குடும்ப ஸ்பெஷல் | அப்பா-அம்மாவுக்காக...
பாராட்டுங்கள்!
பிரச்சினை...
பிள்ளைகளை எல்லாவற்றிற்கும் பாராட்டிக்கொண்டே இருக்க முடியாது; அப்படிப் பாராட்டினால் “நினைச்சதெல்லாம் சாதிக்கணும், ஆசைப்பட்டதெல்லாம் வேணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவாங்க” என்று சிலர் சொல்கிறார்கள்.
பிள்ளைகளை எவ்வளவு பாராட்டுகிறீர்கள், எதற்காக பாராட்டுகிறீர்கள் என்று யோசித்து பாருங்கள். எப்படி பாராட்டினால் பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேறுவார்கள், எதற்கெல்லாம் பாராட்டக் கூடாது என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்...
பாராட்டுவது நல்லதுதான். ஆனால், எப்படிப் பாராட்ட வேண்டும்?
அளவுக்கதிகமாக பாராட்டக் கூடாது. சிலர், பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு எதற்கெடுத்தாலும் பாராட்டுகிறார்கள். ஆனால், “நீங்க சும்மா, பேருக்குதான் பாராட்டுறீங்கனு பிள்ளைங்களுக்கு நல்லா புரியும். அப்புறம், நீங்க என்ன சொன்னாலும் நம்ப மாட்டாங்க” என்று டாக்டர் டேவிட் வால்ஷ் சொல்கிறார். *
திறமைகளை வளர்த்துக்கொள்வதற்காக பாராட்ட வேண்டும். ஒருவேளை உங்கள் பிள்ளைக்கு நன்றாகப் படம் வரையும் திறமை இருக்கலாம். அவர்களைப் பாராட்டினால், அந்தத் திறமையை இன்னும் வளர்த்துக்கொள்வார்கள். ஆனால், அவர்களுக்கு இருக்கிற திறமைகளை மட்டும் பாராட்டினால் “நமக்கு என்ன வருமோ அதை மட்டும் செஞ்சா போதும்” என்று நினைப்பார்கள்; புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொள்ள மாட்டார்கள். “அதான் நமக்கு வராதே, நாம ஏன் முயற்சி பண்ணனும்” என்று விட்டுவிடுவார்கள்.
முயற்சி எடுப்பதற்காகப் பாராட்ட வேண்டும். விடாமல் முயற்சி செய்தால்தான் புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும் என்று பிள்ளைகள் புரிந்துகொள்ள வேண்டும். அதனால், ஒரு விஷயத்தை அவர்கள் சரியாக செய்யவில்லை என்றாலும், அதை செய்ய முயற்சி எடுத்ததற்காகப் பாராட்டுங்கள். அப்போதுதான் “முயற்சி செஞ்சா வெற்றி கிடைக்கும்னு [பிள்ளைங்க] புரிஞ்சிப்பாங்க. தோல்விகளை சந்திச்சாலும், அதை தோல்வியா எடுத்துக்காம வெற்றியின் படிக்கட்டா எடுத்துப்பாங்க” என்று லெட்டிங் கோ வித் லவ் அண்டு கான்ஃபிடன்ஸ் என்ற புத்தகம் சொல்கிறது.
நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
திறமைகளை மட்டுமில்லை, முயற்சியைப் பாராட்டுங்கள். பிறந்ததிலிருந்தே பிள்ளைகளுக்கு சில திறமைகள் இருக்கலாம். ஒருவேளை, நன்றாகப் படம் வரையலாம். படம் வரைய முயற்சி செய்ததற்காக அவர்களைப் பாராட்டினால் இன்னும் நன்றாக வரைய கற்றுக்கொள்வார்கள். “சித்திரமும் கை பழக்கம்” என்று புரிந்துகொள்வார்கள். ஆனால், “இது உன் இரத்தத்திலயே கலந்திருக்கு,” “கூடவே பிறந்திருக்கு” என்றெல்லாம் சொன்னால் பிறந்ததிலிருந்தே நம்மிடம் இருக்கிற திறமைகளை மட்டும்தான் வளர்த்துக்கொள்ள முடியும் என்று நினைப்பார்கள்.
முயற்சி செய்ததற்காக அவர்களை பாராட்டினால், “முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை” என்று புரிந்துகொள்வார்கள். புதுப்புது விஷயங்களைக்கூட கற்றுக்கொள்ள நினைப்பார்கள்.—பைபிள் தரும் ஆலோசனை: நீதிமொழிகள் 14:23.
தோல்விகளை வெற்றியின் படிக்கட்டுகளாக்க உதவுங்கள். நாம் எல்லாருமே நிறைய தப்பு செய்கிறோம். (நீதிமொழிகள் 24:16) ஆனால், ஒவ்வொரு தடவை தப்பு செய்யும்போதும் அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அதைத் திரும்ப செய்யாமல் இருக்க வேண்டும். அதனால், தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள உங்கள் பிள்ளைகளுக்கு உதவி செய்யுங்கள்.
ஒருவேளை, எப்போது பார்த்தாலும் உங்கள் மகளிடம் “நீ கணக்குல புலி” என்று சொல்கிறீர்கள். ஆனால், திடீரென்று ஒருநாள் கணக்கில் ஃபெயில் ஆகிவிடுகிறாள். அப்போது அவள் என்ன நினைப்பாள்? “அவ்ளோதான் இனிமே நமக்கு கணக்கே வராதுபோல” என்று நினைப்பாள். திரும்பவும் பாஸ் ஆக முயற்சி செய்ய மாட்டாள்.
உங்கள் பிள்ளைகள் முயற்சி செய்ததற்காகப் பாராட்டினால்தான், தோல்விகளைப் பார்த்து அவர்கள் பயப்பட மாட்டார்கள். “வாழ்க்கையில எல்லாருக்கும் தோல்வி வரும். அதுக்காக வாழ்க்கையே முடிஞ்சி போச்சுனு அர்த்தம் இல்லை” என்று புரிந்துகொள்வார்கள். மறுபடியும் ஜெயிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பார்கள்; நன்றாக முயற்சி செய்வார்கள்.—பைபிள் தரும் ஆலோசனை: யாக்கோபு 3:2.
குறைகளை அன்பாக எடுத்துச் சொல்லுங்கள். பிள்ளைகளுடைய குறைகளை எப்போதும் பூதக் கண்ணாடி வைத்து பார்த்துக்கொண்டு இருந்தால் மனமுடைந்து போவார்கள். அதனால், தேவைப்படும்போது பாராட்டுங்கள். அப்போதுதான், அவர்கள் செய்யும் தப்பையும் எடுத்து சொல்லும்போது சந்தோஷமாக ஏற்றுக்கொள்வார்கள்; வாழ்க்கையில் நிறைய சாதிப்பார்கள். அதைப் பார்த்து நீங்களும் பெருமைப்படுவீர்கள்.—பைபிள் தரும் ஆலோசனை: நீதிமொழிகள் 13:4. ▪ (g15-E 11)
^ பாரா. 8 No: Why Kids—of All Ages—Need to Hear It and Ways Parents Can Say It என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.