒருவர் செய்த தவறைக் குறைவாக எடைபோடுவதையும் அர்த்தப்படுத்துவதில்லை. மாறாக, ஒரு பிரச்சினையைப் பெரிதுபடுத்தாமல் அப்படியே விட்டுவிடுவதை அர்த்தப்படுத்துகிறது; அப்படி விட்டுவிடுவதுதான் உங்களுக்கும் நல்லது, உங்கள் மணவாழ்க்கைக்கும் நல்லது.

மன்னிக்காததால் ஏற்படும் விளைவுகளை யோசித்துப் பாருங்கள். மனக்கசப்பை வளர்த்துக்கொண்டே இருந்தால், உடல் ரீதியிலும் உணர்ச்சி ரீதியிலும் பல்வேறு கோளாறுகள், உதாரணத்திற்கு மனச்சோர்வு, உயர் இரத்த அழுத்தம் போன்ற கோளாறுகள், பெருமளவு ஏற்பட வாய்ப்பிருப்பதாகச் சில வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். இது ஒருபுறமிருக்க, மறுபுறம் அது உங்கள் மணவாழ்க்கையையே சிதைத்துச் சின்னாபின்னமாக்கிவிடும். அதனால்தான், “ஒருவருக்கொருவர் கருணையும் கரிசனையும் காட்டுங்கள்; . . . ஒருவரையொருவர் தாராளமாக மன்னியுங்கள்” என்று பைபிள் சொல்கிறது.—எபேசியர் 4:32.

மன்னிப்பதால் ஏற்படும் நன்மைகளை யோசித்துப் பாருங்கள். மன்னிக்கும் மனப்பான்மை இருந்தால், நீங்களும் உங்கள் மணத்துணையும் ஒருவருடைய உள்நோக்கத்தை ஒருவர் சந்தேகிக்க மாட்டீர்கள், ஒருவர் செய்த தவறுகளை ஒருவர் கணக்கு வைக்க மாட்டீர்கள். அதன் விளைவாக, மனதில் மனக்கசப்பு மறையும், அன்பு ஆறாய்ப் பெருக்கெடுக்கும். அதற்கான சூழலை நிச்சயம் உங்களால் உருவாக்க முடியும்.—பைபிள் நியமம்: கொலோசெயர் 3:13.

எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் மணத்துணையை, அவரை அவராகவே ஏற்றுக்கொண்டீர்கள் என்றால், அதாவது அவருடைய நிறைகுறைகளோடு ஏற்றுக்கொண்டீர்கள் என்றால், மன்னிப்பது சற்று எளிதாக இருக்கும். “குறைகளையே பார்த்துக்கொண்டிருந்தீர்கள் என்றால், நிறைகள் உங்கள் கண்களுக்குத் தெரியாமல் போய்விடும். . . . குறையா, நிறையா இப்போது நீங்கள் எதற்குக் கவனம் செலுத்துவீர்கள்?” என்று கேட்கிறது மணவாழ்வுக்காகப் போராடுங்கள் என்ற ஆங்கில புத்தகம். நினைவில் வையுங்கள், எல்லோருக்குமே குறைகள் உண்டு, உங்களுக்கும்கூட!—பைபிள் நியமம்: யாக்கோபு 3:2.

நியாயத்தன்மை காட்டுங்கள். அடுத்த முறை உங்கள் மணத்துணை சொல்கிற அல்லது செய்கிற ஏதோவொன்று உங்கள் கோபத்தைக் கிளறினால், உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இது உண்மையிலேயே பெரிய பிரச்சினையா? அவர்(ள்) என்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென நான் ஒற்றைக்காலில் நிற்க வேண்டுமா? அல்லது நடந்த விஷயத்தைப் பெரிதுபடுத்தாமல் விட்டுவிடட்டுமா?’—பைபிள் நியமம்: 1 பேதுரு 4:8.

தேவைப்பட்டால், கலந்துபேசுங்கள். எது உங்களுக்குக் கோபமூட்டியது, ஏன் கோபமூட்டியது என்பதை அவரிடம் அமைதியாக விளக்குங்கள். உங்கள் கருத்துகளை அதிகாரத் தோரணையில் சொல்லாதீர்கள். அவருடைய உள்நோக்கத்தைச் சந்தேகிக்காதீர்கள். அப்படிச் செய்தால், உங்கள் துணை தன்னை நியாயப்படுத்துவதில்தான் குறியாக இருப்பார். எனவே, உங்கள் துணையின் செயல் உங்கள் மனதை எப்படி நோகடித்தது என்று மட்டுமே சொல்லுங்கள். ◼ (g13-E 09)