பைபிளின் கருத்து
ஆவி உலக தொடர்பு
இறந்தவர்களிடம் பேச முயற்சி செய்வது தவறா?
“அஞ்சனம் பார்க்கிறவர்களை [ஆவி உலக தொடர்பாளர்களை] நாடி, . . . அவர்களாலே தீட்டுப்பட வேண்டாம்.”—லேவியராகமம் 19:31.
மக்கள் என்ன சொல்கிறார்கள்:
இறந்துபோன தங்கள் குடும்பத்தாரோ நண்பர்களோ எந்த வேதனையும் அனுபவிக்காமல் நிம்மதியாக இருக்கிறார்களா என்பதைத் தெரிந்துகொள்ள அநேகர் ஆசைப்படுகிறார்கள். அதற்கு, குறிசொல்பவர்களை அல்லது அமானுஷ்ய சக்தி படைத்தவர்களை அணுகுகிறார்கள். இப்படி, இறந்தவர்களைப்பற்றி தெரிந்துகொள்வது ஓரளவு நிம்மதி அளிக்கும் என்று நினைக்கிறார்கள்.
பைபிள் என்ன சொல்கிறது:
இறந்தவர்களிடம் குறி கேட்கும் பழக்கம் பூர்வ காலங்களில் சர்வசாதாரணமாக இருந்தது. ஆனால், இதை பைபிள் கண்டனம் செய்கிறது. உதாரணத்திற்கு, “அஞ்சனம் பார்க்கிறவனும் . . . செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம். இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு [யெகோவாவுக்கு] அருவருப்பானவன்” என்று இஸ்ரவேல் மக்களுக்கு யெகோவா தேவன் கொடுத்த கட்டளை சொல்கிறது. (உபாகமம் 18:10-12) ஆவி உலகத்தோடு ஓரளவு தொடர்பு வைத்திருப்பவர்கள்கூட, “கடவுளுடைய அரசாங்கத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று பைபிள் சொல்கிறது.—கலாத்தியர் 5:19-21.
இறந்தவர்கள் நமக்கு உதவி செய்ய முடியுமா?
“உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்.”—பிரசங்கி 9:5.
மக்கள் என்ன சொல்கிறார்கள்:
இறந்தவர்கள் ஏதோவொரு உருவத்தில் தொடர்ந்து உயிர் வாழ்வதாக அநேகர் நம்புகிறார்கள். அதனால், அவர்களிடம் பேச முயற்சி செய்கிறார்கள். ஒருவேளை, அவர்களிடமிருந்து எதையாவது தெரிந்துகொள்ள விரும்பலாம் அல்லது அவர்களுடைய ஆத்துமாவைச் சாந்தப்படுத்தினால் அவர்கள் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யமாட்டார்கள் என்று நினைக்கலாம்.
பைபிள் என்ன சொல்கிறது:
“உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; . . . [உயிர் வாழ்ந்தபோது அவர்களுக்கு இருந்த] சிநேகமும், அவர்கள் பகையும், அவர்கள் பொறாமையும் எல்லாம் ஒழிந்துபோயிற்று.” (பிரசங்கி 9:5, 6) இறந்தவர்களுக்கு ஒன்றும் தெரியாது, அவர்களால் யோசிக்க முடியாது, செயல்பட முடியாது, கடவுளை வழிபடவும் முடியாது என்று பைபிள் கற்பிக்கிறது. ‘மரித்தவர்கள் கர்த்தரைத் துதியார்’ என்று சங்கீதம் 115:17 சொல்கிறது.
குறி சொல்பவர்கள் சிலசமயம் துல்லியமான விவரங்களை அளிப்பது எப்படி?
“உயிருள்ளவர்களுக்காகச் செத்தவர்களிடத்தில் விசாரிக்கலாமோ?”—ஏசாயா 8:19.
மக்கள் என்ன சொல்கிறார்கள்:
இறந்தவர்களுக்கும் அவர்களுடைய உற்றார் உறவினர்களுக்கும் மட்டுமே தெரிந்த தகவலை, ஆவி உலக தொடர்பாளர்கள் தெரிவிப்பதாகச் சிலர் சொல்கிறார்கள்.
பைபிள் என்ன சொல்கிறது:
கடவுளுடைய கட்டளையை மீறி, குறி கேட்ட ஒரு கெட்ட அரசனைப் பற்றி 1 சாமுவேல் என்ற புத்தகத்தில் 28-ஆம் அதிகாரத்தில் இருக்கிறது. அவர்தான் சவுல் ராஜா. இவர், இறந்த சாமுவேலை (கடவுளுக்கு உத்தமமாய் இருந்தவர்) தொடர்புகொள்வதற்காக குறி சொல்லும் ஒரு பெண்ணிடம் சென்றார். அவள் சாமுவேலிடம் பேசி சில தகவல்களைத் அவருக்குத் தெரிவித்தாள். ஆனால், அவள் உண்மையிலேயே சாமுவேலிடம் பேசினாளா? இல்லை! மரித்த சாமுவேலைப் போலிருந்த ஒரு வஞ்சகனிடம்தான் பேசினாள்.
யார் இந்த வஞ்சகன்? அவன் ஒரு பொல்லாத தூதன், ‘பொய்க்குத் தகப்பனான’ சாத்தானின் கையாள். (யோவான் 8:44) இதுபோன்ற பொல்லாத தூதர்கள், அதாவது பேய்கள், இப்படி வேஷம் போட்டுக்கொண்டு இறந்தவர்கள் தொடர்ந்து உயிர் வாழ்கிறார்கள் என மக்களை ஏன் நம்ப வைக்கிறார்கள்? கடவுளுடைய பெயரைக் கெடுக்கவும் அவருடைய வார்த்தையாகிய பைபிளை பொய்யாக்கவுமே அவர்கள் இப்படிச் செய்கிறார்கள்.—2 தீமோத்தேயு 3:16.
அப்படியென்றால், இறந்தவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள், அவர்கள் திரும்பவும் உயிரோடு வருவார்களா? இறந்தவர்கள் கல்லறையில் ‘தூக்க’ நிலையில் இருப்பதாகவும் சீக்கிரத்தில் உயிரோடு வரப்போவதாகவும் பைபிள் வாக்கு கொடுக்கிறது. * (யோவான் 11:11-13; அப்போஸ்தலர் 24:15) அதுவரை, இறந்தவர்கள் எந்த வேதனையும் அனுபவிப்பதில்லை என்பதில் நாம் உறுதியாய் இருக்கலாம். ▪ (g14-E 02)
^ பாரா. 16 பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தில் அதிகாரம் 7-ன் தலைப்பு “இறந்துபோன பிரியமானவர்களுக்கு ஒரு நிஜ எதிர்பார்ப்பு.” இந்த புத்தகத்தை www.dan124.com–ல் ஆன்லைனில் வாசிக்கலாம்.